“ஹெலனையும் அவளுடன் கவர்ந்துவந்த திரவியங்களையும் திரும்ப கிரேக்கர்களிடம் ஒப்படைக்கவேண்டும்.. அதுதான் நம் அழிவைத் தடுக்க ஒரே வழி” என்று டிராய் நாட்டு அமைச்சர் கூறியதும் அனைவர் கண்களும் பாரிஸையே பார்த்தன.
அவன் மறுமொழி டிராய் நகரத்தின் முடிவை நிர்ணயிக்கப்போகிறது என்பதை நன்கு புரிந்துகொண்ட மன்னர் பிரியம் மூத்த இளவரசன் ஹெக்டர் அவனை உற்று நோக்கினான் .
“ அவள் என்னவள். அவளைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது. அதுமட்டுமல்ல இப்போதைய பிரச்சினை ஹெலன் அல்ல. வீரத்தில் சிறந்தவர்கள் டிரோஜன்களா அல்லது கிரேக்கர்களா என்பதை நிர்ணயிக்கும் தருணம். வீரர்கள் முடிவெடுக்கவேண்டிய நேரம்” என்று ஆணித்தருணமாகக் கூறினான்.
தன் தம்பி சொல்வதை ஹெக்டரும் ஆமோதித்தான்.
“நமது வீரத்தை நிரூபிக்க இதை விடச் சிறந்த சந்தர்ப்பம் கிடைக்கப் போவதில்லை. என் ஈட்டிக்கும் வாளுக்கும் முன் எந்த கிரேக்கத் தளபதியும் உயிருடன் தப்பிச் செல்ல முடியாது. இன்னொரு ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஜீயஸ் கடவுளும் தற்சமயம் நம் பக்கம் இருக்கிறார். ஹீராவும் அதினியும் அவர் மனத்தைக் கலைப்பதற்கு முன் நாம் வெற்றி அடைந்து அகம்பாவம் பிடித்த கிரேக்கர்களை நம் எல்லையை விட்டே விரட்ட வேண்டும். என்னால் அது முடியும் “ என்று ஆவேசமாகக் கூறினான் ஹெக்டர்
இனி யுத்தத்தை யாரும் தவிர்க்க முடியாது என்ற நிலை உருவாயிற்று.
கிரேக்கரும் டிரோஜன்களும் இதை உணர்ந்துகொண்டு அதற்கான பணியில் தீவிரமாக இறங்கினர்.
இறந்தவர் உடலை அப்புறப்படுத்தும் போர் நிறுத்த அவகாசம் முடிந்ததும் பயங்கரமான போர் நடைபெறும் என்பதற்கான அறிகுறிகள் தோன்றின.
மற்ற கடவுளர்களும் நாம் எப்படி யாருக்கு எந்த விதத்தில் உதவுவது என்பதைத் தீர்மானித்து வைத்திருந்தனர்.
வீரத்தில் கடவுளையே ஜெயிக்கவல்ல பல தளபதிகள் தங்கள் பக்கம் இருப்பதால் கிரேக்கர்கள் தங்கள் வெற்றி உறுதி என்று நம்பி மதுவைக் குடித்து மித மிஞ்சிய மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.
அதேசமயம் ஹெக்டரின் தலைமையில் உள்ள டிரோஜன்கள் தங்கள் நிலை என்னாகுமோ என்ற கவலையை மறக்க மதுவைக் குடித்து மயங்கினர்.
போர் நிறுத்தம் முடிவடையும் தருணம்.
கிரேக்கர்கள் தங்கள் படையைச் சுற்றி யாரும் புக முடியாத மாபெரும் அரண் ஒன்றை ஏற்படுத்தினர்.
டிரோஜன்கள் தீப்பந்தங்களைத் தயார் செய்து அவர்கள் அரணை எப்படி உடைப்பது அதற்கான நல்ல தருணம் எது என்று அதற்கான மந்திராலோசனையில் ஈடுபட்டனர். கிரேக்கப் படையின் பலத்தையும் பலவீனத்தையும் அறிய ஒற்றன் ஒருவனை அனுப்பினர். ஆனால் அவர்களின் தூரதிர்ஷ்டம் அந்த ஒற்றன் கிரேக்கர்களிடம் மாட்டிக்கொண்டு டிராய் நகர உள்ளமைப்பைச் சொல்லிவிட்டு உயிர் துறந்தான்.
