
லால் சிங் சத்தா
அயல் மொழிப் படங்கள் அதிகம் பார்த்ததில்லை. அதிலும் இந்திப் படங்கள் மிகவும் குறைவு. மிகவும் தற்செயலாகப் பார்த்த ஒன்று, அதைப் பேச வைக்கிறது. இத்தனைக்கும் அது ஆங்கிலப் படத்தின் அதிகார பூர்வ மறு உருவாக்கம், கொஞ்சமும் பிசிராது விசுவாசத்தோடு மூலக்கதையை ஒட்டியே எழுதப்பட்ட திரைக்கதை என்று சொல்லப்படுகிறது.
இந்த உலகம் சாமர்த்தியசாலிகள், நடுத்தரமானவர்கள், சராசரி மனிதர்களுக்கு மட்டுமானதல்ல. ஏதுமறியாதவர்களாக உள்ளவர்களுக்கும் தான். படத்தின் ஒற்றை வரி இதுதான். ஆனால், அப்படியாகப் பட்டவர்களது வாழ்க்கையின் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும், துயரங்களும் அடர்த்தியானவை. அவர்களாலேயே அதனளவில் அர்த்தப்படுத்திப் புரிந்து கொள்வதை வெளிப்படுத்த இயலாத அளவு அடர்த்தியானவை. லால் சிங் சத்தா இந்த உணர்வை மிகச் செம்மையாக வழங்கி இருக்கிறது.
எங்கோ பயணம் செய்ய ரயிலேறும் ஒருவன், தன்னெதிர் இருக்கையில் இருக்கும் பெண்மணி முகத்தைச் சுளிக்கும்படியும், கேலியாக நோக்கும்படியுமான சேட்டைகளோடு அமர்ந்து மடிமீது இனிப்புக் கடை அட்டைப்பெட்டி எடுத்துவைத்துக் கொண்டு மெல்லத் திறந்து அதனுள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பானி பூரிகளில் ஒன்றை எடுத்து, கவனத்தோடு குனிந்து பையிலிருந்து அதில் ஊற்றவேண்டிய ரசத்தை ஊற்றி அப்படியே வாயில் போட்டு நொறுக்கிச் சுவைத்துப் புருவம் உயர்த்தி நாக்கைச் சப்புக்கொட்டி ரசிக்கும் காட்சியில் தொடங்குகிறது படம். அந்தப் பெண்மணியின் ஷூவைப் பாராட்டும் அவன், நல்ல காலணி மனிதர்களின் குணத்தையும் பிரதிபலிக்கும் என்று தனது அன்னை சொல்வாள் என்கிறான். அவள் சலனமே இன்றி அழுக்கும் சகதியுமாக நைந்து தோன்றும் அவனது ஷூக்களை உற்றுப் பார்க்கிறாள். ‘அது வேறு கதை, ஆனால் என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த முதல் ஜோடி ஷூக்கள் இவை’ என்கிறான்.
பரிகாசப் புன்னகையோடு அவன் கதையை அந்த எதிரிருக்கை பெண்மணி கேட்கத் தொடங்குகிறாள். கொஞ்சம் கொஞ்சமாக விரியும் அவன் கதையை இப்போது எதிர் வரிசையில், பின் வரிசையில், பக்கவாட்டில் என பயணிகள் பலரும் நெருக்கியடித்து அமர்ந்து கேட்கத் தொடங்குகின்றனர். ஒருவர், சும்மா கதை விடாதே என்று நம்பிக்கையின்றி நகர்ந்து போய்விடுகிறார். ஆனால், கதை நகர நகர சுற்றி இருப்போர் நெருக்கமாக அவனது கதையில் ஐக்கியமாகின்றனர், அவனோடு சேர்ந்து சிரிக்கின்றனர், சோக கட்டத்தை அவர்களும் சோகத்தோடு கடக்கின்றனர். அவனது துயரம் மிகுந்த நிகழ்வைக் கேட்கையில் விம்முகிறார் ஒரு முதியவர், அவருடைய மனைவி உடைந்து அழுதே விடுகிறார்.
மிக நீண்ட நேரக் கதை சொல்லல் அது. தனிப்பட்ட மனிதனின் கதையாக மட்டுமல்ல, அவனுக்கு நெருக்கமான பாத்திரங்களின் வாழ்க்கையும் இணையாகச் சொல்லப்படுகிறது. காலண்டர், டயரி, கடிகாரம் இவற்றுக்குப் பதிலாக தேசத்தின் வெவ்வேறு நிகழ்வுகளின் வழியாக அந்தந்த கால கட்டங்கள் அடையாளப்படுத்தப் படுகின்றன. அவை நாயகனின் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கங்களோடு!
