முன்னுரை
”யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்பது பெரும்பாலும் அனைவரும் அறிந்த பாடல் அடியாகும். இது புறநானூறு என்னும் சங்ககால நூலில் காணப்படுகிறது. இதை எழுதியவர் கணியன் பூங்குன்றனார். இதன் பொருள் “அனைத்து ஊர்களும் நம் சொந்த ஊரே! உலகமக்கள் அனைவரும் நமது உறவினர்களே!” என்பதாகும். அதாவது எல்லா ஊர்களையும் நம் சொந்த ஊராகக் கருதி அங்கு எந்தக் கருத்து மாறுபாடுமின்றி வாழ வேண்டும். எல்லா மக்களையும் நம் உறவினராகவே கருதி அவரிடத்து அன்பு செலுத்த வேண்டும் என்பதாகும்.
சங்க கால நூல்கள் பலவற்றுள் இது போன்ற வாழ்வியலுக்குத் தேவையான பல கருத்துகள் காணப்படுகின்றன. “இலக்கியம் என்பது காலக்கண்ணாடி” என்பர். சங்க கால நூல்கள் அக்காலத் தமிழர்களின் வாழ்க்கை முறையை நன்கு படம்பிடித்துக் காட்டி உள்ளன. ”எத்தொழில் செய்தாலும் அதைத் தரத்தோடு செய்ய வேண்டும். பிறரை ஏமாற்றக் கூடாது. நம் உறவினரைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். நம்மால் முடிந்த மட்டும் பிறருக்குப் பொருள் கொடுத்து உதவ வேண்டும். செல்வத்துப் பயனே ஈதல் என்பதை உணர வேண்டும். குறிப்பாக அறம் சார்ந்த வாழ்வை நாம் வாழ வேண்டும்” என்பன போன்ற குறிக்கோள்களில் தமிழர் வாழ்ந்திருந்ததைச் சங்க நூல்கள்தாம் எடுத்துக் காட்டுகின்றன.
சங்க காலம் என்பதை வரையறுப்பதில் பல பதிவுகள் உள்ளன. கி.மு. 50ஒ முதல் கி.பி 200 முடிய சங்ககாலம் என்று பேராசிரியர் முனைவர் ரா. சீனிவாசன் கூறுகிறார். சங்கம் என்பதற்குக் கூட்டம் என்று ஒரு பொருள் உண்டும். ஆண்டாள் சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் என்பார். அனைவரும் கூட்டமாய் வந்ததை இப்படிக் காட்டுவார். புலவர்கள் ஒருங்கு கூடித் தமிழ் ஆய்ந்த இடம் சங்கம் எனக் கருதலாம்.
பண்டைக்காலத்தில் மூன்று சங்கங்கள் வெவ்வேறு காலத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. முதற்சங்கம் கடல் கொண்ட தென்மதுரையில் அமைந்திருந்தது. 4449 புலவர்கள் அதில் பங்கு பெற்றுப் பல நூல்கள் எழுதினர். இது 4400 ஆண்டுகள் இருந்ததாம் கி.மு. 2387-இல் ஏற்பட்ட கடல்கோளினால் இது அழிந்திருக்கும் எனக் கூறப்படுகிறது. இச்சங்கத்தில் அகத்தியர், முருக வேள், சிவபெருமான், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவர் போன்ற புலவர்கள் இருந்தனர். அச்சங்ககாலத்தில் முதுநாரை, முது குருகு, பெரும்பரிபாடல் போன்ற நூல்கள் இயற்றப்பட்டன. ஆனால் அவை கிடைக்கவில்லை.
இரண்டாவதான இடைச்சங்கம் கபாடபுரத்தில் அமைந்திருந்தது. இந்த நகரமும் கடலுக்குள் மூழ்கின குமரிக் கண்டத்தில்தான் இருந்தது. 3700 புலவர்கள் அச்சங்கத்தில் வீற்றிருந்தனர். இது 3700 ஆண்டுகள் நடைபெற்றிருந்தது. பெருங்கலி, வெண்டாளி, குருகு, அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம் போன்ற பல நூல்கள் அக்காலத்தில் தோன்றின. அவற்றில் தொல்காப்பியம் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் தமிழ்ச்சங்கம் இன்றைய மதுரையில் இருந்தது. 449 புலவர்கள் அதில் இருந்தனர். 449 ஆண்டுகள் அது செயல்பட்டது. நக்கீரனார், சிறுமேதாவியார், இளந்திருமாறன், நல்லந்துவனார் போன்ற புலவர்கள் அக்காலத்தில் இருந்து தமிழுக்கு அணிச் செய்தனர். நமக்குக் கிடைத்துள்ள எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்கள் அக்காலத்தில் தோன்றியவை.
