ராஜேந்திரன் என்னும் பெயர் இந்திய சரித்திரத்தை அலங்கரித்தது.
அவனது இந்தியப்படையெடுப்பு, ஒருவழியாக முடிந்தது.
நானா திசையும் வெற்றிதான்!
ராஜேந்திரன் கங்கையைக் கொண்டான்!
தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோயிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோயில் கட்டி, லிங்கத்தையும் நந்தியையும் பெரிதாக பிரதிஷ்டை செய்தான்.
கோயில் கும்பாபிஷேகத்திற்கு தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து அபிஷேகம் செய்தான்.
இதனால் இவ்வூர் “கங்கை கொண்ட சோழபுரம்’ ஆனது.
ஒரு நாட்டின் வளத்திற்கும் பலத்திற்கும் வணிகமே அச்சாணி. சோழப் பேரரசு செழிப்புற்றிருக்க வேண்டுமெனில் இந்திய பெருங்கடலில் வல்லாதிக்கம் செலுத்த வேண்டும். இதற்கு இக்கடல் பாதையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
ராஜேந்திரனின் கடலாட்சியை கடல்புறா போல காவியமாக எழுதாவிட்டாலும், ஒரு சிறுகதையாக எழுதுவது முறையாகும்.
இதோ:
கி பி 1025:
கங்கைகொண்ட சோழபுரம்.
அங்கு, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கோட்டை, அரண்மனை, மற்றும் மாட மாளிகைகள் புதுப்பொலிவுடன் இருந்தது. வானுயர்ந்த அந்த பெரியகோவிலின் மணி நகரெங்கும் கேட்டுக்கொண்டிருந்தது. மன்னன் ராஜேந்திரன் கங்கைகொண்ட சோழபுரத்தின் புதிய அரண்மணயில் மந்திராலோசனையில் இருந்தான்.
மந்திரிகள், படைத்தலைவர்கள், ஆலோசகர்கள், மற்றும் அரசியல் வல்லுனர்கள் அனைவரும் குழுமியிருந்தனர்.
யுவராஜன் ராஜாதிராஜன், ராஜேந்திரனுக்கு அருகில் பெரும் ஆசனத்தில் இருந்தான். அவனுக்கு அருகில் மற்ற இளவரசர்கள் இரண்டாம் ராஜேந்திரன், வீரராஜேந்திரன் இருவரும் உயர் ஆசனங்களில் அமர்ந்திருந்தார்கள்.
ராஜேந்திரன் பேச ஆரம்பித்தான்:
“தந்தையார் மறைவுக்குப் பின், சோழ ஆட்சிப்பொறுப்பை ஏற்று, இன்றுடன் 11 ஆண்டுகள் முடிந்தது. தந்தையின் வீரமும், அறிவும், ராஜதந்திரமும், சிவபக்தியும் நமக்கு ஒரு உத்வேகமாக இருந்து நம்மை நடைபோட வைத்திருக்கிறது. அவர், சோழ நாட்டின் எதிரிகள் ஒருவரையும் விடாமல் அழித்து, நட்பு ராஜ்யங்களைப் போற்றி ஆண்டு வந்தார். அவரது தீர்க்கதரிசனத்தில், சோழக்கடற்படை பெரும் சக்தியுடன் பலப்பட்டது. அவருக்குப் பிறகு, என்னாட்சியில் அதே எதிரிகள் மீண்டும் கிளர்ச்சி செய்ய, நாமும் நமது படை கொண்டு, இந்தப் பத்தாண்டுகள் இடைவிடாது போர் புரிந்து, அனைவரையும் ஒடுக்கினோம். பாண்டிய நாட்டில், நம் சோழ இளவரசன், சுந்தர சோழ பாண்டியனாக இருக்கிறான். சாளுக்கிய, ஈழம் எல்லாம் அடங்கிவிட்டது. நாமும் ஒருபடி மேலே சென்று, கங்கை நாடுகளை வென்று, இங்கு கங்கை கொண்ட சோழபுரத்தையும் நிறுவினோம். இந்த படையெடுப்பில் பல செல்வங்களைக் கொண்டு வந்தோம். ஆனால், இதற்கு, நாம் செலவிட்ட மூலதனம் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்த நகரத்தையும், சிவன் ஆலயத்தையும் நிர்மாணிக்க எத்தனை பொருள் தேவைப்பட்டது? மேலும், நமது படையில், 60000 யானைகள், 2 லட்சம் அராபியக் குதிரைகள், 20 லட்சம் காலாட் படைகள், ஆயிரம் கப்பல்கள் இத்யாதி!”
இதைச்சொல்லி நிறுத்தினான் ராஜேந்திரன்.
படைத்தலைவர்கள் இது அனைத்தும் அறிவார்கள்.
ஆயினும் இந்த எண்ணிக்கை அவர்களது உற்சாகத்தைக் கிளப்பி விட்டதால்,
“வெற்றி வேல், வீரவேல்’ என்று ஆர்ப்பரித்தனர்.