சுட்டியான குழந்தை இல்லை கதாநாயகன். சொந்தக் கால் நம்பாது சார்ந்து நிற்கவே பழகி இருப்பவன். பள்ளி தலைமை ஆசிரியர் படு மோசமான முறையில் அனுமதி மறுக்கிறார். ஆனால், அவனது தாயின் போராட்டத்தைக் கண்டு அசந்துபோய் பள்ளிக்கு அழைத்துக் கொள்கிறார். அவனோ நடக்க இயலாத குழந்தைகள் அணியும் முழங்கால் வரை இறுகப் பற்றிக்கொள்ளும் பிணைப்புகள் உள்ள காலணிகள் அணிந்து செல்கிறான் பள்ளிக்கு. வித்தியாசமாகப் பார்க்கும் சக மாணவர்கள் மத்தியில் அன்போடு கைப்பற்றும் ரூபா எனும் தோழி வாய்க்கிறாள். கால்களுக்கு அவனாக இட்டுக்கொண்ட விலங்குகள் அவளது உந்துதலில் ஒரு கட்டத்தில் உடைந்து தெறித்து அவனால் மிக வேகமாக ஓட முடியும் என்ற உண்மையை அவனுக்கே புரிய வைக்கின்றன. பின் எந்தச் சிறப்பு முயற்சியோ பயிற்சியோ இன்றி, ஓடு என்று ரூபா குரல் காதில் கேட்டாலே இலகுவாக ஓடி இலக்கைத் தாண்டுபவனாக, வெற்றி பெற்றது கூடப் புரியாமல் இலக்கைத் தாண்டியும் ஓடிக் கொண்டிருப்பவனாக இருக்கிறான் அவன்.
பண்ணையில் சளைக்காது பயிரிட்டு உழைத்துக் கொண்டிருக்கும் தாய் அவனை இயக்கிக் கொண்டே இருக்க, பரம்பரை வேலையாக இராணுவத்திலும் சேர்ந்து விடுகிறான் நாயகன். அங்கும் பொதுவான புறக்கணிப்பைச் சுவைக்கும் அவனுக்கு ஆந்திராவிலிருந்து வரும் ஒரு வெகுளி வாலிபன் பாலா அன்பைப் பரவ விடுகிறான். திருமணம் முடித்துக் கொண்டு திரும்பும் பாலா, இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும்போது தங்களது பரம்பரை வர்த்தகத்தில் இவனையும் பங்குதாரர் ஆக்கிக் கொள்வேன் என்று சொல்லிக் கொண்டாடுகிறான். ஆனால், கார்கில் போரில் பாலா கொல்லப்பட்டு விடுகிறான். கண்ணெதிரே நண்பனின் இறுதி மூச்சை உணரும் நாயகன் சத்தா, போரில் அடிபட்ட மற்றவர்களை சிகிச்சைக்காக மீட்டெடுக்கும் வேகத்தில் பாகிஸ்தான் போர் வீரன் ஒருவனையும் காக்கிறான். பலரது உயிரைக் காத்தவன் என்ற விருது, குடியரசுத் தலைவரிடமிருந்து பெறுகிறான்.
குடிகாரக் கணவனுக்குக் கேட்கும்போதெல்லாம் கொடுக்கக் காசு இல்லாத கொடுமையால் அவன் கையாலேயே அடி வாங்கிக் கொலையுண்டு போகும் அம்மாவின் மரணத்தை அருகே பார்க்கும் சிறுமி ரூபா, காசு தான் உலகில் வாழ்வதற்கான முதல் தகுதி என்று மனத்தில் வாங்கிக் கொண்டுவிடுகிறாள். அதனாலேயே பருவ வயதில், மின்னுவதெல்லாம் பொன் என்ற கானல் வெளியில் காணாமல் போய்விடுகிறாள். ஆனால் நாயகனின் இதயம் தனது அம்மாவுக்காகத் துடிப்பது ஒரு முறை எனில், அடுத்தடுத்த முறை ரூபாவுக்காகத் துடித்தபடி இருக்கிறது.
இராணுவ சகா பாலா சொன்னபடி ஆந்திரா சென்று அவனது குடும்ப வர்த்தகத்தைத் தொடர முயலும் நாயகனிடம், கணவனது மறைவின் அதிர்ச்சியில் இருக்கும் திருமதி பாலா தனக்கு அந்தத் தொழில் பற்றி யாதொன்றும் அனுபவமில்லை என்று சொல்லிவிடுகிறாள். அந்தச் சிற்றூரில் பாலாவின் சிலைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பஞ்சாப் திரும்பும் சத்தா, தனது சிற்றூரில் அதே வர்த்தகத்தை எந்த முன் அனுபவமும் இன்றித் தானே தொடங்கி விடுகிறான். பனியன், ஜட்டி தொழிற்சாலையில் பண்டல்கள் குவிகின்றன. கடை விரித்தும் வாங்குவார் இல்லை. பாகிஸ்தான் போர் வீரனின் உதவியோடு அதிரடி விற்பனை தொடங்கி கொள்ளை லாபம் கிடைக்க அதில் சம பங்கை, பாலாவின் குடும்பத்திற்கு அனுப்பி வைக்க அவள் மூர்ச்சை அடைந்து விடுகிறாள் தாங்க மாட்டாது!
