நான் ஆரம்பித்திருந்த “வாத்ஸல்யா ஃபார் யூமன் என்ரிச்மென்ட்” அமைப்பின் தகவல் அட்டையில் நான் ஒரு ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர் என்றதோடு “மனநலம் திடமாக்க உடல், உணர்வு, சமூக ரீதி” என்ற சொல்லைப் பார்த்து முப்பது வயதான விட்டல் வந்திருந்தார். கணினி வரைகலை வேலை, சிறப்பான படைப்புத்திறன் உள்ளவர். தான் இப்போது இருப்பதையும், மாறினால் எவ்வாறு இருக்கும் என்றதையும் கேலிச்சித்திரமாக வரைந்து காட்டினார்.
இவ்வாறு செய்தாலும், விட்டல் எங்குப் போனாலும் எதைச் செய்தாலும் தன் அளவுக்குமீறிய எடை கூச்சம் தருவதைச் சொன்னார். எப்படியோ இதைத் தாங்கிக் கொண்டிருந்தார்.
ஆனால் சென்ற வாரம் நிச்சயமான ஜோதி இவரை வேண்டாம் என்றது ஆட்டிவிட்டது. நிச்சயம் ஆனதும் அந்த மகிழ்ச்சியில் இவர் எடை ஏறியது. எடை ஏறியதால் ஜோதி இவனைப் பொறுப்பு இல்லாதவன் என எடுத்துக் கொண்டு வேண்டாம் என்று சொல்லி விட்டாளாம். இப்போதே இப்படி என்றால் கடமை மேல் அக்கறை இல்லையோ? மூன்றாவது முறையாக இப்படியே நடந்திருக்கிறது.
பெற்றோர் இல்லை. தாத்தா பாட்டியுடன் இருக்கிறார். கல்யாணமான அக்காக்களுக்கும் இவரைப் பற்றிய கவலை. என்ன செய்வது என்று புரியவில்லை.
வேலை சம்பந்தமாக மனநலம் பற்றி என்னுடைய கட்டுரை ஒன்றைப் படித்ததும், தனக்குள் நேர்வதை இணைத்ததால் வந்தேன் என்றார்.
பெற்றோர் விபத்தில் இறந்ததாகக் கூறினார். தாத்தா பாட்டி இவனையும் அக்காக்களையும் வளர்த்தார்கள். எழுபது வயதான தாத்தா புத்தகங்களை பிழை திருத்துவதில் பெயர்பெற்றவர். சுறுசுறுப்பானவர். அதனால்தான் அவருக்குக் கச்சிதமான உடல்வாகோ என்று விட்டல் நினைப்பாராம். அதைப் பார்த்து ஏங்கியதுண்டு. இந்த எண்ணத்தை அறிந்திருந்த அறுபத்து மூன்று வயதான பாட்டி ஆறுதலாக இருப்பாள்.
மூன்று நிராகரிப்பிற்குப் பிறகு தாத்தா பாட்டி படும் கவலை விட்டலின் மன அமைதியைப் பாதித்தது. அக்காக்களின் மன வருத்தம் வேறு மனதைத் துளைத்தது. அவர்களிடம் சொல்லாமல் வந்திருக்கிறேன், வீடு சென்றதும் சொல்ல நினைத்தேன் என்றார்.
பாசம் பொங்க, மறுநாள் இவருடன் தாத்தா, அக்காக்களும் வந்தார்கள். மூவரும் விட்டல் தன்னலமற்ற பரோபகாரி, அக்கறையாக இருப்பவர் என்று விஸ்தாரமாக விவரித்தார்கள். விட்டல் தன்னடக்கத்துடன் தன்னால் ஆனதைச் செய்கிறேன் என்றார்.
விட்டலின் வாழ்நிலை, பழக்க வழக்கம், அவருள் நேர்வதை அறிய ஆரம்பித்தேன். பெற்றோர் படைப்பாற்றல் உள்ளவர்களாக இருந்திருந்ததால் ஏதோவொரு கலை வடிவத்தை உபயோகித்து பாடங்களை கற்றுத் தருவார்கள். படிக்கும் நேரமும் சுகமான அனுபவமானது. எளிதாகப் புரிந்தது. அந்த ஞாபகத்தை மனம் உருக வர்ணித்தார். இவ்வாறு நினைவலைகள் ஓடிவருகையில் அவர் மனம் வருந்துவதைப் பாட்டி அறிவாள். அவருக்கு எப்போதும் முறுக்கு, ரிப்பன், தட்டை செய்து வைப்பாள். வருத்தம், சோகம் உணர்ந்ததும் அதைச் சாப்பிடுவார். கணக்குப் போடும் போதும், பாசமான தாய்தந்தையை சினிமாவில் பார்க்கையிலும் சாப்பிடுவாராம்.
