இரண்டு வருடங்களுக்கு முன் சிதம்பரம் கீழசன்னதியில் ஒரு புத்தகக் கடையில் வாங்கிய சிறு புத்தகம் ’ஆசாரக்கோவை’ (எளிய நடையில், இனிய தமிழில் தெளிவுரை, அரும்பதவுரை) ஞா.மாணிக்கவாசகன் – உமா பதிப்பகம், சென்னை 600001. தொலைபேசி எண் – 25215363).
அன்றாட வாழ்க்கையில் நாம் பின்பற்ற வேண்டிய சில ஒழுக்க நெறிகளைச் சொல்வதாய் அமைந்த அழகான சிறிய பாடல்கள் – முதலில் சிவனைக் குறித்த பாயிரம் பின்னர் நூறு வெண்பாக்களைக் கொண்டது. குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, பஃறொடை வெண்பா என எல்லாவகை வெண்பாக்களிலும் பாடல்கள் உள்ளன.
மூலநூல் ‘ஆரிடம்’ என்ற வடமொழிநூல் என்கிறது கூகிள் சாமி! கிபி ஐந்தாம் நூற்றாண்டில் இயற்றப்பெற்றிருக்கலாம் – எழுதிய புலவர் கயத்தார் பெருவாயின் முள்ளியார். கடைச் சங்க காலத்துப் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் முதலாவது ‘ஆசாரக் கோவை’. உள்ளும், புறமும் தூய்மை உடைமையே ஆசாரம். (ஆசாரம் – ஒழுக்கம்; கோவை – தொகுதி).
“ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்”
ஒழுக்கம் – நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம் ஓம்பிய நெறி என்ற பொருள்களில் வருகின்றது. ஒழுக்கம் என்பது ஒரு வாழ்க்கை முறை. நன்னெறிகளுடன், உலகம் போற்ற, உலகைப் போற்றி வாழ்வது என்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். தினசரி அனுசரிக்கும் கடமைகளில் ஒழுக்க நெறியுடன் இருப்பது அவசியம் என்பதை வலியுறுத்தும் பாடல்களைக் கொண்டது ஆசாரக் கோவை!
சில பாடல்களைப் பார்க்கலாம்…
எட்டு பண்புகள்: (1)
“நன்றி அறதல் பொறை உடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத்தாரோடு நட்டல் இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து.
ஒழுக்கத்துக்கு உயிரான எட்டு பண்புகள் – ஆசாரங்கள்! நன்றியுடன் இருத்தல், பொறுமை பேணுதல், இனிய சொற்களையே பேசுதல், யாருக்கும் துன்பம் செய்யாமல் இருத்தல், கற்றறிந்து, அதன்படி நடத்தல், ஊருடன் கூடி வாழ்தல், அறிவுடைய பெரியோர்களைத் துணை கொள்ளுதல், நல்ல குணமுடையவர்களுடன் நட்பு – இவையே ஒழுக்கத்தின் உயிர்நாடி!
“நாளந்தி கோல்தின்று கண்கழீஇத் தெய்வத்தைத்
தானறியும் ஆற்றால் தொழுது எழுக அல்அந்தி
நின்று தொழுதல் பழி”. (9)
விடியற்காலையில் எழுந்து, பல்விளக்கி முகம் கழுவித் தூய்மை செய்துகொண்டு, அவரவர் முறைப்படி இறைவனைத் தொழ வேண்டும். மாலையில் நின்றபடி தொழுதல் குற்றமாகும்.
நீராடும்போது செய்யக்கூடியவை, கூடாதவை போன்றவைகளையும், சுற்றுச்சூழல் போற்றுதல் குறித்தும், உணவை எப்படி உண்ணுதல் வேண்டும் என்றும் பாடல்களில் வருகின்றன.