அதேசமயம் ஒலிம்பஸ் மலை உச்சியில் இருக்கும் கடவுளர் தலைவர் ஜீயஸ் படைக் காய்களை உருட்ட முடிவு செய்தார்.
அக்கிலிஸின் தாயான தன் முன்னாள் காதலி தன்னிடம் யாசித்ததை நினைவுபடுத்திக் கொண்டார்.
“இந்தப் போரில் அக்கிலிஸின் புகழ் நிலை நாட்டப்படவேண்டும். அவன் திரும்ப கிரேக்கர்களுக்கு ஆதரவாய் வரும் வரை டிராய் படை வெற்றிபெற வேண்டும். கிரேக்கர்கள் அக்கிலிஸிடம் கெஞ்சவேண்டும் . பின்னர் அவன் தலைமை ஏற்றபிறகு டிரோஜன்கள் முற்றிலும் அழிக்கப்படவேண்டும்”
விந்தையான விண்ணப்பம்! ஆனாலும் அவளுக்குக் கொடுத்த வாக்குறுதியை எண்ணி “இனி டிரோஜன்கள் வெற்றிக் கனியைச் சற்று சுவைக்கட்டும் “ என்று சிரித்துக் கொண்டே ஜீயஸ் காய்களை நகர்த்த ஆரம்பித்தார்.
போர் நிறுத்தத்திற்குப் பின் ஆரம்பித்த இருபத்தைந்தாம் நாள் யுத்தத்தில் டிராய் நாட்டின் மாவீரன் ஹெக்டரின் அதகளம் ஆரம்பமாயிற்று.
மாபெரும் குதிரைப் படையைக் கொண்ட டிராய் வீரர்கள் கிரேக்கர்களை அவர்கள் நாட்டிற்கே துரத்திவிடவேண்டும் என்ற வெறியுடன் போரிட்டார்கள்!
ஹெக்டர் சென்ற இடமெல்லாம் வெற்றிக்கு மேல் வெற்றி.
கிரேக்க தளபதிகள் அஜாக்ஸ் , டயாமிடிஸ், ஓடிசியஸ் மூவராலும் ஹெக்டரின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அகெம்னனும் மெனியலிஸும் பின்வாங்கும் வீரர்களை முன்னே சென்று தாக்குமாறு உத்தரவிட்டனர். ஆனால் தொடர்ந்து அதிரடி தாக்குதல் நடத்தும் ஹெக்டரின் போர் வெறிக்கு முன்னாள் கிரேக்கத் தளபதிகள் ஒவ்வொருவராக அடிபட்டுப் பின் வாங்கினர்.
அன்றைய நாள் போரில் டிரோஜன்கள் கை ஓங்கியது. கிரேக்கர்கள் பின்வாங்கி அரணுக்குள் புகுந்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர்.
கிரேக்கர்களை இப்படி நிராதரவாக விட்டு விட்டாரே ஜீயஸ் என்று அவருடன் சண்டை போட அவரது மனைவி ஹீராவும் வேறு ஒருத்திக்குப் பிறந்த மகள் அதினியும் சென்றனர். ஜீயஸ் அவர்களை எச்சரித்துவிட்டு தன் செயல்களில் இருவரும் தலையிட்டால் அது அவர்களுக்கு அழிவாகிவிடும் என்று மிரட்டி அனுப்பினார். ஜீயஸுடன் நேரடியாக மோத முடியாத இருவரும் ரகசியமாகக் கிரேக்கர்களுக்கு உதவுவது என்று தீர்மானித்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.
அன்று இரவு கிரேக்கப் படைத் தளபதிகள் அனைவரும் மந்திராலோசனையில் அமர்ந்திருந்தார்கள். இப்படிப்பட்ட தோல்வியை அவர்கள் சந்தித்ததே இல்லை.. படைவீரர்களின் மன வலிமையை நிலை குலையச் செய்துவிட்டது அன்றைய போர். வயதில் மூத்த நெஸ்டர் தன் தள்ளாத வயதிலும் போரிட்டு மரண காயத்தைப் பெற்று மற்ற தளபதிகள் ஆதரவால் தப்பி வந்தார். இனியும் கௌரவம் பாக்காமல் மாவீரர் அக்கிலிசை உதவிக்கு வரும்படி கேட்கவேண்டும் என்ற அவரது யோசனையை எல்லா தளபதிகளும் ஒப்புக்கொண்டனர். அகெம்னனுக்கு அதில் உடன்பாடு இல்லையென்றாலும் வேறு வழி எதுவும் தோன்றாததால் அவனும் ஒப்புக் கொண்டான். அதன்படி மிகச் சிறந்த தளபதிகளான அஜாக்ஸ் மற்றும் ஓடிசியஸ் இருவரையும் அக்கிலிஸ் இடம் சென்று அவன் உதவியைப் பெற்று வருமாறு ஆலோசனைக் கூட்டம் முடிவு செய்தது. இருப்பினும் அக்கிலிஸ் தங்களுக்குச் சாதகமாக போர் புரிய வருவானா என்பதில் அவர்களுக்கு சந்தேகம் இருந்தது.
