( படம் வரைந்தவர்: கிறிஸ்டி நல்லரெத்னம் ,ஆஸ்திரேலியா )
பிரபா ராஜன் – குவிகம் சிறுகதைப் போட்டி முதல் பரிசு பெற்ற கதை
சோளக்காட்டு பொம்மை
மும்மாரியூர் ஒரு மலையோர சின்ன கிராமம். மொத்தமாய் சில நூறு குடும்பங்களுக்கு மிகாமல் வாழும் இந்த ஊர், மரங்களும் தோட்டங்களும் நிறைந்த இயற்கையின் சின்ன குழந்தை. ஆடி மழைக்கு நிரம்பி வழியும் அம்மன் கோவில் குளமும், ஊரின் நடுவே நாயகமாய் வீற்றிருக்கும் முத்தாயம்மன் கோவிலும், அதனை யொட்டிய கம்பீரமாய் பரந்து விரிந்து நிமிர்ந்து நிற்கும் அரச மரமும், பச்சை பசேல் தோட்டங்களும், வளைந்தோடும் வாய்க்காலும், மும்மாரியூரின் சிறப்பு. ஒரு காலத்தில் மும்மாரி மழை பெய்து விவசாயத்தில் செழித்திருந்தது இந்த ஊர். அதனால் தான் மும்மாரியூர் என்று அழைக்கப்படுவதாக பெரிய தண்டக்கார தாதா அடிக்கடி சொல்வதுண்டு.
ஊரின் மரியாதையான நான்கு, ஐந்து குடும்பங்களில் மயிலுக்கவுண்டர் குடும்பமும் ஒன்று. மயிலுக்கவுண்டரின் அப்பா ஒரு மணியக்காரர், பிரிட்டிஷ் இந்தியாவில் மரியாதையான பதவியான ‘மணியக்காரர்’ ஆக இருந்தவர், ஒரு காலத்தில் பணக்கார குடும்பம். தற்போது விவசாயத்தை நம்பி வாழும் நடுத்தரமான குடும்பம்.
மயிலுக்கவுண்டரின் தோட்டத்திற்கு அதிர்ஷ்டமே அந்த கிணறு தான். எப்போதும் வற்றாமல் நிரம்பி அதிசயிக்கும். அதுவே கூட மற்றவர்களுக்கு ஒரு உறுத்தலாகவே இருந்தது. அவர் அதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளவதில்லை. காரணம் இதெல்லாம் தன் செல்ல மகள் வளர்மதி பிறந்த அதிர்ஷ்டம் தான் என்பார். ஆனால் அவர் மனைவி சின்னமணியோ தான் இந்த வீட்டுக்கு மருமகளாய் வந்த யோகம் தான் என்பார். மொத்தத்தில் உயர்ந்த உழைப்பும், ஆண்டவன் அருளும், அந்த குடும்பத்தை நன்றாகவே வைத்திருந்தது..
இதெல்லாம் ஒரு காலத்தில்…….
ஆனால் இன்றைய நிலையோ வேறு.
கரும்பும், சோளமும், வாழையுமாய் பயிர் செய்யப்பட்டு செழிப்பாய் இருந்த கிராமம், இப்போதெல்லாம் விவசாயப் பரப்பு குறைந்து போய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பச்சைப்போர்வைப் போத்திக்கொண்டிருக்கிறது. மற்ற நிலமெல்லாம் மெல்ல மெல்ல சிவந்து போய் வெறும் மண்ணாகி, விற்பனைக்குக் காத்திருக்கிறது.
“மரங்களை வெட்டி, வெட்டி மழை இல்லாமே செய்யறாங்களே பாவிங்க, இது நம்ம குழந்தையை நாமே கொல்றதுக்கு சமமில்லையா?” என்று அடிக்கடி அங்களாய்த்துக்கொள்வார் மயிலுக்கவுண்டர். மழையில்லாமல் வறண்டு போனது ஊரின் அம்மன் கோவில் குளம். எப்போதும் வற்றாமல் இருந்த அந்த மயிலுக் கவுண்டரின் கிணறும் வற்றத்தொடங்கியது. அக்கம் பக்கம் பல குடும்பங்களுக்கு குடிநீர் ஆதாரமே அந்த கிணறு தான்.