புன்னகையுடன் ராஜேந்திரன் தொடர்ந்தான்:
“இந்தப் பெரும் படைக்கு நாம் இத்தனை நாட்கள் வீர விருந்து கொடுத்தோம். இந்த வீரர்களுக்கு, நாம் என்றுமே வாழ்க்கை தரவேண்டும். அதற்கு எத்துணை செல்வம் தேவை! நாம் எல்லா திசைகளையும் வென்ற பின் இப்பொழுது சற்று அமைதியாய் உள்ளோம். அதாவது, நமது போர் வருமானம் குறைந்து விடும். கப்பத்தால் வரும் வருமானம் மட்டும் தான் கருவூலத்துக்கு ஓரளவுக்குப் பலம். இனி நமது நாட்டின் வருமானம் வணிகத்தில் தான் உள்ளது“ என்றான்.
மன்னன் ஏதோ முக்கியமான செய்திக்கு அடி போடுகிறான் என்பதை அனைவரும் உணர்ந்தனர்.
ராஜேந்திரன் தொடர்ந்தான்:
“இன்று சோழர் வணிகம் என்பது சோழநாட்டிலிருந்து, இந்தோனேசியத் தீவுகளின் வழியாக சீனா வரைக்கும் மற்றும் தமிழகத்தில் இருந்து பாரசீக வளைகுடா வழியாக அரேபிய நாடுகளுக்குமாக நடக்கிறது. சில வணிகர் குழு ஆப்பிரிக்க மற்றும் ரோமாபுரி வரை சென்று வணிகம் செய்தது. தமிழகத்தில் நெய்த பருத்தி ஆடைகள், வாசனைப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றை சீனாவிற்கு விற்பனை செய்து அங்கு கிடைக்கும் பட்டுப் பொருட்களை வாங்கி வருகின்றனர். இவை அனைத்தையும் மேற்கு மற்றும் அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். அரேபிய வணிகர்களும் இவற்றை வாங்கி மேற்குலக நாடுகளுக்கு விநியோகிக்கிறார்கள்.
இதன் வரி தான் நமது வருமானம்”.
ராஜேந்திரன் சற்று நிதானித்தான்.
பிறகு தொடர்ந்தான்.
“சைலேந்திர குல ஸ்ரீவிஜய மன்னருக்கும் தந்தை இராஜராஜருக்கும் நல்ல நட்புறவு இருந்தது.
மார விஜயதுங்கவர்மன் மன்னன் தான் சூடாமணி விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டிக்கொடுத்தவன். இதற்கு என் தந்தையின் முழு ஆதரவும் இருந்தது. என் ஆதரவும் இருந்தது. இதைக் கல்வெட்டு ஒன்றிலும் அறிவித்துள்ளேன்.
நீண்ட காலமாகவே ஸ்ரீவிஜயத்துடனான சோழர்களின் நட்புறவு நெருக்கமாக இருந்திருக்கிறது. மேலும், சீன அரசர்களுடனான சோழ அரசர்களின் தொடர்புக்கும் ஸ்ரீவிஜயம் உதவி வந்துள்ளது.
ஆயினும், இப்பொழுது இதில் பெரிய பிரச்சினைகள் வந்துள்ளது.
அரசியல் குழப்பங்கள் நிகழ்ந்துள்ளது.
மார விஜயதுங்கவர்மன் மரணத்துக்குப் பின், அவன் மகன் சங்கரம விஜயதுங்கவர்மன் மன்னனானான்.
கம்புதேசத்தில் (இன்றைய கம்பூச்சியா) கெமர் அரசின் மன்னன் முதலாம் சூர்யவர்மன் நமது உற்ற நண்பன். (தற்போதைய கம்போடியாவை மையமாகக் கொண்டு லாவோஸ், தாய்லாந்து, மற்றும் வியட்நாம் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது கெமர் பேரரசு). அவன் தாம்பரலிங்கா நாட்டின் மீது போர் தொடுக்க நினைத்தான். இந்தச் சூழலில் தான் சூர்யவர்மன் என் உதவியை நாடினான். அவனது தூதுவன் நான்கு மாதம் முன் நம் அரண்மனைக்கு வந்து என்னிடம் இவை அனைத்தையும் கூறினான். நான் ஸ்ரீவிஜய மன்னன் மார விஜயதுங்கவர்மனுக்கு சூரியவர்மனுக்கு உதவி செய்யுமாறு ஒரு கடிதம் அனுப்பினேன். அதற்கு அவன் பதில் ஒன்றும் அனுப்பவில்லை.
அது மட்டுமல்ல, ஸ்ரீவிஜய அரசாங்கம், மலாக்கா நீரிணைக்கு (இந்தோனீசிய தீவுகளுக்கு) வரும் சோழ நாட்டு வணிகர்களுக்கு அதிகமாக வரிவிதிக்க ஆரம்பித்தது. இவ்வரிவிதிப்பின் மூலம் கீழைக்கடலில் ஸ்ரீவிஜய அரசு தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்த முனைந்தது. சோழர் வணிக வருமானம் குறையத்தொடங்கியது. ”
ராஜேந்திரன் இதைச் சொல்லிவிட்டு சபையினரைப் பார்த்தான்.
