என்றும் போல அன்றும் அஞ்சலை ‘அம்மோவ் ஆப்பி நியூ யார்’ என்று உள்ளே வந்தாள். ‘புது வருஷ வாழ்த்துகள். என்ன அதிசயமாக சீக்கிரம் வந்து விட்டாய்! மழைதான் வரப் போகிறது’ என்று சொன்ன புவனா அவசர அவசரமாக சமையல் அறைக்குள் நுழைந்தாள். ஆம், அஞ்சலைக்கு வந்தவுடன் சூடான காபி தேவை. அது உள்ளே சென்றவுடன் சிறிது வம்பாக வெளி வரும். அதற்கப்புறம்தான் அவளுக்கு வேலையே ஓடும். புதிது புதிதாக அவள் அவற்றை விவரிக்கும் அழகே அழகு! நாம் சிறிது காது கொடுத்து கேட்கிறோம் என்று தெரிந்தால் அவ்வளவுதான் நாட்டிய பாவத்துடன் அரங்கேற்றம் செய்து விடுவாள். இன்று என்ன பிரச்சனையோ!
ஆனால் இன்று விஷயம் வேறு விதமாக இருந்தது. ‘அம்மோவ், பக்கத்து வீட்டு கருப்பு கமலா எப்படி இப்படி சிவப்பாகிப் போனாள்! அவளைக் கேட்டதற்கு ஏதோ மெட்டி என்கிறாள். அது எப்படியம்மா சிவப்பாக்கும்!’ என்று அரையும் குறையுமாக கேட்டாள். அவளுக்கு தான் கருப்பு என்பது இவ்வளவு வருத்ததைக் கொடுக்கும் என்று நல்ல சிவப்பான புவனாவிற்குத் தெரியாது.
புவனா சிரித்திக் கொண்டே ‘ஓ அது முல்த்தானி மிட்டி, அது உனக்கு எதற்கு!’ ‘என்னம்மா இப்படி கேட்குறை. நானும் உன்னை மாதிரி இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது அழகாகணும்னு ஆசையாக இருக்காதா! அதுக்கு என்ன பண்ணலாம்!’ என்று அப்பாவித்தனமாகவும் ஆசையாகவும் கேட்டாள். ஓ அவளுக்குள் இப்படி ஒர் ஆசையா! இம் அவளும் பெண்தானே!’ சரி அவள் ஆசையையும் கெடுப்பானேன் என்று ‘பார்லருக்கு வருகிறாயா. கூட்டிப் போகிறேன்’ என்று வினயமாகவும் அவள் ஆசையைத் தூண்டும் விதமாகவும் கேட்டாள் புவனா. ‘அய்ய அங்கெல்லாம் வர வெக்கமா இருக்கு. நீ வீட்டிலேயே எனக்கு ஏதாவது செய்து விடு’ என்று சின்னக் குழந்தை மாதிரி கொஞ்சினாள்.
சரி என்று புவனா தான் எங்கோ படித்ததை நினைவில் கொண்டு சிறிது கடலை மாவில் பால் ஏடு, தயிர், மஞ்சள் தூள், சந்தனப் பொடி, வாழைப் பழம் எல்லாம் போட்டு ரோஸ் தண்ணீரில் கலக்கும் போது ‘என்னம்மா நான் ஏதோ கேட்டால், நீ பாட்டுக்கு பஜ்ஜிக்கு மாவு பிசைகிறாயே’ என்று அவசரமாகக் கேட்டாள். புவனா சிரித்துக் கொண்டே ‘இது ஒரு வகையான மூலிகை. இதை தினந்தோரும் முகத்தில் பூசினால் முகம் சிவப்பாகவும், பளபளப்பாகவும் ஆகும்’ என்று அதை அவளை முகத்தில் பூசச் சொன்னாள். கண்களை மூடிக் கொள்ளச் சொல்லி அதன் மீது வெள்ளரி துண்டு இரண்டை வைத்தாள். ‘இதை அப்புறமா சாப்பிடனுமா’ என்று கேட்டாள். இது அப்பாவித்தனமா, ஆசைத்தனமா, ஆர்வத்தானமா என்று தெரியவில்லை! பத்து நிமிடம் கழித்து முகம் அலம்பச் சொன்னாள். அவளுக்கு ஒரே சந்தோஷம் பத்து நிமிடம் வேலை செய்ய வேண்டாம்! முகம் அலம்பியவுடன் பளிச்சென்று இருந்ததைப் பார்த்து அவளுக்கு ஒரே சந்தோஷம். ‘ஓ அம்மோவ் இப்படி தினம் செய்தால் நானும் சினிமா இஷ்டார் ஆயிடுவேன் இல்லையா’ என்று பெருமைப்பட்டுக் கொண்டாள். இரண்டு மூன்று நாட்கள் வேலை ஆச்சோ இல்லையோ வந்தவுடன் முகத்திலும் கைகளிலும் விதவிதமாக அப்பிக் கொள்ள மட்டும் மறப்பதில்லை, தவறுவதில்லை. புவனாவும் அவளது குழந்தைத்தனமான ஆசையைப் பார்த்து சிரித்துக் கொண்டே உதவி செய்தாள்.