உறவுக்கார பணக்காரரான பொன்னுக்கவுண்டரிடம் ஒரு லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி போன வருடந்தான் கிணற்றை ஆழப்படுத்தினார்.
* * * *
காலங்கள் கறைந்தது…. நாட்கள் நகர்ந்தது…..
வளர்மதி, பெயருக்கேற்ப வளர்ந்து இப்போது பெளர்ணமி ஆகியிருந்தாள். கோவையில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.ஸி- விவசாயம் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி. படிப்பதிலும் சுட்டியாகவே இருந்தாள். ஊரை விட்டு வந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டது. இடை இடையே விடுமுறைக்கு மட்டுமே வந்து போக முடிகிறது.
வளர்மதியை போலவே கிராமமும், கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக் கொண்டே இருந்தது.
* * * *
திடீரென்று ஒரு நாள் வளர்மதியின் ஹாஸ்டலுக்கு ஒரு போன் வந்தது.
’’அப்பாவுக்கு உடம்பு சரியில்லையாம், உடனே வரனுமாம்” -என்றார் ஹாஸ்டல் வார்டன் மேடம்.
பதறி கலங்கிய கண்களோடு பயந்து போய், “என்னவாம் மேடம்” என்றாள் வளர்மதி.
“மதி வேற எதுவும் டீடைலா சொல்லலைம்மா…. ஒன்னும் பயப்படாதே.. நீ உடனே கிளம்பும்மா” என்று அனுப்பி வைத்தார் வார்டன்.
* * * *
அப்பாவுக்கு ஒன்னும் ஆகியிருக்ககூடாது,…..என எல்லா கடவுளையும் வேண்டிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தாள்.
அப்பாவின் அன்பை முழுமையாய் அருவடை செய்தவள், அன்புக்கு அம்மா என்றால், பாசத்துக்கு அப்பா என வளர்தவள் அவள்.
மயிலுக்கவுண்டர் கடமைக்காகத்தான் கண்டிப்பானவர் தவிர பாசமே அவருக்கு பிரதானம்.
வீட்டிற்குள் நுழையும் வரை, பல விதமான சிந்தனைகள், படபடக்கும் இதயம், பயம் கலந்த எதிர்மறை எண்ணங்கள், என்று பல்வேறு நிலைகளில், வளர்மதியின் மனம் அங்கும் இங்குமாய் அல்லாடியது.
ஒரு வழியாய் வீடு வந்து சேர்ந்தாள்.
* * * *
வளர்மதியை பார்த்தவுடன் அம்மா கண் கலங்கி, பீறிட்டு வந்த அழுகையை அடக்கி வெளியே காட்டாமல் நின்றாள்.
“அம்மா….. அப்பாவுக்கு என்னாச்சும்மா………?
“அப்பாவுக்கு ஒன்னுமில்லை நல்லாதான் இருக்காரு நீ ஒன்னும் பயப்படாதே” என்று முடிப்பதற்குள் கண்களில் தேங்கிய கண்ணீரை தடுக்க முடியவில்லை, தெறித்து விழுந்தது.
‘’அம்மா….. அப்பா எங்கம்மா” என சுற்றும் முற்றுமாய் தேடத் தொடங்கினாள். வழக்கமாக அப்பா உறங்கும் அறையில் அவர் இல்லை,
மற்றொரு அறையில்…. சுந்தரம் மாமா, சுசிலா அத்தை, அப்பாவின் நண்பர் சீனு வாத்தியார், என ஒரு பெரிய கூட்டமே அப்பாவை சுற்றி அமர்ந்து இருந்தனர்.