சபையினர் அனைவரும் பேராவலுடன் மன்னனின் அரசியல் கணிப்பை ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தது. அடுத்து என்ன வரப்போகிறது என்று ஆவலுடன் பார்த்தனர்.
மன்னன் தொடர்ந்தான்:
“அத்துடன்.. சென்ற மாதம் வேறு பல செய்திகள் வந்தது..தாம்ரலிங்கா மன்னன் ஸ்ரீவிஜய அரசிடம் உதவி கோரியதாகவும், அதன்படி அவர்கள் கூட்டணி அமைத்துள்ளதாகவும் உளவுச் செய்திகள் கூறுகின்றன.
தாம்பரலிங்கா (மலேசியா) அரசனுக்கு உதவியாக கடாரத்து (ஸ்ரீவிஜய) மன்னன் சங்கரம விஜயதுங்கவர்மன் படையுடன் புறப்பட்டுச் செல்வதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. .
நேற்று, சூர்யவம்சனின் தூதன் வந்து என்னைச் சந்தித்தான். நாம் கேட்ட அந்தச் செய்திகளை உறுதிப்படுத்தி, சூர்யவம்சனுக்கு உதவக் கோரிக்கை விடுத்தான்” என்று கூறி ராஜேந்திரன் நிறுத்தினான்.
சபையின் நிசப்தம் நிலவியிருந்தது.
‘மன்னனின் முடிவு என்னவோ?’ என்று அறியத்துடித்த அனைவரது இதயங்களும் சில நொடிகள் துடிப்பதை மறந்தன.
ராஜேந்திரன் முகத்தில் புன்னகை பெரிதாக விரிந்தது.
சொன்னான்:
“தந்தையின் கடற்படையெடுப்பில், நான் அரபிக்கடலில் கலந்து கொண்டது, எனக்கு ஒரு இனிமையான அனுபவம்” என்ற சொன்ன ராஜேந்திரன், ‘கடலென்னும் காந்தம் நம்மை மீண்டும் அழைக்கிறது’ என்றான்.
சபைக்கு மன்னனது குறிப்பு விளங்கியது.
ஆனாலும், ‘ஆயிரம் காதம் கடந்து ஒரு மாபெரும் அரசை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதா’ என்று சற்றே மலைத்தனர்.
“ஸ்ரீவிஜயப்படையெடுப்பு துவங்கட்டும்” என்று முழங்கினான் மன்னன்.
அந்தக் குரலின் உற்சாகம் சபையினருக்குக்கும் பரவியது.
“வெற்றி வேல்.. வீர வேல்.. சோழமன்னர் வாழ்க” என்று அனைவரும் முழங்கினர்.
ராஜேந்திரன்:
“சபை கலையட்டும். இளவரசர்கள், படைத்தலைவர்கள், யுத்த மந்திரி இவர்கள் மட்டும் இங்கு இருக்கட்டும்” என்றான்.
மற்ற அனைவரும் கலைந்து சென்றபின் ராஜேந்திரன் தன் திட்டத்தை விளக்கினான்.
இளவரசர்கள், படைத்தலைவர்கள், யுத்த மந்திரி அனைவரும் அசந்தே போனார்கள்.
பிறகு நடந்தது உலக சரித்திரம் கண்டிராத அதிசயம்!
மாபெரும் சாகசம்!
அவற்றைச் சற்றுப்பொறுத்திருந்து பார்ப்போம்.
ராஜேந்திர சோழன் வரலாற்றை எழுத எவ்வளவு படிப்பு , ஆராய்ச்சியில் நமது ராமமூர்த்தி அவர்கள் நேரம் செலவழித்து எழுதுகிறார் என்பது இதைப் படிக்கும் போது தெரிகிறது .
அவர் இங்கே குறிப்பிடும் கம்போடியா , மலேஷியா , ஸ்ரீ விஜயா , வியட்நாம் , இந்தோனிஷியா நாடுகளைப் பற்றிய விஷயங்கள் , அந்த ஆண்டுகள் , அப்போதைய மேப் என்று அவர் கொடுக்கும் தகவல்களில் அவர் உழைப்பு தெரிகிறது .
நம்மாலே எல்லாம் இதை நினைச்சுப் பார்த்தாலே மூச்சு வாங்குது . மிகப் பெரிய முயற்சி மியூட் ராம் அவர்களிடம் இருந்து . இதை மியூட் பண்ணாமல் தொடர்ந்து சரித்திரக் கதையில் சாண்டில்யன் போல் சாதனை படைக்க வாழ்த்துகள் .
https://kuvikam.com/2023/01/15/சரித்திரம்-பேசுகிறது-யா-45/
LikeLike
நல்ல முயற்சி. ஆண்டு 1014 என்று குறிப்பிட்டு உள்ளார். தவறு. இது பிற்கால வழக்கம்.
LikeLike
நன்றி.. உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். அதன்படி திருத்தம் செய்துள்ளேன். நன்றி.
LikeLike
அருமை ராம் சார்!.. சோழர் வரலாறு தெவிட்டாத தேனாறு!
LikeLike