திருவாதிரை
தீபாவளித் திரு நாளைப் போல அப்பா இன்று அதி காலையிலேயே எழுந்திருக்கச் சொல்லி விட்டார். பனியும், குளிருமான இந்த வேலையில் தானென்ன செய்ய வேண்டும் என்றே சரவணனுக்குப் புரியவில்லை. அப்பா அதற்குள் குளித்துவிட்டு, விபூதியை இட்டுக் கொண்டு சிவப் பழமாக பூஜையறையில் இருந்தார். அம்மாவோ, தலையில் கட்டிய துண்டுடன், புது மடிப் புடவை கட்டிக் கொண்டு இனிய நறுமணத்துடன் வெண்கலப் பானையில் கொதித்து வரும் வெல்ல நீரில் அரிசி ரவையைக் கொட்டிக் கிளறி விட்டுக் கொண்டே மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, கடலைப் பருப்பு, கொத்தமல்லி விரை, சிவப்பு மிளகாய் வற்றல், கீறின தேங்காய்த்துண்டுகளை வறுத்துக் கொண்டிருந்தாள். “சரூ, சீக்கிரம் குளித்து விட்டு வா; அப்பாவிற்குப் பூஜையில் ஹெல்ப் செய்” என்றாள்.
அவனும் குளித்துவிட்டு, வேட்டி அணிந்து கொண்டு பூஜையறைக்குள் உதவச் சென்றான். வில்வம், ரோஜா, முல்லை, மல்லிகை, ஜாதி, செவ்வந்திப் பூக்களை பரபரவென்று ஆய்ந்து தனித்தனியே பிரம்புத் தட்டுக்களில் வைத்தான். அப்பா, சிவ லிங்கத்திற்கு பால், பன்னீர், இளநீர், தயிர், தண்ணீர் இவற்றால் சிவ ஸ்துதி சொல்லிக் கொண்டே அபிஷேகம் செய்தார். பின்னர் நடராஜரின் சிலைக்கும் இந்த அபிஷேகத்தோடு சந்தன அபிஷேகமும் செய்தார். ருத்ரம், சமகம், சிவ சகஸ்ர நாமம், பூக்களால் அர்ச்சனை எல்லாமும் நடந்தன. சமையலறையிலிருந்து நெய்யில் அம்மா முந்திரியை வறுக்கும் வாசமும், பச்சைக் கற்புரத்தை பாலில் கரைக்கும் வாசமும், ஏலத்தைப் பொடி செய்யும் வாசமும் காற்றில் கலந்து வந்தன. அம்மாவும் உடனே பூஜையறைக்கு வந்து விட்டார். தூப தீப ஆராதனைகள், நைவேத்தியத்துடன், திருவாசகமும், திருவெம்பாவையும் மூவரும் படித்தார்கள். அம்மா கூந்தலைக் காய வைத்து அழகாகப் பின்னி சிறிது ஜாதிப்பூவை தலையில் வைத்துக் கொண்டிருந்தார். மூவரும் அர்ச்சனைக் கூடையுடன் அருகிலிருந்த சிவன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தனர்.
போர்டிகோவில் அம்மா வரைந்திருந்த நடராஜர் கோலம், வாயிலில் போட்டிருந்த தேர் கோலம் கண்களைக் கவர்ந்தன.
‘அம்மா, தினமும், களியும், கூட்டும் செய்யேன். சாப்பிடச் சாப்பிட ஆசையாக இருக்கிறது.’ என்றான் சரவணன்.
அப்பா சிரித்தார். “ஏன்டா, சாப்பாட்டு ராமா? இன்னிக்கி என்ன விசேஷம்னு தெரியுமா உனக்கு?”
‘ஓ, இன்னிக்கு திருவாதிரை நக்ஷத்ரம். சிவனோட பிறந்த நாள்.’
‘சிவனுக்குப் பிறந்த நாளென்று பொதுவாச் சொல்வா. அவருக்கு பிறப்பு, வளர்ப்பு, இறப்பு என்றெல்லாம் ஏதுமில்லை. அவர் ஆனந்தத் தாண்டவம் ஆடிய திரு நாள் இது. அதுவும், பதஞ்சலிக்காகவும், தேவர்களுக்காகவும், ஒடாத தேரை ஓட்டி, களியமுது படைத்த சேந்தனாருக்காகவும் ஆடிய தெய்வீக நாள் இது.’என்றார் அம்மா.
“சரூ, சிவ தாண்டவம் எதைக் குறிக்குதுன்னு தெரியுமா?”
‘அப்பா, அணுக்களின் இயக்கம். அவர் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாம். இது ஃபீல்ட்ஸ் தியரிய ஒத்து வரதுப்பா.’
“சபாஷ், சரி, திருவாதிரைக்கு என்ன பேர் வானவியலில்?”
‘அது வந்து, அது வந்து…’
‘பீடெல்க்யூஸ்’ (Betelgeuse) என்ற அம்மா தொடர்ந்து அத, அராபிக்கில பேட் அல ஜாசாவ் (Bat al Jawza) அப்படின்னு சொல்லுவாங்க. அதைத்தான் பீடெல்க்யூஸ்ன்னு இப்ப சொல்றாங்க.’ என்றார்
“சரூ, அது ஏதாவது விண்மீன் கூட்டத்ல இருக்கா?”