“அப்பா என்னாச்சுப்பா…” -என்றவாறே அருகே சென்றாள், கண்களில் தேங்கிய கண்ணீர் அப்பாவின் மார்பினில் மீது விழுந்தது.
அப்பாவால் ஒன்றும் பேச முடியவில்லை, எதோ சொல்ல வந்தார், முடியவில்லை. ஆனால் அவர் கண்கள் மட்டும் பேசியது கண்ணீரால்.
“வளர்மதி, அப்பாவால பேச முடியாதும்மா” என்ற சீனு வாத்தியார், மெல்ல வளர்மதியின் தலையை தொட்டு தூக்கினார்.
“நல்லாத்தான் இருந்தாரு திடீர்னு என்னவோ மாதிரி இருக்குன்னு சொன்னவரு அப்படியே சாஞ்சுட்டாரு, பக்கத்து டவுன் டாக்டர் கிட்டே கூட்டிட்டு போனோம், டாக்டர் பாத்துட்டு மைல்டு ஸ்ட்ரோக் வந்திருக்குன்னு சொன்னாரு, உயிருக்கு ஆபத்தில்லையாம்,… ஆனா என்ன இப்போதைக்கு ஒரு பக்கம் காலும் கையும்——–” என இழுத்தவர்,
“காலப்போக்கில் சரியான மருந்து மாத்திரைல சரி பண்ணிடலாம்னு சொல்லியிருக்காரும்மா.”
மெளனமாய் அப்பாவைப் பார்த்தாள்.
மயிலுக்கவுண்டரின் கண்களும் எதோ ஒரு ஏக்கத்தோடு, அவளையே பார்த்துக்கொண்டிருந்தது அது உன்னை எப்படிம்மா கரை சேர்ப்பேன்னு சொல்லாமல் சொல்லியது கண்ணீரால்.
* * * *
காலம் மெல்ல மெல்ல கரைந்தது. ஒரு மாதம் ஓடிப்போனது, அப்பாவின் நிலை மாத்திரையும் மருந்துமாய் அப்படியே இருந்தது. ஓடித்திரிந்த அப்பாவின் வாழ்க்கை அந்த அறையிலேயே முடங்கிப்போனது.
வளர்மதியும் கல்லூரிக்கு திரும்ப போகவில்லை. எல்லோரும் கல்லூரிக்குப் போகச்சொல்லி வற்புறுத்திய போதும் அப்பாவின் அருகிலேயே இருந்தாள்.
தூரத்தில் ஒரு மாட்டுவண்டி, அவர்களது வீட்டை நோக்கி வந்தது. உள்ளூர் பணக்காரர் பொன்னுக்கவுண்டர், அவரது மகனும் இறங்கி வருவதை அம்மா கவலையோடு கவனித்தாள்.
“வாங்கண்ணா….அண்ணி நல்லாருக்கா….?” — அம்மா.
“வர்றேம்மா அவளுக்கென்ன நல்லாத்தான் இருக்கா, மச்சான் எப்படிம்மா இருக்காரு” என்றவாறே அம்மாவோடு உள்ளே சென்றார்.
பத்து நிமிடங்கள், அம்மாவும் அவர்களும், பேசுவதை அப்பாவால் கவனிக்கமட்டுமே முடிந்தது. அம்மாவின் கெஞ்சலும், அவர்களின் கண்டிப்பான பேச்சையும் அவர் பார்வையில் தவறவில்லை. வெளியே வந்தனர்.
“அதாம்மா, நான் சொன்னமாதிரி தான், யோசிச்சு செய். உன்னோட நிலைமையும் நல்லா புரியுது, கஷ்டம் தான். ஆனா வாங்கின பணத்துக்கும் ஒரு கெடு வேணும்ல, மச்சான் நல்லாருந்தா இந்நேரம் நா படியேறி வருவனா, வெள்ளாமைக்கு வேணுங்கறது எல்லாந்தான் இருக்கு, எடுத்து செய்ய ஒரு சிங்ககுட்டி இல்லையே தாயி, இதோ நிக்குதே பொண்ணு, ஒரு ஆம்பிளயா இருந்தாலாவது வேட்டிய மடிச்சு கட்டி, சிங்கம் மாதிரி கழனியிலே இறங்கியிருப்பானே…… பயிறும் பாதிக்கும் மேல வந்திருக்கும், பணம் திரும்ப வருங்கிற நம்பிக்கையும் இருந்திருக்கும். உன்னோட நேரம் அதுவும் பொட்டப் புள்ளையா போச்சு.”