அதே சமயம், தாத்தா-பாட்டி பார்த்துப் பார்த்து பாசமாகச் செய்யும் போது இவ்வாறு தோன்றுவது அவர்களைக் குறை கூறுவதுபோல் ஆகிறதோ என மனம் உறுத்தியது.
அலுவல வேலை விட்டலுக்கு மிகவும் பிடித்திருந்தது. அடிக்கடி ஏதோவொரு பாராட்டு, புகழாரம், கூடவே சம்பள உயர்வு. அக்காக்களுக்கும் ஆசிரியர் வேலையில் இவ்வாறே. அம்மாவின் ஆசி என எடுத்துக் கொண்டார்கள்.
விட்டலைத் இயங்கும் விதங்களைக் கவனித்துக் குறித்து வரச் சொன்னேன். நாள் முழுதும் செய்வதை, உணர்வதை, உட்கொள்ளுவதைக் கண்காணித்துக் குறித்துக் கொண்டு வருவது என முடிவாயிற்று.
விட்டல் தன் உணர்வுகளையும், சாப்பிடும் உணவையும் ஒப்பிட்டுப் பார்த்ததும் திடுக்கிட்டார். தனக்குச் சோகம், சந்தோஷம், கோபம், அழுத்தம் என ஒவ்வொரு உணர்விற்கும் ஓர் வகையான உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுகிறோம், அதைச் சாப்பிட்டால் மட்டுமே மனச்சாந்தி வருவதாகப் பழக்கப் படுத்தி விட்டோம் என்பது புலனாயிற்று.
இதேபோல் அடிக்கடி சிறு காரணிகளுக்கு ஹோட்டல் செல்வதே அத்துமீறி சாப்பிடுவதற்காக என்று புரிந்து கொண்டார். தன்னுடைய சமூக உண்ணுதலையும் சேர்த்துக் கொண்டார். இதை மையமாக வைத்து ஸெஷன்களில் மேலும் உரையாட, உடற்பசி அல்ல, உணர்வுகளின் தூண்டுதலைத் தாம் எதிர்கொள்ளும் விதமே எடை ஏறுவதற்குக் காரணம் என்பது தெளிவாயிற்று. தன் போக்கைப் பற்றிப் பேசப் பேச வியந்தார்.
இதை மாற்றி அமைக்க, உணர்ச்சி வசப்படும்போது சாப்பிடுவதற்குப் பதில், நடப்பது, பாட்டுக் கேட்பது போன்ற வேறு விதங்களில் ஆறுதல் பெறப் பழக்கிக் கொள்வது எனத் தீர்மானித்தோம். உணர்ச்சி வசப்படும்போது கார்ட்டீஸால் ரசாயனம் அதிகரித்து, சோகமாக்கும். ஏதோவொரு உடற்பயிற்சி செய்தால் ரசாயனம் குறையும். வேகமாக மூன்று நிமிடங்கள் நடந்தால் கூடப் போதும். விட்டல் இதைச் செயல்படுத்த, வித்தியாசம் தெளிவானது. எவை எடையைப் பாதிக்கின்றன என்ற தெளிவு பிறந்தது.
பெற்றோரைப் பற்றிப் பேசும்போது, பார்க்கும்போது, நினைக்கும்போது விட்டல் உணர்ச்சி வசப்படுவார். இதை மையமாக வைத்துச் சில செயல்பாட்டைச் செய்ய நியமித்தேன். எப்போதெல்லாம் நேரிலோ, திரைப்படத்திலோ பெற்றோர்களைப் பற்றி ஏதோ காண்கிறானோ, அதில் பெற்றோரைப் பாவிக்கும் விதத்தைக் குறித்துக் கொள்ள வேண்டும். மாதத்தின் முடிவில் ஆராய்ந்து கலந்துரையாடுகையில், விட்டல் புரிந்து கொண்டார். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் தன் பெற்றோரின் அரவணைப்பை, அவர்கள் செய்ததை நினைத்துக் கொண்டு போற்றும் விதம், அவர்கள் தன்னுடன் இருப்பதாகவே பாவிக்கச் செய்கிறது. அதே சமயத்தில், மற்றவர்கள் பந்தத்தைப் பார்ப்பதும் திருப்தி அளிக்கிறது. இதை ஏற்றுக் கொண்டதும், ஒப்பிட்டு ஏங்குவதை நிறுத்தியதும், விட்டலுக்கு அந்த பெற்றோர் ஞாபகம் வரும் தருணங்கள் சந்தோஷமானதாக மாறியது.
இந்தப் பெற்றோர் உறவை மையமாக வைத்து விட்டல் தயாரித்த குறும்படம் ஒன்று முதலிடம் பெற்றது!
விட்டலிடம் மற்றவர்களிடம் இல்லாத நற்குணம் ஒன்றைக் கவனித்தேன், அவருக்கு வற்றாத நன்றி உள்ளம் என. என்ன உன்னதமான வளர்ப்பு, கொள்கை!!
