
நானெனும் நாடகம் எத்தனைநாள்? – இந்த
நானிலம் மீதினில் என்னகதை?
வானெனும் மேடையின் கீழ்நடக்கும் – என்
வாழ்க்கையின் நாடகம் என்னவிலை?
மானிடனாய் இச் சென்மத்திலே – நான்
வந்ததும் ஆதியின் காலவினை
ஏனெதற்(கு) என்கிற கேள்வியிலே – வழி
ஏறி நடத்திடும் கால்களெனை!
கருக்குடம் வாழ்கையில் சிசுவெனும்பேர் – கண்
கண்டபின்னால் எனைக் குழந்தையென்றார்
தெருக்களில் திரிகையில் பாலகன்நான் – மதி
தேறி அமர்கையில் மாணவனாம்
உருக்கொள இளமையின் புகழெனக்கு – உடன்
ஊழியன், தோழமை பட்டங்களாம்
சுருக்குகள் மேல்வர கிழவனென்றும் – பின்
சுடலையில் ஓர்பிடி சாம்பலென்றும்
எத்தனை எத்தனை பெயரெனக்கு – இதில்
எதுதான் நான்?எது மெய்க்கணக்கு?
வித்தகம் நானா விளைபொருளா – கொளும்
விதிகளில் நானா மீறலிலா?
மத்தகம் உடைந்த காலமெனும் – கரி
மீதினில் நானமர்ந்தோடுகிறேன்
வித்தினை ஒருத்தி விதைத்துவிட்டாள் – பலர்
வீணே எடுத்தெடுத்(து) ஆயுகிறார்!
காதினில் ஓர்குரல் கேட்கிறது – அது
கதிதரும் குரலெனத் தெரிகிறது
காதலில் உட்புறம் திரும்புகையில் – ஒரு
காரிருள் மட்டுமே விரிகிறது!
வேதங்கள் சொல்வது நானெனும்பொய் – என்
வேஷங்கள் சொல்வதும் நானெனில்பொய் – இதில்
மீதமிருப்பது தெய்வதமாம் – அதுவும்
மெய்யிலை பொய்யெனில் என்னசெய்வேன்?