“எப்படியோ, கடனோ, உடனோ, வித்தோ, கித்தோ…. பணத்தை குடுத்திடும்மா” –
கண்களில் தேங்கிய நீரால் தூரத்தில் மாட்டு வண்டி மறைவதைக் கூட பார்க்க முடியவில்லை வளர்மதியால். உறைந்து போனாள் சின்னமணி, திரும்பி மகளைப் பாத்தாள்.
“வெண்ணை திரண்டு வர்ற நேரம், பானை உடைஞ்ச கதையா, இந்த வருஷம் வெள்ளாமை முடிஞ்சா மொத்த கடனையும் கட்டிடுவேன்னு இந்த மனுசன் அடிக்கடி சொல்லுமே, இப்படி ஆகும்னு யாரு கண்டா?” என்று புலம்பிக்கொண்டே சென்றாள்.
பெரியவரின் வார்த்தைகள் பெண்மையின் பெருமை இந்த பூமியில் இன்னும் மதிக்கப்படவில்லை என்பதை தெளிவாக்கியது.
* * * *
மறுநாள்….
வளர்மதி தன் தோட்டத்தில் காலார நடை நடந்தாள். நான்கு வருடங்களுக்கு முன்பு வரை அவளும் ஒரு விளையாட்டு விவசாயி தான்.
வரப்பு வெளிகளில் காலார நடக்கும் போது என்ன சுகம். எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும், செயற்கையாக செய்ய முடியாத இளம் தளிர், வெண் மேகம், நெடிய நீண்ட வானம், வெள்ளை நிலா, வாய்க்காலின் இரு புறகரை, துள்ளும் சின்ன மீன்கள்,….. கிராமத்தில் தான் எத்தனை அழகு.
கோடி பணம், தங்கம், வைரம் என எதைப் புதைத்து வைத்தாலும் மாற்றம் தராமல், சின்ன விதைக்கு வாழ்க்கை தரும் இந்த மண்…….. மனித குலத்தின் ஆதாரம்.
சின்ன வயது நியாபகங்கள் நெஞ்சில் உலா வந்தது. அப்பாவோடு வந்து ஓடி ஆடி விளையாட்டு விவசாயம் செய்த அனுபவம்.
’மருது’ எனும் தோட்ட ஆள் கட்டி வைத்த சோளக்காட்டு பொம்மை. தலையில் சட்டி, அதில் பயமுறுத்தும் மீசை ,கரிக்கட்டை கண்கள், குச்சிக்கைகால்கள், வைக்கோல் உடம்போடு, குண்டுவயிரோடு, ஒய்யாரமாய் நிற்கும் அந்த சோளக்காட்டு பொம்மை.
கொஞ்ச நாள் அந்த பக்கம் போகவே பயம், அதை அம்மா கூட சாப்பிட மறுக்கும் போது சாதகமாய் பயன்படுத்தியதுண்டு.
அதே பொம்மை, உடைகள் வேறுபட்டு, அங்கேயே இருந்தது.
சோளக்காட்டு பொம்மையை உற்றுப் பார்த்தாள், அதுவும் அவளையே பார்த்தது. காக்காவையும், குருவியையும், விரட்ட வைக்கும் ஒரு பொம்மைக்கு கூட ஆண் வேஷம் தான் போடனுமா? எனக்கு தெரிந்து எந்த சோளக்காட்டு பொம்மைக்கும் பொன்னு துணி போடலையே ஏன்? பொன்னுன்னா அவ்வளவு கேவலமா? இதைத் தான் அந்த பெரியவர் சொல்லிட்டு போராரா?
