7. திருநள்ளாறு (சனீஸ்வரன்)
நிடத நாட்டு அரசன் நளனுக்கு ஏழரைச் சனி பிடித்ததால், அவன் அரச பதவி உள்ளிட்ட அனைத்து சுகங்களையும் இழந்து, இத்தலத்துக்கு வந்து தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி தனது தோஷம் நீங்கப் பெற்றான். நளன் வழிபட்டதால் ‘நள்ளாறு’ என்று பெயர் பெற்றது. அதனால் இத்தலம் சனி பகவானால் ஏற்படுகின்ற தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய தலமாகக் கருதப்படுகிறது.
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்காலில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. சென்னை, மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல முக்கிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது. பேரளம் – காரைக்கால் ரயில் பாதையில் திருநள்ளாறு ரயில் நிலையம் உள்ளது.
இத்தலத்து மூலவர் ‘தர்ப்பாரண்யேஸ்வரர்’, கோரைப்புல்லை சேர்த்துக் கட்டியது போன்ற லிங்க மூர்த்தி. தர்ப்பை – கோரைப்புல். அம்பிகை ‘போகமார்த்த பூண்முலையாள்’ என்றும் ‘பொற்கொடியம்மமை’ என்றும் அழைக்கப்படுகிறாள். அழகிய சிறிய வடிவம். உள்ளே நுழைந்தவுடன் அம்மன் சன்னதி உள்ளது. அருகில் கிழக்கு நோக்கி சனீஸ்வரர் சன்னதி உள்ளது.
சிவபெருமான் ஏழுவகை நடனமாடிய சப்தவிடங்கத் தலங்களுள் இத்தலம் நாகவிடங்கத் தலம். இங்கு ஆடிய நடனம் உன்மத்த நடனம். திருவாரூர், திருக்குவளை, திருக்கராவாசல், திருவாய்மூர், வேதாரண்யம், நாகபட்டினம் ஆகியவை மற்ற சப்தவிடங்கத் தலங்களாகும். இக்கோயிலில் உள்ள மரகத லிங்கத்திற்கு நாள்தோறும் ஐந்து கால பூஜைகள் நடைபெறுகின்றன.
திருஞானசம்பந்தர் மதுரையில் சமணர்களுடன் அனல் வாதம் செய்தபோது, இத்தலத்தில் பாடப்பட்ட பதிகமான ‘போகமார்த்த பூண்முலையாள்’ என்னும் பதிகத்தைத்தான் தீயில் இட்டார். ஏடு தீயில் கருகாமல் இருந்ததால் இப்பதிகம் ‘பச்சைப் பதிகம்’ என்று பெயர் பெற்றது.
இத்தலத்தில் நளன் உண்டாக்கிய தீர்த்தம் வடக்கு மாடவீதியில் உள்ளது. கோயிலுக்கு எதிரில் உள்ள குளம் சரஸ்வதி தீர்த்தம். அகத்திய தீர்த்தம், ஹம்ஸ தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும் உள்ளன. தல விருட்சம் தர்ப்பை.
திருமால், பிரம்மா, அஷ்டதிக்பாலகர்கள், வசுக்கள், அகஸ்தியர், புலஸ்தியர், காசியபர், அருச்சுனன், நளன் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.
திருஞானசம்பந்தர் நான்கு பதிகங்களும், திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். அருணகிரிநாதர் இத்தலத்து முருகப் பெருமானை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
8. திருநாகேஸ்வரம் (ராகு)
ஒருசமயம் நாகங்களுக்கு தலைவனான ஆதிசேஷன், இத்தலத்திற்கு வந்து ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி சிவபெருமானை நோக்கி தவம் செய்து வந்தார். அவரது தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் காட்சி தந்து அருளினார். நாகங்களினால் ஏற்படும் தோஷங்களை நீக்கியருள ஆதிசேஷன் பிரார்த்திக்க, இறைவனும் அவ்வாறே அருளினார்.