ஒரு நாள் புவனாவிற்கு அவசரமாகக் கடைக்குப் போக வேண்டி வந்தது. அதனால் கிளம்பி விட்டாள். வீட்டிற்கு வந்த அஞ்சலை அம்மாவைக் காணாமல் சிறிது வருத்தப்பட்டாள். ஆனால் அவளது உற்சாகம் சிறிதும் குறையாமல் புவனா செய்கிற மாதிரி செய்ய ஆரம்பித்தாள். மாவு, பால் ஏடு, தயிர், மஞ்சள் தூள், சந்தனப் பொடி, வாழைப் பழம் எல்லாம் போட்டு கலந்தாள். முகத்தில் பூசினாளோ இல்லையோ சிறிது நேரத்திலேயே எரிய ஆரம்பித்தது. அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். தாங்க முடியவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. வாங்க வேண்டியதெல்லாம் வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் வந்த புவனா அஞ்சலையைப் பார்த்து பயந்து விட்டாள். எரிச்சலில் கத்திக் கொண்டிருந்த அஞ்சலையை உடனேயே முகம் அலம்பச் சொல்லி ஏன் இப்படி என்று விசாரிக்க ஆரம்பித்தாள். எல்லாவற்றையும் காட்டி இதை எல்லாம் கலந்தேன் என்று சொன்னவுடன் புவனா ‘ஐயோ இதையாக் கலந்தாய்! என் தப்புதான். மஞ்சள் தூள் டப்பாவும் மிளகாய் தூள் டப்பாவும் ஒரே மாதிரி வைத்து விட்டேன். நீ தப்பாக எடுத்து விட்டாய். ஆனால் உனக்கு மஞ்சள் தூளுக்கும் மிளகாய்த்தூளுக்கும் கூடவா வித்யாசம் தெரியாது? சரி சரி நன்றாக முகம் அலம்பிக் கொண்டு நான் தருகிற கிரீம் தடவிக் கொள். எரிச்சல் அடங்கி விடும்’ என்று பரிவோடு கூறினாள்.
‘அம்மோவ் எனக்கு எந்தக் கிரீமும் வேண்டாம். பயமாக இருக்கிறது. நான் இப்படியே இருந்து விடுகிறேன். இதுவே அழகாகத்தான் இருக்கிறது. கருப்புதான் எனக்குப் பிடித்த கலறு. நம்ம தலைமுடி கூட கருப்புதான், வெள்ளையானாத்தான் கவலை. நம்ம தலைவரு ரஜனி ஐயா கூட கருப்புதான். கருப்பும் காந்தலும் எல்லோருக்கும் பிடித்தமானதுதான்’ என்று இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தாள். புவனாவிற்கு என்ன செய்வது, சொல்வது என்றே தெரியவில்லை. ‘சரி இன்று காப்பி வேண்டாம் பால் தருகிறேன்’ என்று சமாதானப் படுத்த முயன்ற போது ‘அம்மோவ் என் காபியில் கை வைக்காதே. என் முகத்தில் நீ கை வைத்ததே போதும்’ என்று சிரித்தாள்.
புவனாவும் அதில் சேர்ந்து கொண்டாள்.
j
Hilariously written . Enjoyable
LikeLike
ஹஹஹ. ஆசை யாரைத்தான் விடாதுஎன்பதைஅழகாக எழுதப்பட்ட சிறுகதை கடைசியில் காபி தான்தேவை என அழகாக கேட்டது தான் டுவில்ட்
LikeLike