“அடியே அல்லி! இன்னைக்கு என்ன சூடான சயன்ஸ் நியூஸ்?” என்று கேட்டாள் அங்கயற்கண்ணி மாமி!
“சாகும் போது மனதில் என்ன தோன்றும் தெரியுமா மாமி?” என்றாள் அல்லிராணி.
“எனக்கு என்னடி தெரியும்? நான் என்ன செத்தாப் பார்த்திருக்கேன்” என்று சிரித்த மாமி,
“சாகும் போது சங்கரா என்று சொன்னால் புண்ணியம் என்றுதான் கேள்விப்பட்டிருக்கேன்” என்றாள்.
“மாமி சயன்ஸ் அதை ஆராய்ச்சி செய்து, ஒரு ரிப்போர்ட் ஒன்று வந்திருக்கிறது” என்றாள் அல்லி.
“சொல்.. சொல்.. சொல். “என்றாள் மாமி.
“உயிர் போகும் முன், வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகள் மனதில் விரியுமாம்”
“அது என்ன, T20 ஹைலைட் வீடியோ போலவா?” என்றாள் மாமி.
“மாமி.. நீங்கள் சினிமாப்பைத்தியம் மட்டும் தான் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இப்ப தான் தெரிந்தது நீங்கள் கிரிக்கெட் பைத்தியம் என்பதும்” என்று சொல்லிய அல்லி சிரித்தாள்.
“சரி.. மேலும் சொல்” என்றாள் மாமி.
“இதயம் நிற்பதற்கு முன்னர், 30 நொடிகளிலிருந்து இதயம் நின்ற பின் 30 நொடிகள் வரை, மனிதனுடைய மூளை அலைகள் காட்டும் நிகழ்வுகளை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்து ஆய்ந்துள்ளனர். அதன் படி அது ஒரு கனவு நிலை, நினைவின் முன்னோட்டம் (memory recall) மற்றும் ஒரு தியான நிலை.” என்றாள் அல்லி.
“அது ‘மலரும் நினைவுகள்’ என்று சொல்லு” என்றாள் மாமி.
அல்லி தொடர்ந்தாள்:
“ஆராய்ச்சியாளர்கள், செத்துக்கொண்டிருக்கும் மனிதனின் கடைசி 15 நிமிடங்களில் மூளை அதிர்வுகளைப் பதிவு செய்ததில், அந்த ‘ஒரு நிமிடம்’ இப்படி வெளியிட்ட காமா (gamma waves) அலைகள் வாழ்க்கை அலைகளைக் (life recall) காட்டியுள்ளது.” என்றாள்.
“ஷாருக்கான்-ஐஸ்வர்யா ராய் நடித்த தேவதாஸ் இந்திப்படம் பார்த்திருக்கியா” என்று கேட்டாள் மாமி.
அல்லி, “பார்த்திருக்கிறேன். இப்ப அந்தக் கதை எதுக்கு என்றாள்”.
மாமி, “அதில் தேவதாஸ் சாகும் சமயம், அவன் மனதில் அவனது வாழ்க்கை நிகழ்ச்சிகள் விரிவதாகக் காட்டியிருந்தார்கள். அப்புறம் இதைத்தான் கண்ணதாசனும் பாடினானோ ‘நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?” என்றாள் மாமி!
அல்லி சிரித்தாள்!
இது ஒரு அதிசய உலகம்!
https://www.livescience.com/first-ever-scan-of-dying-brain