‘தூங்காதே தம்பி தூங்காதே- நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே,’ என்ற பாடலை எல்லாரும் கேட்டிருக்கிறோம். இங்கு தூக்கத்தை சோம்பேறித்தனத்துடன் இணைக்கிறார் பாடலாசிரியர்.
உறக்கம், அதாவது தூக்கம் எல்லா ஜீவராசிகளுக்கும் முக்கியமானது. உடல், மூளை இவற்றின் ஓய்வுக்கும், திசுக்களும் மற்ற உறுப்புக்களும் தங்களைச் சீர்படுத்திக்கொண்டு அடுத்தநாளை எதிர்கொள்ளத் தயாராவதற்கும் தூக்கமும் ஓய்வும் மிகவும் இன்றியமையாதது எனலாம். ஒருவர் உணவில்லாமல் கூட 48 மணி நேரம் இருந்து விடலாம்; ஆனால் 48 மணி நேரம் தூக்கமில்லாவிட்டால் இறந்துவிடக் கூடிய வாய்ப்புள்ளது எனக்கூறப்படுகிறது.
உயிரினங்கள் மட்டுமல்ல; செடிகொடிகளும் கூட இரவுகளில் உறக்கம் போன்ற ஒரு நிலைக்குத் தங்களை உட்படுத்திக் கொள்கின்றன என்பது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த உண்மை.
இதை எல்லாம் ஏன் இங்கு கூற வந்தேன் என நீங்கள் வியக்கலாம்.
கண்ணுக்குத் தெரியாத உயிர்வாழினங்களான பாக்டீரியா போன்றவையும் உறங்கும். ஆனால் அவை எவ்வாறு இந்த ‘உறங்கும் நிலை’யைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்று அறிவியல் கூறுவதைப் பார்க்கலாமா? இந்த நுண்ணுயிரிகள் உயர்ந்த உயிர்களான, விலங்குகள், மனிதர்கள் ஆகியன செயல்படுத்தும் மூளை, இதயம், ஜீரண உறுப்புகள், சுவாச உறுப்புகள், இன்னபிற எனப்பலவிதமான உறுப்புகளில் ஒன்றுகூட இல்லாதவை. ஒரேயொரு ‘செல்’ (cell) எனப்படும் உயிரணுக்களைக் கொண்ட நுண்ணுயிரிகள் எவ்வாறு இவ்விதமான உறங்கும் நிலையைச் சாதகமாகக்கொண்டு தம்மை நிலைப்படுத்திக்கொண்டு சாதிக்கின்றன?
மிகவும் சுவாரசியமான நிகழ்வுகளால் இதனை அவை சாதிக்கின்றன எனலாம்.
நுண்ணுயிரிகள் பலவிதம். வட்டவடிவமான, முத்துக் கோர்த்தது போன்ற அமைப்புடையவை,(cocci) நீண்ட அமைப்புடையவை,(bacilli) சீன எழுத்துக்கள் போலும் அமைப்புக் கொண்டவை, வளைவான அமைப்புக் கொண்டவை (comma-shaped) என்பன இவற்றுள் சில. இவற்றுள் நாம் நோயை உண்டாக்கும் நுண்ணுயிரிகள் சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம். இது மிகப்பெரிய உலகம். புகுந்து விட்டால் தலைகால் புரியாது. ஆனால் பிரமிக்க வைக்கும். மேலும் சில நுண்ணுயிரிகள், தமது சுற்றுப்புற சூழல் சாதகமாக இல்லாவிடில் மனித உடலின் வேறு இடங்களில் ஒளிந்துகொள்ளக் கூடிய சாமர்த்தியம் படைத்தவை. இன்னும் சில, கஷ்டமான சூழலில் தம்மை ஒரு கடினமான உறைபோலும் அமைப்பினுள் ஒளித்துக்கொண்டு, (spores) சரியான சமயத்திற்காகக் காத்திருப்பவை.
முதலில் நாம் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டியவை:
- நுண்ணுயிரிகள் தான் பலவிதமான தொற்றுக்களுக்குக் காரணமானவை. (காலரா, டைஃபாயிடு, டி.பி. எனப்படும் காசநோய், அம்மை, கோவிட், வயிற்றுப்போக்கு, சொறி, சிரங்கு, படை, இன்னபிற)
- இவை பல காலகட்டங்களில் பல்வேறு ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை. இந்த பாக்டீரியாக்கள் 4 பில்லியன் ஆண்டுகளாக பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவை வானமண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களை விட எண்ணிக்கையில் அதிகமானவை.