கண்ட இடத்தில் எச்சில் துப்புவதும், சிறுநீர் மலம் கழிப்பதும் சுகாதாரத்திற்குக் கேடு விளைவிப்பவை. இதையே,
“புல் பைங்கூழ் ஆப்பி சுடலை வழிதீர்த்தம்
தேவ குலம்நிழல் ஆனிலை வெண்பலி என்று
ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும்
சேரார் உணர்வுடையார்” (32)
எனப் பத்து இடங்களை – பசும்புல் படர்ந்த இடம், பயிர் விளைகின்ற நிலம், பசுஞ்சாணம், சுடுகாடு, புதைகுழி, பலர் நடந்து செல்லும் பாதை, புனித நீர்த்தடாகம், கோவில், நிழழ்தரும் இடம், பசுமாடுகல் கட்டியிருக்கும் மாட்டுத்தொழுவம், சாம்பல் – குறிப்பிட்டுச் சொல்கிறது ஆசாரக் கோவை.
நம்மில் பலருக்கு எப்படிப் பேசவேண்டும் என்ற கலை கைவருவதில்லை. அதைக் கூட ஆசாரக் கோவை குறிப்பிடுகிறது.
“விரைந்துரையார் மேன்மேல் உரையார் பொய்யாய
பரந்துரையார் பாரித்துரையார் ஒருங்கனைத்தும்
சில் எழுத்தினாலே பொருள் அடங்கக் காலத்தால்
சொல்லுக செவ்வி அறிந்து.” (76)
வேகமாகவும், சொன்னவற்றையே திரும்பத் திரும்பக் கூறாமலும், பொய்களை விளக்கியும், நீண்ட நேரம் பேசாமலும், சில சொற்றொடர்களிலேயே கேட்பவர்க்குப் புரியும் வகையில், காலமும் இடமும் அறிந்து பேச வேண்டும்!
இன்றைய காலகட்டத்தில் தற்புகழ்ச்சியும், பிறரை இகழ்ந்து தூற்றுதலும் அதிகமாகிவிட்டன. ஆசாரக் கோவை சொலதைப் பார்ப்போம்:
“உதவிப் பயன் உரையார் உண்டி பழியார்
அறத்தொடு தான் நோற்ற நோன்பு வியவார்
திறத்துளி வாழ்தும் என்பார்.” (88).
ள்ளஒழுக்க நெறி வழியே வாழ நினைப்பவர்கள், தான் செய்த உதவியைப் பற்றி வெளியில் சொல்லமாட்டார்கள். அன்போடு தந்த உணவை இகழ மாட்டார்கள். தான் செய்த தான தருமங்களையும், மேற்கொண்ட விரதங்களையும் பற்றித் தாமே பெருமை அடித்துக்கொள்ள மாட்டார்கள்.
உழைப்பின் உயர்வைப் பற்றி….
“நந்தெறும்பு தூக்கணம் புள் காக்கை என்று இவைபோல்
தம் கருமம் நல்ல கடைபிடித்துத் தம் கருமம்
அப்பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம்
எப்பெற்றி யாயினும் படும்.” (96).
எறும்பைப் போல சுறுசுறுப்பாய் அயராது உழைப்பவருக்கும், தூக்கணங்குருவி, விடாமுயற்சியோடு பாதுகாப்பாகக் கூடு கட்டி வாழ்வதைப் போல வாழ்பவருக்கும், காக்கையைப் போல ஒற்றுமையுடன் தன் இனத்துடம் கூடி உண்பவருக்கும் வாழ்வின் ஒழுக்கம் எப்படியும் உயரும், வளரும்!
ஒழுக்க நெறி, உண்ணும் முறை, எச்சில், கடமைகள், காணக்கூடாதவை, செய்யக்கூடாதவை, நல்ல நாட்கள், நீராடும் முறை, பெரியோர் பண்பு, போற்ற வேண்டியவை என அனுபவ நெறிகளைச் சொல்லும் நூறு பாடல்கள் – ஒவ்வொரு பாடலையும் வாசிக்கும்போது, நமது முன்னோர்கள் கடைபிடித்த ஒழுக்க நெறிகளை உணரமுடிகிறது. சீரான, எளிமையான வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் இந்த நெறிகள் எனப்படுகிறது.
இன்றைய இளைஞர்கள் அவசியம் வாசித்துப் பின்பற்றவேண்டிய ஒழுக்க நெறிகள் இவை- வாசிக்கலாம்.
அருமையான அறிமுகம் டாக்டர் சார்! இதுபோல இன்னும் தொடர்க இன்தமிழ் நற்பணி!
LikeLike
மிக்க நன்றி சார்!
LikeLike