( இத்தொடரில் என் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களைப் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். இவை கால வரிசைப்படி அமைந்தவை அல்ல. குறிப்பாக எனது இலக்கியப் பயணத்தில் நான் மறக்காத சில சுவையான நிகழ்வுகளையும் , சந்திப்புகளையும், திருப்புமுனை மேடைகளையும் பதிவு செய்ய இருக்கிறேன். வாய்ப்பளித்த குவிகம் மின்னிதழ் ஆசிரியருக்கு நன்றி – வவேசு)
வகுப்புக்கு வெளியே ஒரு பாடம்.
“ஏன் சார் நீங்க செருப்பு போடறதில்ல ?”
1967-ல் சென்னை விவேகானந்தா கல்லூரியில் புகுமுக வகுப்பில் பயிலும் ஒரு சிறு மாணவர் கூட்டம் அங்கே தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றும் பேராசிரியர் சி. ஜகன்னாதாச்சாரியாரிடம் இக்கேள்வியைக் கேட்டது. ஜகன்னாதாச்சாரியார் தமிழ் ஆங்கிலம் சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் துறைபோகியவர்.; ஆன்மிகத்திலும், ஆண்டாள் பாசுரங்களிலும் ஆய்வுகள் செய்தவர். இலக்கணப் புலி, பொய்யே சொல்லத்தெரியாத புனிதர்., தேசபக்தர்.
தமிழ்த்துறைத் தலைவரான அவர் சீனியர் வகுப்புகளுக்கே அதிகம் செல்வார். ஓரிரண்டு முறைகள் ஏதோ ஆசிரியர் வரவில்லை என்று எங்கள் வகுப்புக்கு வந்துள்ளார். அவர் வகுப்பு எடுக்கிறார் என்றாலே என் மனதுக்குள் பெரிய உற்சாகம். ஆங்கிலக் கவிதைகளையும் தமிழ்க் காப்பியங்களையும் இணைத்து அவர் உரையாற்றும் போது நேரம் போவதே தெரியாது.
கணுக்கால் வரை ஏறியிருக்கும், துவைத்த வெள்ளைக் கதர் வேட்டி கதர் ஜிப்பா, சிவந்த மேனி; நெற்றியில் திருமண்; தலையில் சிறு குடுமி; பிரவுன் கலர் ப்ரேம் போட்ட தடிமனான மூக்குக் கண்ணாடி., முகத்தில் என்றும் வற்றாத புன்னகை. செருப்பு அணியாத தன் கால்களை ஒரு நோட்டமிட்டுவிட்டு இளைய மாணவர்களைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே அவர் கேட்டார்
“ ஏண்டா பசங்களா ! கோவிலுக்குள்ளே யாராவது செருப்பு போடுவாளா ?
“என்ன சார் சொல்லறீங்க ! கோவிலுக்குப் போனா செருப்பு வேண்டாம்; ஆனால் திருவல்லிக்கேணியிலிருந்து நமது காலேஜுக்கு செருப்புப் போடாமல் நடந்து வருகிறீர்களே ! அது ஏன் சார் ?”
“திருவல்லிக்கேணி மயிலாப்பூர் இதெல்லாம் சித்தர்கள் நடந்த இடம்;;;நடமாடிக் கொண்டிருக்கும் இடம்..இது எல்லாமே கோயில் போலத்தான்..ஏன் ! நம்ம காலேஜும் கோயில்தான்….அதனாலதான் நான் செருப்பே போட்டுக் கொள்வதில்லை” .
முழுதும் புரியாமல் தலையாட்டிக் கொண்டு நின்ற கூட்டத்தில் நானும் இருந்தேன். ஒரு அசட்டுத் துணிச்சலில்
“சார்! பிரஹலாதன் கதை போலத்தானே ! பெருமாள் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் “ என்றேன். மற்ற மாணவர்கள் என்னைத் திரும்பிப் பார்த்தார்கள். கொஞ்சம் ஆசரியத்துடன் சார் என்னைப் பார்த்து “ எங்க படிச்ச இந்தக் கதையை ?” என்றார்.
“ எங்க பாட்டி சொல்லியிருக்கா சார்” என்றேன்.