- பல கடினமான ஆராய்ச்சிகளின் மூலமே இவை எவ்வாறு தொற்றுக்களை விளைவிக்கின்றன, எவ்விதமான ஆராய்ச்சிகளால் அவற்றைக் கட்டுப் படுத்த இயலும் என அறிந்தோம் என்பதெல்லாம் பெரிய நாவல் (நவீனம்) சமாசாரம்தான். அவ்வப்போது அவற்றையும் காண்போம்.
முதலில் பாக்டீரியாக்களைப் பற்றிக் காண்போம். இவை சர்வாந்தர்யாமி! இல்லாத இடமில்லை! காற்றிலும், உடலிலும், செடிகொடிகளிலும், உண்ணும் உணவிலும் இவை உண்டு. இவை வளரத் தேவையானதெல்லாம் சிறிது உணவுதான். அது சர்க்கரையாகவோ, சிறிது புரதமாகவோ இருக்கலாம். சிறு தேக்கங்களான நீர்நிலைகளிலோ, உணவிலோ, அவை இளஞ்சூடான நிலையில் இருந்தால் (மனித உடலின் சாதாரண வெப்பநிலையான 37.4 டிகிரி செல்சியஸ்) அமர்ந்து வளர ஆரம்பிக்கும். மளமளவென வளரும் இவை இருபது நிமிடங்களில் ஒன்று இரண்டாகும் 2-4, 4-8, 8-16 என்று சில மணி நேரங்களில் பல லட்சங்களாகப் பல்கிப் பெருகிவிடும். உணவுப்பொருள் முழுமையாகத் தீர்ந்த நிலையில், “வாழ்வா, சாவா?” என முடிவு கட்டவேண்டிய நிலையில் இவற்றில் பெரும்பாலானவை இறக்கும். இதெல்லாம் ஒரு குத்துமதிப்பாகச் சொல்வதுதான். எஞ்சியுள்ள மற்றவை கொஞ்சம் சாமர்த்தியமாக தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் வழிமுறைகளைத் தேடும். ஏனெனில் தமது இனம் நிரந்தரமாக வாழ வகை செய்ய வேண்டுமல்லவா? இதை எல்லாம் நாம் எப்படி அறிந்தோம்?
இவற்றுக்கெல்லாம் முதலில் எஸ்கெரீஷியா கோலை( Escherichia coli) எனும் பாக்டீரியாவை முன்னுதாரணமாகக் கொண்டு பரிசோதனைகள் நடத்தினார்கள். பின் நிஜமான, தொற்றை விளைவிக்கும் சால்மொனெல்லா டைஃபி, ஸ்ட்ரெப்டோகாக்கஸ், இன்ன பிறவற்றைக் கொண்டும் அதே ஆராய்ச்சிகளை நடத்தி முடிவுகளை அறிந்தனர்.
இவை எவ்வாறு உறக்கம் எனும் நிலையைத் தம் வாழ்வுக்கு ஆதாரமாக்கிக் கொண்டுள்ளன?
உதாரணமாக, ஏதாவது தொற்று பாக்டீரியா நமது உடலினுள் புகுந்தால், உடலில் இயற்கையாகவே உள்ள எதிர்ப்புச் சக்திகள் (Body’s natural immunity) அவற்றை அழித்துக் கொன்றுவிடும். நம் உடலின் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள பொழுதுகளில் அவற்றின் கை ஓங்கி அவை நம் உடலில் பல்கிப் பெருகும். சில பொழுதுகளில் அவை நம் உடலில் பெருகும்போது ஆன்டிபயாடிக்குகளை உட்கொண்டு அவற்றை அழிக்க வேண்டியிருக்கும். மருத்துவர் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மாத்திரை வீதம் ஐந்து நாட்களுக்குத் தருவார். அதைக் கட்டாயம் தவறாமல் உட்கொள்ள வேண்டும். முதல் வேளை மருந்தில் பெரும்பாலானவை கொல்லப்படும். பாக்கி சிறுபான்மை அடுத்தவேளை மருந்தை நாம் உண்பதற்குள் மேற்கூறியவாறு பல்கிப் பெருகும். அடுத்தவேளை மருந்தில் இவையும் பெரும்பான்மை கொல்லப்படும். இங்கு நாம் நினைவிலிருத்த வேண்டியது இது மருந்துக்கும் பாக்டீரியாவுக்குமான போர். ஆனால் ஒவ்வொரு வேளை மருந்தாலும் கொல்லப்பட்டபின் எஞ்சியிருப்பவை தாம் உயிர்வாழத் துடிப்பதால் நம் உடலில் ஒளிந்துகொள்ள இடம் தேடும். ஆன்டிபயாடிக்கின் எதிர்ப்பிலிருந்து தப்பிக்க வேண்டுமல்லவா?