எனவே, நவக்கிரகங்களில் இத்தலம் இராகு பரிகாரத் தலம். இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் தனி சன்னதியில் தனது துணைவியர்களான நாகவல்லி, நாககன்னி ஆகியோருடன் இராகு பகவான் மங்கள இராகுவாக மனித வடிவில் காட்சி தருகின்றார். ஆதலால் நாக தோஷம், இராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்தால் தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வழிபாடு செய்வது சிறப்பு. இவருக்கு பால் அபிஷேகம் செய்யும்போது அந்த பால் அவரது உடலின் மீது படும்போது நீலநிறமாக மாறும் அதிசயம் நடைபெறுகிறது. ராகு கேது பெயர்ச்சி இங்கு விசேஷம்.
கும்பகோணத்துக்கு கிழக்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணத்துக்கு முந்தைய இரயில் நிலையம் திருநாகேஸ்வரம்.
மூலவர் ‘சண்பகாரண்யேஸ்வரர்’ என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். சண்பக மரங்கள் நிறைந்த வனத்தில் இருந்ததால் சுவாமிக்கு இப்பெயர். நாகராஜன் வழிபட்டதால் ‘நாகேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகின்றார். மகாசிவராத்திரியின்போது சுவாமிக்கு இரண்டாம் கால பூஜையை ராகு பகவான் செய்வதாக ஐதீகம். அம்பிகை ‘பிறையணி வாணுதலாள்’ என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
மற்றொரு தனி சன்னதியில் ‘கிரிகுஜாம்பாள்’ என்னும் ‘குன்றமுலைநாயகி’ தரிசனம் தருகின்றாள். இவருக்கு அபிஷேகம் கிடையாது. வருடத்தில் இரண்டு நாட்கள் மட்டும் புனுகு சாத்தப்படுகிறது. இவருடன் கலைமகள், திருமகள் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். பிருங்கி முனிவருக்காக மூன்று சக்திகளும் ஒன்றாக காட்சியளித்ததாக ஐதீகம். மேலும் இச்சன்னதியில் பால சாஸ்தா, சங்கநிதி, பதுமநிதி ஆகியாரும் உள்ளனர். இவர்களை வணங்கினால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
விநாயகர், பார்வதி, மகாவிஷ்ணு, பிரம்மா, நந்திதேவர், தேவேந்திரன், சூரியன், சந்திரன், ஆதிசேஷன், கார்கோடகன், வாசுகி, கௌதம முனிவர், பராசரர், வசிஷ்டர், நளன், பாண்டவர், சம்புமாலி ஆகியோர் வழிபட்ட தலம்.
இக்கோயிலின் தீர்த்தங்களாக நாக தீர்த்தம், சூர்ய புஷ்கரணி ஆகியவை உள்ளன. தல விருட்சமாக சண்பக மரம் உள்ளது.
திருஞானசம்பந்தர் 2 பதிகங்களும், திருநாவுக்கரசர் 3 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
9. கீழப்பெரும்பள்ளம் (கேது)
நவக்கிரக பரிகாரக் கோயில்களுள் இத்தலம் கேது தலமாகும். அசுரனான கேது இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு அருள் பெற்றதால் கேது தோஷ நிவர்த்தி தலமாக வணங்கப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகாரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. சீர்காழியிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவு.
மூலவர் ‘நாகநாதர்’ என்னும் திருநாமத்துடன், லிங்க மூர்த்தியாகக் காட்சி அளிக்கின்றார். அம்பாள் ‘சவுந்தர்ய நாயகி’ என்னும் திருநாமத்துடன் அருள்புரிகின்றாள்.
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, வாசுகி என்னும் நாகத்தைக் கயிறாகக் கட்டி கடைந்தனர். ஒரு கட்டத்தில் களைப்படைந்த வாசுகி தனது விஷத்தை உமிழ்ந்தது. சிவபெருமான் அதைப் பருகி தேவர்களைக் காத்தார். வாசுதி தனது தவறுக்கு வருந்தி, சிவபெருமானை வழிபட்டதால் இத்தலத்து மூலவர் நாகநாதர் என்ற பெயர் பெற்றார்.
மூலவர் சன்னதிக்கு இடப்புறம் கேது பகவானுக்கு தனிச் சன்னதி உள்ளது.
இக்கோயிலின் தீர்த்தமாக நாக தீர்த்தம் உள்ளது. தல விருட்சமாக மூங்கில் மரம் உள்ளது.
இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.