“ ஒங்க பாட்டி மட்டுமில்ல..கம்பனும் இந்தக் கதையைப் சொல்லியிருக்கான் தெரியுமா ? சரி ! சரி எல்லோரும் வகுப்புக்குச் செல்லுங்கள் “ எனச் சொல்லிவிட்டு நகர்ந்தார்.
எனக்குத் தெரிந்த அளவில் கம்பன் இராமாயணம்தான் எழுதியிருக்கிறான். அவன் எங்கே பிரகலாதன் கதையை எழுதியிருக்கிறான். நூலகத்திற்குச் சென்று கம்ப இராமாயணப் பதிப்புகளை எடுத்துப் பார்த்தேன். பொருளடக்கப் பக்கத்தைப் பிரித்து வைத்துப் பார்த்தேன். அரைமணி நேரத்திற்குப் பிறகு கிடைத்தது “இரணியன் வதைப் படலம்” உடனே அந்தப் பகுதியை எடுத்து பாடல்களைப் பார்த்தேன்.
‘ “சாணினும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன் ; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன் ; இத் தன்மை
காணுதி விரைவின்” என்றான்; “நன்று” எனக் கனகன் சொன்னான்.
என்ற பாடல் இறைவன் எல்லா இடத்திலும் உள்ளான் என்பதைக் குறிக்கிற செய்தியைச் சொல்கிறது என்று புரிந்து கொண்டேன். அதனை எனது நோட் புத்தகத்தில் எழுதி எடுத்துக் கொண்டு போய் பேராசிரியரிடம் காண்பித்தேன்.
“ சார் ! பாட்டி சொன்ன கதையைக் கம்பனும் பாடியிருக்கிறான் என்று நீங்கள் குறிப்பிட்டது இந்த இடம்தானே” என்றேன்.
பேராசிரியர் மிகப் பெரிய கம்பன் இரசிகர். மற்றும் ஆய்வறிஞர். என அப்போது எனக்குத் தெரியாது. நானாக ஒரு கம்பன் பாடலைத் தேடி அவரிடம் சென்று காட்டியதை அவர் வெகுவாக இரசித்தார். பிற ஆசிரியர்களிடம் என்னைப் பாராட்டிப் பேசினார். வகுப்பறையில் இலக்கிய நயம் பாராட்டும் வினாக்களை என்னிடன் கேட்பார். நான் சரியான பதில் தந்தால் அனைவர் முன்னிலையிலும் என்னைப் பாராட்டுவார். ” என்ன பிரகலாதா !” என்றுதான் என்னை விளிப்பார்.
அந்த ஆண்டு கல்லூரி மலருக்காக விவேகானந்தர் மீது ஒரு அறுசீர் விருத்தப்பா எழுதி ஆண்டுமலரின் தமிழ்ப் பகுதிக்கான பொறுப்பை ஏற்றுள்ள தமிழாசிரியரிம் கொடுத்தேன். அதை வாங்கி வைத்துக் கொண்டு பிறகு பார்க்கலாம் என்று அவர் சொல்லிவிட்டர். அடுத்த வாரம் அவரை சந்தித்துக் கேட்ட போது,
“கவிதை நன்றாக உள்ளது. ஆனால் ஒரு சொல் சரியாக இல்லை. இரும்பெனத் திரண்ட தேகம் என்று இருக்கிறது. அதை “இரும்பென அமைந்த தேகம்” என்று மாற்று எனச் சொல்லிவிட்டு பிறகு இதே போலத் தேவையில்லாத சில மாற்றங்களையும் குறிப்பிட்டார்.