இதற்குள் நான்குவேளை ஆன்டிபயாடிக்கைச் சாப்பிட்டபின் நாம் நலமாக உணர்ந்து நிறுத்திவிட்டோமானால் மிச்சம் மீதி இருப்பவை திரும்பப் பெருகி நம்மை திரும்பவும் நோய்வாய்ப்படுத்தும். இல்லாவிடில், தமது மரபணுக்களில் சில மாற்றங்களைச் செய்துகொண்டு இந்த ஆன்டிபயாடிக்கின் தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைக்கத் தயாராகிவிடும். இப்போது மருத்துவர் வேறு ஆன்டிபயாடிக்கை நமக்குத் தர வேண்டிய கட்டாயத்திலிருப்பார்.
போதாக்குறைக்கு இந்த பாக்டீரியாக்கள் தமது செயல்பாடுகளை வெகுவாகக் குறைத்துக்கொண்டு ‘ஒரு உறங்கும் நிலை’க்குத் தயாராகி விடும் (dormant phase). எப்போது திரும்பவும் எழுந்து வளரலாம், நோய் தரலாம் எனவெல்லாம் தீர்மானிப்பதில் இவற்றின் பல மரபணுக்கள் பங்கு பெறும். தமது சுற்றுப்புறச் சூழல் தமக்கு சாதகமாக உள்ளதா எனக் கண்டறிந்தபின் மெல்ல வளர ஆரம்பிக்கும்.
இந்த பாக்டீரியாக்களில் இன்னொரு சாரார், நிலைமை பாதகமாகும்போது தம்மைச்சுற்றி ஒரு கடினமான உறையை (spores) உருவாக்கிக் கொண்டு விடுவர். அமைதியாக அதனுள் இருந்துகொண்டு இறந்துவிட்டது போலும் ஒரு நிலையை உருவாக்கிக் கொள்ளும் (dormancy). இதனை உடைத்து இவற்றை அழிப்பது கடினம். அதிகப்படியான நீண்ட சூட்டினால் (பிரஷர் குக்கர் போன்ற அமைப்புகளில்) மட்டுமே இவற்றை அழிக்க முடியும். இதுவும் உறக்கத்திற்கு சமானம். இந்த உறக்கம், இவை தம்மை அழிவிலிருந்து காத்துக்கொள்ள உதவுகிறது. பிறகு இவை எப்படி எப்போது விழித்தெழும்? அதுதான் அதிசயம். சுற்றுப்புற சூழல் சாதகமாகி, விழித்துக்கொள்ளலாம் எனும் நிலைமையைக் கண்டறியவென்றே சில புரதங்களை தம்மில் இவை கொண்டுள்ளன. இவை சாதகமான சூழலை மோப்பம் பிடித்தறிந்து கொள்ளும்! இங்கு உறக்கம் என்பது இவை தம்மைத் தற்காத்துக் கொள்ளும் வழிமுறையாகின்றது.
இன்னுமொரு வினோதமான நடைமுறை காசநோய்த் தொற்றை (tuberculosis) உண்டாக்கும் பாக்டீரியாக்களில் காணப்படுகிறது. இந்த நோய் உள்ளவர்களிடமிருந்து தொற்றுகலந்த காற்றை நாம் சுவாசிக்கும்போது இவை நம் உடலின் உள்ளே நுழைந்துவிடுகின்றன; ஆனால் எல்லா மனித உடல்களிலும் உடனே நோயை உண்டுபண்ணுவதில்லை. தாம் புகுந்த மனித உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும் போதோ, அல்லது மற்ற எதனாலோதான் நோய் உருவாகும். மற்றபடி ஆண்டுகள் கணக்கில் ஒரு தொந்தரவையும் பண்ணாமல் சமர்த்தாக அமைதியாக இருக்கும். இது இன்னும் ஒருவித மோனநிலை! உறக்கம் போன்றது! இதுவும் தம்மைத் தற்காத்துக்கொள்ளும் உத்தியே! எகிப்திய மம்மிகளின் உடல்களில் எல்லாம் இந்த டி. பி. பாக்டீரியாக்கள் இருந்துள்ளன எனக் கண்டறிந்துள்ளனர். உறக்கம் என்பது இவை முக்கியமாகத் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் ஒரு செயலாக இவற்றிற்கு உதவுகின்றது தானே!
இப்படிப்பட்ட பல விநோத நிகழ்வுகளைக் கொண்டது நுண்ணுயிரிகளின் உலகம்!
விநோதங்களைத் தொடர்ந்து காணலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~