புற்று நோயால் மரிக்கிறாள் தாய். ‘என்னை விட்டுவிட்டுப் போய்விடாதே’ என்ற அவனது கெஞ்சுதலுக்கு வாழ்க்கையின் உண்மையை எடுத்துச் சொல்ல மட்டுமே முடிகிறது அவளுக்கு.
காலம் ரூபாவை அவன் சிற்றூருக்கு வரவழைக்கிறது. அப்போதும் விலகியே அமர்ந்திருப்பவளிடம் எந்த சாதுரியமும் அற்ற தனது இதயத்திற்கும் காதல் உணர்ச்சி உண்டு என்கிறான் சத்தா. அவள் மறுபேச்சின்றித் தன்னை அவனுக்கு வழங்கித் தானும் அவனது அன்பை ஏற்றுக் கொண்டுவிடுகிறாள். அதே காலம் அவளை அடுத்த சில தினங்களில் ஒன்றின் விடியலில் காவல் துறை தேடி வந்து கைது செய்து அழைத்துப் போவதையும் காட்டுகிறது.
ரூபாவை இழந்த சத்தாவின் உள்ளம் அவனது கால்களை வேகமாக இயக்கி தேசம் முழுக்க ஓடவிடுகிறது. தான் சிக்கிய மாயப் பொறியில் இருந்து குறைந்தபட்ச தண்டனையோடு வெளிப்படும் ரூபா, அவனை சந்திக்க விடுக்கும் அழைப்பு கிட்டியதும் அவளுக்கு மிகவும் பிடித்தமான பானி பூரி சகிதம் அவன் ரயிலில் இடம் பிடிக்கும் இடத்தில் பின் கதை வந்து நிறைவு பெறுகிறது. வேகவேகமாக விடைபெற்று இறங்கியோடும் சத்தா, ரூபாவை மட்டும் கண்டடைவதில்லை, அவள் பெற்றெடுத்த தங்கள் மகனையும் காணப் பெறுகிறான். ‘என்னை மணந்து கொள்வாயா’ என்ற அவனது கேள்வியை, இந்த முறை ரூபா கேட்கிறாள் அவனை நோக்கி. ஊர் திரும்புகின்றனர் மூவரும் கொண்டாட்டமாக. ஆனால், நோயொன்றின் தாக்குதலில் ரூபா அவனை நிரந்தரமாகப் பிரிந்துவிடுகிறாள்.
தன்னுடைய மகன் தன்னைப் போல் இராது சுட்டியாக இருப்பதன் பெருமையில் இழப்புகளின் வலியைத் துடைத்துக் கொண்டு, தாய் தன்னை அனுப்பிய பள்ளிக்கு அவனை அனுப்பிவிட்டுக் காத்திருக்கிறான் மீதி வாழ்க்கைக்கு லால் சிங் சத்தா.
அபத்த மிக்க தருணங்களின் நகைச்சுவைக்குப் பஞ்சமற்ற படம். ஷாருக் கான் தனது நடன அசைவில் இருந்துதான் கற்றுக் கொண்டு புகழுக்கு உரியவரானார் என்று நாயகன் சொல்லிக்கொள்வது அதில் ஒன்று. தனது குறைபாடு என்று சமூகம் கற்பிக்கும் உண்மையை அறிந்தவராகவே இருக்கிறார் லால் சிங் சத்தா. ஆனால் தான் எல்லோருக்கும் உண்மையாகவே இருந்துவிட்டுப் போவதில் யாதொரு நஷ்டமும் இல்லை என்று உணர வைக்கிறார்.
