மருத மரங்கள் முறிந்து கிடப்பதைப் பார்த்த நந்தகோபன், அவை குழந்தையின் மீது விழவில்லை என்பதால் சற்று நிம்மதி அடைந்தான்.
தொடர்ந்து பல இன்னல்கள் கோகுலத்தில் ஏற்பட்டதால், பாதுகாப்பைக் கருதி, மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியான பிருந்தாவனம் சென்று குடியேற முடிவெடுத்தான் …..
பிருந்தாவனம் செல்ல முடிவெடுத்தல்
படர்ந்து மரங்கள் தரைகிடக்கப்
பார்த்த நந்தன் கவலுற்றான்
தொடர்ந்து தொல்லை துன்பங்கள்
தூய தங்கள் கோகுலத்தில்
நடந்து வரவே வாழ்விடத்தை
நல்ல பிருந்தா வனமென்னும்
அடர்ந்த மரங்கள் செறிந்தவிடம்
அடைந்து வாழ முடிவெடுத்தான்
பிருந்தாவன வருணனை
பொழிலிருக்கும் மணமிறைக்கும் புதுநிறத்துப் பூவிருக்கும்
நிழலிருக்கும் நெடுமரங்கள் நிறைந்துயர்ந்து வளர்ந்திருக்கும்
புழலிருக்கும் காலாம்பல் பொய்கைபல பொலிந்திருக்கும்
குழலிருக்கும் கோவலர்கள் குடிபுகுந்த குளிர்வனமே
(புழல்- உள்துளை//hollow)
(புழலிருக்கும் காலாம்பல் –உள்ளே துளை பொருந்திய தண்டினையுடைய ஆம்பல்/அல்லி)
.
அலையிருக்கும் யமுனையெனும் அணிநதியும் சூழ்ந்திருக்கும்
மலையிருக்கும் ஆபுரக்கும் மாண்புயர்ந்த பெயரிருக்கும்
கலையிருக்கும் கால்நடைகள் களிக்கும்புல் வெளியிருக்கும்
நிலையிருக்கும் அமைதியின்பம் நெஞ்சங்கள் நிறைந்திருக்கும்
(ஆபுரக்கும் பெயர்— கோவர்த்தனம்)
(கோவர்த்தனம் என்றால் பசுக்களின் செழுமைக்கு உதவுவது என்று பொருள்)
.
விண்ணின்று கருமுகில்கள் மிகமகிழ்ந்து பெயல்சுரக்கும்
தண்ணென்ற வாவிகளில் தாமரைகள் இதழ்விரிக்கும்
பண்ணெடுத்துக் குழலிசைத்துப் பசுமேய்க்கப் பசிபறக்கும்
அண்ணனொடு கண்ணனவன் அக்கதையால் மெய்ம்மறக்கும்
.
தொடர்ந்த கம்சனின் தொல்லை
பிருந்தா வனத்தில் கோகுலத்தார்
பெரிதும் உவந்து வாழ்ந்திருந்தார்
திருந்தா மனத்துத் தீயவனும்
தீமை தொடரத் திட்டமிட்டான்
வருந்தா வாழ்வு தானுறவே
மாய வேண்டும் மகவென்ற
பொருந்தா எண்ணம் நிறைவேறப்
பொல்லா அரக்கர் அனுப்பிவைத்தான்
(மகவு- கண்ணன்)
.
.
கன்றாய் வந்த அரக்கன்
( வத்சாசுரன்)
கன்றின் உருவில் ஓரரக்கன்
கறவைக் கூட்டம் தனில்புகுந்தான்
சென்று கண்ணன் அக்கன்றைச்
சீறும் குணிலாய் விளாமரத்தில்
நன்று புடைத்துக் கனியுதிர்த்தான்
நடுங்கிச் சிதைந்தான் அவ்வரக்கன்
வென்றி வென்றி வென்றியென
வியந்து சொன்னார் நண்பர்கள்
(குணில்– குறுந்தடி)
கொக்கின் உருவில் வந்த அரக்கன்
(கொக்கின் உருவில் வந்த பகாசுரனைக் கொல்லுதலும், அவன் தம்பி அகாசுரன் பழிதீர்க்க வருதலும் )
கொத்தும் புள்ளாம் கொக்குருவில்
கொல்ல வந்தான் ஓரரக்கன்
தத்திப் பாய்ந்து வந்தவனைத்
தனல்போல் சுட்டான் அக்குழந்தை
குத்தும் அலகைப் பிளந்தெறிந்தான்
கொடிய அரக்கன் உயிரிழந்தான்
மெத்த வருந்தி அவனிளையோன்
விரைந்து வந்தான் பழிதீர்க்க.
(தொடரும்)
ஊற்றென தமிழ்பொங்கி வருகிறது அந்த மாய கண்ணன் அருளால். 👌
LikeLike
பிரமாதம்
LikeLike
கவிதைகள் அனைத்துமே மிகச் சிறப்பு ஐயா!
LikeLike