‘ஆமாம்ப்பா, அது மிருக சீர்ஷ கூட்டத்தில இருக்கு. (Orion) ஓரியன் கூட்டம்ன்னு சொல்றாங்க. இந்த நக்ஷத்ரம் மட்டும் சிவப்பா இருக்கும்.’
“கரெக்ட், அது எவ்வளவு தூரத்ல இருக்குன்னு தெரியுமா?”
‘அது 724 ஒளி ஆண்டுகள் தள்ளி இருக்குப்பா.’
“ஓளி ஆண்டுன்னா?”
‘ஒரு நொடில சுமாரா மூணு லட்சம் கி மீ ஒளி பயணிக்கும். அப்படின்னா பாத்துக்குங்க.’
“குட், அதோட ஆரம் தெரியுமா உனக்கு?” இந்தக் கேள்வி அம்மாவிடமிருந்து.
“ஐயையோ, களியே கேட்க மாட்டேம்மா. இதெல்லாம் எனக்கு ஞாபகத்ல இருக்கறதே இல்ல.’
“அப்படியில்ல சரூ, பல விஷயங்களத் தெரிஞ்சுக்கணும். 617.1 கி மீ அதன் ரேடியஸ். அதோட வெப்பம் எவ்ளோன்னு தெரியுமா? 3500 கெல்வின். நம்ப சூரியனப் போல அதோட விட்டம் நூறு மடங்கு. அதோட ஒளிர்வு இருக்கே, அதான்டா ‘லூமினாசிடி’ சூரியன விட ஒரு இலட்சம் மடங்கு. அப்படின்னா பாத்துக்க.”
‘அம்மாடியோவ். எத்தன எத்தன அற்புதங்கள் வானத்ல.. நான் படிச்சேம்ப்பா. பூமிலேந்து பிரகாசமாத் தெரியற 10 விண்மீன்கள்ல இது 10 வது இடத்ல இருக்காம்.’
“இப்ப மாறிடுத்துடா; 24 வது இடம்னு சொல்றாங்க.”
‘எதனால அப்படி ஆச்சும்மா?’
“2019ல் ஒன்னு நடந்தது. ஒரு தும்மலப் போட்டது அது. அப்ப உள்ளேந்து வந்த வாயு, அதோட வெளிப்புறத்த குளிர வச்சுடுத்து. அந்தக் குளிர்ச்சியினால கருப்பு மேகமாயிடுத்து; ஃபுல்லா இல்ல; கால்பகுதின்னு சொல்லலாம். ஆனா, பாரு திரும்பவும் பிரகாசம் ஏப்ரல்ல உண்டாச்சு. ஆனாலும், முன்ன இருந்த பிரகாசம் இல்லன்னுட்டு வானவியலாளர்கள் சொல்றா.’
‘அது ஏம்ப்பா தும்மித்து?’
“சரூ, அளவுல பெரிசா சில நக்ஷத்ரம் இருக்கும். ஊதிண்டே வந்து கொஞ்சமாவோ, ஃபுல்லாவோ வெடிச்சுடும்.”
‘இதுக்கு புராணக் கதை இருக்கு. சிவன் நெருப்பாக, அடியும், முடியும் யாராலும் பாக்க முடியாம, மார்கழி திருவாதிரைல வந்தார். அதுனால இதுக்கு மகிம. திரேதாயுகான்னு ஒரு பொண்ணு. அவ பார்வதியோட பக்த. கல்யாணம் ஆன மூணாம் நாள்ல அவ ஹஸ்பென்ட் செத்துப் போயிட்றார். அவ பார்வதி தேவிக்கிட்ட கதற சிவனும், பார்வதியும் அந்த உயிர மீட்டுக் கொடுத்த நாளும் திருவாதிரை நாள் தான்டா. பாம்பு கடிச்சதனால செத்துப் போன பூம்பாவாய்க்கு நம்ம மைலாப்பூர்ல பதிகம் பாடி திருஞான சம்பந்தர் உயிர் கொடுக்கறார். அப்போ பாட்றார் “ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்”.
“சரூ, நான் உனக்கு ஒரு ஃபோடோ அனுப்பியிருக்கேன், பாரு. முழு சந்திரனுக்கு தெக்கால ஓரியன் கூட்டமே க்ளியரா இருக்கு அதுல. அது தாண்டவ போஸ், சிவ நடனம்னு நாம காலங்காலமா சொல்றோம். அதுவும் அப்படித்தானே இருக்கு?”
‘அம்மா, இதெல்லாம் வானத்ல ரொம்ப தூரத்ல இருக்கு. அப்படியிருக்கச்சே, அளவு, வேகம், இதெல்லாம் எப்படிச் சொல்ல முடியறது?’
“நிறைய அஸ்ட்ரானமி லேப்ஸ் இருக்குடா, நல்லத் தெளிவா காட்ற டெலஸ்கோப் இருக்கு. கம்ப்யுட்டர் சிமுலேஷன்ஸ் இருக்கு. இதப் பத்தி நீ கூகுள்லயோ, வேறு எதுலயோ படிச்சு, என்ன புரிஞ்சுண்டேன்னு சொல்லு.”
‘நான் படிச்சுட்டு வேகமா வரேம்மா. களியும், கூட்டும் எனக்காக சேவ் பண்ணி வச்சுட்டு, மீதிய யாருக்கு வேணும்னாலும் கொடு’ என்ற சரவணன் தன் கணினியில் படிப்பதற்கு தன் அறைக்குச் சென்றான். நீங்களும் படியுங்களேன்.