தன்னை அவமானப்படுத்தி அனுப்பிய அகெம்னனுக்கு ஆதரவாகப் போர் புரிய அக்கிலிஸ் திட்டவட்டமாக மறுத்துவிட்டான். வந்திருந்த கிரேக்கர்களின் மாபெரும் தளபதிகளிடம் அதை மிகுந்த மரியாதையுடன் கூறி அவர்களை அனுப்பி வைத்தான். இருப்பினும் கிரேக்கப்படை டிரோஜன்களால் தோற்கடிக்கப் படுவதை அவன் விரும்பவில்லை. தனது கப்பலிலிருந்தே போரின் நிலைமையை தீவிரமாகக் கவனிக்கவேண்டும் என்று அக்கிலிஸ் தீர்மானித்தான்.
அடுத்து நடைபெற்ற போர்களிலும் டிரோஜன்கள் கை ஓங்கியே இருந்தது.
கிரேக்க வீரர்கள் டயாமிடிஸ் ஓடிசியஸ் இருவரும் ஹெக்டரின் தாக்குதலில் படு காயமுற்றார்கள். மிகவும் வீராவேசத்துடன் அகெம்னன் போர்க்களத்தில் நுழைந்தான். அவனது போர் முறை நல்ல பலனை அளித்தது. முன்னேறிவந்த டிரோஜன்கள் அகெம்னனுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பின்வாங்கத் துவங்கினர். ஆனால் ஹெக்டர் வந்து நேரடியாக அகெம்னனைத் தாக்கி அவனைப் படுகாயமடையச் செய்தான். மற்ற வீரர்கள் அகெம்னனை அழைத்துக்கொண்டு தங்கள் பாதுகாப்பு அரணுக்குள் வந்தார்கள்.
அடுத்து அடுத்து கிரேக்கப்படை பின்வாங்கி தோல்வியின் பாதையில் போவதைப் பார்த்த அக்கிலிஸின் மனதில் கிரேக்கர்பால் இறக்கம் உண்டாயிற்று. இருப்பினும் உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காகத் தன் உயிர் நண்பன் பெட்ரோகுலசை கிரேக்கத் தளபதிகளைச் சந்தித்து வரும்படி அனுப்பினான்.
பெட்ரோகுலஸ் கிரேக்கப் படையின் மூத்த தளபதியும் தற்போது மரண காயத்தில் துடித்துக் கொண்டிருப்பவருமான நெஸ்டரைச் சந்தித்தான். நெஸ்டர் அவனுக்கு குரு போன்றவர். அவரிடம் அவனுக்கு மிகுந்த மரியாதை இருந்தது. அவர் இருந்த நிலையைக் கண்டு அவருக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் பெட்ரோகுலசிடம் திவிரமாக இருந்தது. ஆனால் அவர் கேட்ட யாசகம் அவனை நிலை குலையச் செய்தது.
“ அக்கிலிஸ் கிரேக்கர்களுக்கு ஆதரவாக வர மறுப்பதில் உள்ள நியாயம் எனக்குப் புரிகிறது. அதனால் மிகச் சிறந்த வீரனும் அக்கிலிஸின் நண்பனுமான நீ எங்களுக்கு ஆதரவாகப் போரிடவேண்டும்! அதுவும் அக்கிலிஸின் போர் உடையைப்போட்டுக் கொண்டு நீ எங்களுடன் போர் புரிந்தால் அதுவே எங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். நான் உன்னிடம் யாசித்துக் கேட்கிறேன் எனக்காக நீ இந்த உதவியைச் செய்வாயா? என்று நெஸ்டர் கேட்டதும் பெட்ரோகுலஸ் திக்பிரமை அடைந்து என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான்.
(தொடரும்)
மிகச் சிறப்பான நடை.. மற்ற இதிகாசங்களையும் தொடர்ந்து எழுதுங்கள் எஸ் எஸ் சார் !
LikeLike