அடுத்தபடியாக, விட்டலின் எடையைச் சரிசெய்வதில் ஈடுபட்டோம். எங்கள் ஸெஷன்களில் டையட்டிஷியன் ஒருவரை ஆலோசிக்கச் சேர்த்துக் கொண்டேன். அவர் உணவைப் பற்றிய தகவல்கள் அளித்து, விட்டல் கையாளுவதைப் பார்த்துக் கொண்டார். விட்டல் அவற்றை மூன்று வாரங்களுக்குச் செயல் படுத்த, அதுவே பழக்கமாகியது.
விட்டலின் பாட்டியை டையட்டிஷியனுடன் சந்திக்கச் செய்தேன். பாட்டி தன்னால் விட்டலின் தவிப்பைப் பார்க்க இயலாததால் உணவாக அன்பைக் காண்பித்ததை விவரித்தாள். டையட்டிஷியன் தெளிவு செய்ததில் தன் பேரனுக்கு உணவுகளை உடல் நலனுக்கு ஏற்றவாறு எப்படிச் செய்வது என்று புரிந்து கொண்டாள்.
விட்டல் தனியாக இல்லை என்று தாத்தா பாட்டி இருவரும் எடை சரிசெய்வதில் பங்கு கொள்ள விருப்பம் தெரிவிக்க, அதைப் பற்றி ஆலோசித்தோம். விட்டல் தினசரி செய்ய வேண்டிய செயல்களைப் பட்டியலிட்டோம். நடப்பது, நீச்சல், பாட்டியுடன் மாடிப்படி ஏறுவது, தாத்தாவுடன் சைக்கிளில், மூவருமாகத் தோட்ட வேலை எனப் பல ஒவ்வொன்றாகச் சேர்ந்து கொண்டது. உறவுகள் கைகொடுத்தால் வெற்றி பெற உதவும், நீண்ட காலம் செய்து வர உதவும் என்று படித்ததைச் சொந்தமாக அனுபவிக்கிறேன் என்று விட்டல் மகிழ்ந்து பகிர்ந்தார்.
இது போய்க்கொண்டிருக்கையில், விட்டல் தன்னைப் பற்றி மிகத் தாழ்த்தி நினைப்பதைச் சரி செய்யவும் ஸெஷன்கள் அமைத்தோம். நெடுநாளாக, மிகுந்த எடையினால் பள்ளி, கல்லூரி, வேலையில் பல பேர்களின் கிண்டல். போகப்போக, மற்றவர்கள் தன்னைப் பற்றி எப்படிச் சொன்னார்களோ, தான் அது மட்டுமே என விட்டல் எடுத்துக் கொண்டார். தன் தனித்துவத்தைத் தொலைத்து விட்டார். மீண்டும் மீண்டும் முயன்றும் எடையை வகையாக வைத்துக் கொள்ள முடியாதது தன்மானத்தைப் பாதித்திருந்தது எனப் பகிர்ந்தார்.
விட்டல் தன் உணவு, செயல்பாட்டைச் சரி செய்யச் செய்ய, உடலில் மாற்றம் தென்பட்டது. கூடவே, இந்தத் தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடலாம் என்ற நம்பிக்கையும் பிறந்தது. எப்போதும் பலருக்குக் கற்றுத் தர வேண்டும் என்ற ஆசை, தன் டீம்லீட்டுடன் பேசி உற்சாகமாகப் பல வர்க்ஷாப் செய்தார். வந்தவர்கள் கற்றலோடு, இவருடைய உற்சாகத்தையும் சேர்த்து எடுத்துச் சென்றார்கள்.
இந்த தருணத்தில், ஜோதி தன் பெற்றோருடன் மீண்டும் விட்டல் வீட்டிற்கு வந்தாள். விட்டலின் உடல், நடத்தையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைக் கண்டு திடுக்கிட்டார்கள். அப்போது நிச்சயம் செய்ததை நிராகரித்தபின், வேறு யாருக்கும் ஜோதி சம்மதம் சொல்லவில்லை என்றார்கள். அந்த ஓரிரு சந்திப்பில் விட்டலிடம் கிடைத்த மன நிம்மதி தன்னை இப்போது இழுத்து வந்ததாகக் கூறினாள் ஜோதி. மேலும், அவருடைய வர்க்ஷாப் ஒன்றில் ஜோதியும் பங்கேற்றிருந்தாள், அனைவரும் உற்சாகமாகக் கற்றுக் கொண்டதைப் பார்த்து வியப்புற்றாள். வர்க்ஷாபில், வாழ்க்கையில், விட்டு ஓடுவது சுலபம், நின்று செய்வது கடினம்,, ஆனால் செய்தால் அதில் இருக்கும் மணம் என்றென்றைக்கும் என்று விட்டல் சொன்னது தன் மனதை மாற்றி விட்டது என்றாள் ஜோதி.