நான் பள்ளியிலிருந்தே கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டேன். ஓரிரண்டு பரிசுகளும் வாங்கியிருந்தேன். என்னைப் பொறுத்தவரை என் சொற்களே சிறப்பாக இருந்தன என நான் கருதினேன். என் கவிதையை யாரும் திருத்த முயலுவதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மேலும் துறைத் தலைவரான பேராசிரியரே என்னை அவ்வப்போது பாராட்டியது என் தலைக்குள் ஒரு மமதையைக் கொடுத்துவிட்டது. தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றுவந்தேன். தமிழ் யாப்பிலக்கணமும் அறிந்திருந்தேன் என்பதில் எனக்கு ஒரு பெருமை உண்டு. எல்லாம் சேர்ந்து என்னை உந்த நான் வாய்திறந்தேன்,
“சார்! நான் எழுதியதே சரியாக இருக்கு..நான் மாற்றமாட்டேன்” என்றேன்
நான் இப்படிப் பேசுவேன் என்று எதிர்பார்க்காத அவர் சற்றே கோபத்துடன் “ அப்படியென்றால் உன் கவிதையை நீயே வைத்துக் கொள். மலருக்குத் தேவையில்லை” என்று என் கவிதையை என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
ஏமாற்றத்துடன் அவர் அறையை விட்டு வெளியே வந்த நான் மேலே என்ன செய்வதென்று யோசித்தேன். நிறைய யோசனைக்குப் பிறகு தமிழ்த் துறைத் தலைவர் ஜகன்னாதாச்சாரியாரிடம் இது பற்றி முறையிடலாம் என்று கொஞ்சம் அச்சத்தோடு அவர் அறைக்குள் சென்றேன்.
நாற்காலியில் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்த அவர் என்னை ஏறிட்டுப் பார்த்தபடி “” யாரு ! பிரகலாதனா ?” என்று சிரித்துக் கொண்டே ”உள்ளே வா !” என்றார்.
எனக்கு இனம் புரியாத மகிழ்ச்சி. இத்தனை மாணாக்கர் இடையே ஆசிரியர் என்னை நினைவில் வைத்துள்ளர் என மகிழ்ச்சியடைந்தேன். ( அத்தனை மாணவர்களையும் நினைவில் வைத்துக் கொள்ளும் ஆற்றல் அவருக்குண்டு என்பதைப் பிறகுதான் அறிந்தேன்)
” சார்! நான் ஆண்டுமலருக்கு எழுதிய கவிதையில் ராமமூர்த்தி சார் ஒண்ணு ரெண்டு இடம் தப்புன்னு சொல்றார்..ஆனா அது அப்படியில்ல..திருத்தித் தரலேன்னா மலர்ல போட மாட்டேன்னு சொல்லறார் நீங்களே படிச்சு பாருங்க சார்” என நான் கவிதை எழுதிய தாளை அவரிடம் நீட்டினேன்.
அவர் அதை வாங்கி வைத்துக் கொண்டு “ வாத்தியார் சொன்னா சரியாத்தான் இருக்கும். நீ கிளாஸுக்குப் போ “ என என்னை அனுப்பிவிட்டார்/
எனக்கு மனசுக்குள் மகா கோபம். என்னை எப்போதும் பாராட்டிப் பேசும் பேராசிரியர் இப்படி ஒரு பக்கமாய் முடிவெடுத்து விட்டாரே என ஆதங்கம். மலரில் கவிதை வராமல் போய்விடுமே என வருத்தம் இனி இவரிடம் சென்று எதையும் கேட்கக் கூடாது என சிறுபிள்ளைத்தனமாக உள்ளுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்தேன்.
பதினைந்து நாட்களில் ஆண்டுவிழா. மலர் வெளிவந்தது. ஆர்வமில்லாமல் சுற்றிக் கொண்டிருந்த என்னிடம் நண்பர்கள் ஆண்டு மலரை எடுத்துவந்து என் கவிதை வந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார்கள். ஆச்சரியத்தோடும் மகிழ்ச்சியோடும் நான் ஓடிச் சென்று ராமமூர்த்தி சாரிடம் நன்றி சொன்னேன்.
“ எனக்கெதுக்கு நன்றி. அப்படியே திருத்தாம மலர்ல போட்டுடு அப்படீன்னு ஒங்க பேராசிரியர்தான் சொன்னார்” எனக் கொஞ்சம் இறுகிய முகத்தோடு அவர் சொன்னார்.
அட்டா! பேராசிரியரைத் தவறாக நினைத்துவிட்டோமே என எண்ணிக்கொண்டு மாலை கல்லூரி முடிந்ததும் விரைவாக அவரது அறைக்குச் சென்றேன்,
“ சார் இப்பத்தான் மலரைப் பார்த்தேன். என் கவிதை அப்படியே வந்திருக்கு. ரொம்ப தேங்ஸ் சார் !”