எட்டுத்தொகை என்னும் தொகுப்பில் எட்டு நூல்கள் அடங்கி உள்ளன. இதில் உள்ள ஒவ்வொரு நூலும் பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்களால் எழுதப்பட்டுப் பின்னர் தொகுக்கப்பட்டவையாகும்.
அந்நூல்கள் யாவை என்பதைப் பழம்பாடல் இவ்வாறு காட்டுகிறது.
”நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு—பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம்என்று
இத்திறத்த எட்டுத் தொகை/
இதன் மூலம் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன எட்டுத்தொகை நூல்கள் எனக் கொள்ள முடிகிறது. இவற்றில் நற்றிணை, குறுந்தொகை, அங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்பன அகத்துறை சார்ந்தவை. பதிற்றுப் பத்தும் புறநானூறும், புறத்துறை வகையில் வருவன. பரிபாடல் இசை பற்றி அமைந்த நூலாகும்.
“முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி—மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
என்னும் பாடல் பத்துப் பாட்டு நூல்களைப் பட்டியலிடுகிறது.
திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன பத்துப் பாட்டு நூல்களாம். இப்பத்தில் ஐந்து நூல்கள் ஆற்றுப்படை நூல்களாக அமைந்துள்ளன. வள்ளலை நாடிப் பரிசில் பெற்று வருபவர். எதிரே வருபவரிடம், ”நீரும் சென்று அந்த வள்ளலிடம் பரிசு பெறுக” என்று கூறி அவ்வள்ளலின் இருப்பிடம் போகும் வழி எல்லாம் கூறி ஆற்றுப்படுத்தலே ஆற்றுப்படை நூல்களாம்.
இந்தச் சங்க இலக்கிய நூல்களைச் சுருக்கமாக ஒவ்வொன்றாகச் சுவைத்து அனுபவிப்பது நமக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை
(தொடரும்)
(இனி வரும் மாதங்களில் தமிழின் பெருமை வாய்ந்த பதினெண் மேல்கணக்கு சங்க நூல்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியே பிழிந்து அதன் சாறெடுத்து ரசித்து ருசித்து அருந்தி மகிழ்வோம். பின்னர் பதினெண் கீழ்க் கணக்கு நூல்களையும் சுவைப்போம். இதனை நமக்குப் படைத்துத் தர முன்வந்த பாசச்சுடர் வளவதுரையன் அவர்களுக்கு அன்பான நன்றி )
அருமையான முயற்சி வாழ்த்துகள்… சங்கம் பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன ஆயினும் சங்கம் இருந்தமைக்ககான சான்றுகளும் பல உள்ளன.
சங்கம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் ‘சீத்தலைச்சாத்தனார்’.
“உயர்மதிற்கூடலில் ஆய்ந்த ஒண்தீந்தமிழ்” என்கிறார் மாணிக்கவாசகர்.
“தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே” என்கிறது புறநானூறு (56). இப்படி பலவற்றை சுட்டி காட்ட முடியும்.
இசையுடன் பாடக் கூடிய பொருட்கலவை நூலே ‘பரிபாடல்’. ‘இசைப்பாட்டு’ என்றும் கூறுவர் ஆனால் இசையைப் பற்றிய நூலா என்பது எனக்கு தெரியவில்லை… தேர்ந்த அறிஞர்கள் தான் கூற வேண்டும். அகமும் புறமும் கலந்த நூல். வைகையைப் பற்றிய பாடல்கள் மட்டுமே அகம் மற்றவை புறம்.
பரிந்து செல்லும் ஓசையுடைய பரிபாட்டால் ஆயினமையால் பரிபாடல். பா வகையால் பெயர் பெற்றது.
“நாடக வழக்கிலும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கனும்
கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்”——-தொல்காப்பியம். (அகப்பொருள் பாட ஏற்றது கலியும் பரியும்…)
தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துகள்…
பா.ஏகரசி தினேஷ்
“இடர்களையாய்” நூலின் ஆசிரியர்.
LikeLike