இந்திரா காந்தி காலத்தின் நெருக்கடி நிலை, பொற்கோவில் உள்ளே இராணுவம் நுழைந்தது, இந்திரா கொலையுண்டது, ராஜீவ் பிரதமரானது, மண்டல் கமிஷன், அத்வானியின் ரத யாத்திரை, கார்கில் போர், அண்ணா ஹசாரே உண்ணாவிரதம்….என்று தேசத்தின் அடுத்தடுத்த முக்கிய நிகழ்வுகளின் வரிசை சத்தாவின் வாழ்க்கைக் குறிப்புகளின் பகுதியாகிறது. மதவெறி, கலவரம் இவற்றை ஒரு கொள்ளை நோயாகவே அவனது அன்னை அவனுக்கு உணர்த்தி இருக்கிறாள். அந்த வகைப்படுத்தலை அவன் பாகிஸ்தான் வீரனுக்குக் கையளிக்க, தாஜ் ஓட்டல் குண்டு வெடிப்பின் காட்சியில் தனக்குள் கொழுந்துவிட்டு எரிந்த வெறுப்புணர்ச்சியை அவன் அணைத்துக் கொண்டு, குழந்தைகளுக்கு அன்பின் பாடம் நடத்தச் சொந்த நாட்டிற்கு இடம் பெயர்கிற காட்சி முக்கியமானது.
கதையின் முக்கிய பாத்திரமாகவே தன்னை உருக்கொள்ள வைப்பதில் அமீர் கான் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார். ரயில் பயணத்தில், ரூபாவை சந்திக்கும் தருணங்களில், சக வீரன் பாலாவுடன் கழிக்கும் பொழுதுகளில், மெனக்கெட்டுக் கருமமே கண்ணாகத் தையல் எந்திரத்தில் உழைக்கும் காட்சியில்…என்று நேர்த்தியாகச் செய்திருக்கிறார். ஆனால், மிகை நடிப்பு செய்துவிட்டார் என்ற விமர்சனமும் வந்துள்ளது. ஆங்கில மூலப்படத்தை முன்னமே ரசித்துப் பார்த்தேன் என்று சொன்ன எங்கள் மகன் நந்தாவுக்கும் இதே கருத்து இருக்கிறது. அவனது அலசல் அசர வைக்கிறது.
தாய் பாத்திரத்தில் மோனா சிங், டிராக்டர் விவசாயியாக அருமையாகத் தோன்றுகிறார். ரூபாவாக வரும் கரீனா கபூர், இளமையின் பொலிவிலும், நோயின் பரிதவிப்பிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். இளவயது லால் சிங் பாத்திரத்தில் கலக்கி இருக்கிறான் சிறுவன் ரோஹான் சிங்! பாலாவாக வரும் நாக சைதன்யா, பாகிஸ்தான் வீரராக வரும் மானவ் விஜ், எதிர் இருக்கை பெண்மணி ஆர்யா சர்மா, ரயிலில் நெகிழ வைக்கும் மூத்த தம்பதியினராக அருண் பாலி, காமினி கௌஷல் என்று பாராட்டுக்குரியவர்கள் பலரது பங்களிப்பும் சொல்ல வேண்டியது.
இந்தி திரைக்கதை அதுல் குல்கர்னி, இயக்கம் அத்வைத் சந்தன். சிறப்பான ஒளிப்பதிவு சத்யஜித் பாண்டே, கதைப்போக்கிற்கான இசை தானுஜ் திகு.
படத்தின் நீளம் (159 நிமிடங்கள்) சற்று அதிகம். ரூபாவின் வாழ்க்கைச் சூழல் யதார்த்தமானது. ஆனால் பணமே குறியாக மாறுவதற்காகச் சித்தரிக்கப்படும் காரணம் ஏற்றுக் கொள்ள சிரமமானது. தற்செயலாகவே அடுத்தடுத்த நிகழ்வுகள் நாயகனை வழி நடத்திச் செல்வது மூலக்கதையின் நேரடித் தழுவல் தான். தர்க்க பூர்வமான கேள்விகள் சிலவற்றுக்குப் பதில் கிடைக்காது, படத்தில்.
இருந்தாலும், ஐ க்யூ வைக் கணக்கிட்டு மனிதர்களை அறிவினால் அளக்கும் உலகில், அன்பையும் மெல்லுணர்வையும் கல்மிஷம் அற்ற பார்வையும் கொண்டு மானுடம் தழைக்க முடியும் என்ற இதமான காற்று வீசுகிறது படம் நெடுக. அந்த வகையில் லால் சிங் சத்தா உள்ளத்தைத் தொட்டு விடுகிறார்.
*************
இது போன்ற கலை படைப்புக்கள் வெறும் அரசியலுக்காகவும், வெறுப்பு உணர்வுக்காகவும் மக்களை விட்டு விலக்கி வைக்கப்படுகின்றன. இந்தியாவில் இருக்கும் மாநிலங்கள் கேரளாவை பார்த்தாவது தங்களை அனுசரித்து கொள்ளலாம். அவர்களின் படைப்புக்கள் ஒரு வருடத்தில் வெளிவரும் திரைப்படங்களில் பாதி அளவுக்கு கலை இலக்கிய அம்சம் கொண்டதாக இருக்கிறது
LikeLike