“ ஒன் கவிதையில தப்பு இல்ல.. இருந்திருந்தா நானும் போடச் சொல்லியிருக்க மாட்டேன். அது சரி ! கவிதையிலே ஒரு வார்த்தை கூட மாத்தமாட்டேன்னு என்ன அடம்?”
“கவிதை அப்படியே உள்ளேயிருந்து வர உணர்ச்சி சார் ! அது எப்படி வரதோ அப்படியே இருக்கணும் நான் ஒருமுறை எழுதிட்டா நானே கூட அத மாத்தமாட்டேன் சார். கவிதை புனிதம்” என்றேன்
கடகடவென பலமாகச் சிரித்தவர் “ ஆமாம் ! இதெல்லாம் ஒனக்கு யார் சொன்னது ?” என்றார்.
பலமாக யோசித்தாலும் இந்தக் கருத்தை யார் சொன்னதுன்னு நினைவுக்கு வரல. ஒரு திரைப்படக் கவிஞர் பெயர் மனக்கண் முன் நிழலாடியது. சொல்வது பிழையாகிவிடும் என எண்ணிப் பேசாமலிருந்தேன்.
“ நன்னாக் கேட்டுக்கோ ! கவிதைக்கு உணர்ச்சி மட்டும் இருந்தா போறாது. அறிவும் வேணும். நெறையவே வேணும்..கம்பனும் அறிஞன் பாரதியும் அறிஞன். பாரதியார் பல இடங்களில் தான் எழுதிய கவிதையைத் திருத்தி எழுதியிருக்கார் தெரியுமா ? ஒரு உதாரணம் சொல்றேன்.
”சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே” என்று எழுதியதில் “உயர்வு” என்பதை அடித்துவிட்டு “சொல்லில் இனிது தமிழ்ச் சொல்லே” என்ன மாத்தியிருக்கார். இது மாதிரி பல இடங்கள் இருக்கு… என்ன புரிஞ்சுதா?” ஒன்னோட தவறைச் சுட்டிக் காட்டுபவன் ஆசிரியருக்குச் சமம். ஒன் குறையையும் தவறுகளையும் சுட்டிக் காட்டுபவர்தான் ஒன் வளர்ச்சிக்கு ஆதாரம். நீ எழுதியதை மறுபடிப் பாக்கற வாய்ப்பு இதனால கிடைக்கும். அதன் பிறகு எதுன்னு நீயே தீர்மானம் பண்ணு..!” என்றார். இந்த உரையாடல் என் மனத்தில் நீங்காமல் நிலைத்துவிட்டது
வளரும் ஒரு கவிஞனுக்கு இந்த அறிவுரை எத்தனை முக்கியம் என்பது எனக்குப் போகப் போகத்தான் தெரிந்தது. தவறு கண்டுபிடிப்பவர்களை ஒதுக்கக் கூடாது. தவறு எனத் தெரிந்தால் திருத்திக் கொள்ளவேண்டும்; இதில் சின்னவன் பெரியவன் கிடையாது. கவிதை வாழ்க்கை இரண்டுக்கும் இது பொருந்தும். என்று புரிந்துகொண்டேன்.
ஏன் பலர் இதைப் புரிந்துகொள்வதில்லை ?
எனக்குக் கிடைத்ததைப் போல் ஒரு பேராசிரியர் கிடைக்க வேண்டுமே !
( தொடரும்)
பேரரசிரியாரின் பேராசிரியரைப் பற்றித் தெரிந்துகொள்ள நல்ல சந்தர்ப்பம். சிறப்பான துவக்கம். தொடரட்டும் உங்கள் இலக்கியத் தொடர் !
LikeLike
ஆரம்பமே சிறப்பாக அமைந்துள்ளது. அனுபவங்கள் தொடரட்டும். நன்றி.
LikeLike
ஆகா.. மலரும் நினைவுகளா..! மகிழ்ச்சி.. வவேசு சார்!
நிறைகுட அறிஞர் நினைவு மலர்ந்தால்
துறைதொறும் சிறந்த நிகழ்வுகள் மணக்கும்!
பிறையது வளர்ந்த முழுநில வளிக்கும்
கறையில்(லா) ஒளியில் கருத்துகள் பூக்கும்!
LikeLike