டீவியில் இளையராஜா பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தன. அதற்கு எதிரே நின்றவாறு பாடல்களை கேட்டு ரசித்துக் கொண்டே குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான். ஹாலில் ஒரு மூலையில் உட்கார்ந்தவாறு வாழைப்பூவை ஆய்ந்து கொண்டிருந்த ரமாவும் பாடல்களை கேட்டுக் கொண்டே, கூடவே கள்ளக் குரலில் மெதுவாகப் பாடிக் கொண்டிருந்தாள். வராண்டாவில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் நொடிக்கொருமுறை ஹால் பக்கம் திரும்பி கோபமாக ஒரு பார்வையை வீசிக் கொண்டிருந்தார். அவருக்கு அவர் ஒரு காரியத்தில் ஈடுபட்டிருக்கும்போது மற்றவர்கள் பேசினால் கூடப் பிடிக்காது.
“டீவி சத்தத்தைக் கொறச்சு வைக்கச் சொல்லு! ” என்றார் ரமாவிடம். எப்போதுமே தன் பிள்ளையிடம் நேரிடையாகப் பேச மாட்டார். எல்லா விஷயங்களும் ரமா மூலம் தான்.
ரமா பிள்ளையிடம் டீவி சப்தத்தைக் குறைக்கச் சொல்லி கண்ணாலேயே ஜாடை காட்டினாள்.
“என்னால முடியாதும்மா! நா காலையில வீட்ல இருக்கிறதே கொஞ்ச நேரந்தான். அந்த நேரம் எனக்கு என்ன பிடிக்குதோ அப்படித்தான் செய்வேன்!” என்றான் குமார் வீம்பாக, அப்பாவுக்குக் கேட்காதபடி தாழ்ந்த குரலில் தான். பேசிக் கொண்டே தான் வழக்கமாக பார்க்கும் ஹிந்தி சேனல்களை டீவியில் போட ஆரம்பித்தான்.
“ராதா கைஸேன ஜலே!” என்று பாடியவாறே ஒரு பெண் ராதாவாக எம்.டீ.வி.பீட்ஸ் சேனலில் அபிநயம் பிடிக்க, அமீர்கான் கிருஷ்ணனாக அவளைச் சுற்றி சுற்றி வந்து ஆடினார். ‘லகான்’ படத்தில். ரமாவிற்கு மிகவும் பிடித்த பாட்டு. அவள் பரவசமாக டீவியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கிருஷ்ணன் வெராண்டாவில் நாற்காலியை சப்தமாக பின்னுக்கு இழுத்து எழுந்து கொண்டார். அந்த சப்தத்திலேயே அவர் கோபம் புரிந்தது ரமாவுக்கு. பேசாமல் மும்முரமாக வாழைப்பூவை ஆய்வது போல ‘பாவ்லா’ காட்டினாள்.
குமார் அப்பாவின் செயலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பது போல டீவியைத் திருகித் திருகி ஹிந்தி சேனல்கள் மஸ்தி, 9¢எக்ஸ் ஜல்வா, எம்.டீ.வீ பீட்ஸ் என்று ஒவ்வொன்றாகப் போட்டுப் போட்டு எதில் தனக்குப் பிடித்த பாட்டு வருகிறதென்று பார்த்துக் கொண்டிருந்தான்.
இப்போது சல்மான்கானும் கரீனாகபூரும்,
“தில் கே பதலே சனம், தர்தே தில் லே சுகே” என்று சோகமும் மகிழ்ச்சியும் கலந்து ஓடிப் பிடித்து ஆடினார்கள்.
“காலங்கார்த்தால சல்மான் கானையும் அமீர் கானையும் பார்க்காவிட்டால் அம்மாவுக்கும் புள்ளைக்கும் திங்கற சோறு செரிக்காதோ?” கோபத்தோடு உறுமினார் கிருஷ்ணன்.
இதற்குள் குமார் சேனலை மாற்றி விட மஸ்தி சேனலில்
‘தும் பாஸ் ஆயே! க்யூம் முஸ்கராயே தும்னே ந ஜானே க்யா சப்னா திகாயே……கயா கரூ நா ஹை குச் குச் ஹோதா ஹை’
ஷாருக்கான் கஜோலைச் சுற்றி சுற்றி வந்து காதலாகிக் கசிந்து உருகிப் பாடிக் கொண்டிருந்தார்.
அந்தப் பாடலை ரசித்தபடி எக்ஸர்சைஸ் செய்து கொண்டிருந்த குமார் அம்மாவைப் பார்த்து குறும்பாக சிரித்தபடி தாழ்ந்த குரலில்,
“ஷாருக்கானை விட்டுட்டாரே!” என்றான்.
இப்போது ரமாவின் முகத்திலும் ஒரு குறும்பு சிரிப்பு. குனிந்து ‘கள்ளன்’ ஆயப்பட்ட வாழைப்பூவைப் பார்த்து வாயே திறக்காமல் சப்தம் வராமல் சிரித்தாலும் கன்ன மேடுகளும் கண்களும் சிரிப்பதைக் காட்டி விட்டதோ?
இருவரும் தன்னை கிண்டல் செய்கிறார்கள் என்று மனதில் பட்டு விட்டதோ என்னவோ கிருஷ்ணன் கோபத்தில் முகம் ஜிவுஜிவுக்க ரெண்டு பேரையும் பார்த்த வண்ணம் ஒரு நிமிடம் நின்றவர் பின்பு தோளில் போட்டுக் கொண்டிருந்த துண்டை ஒரு உதறு உதறித் திரும்பப் போட்டுக் கொண்டு, “உருப்படாத ஜென்மங்கள்!” என்று உறுமிக் கொண்டே குளிப்பதற்காக பாத்ரூம் பக்கம் போனார்.
பாத்ரூம் கதவு தாள் போடும் சப்தம் கேட்டதும் குமார் டீவியை கொஞ்சம் கூடவே சப்தமாக வைக்க, இவர்கள் வீட்டில் தன் மண்டை உருட்டப்படுவது பற்றி சற்றும் அறியாத ஷாருக்கான், கஜோலுடன் ஆனந்தமாக சுழன்று சுழன்று ஆடிப் பாடிக் கொண்டிருந்தார், “தும் பாஸ் ஆயே…” என்று.