“ இதோ நிக்குதே பொண்ணு, ஒரு ஆம்பிளயா இருந்தாலாவது வேட்டிய மடிச்சு கட்டி, சிங்கம் மாதிரி கழனியிலே இறங்கியிருப்பானே……” பெரியவரின் வார்த்தைகள் அவள் காதுகளில் இடித்துக்கொண்டே இருந்தது.
இன்னும் எத்தனை நாளுக்குத்தான் இப்படி வாய்க்கா வரப்புல கூட பொன்னுகளை கேவலப்படுத்துவாங்க….? அவள் அவளையே கேட்டுக்கொண்டாள்.
* * * *
அன்று இரவு முழுவதும் உறக்கமே இல்லை.
உருண்டு உருண்டு படுத்தபோதும், திரும்பி திரும்பி படுத்தபோதும், உறக்கத்தோடு உறவின்றியே இருந்தாள்.
உறுதியான முடிவுக்கு வந்தாள். பின்பு தான் நிம்மதியாய் உறங்கிப் போனாள்.
* * * *
இரவு இறந்தது, பொழுது பிறந்தது.
சுக்கு காபியை நீட்டிய அம்மாவிடம் முடிவை சொன்னாள்.
“அய்யோ என்னம்மா சொல்றே… வேண்டாம்மா, ஜாதி சனம் என்ன சொல்லும், உனக்கு எப்படி ஒரு நல்ல காரியம் நடக்கும்? முடியாது.” – என்றாள்.
வளர்மதியின் பிடிவாதம் அம்மாவை சம்மதிக்க வைத்தது.
காலையில் வழக்கமாய் வரும் வேலையாட்கள் வந்து சேர வரப்போகும் ஒரு புதிய விடியலை நோக்கி புறப்பட்டாள் வளர்மதி கையில் கலப்பையோடு………….
வழக்கமாய் சிரிக்கும் சோளக்காட்டு பொம்மை இப்பவும் சிரித்தது…. சுடிதாரும் துப்பட்டாவும் அணிந்துகொண்டு….முன்பை விட இப்போது கம்பீரமாய்.
பொன். ஆனந்தன் radansus2006@gmail.com 9842062520
இதுதான் முதல் பரிசிற்குரிய கதையா? முதல் பரிசு பெற்ற கதையே இத்தனை அரைவேக்காட்டுத் தனமாய் அபத்தமாய் இருந்தால் மற்ற கதைகளின் இலட்சணம் எப்படி இருக்கும்? ஏதோ 19ம் நூற்றாண்டில் சிறுகதை எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் எழுதப்பட்ட நடையில் இருக்கிறது சிறுகதை. ஒருபெண் விவசாயம் செய்யப் புறப்பட்டாள் என்று எழுதி விட்டால் அது சிறப்பான கதையாகி விடுமா? கதையை வாசித்துத் தேர்ந்தெடுத்த நடுவர் குழுவிற்கு விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது போலிருக்கிறது. விவசாயத்தின் ஆரம்ப நாட்களிலிருந்தே பெண்கள் விவசாயத்தில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒருபெண் ஏர் கலப்பையோடு விவசாயத்திற்குக் கிளம்பினால் அது புதுமையான முடிவா? சகிக்கவில்லை.
LikeLike
கடுமையான விமர்சனத்திற்கு நன்றி…. ஒட்டுமொத்த நடுவர் குழுவிற்கு ஒன்றும் தெரியாது என்கிற வகையில் இருக்கிறது. அடுத்த முறை உங்களைப் போன்ற முழுவேக்காடுகள், அறிவுஜீவிகள் நடுவராக வரலாம் நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கலாம். அதற்கு முயலுங்கள்.
LikeLike
மாற்றம் தேவை. அதுவே நல்ல முறையில் இருந்தால் வரவேற்கப்படும்.
LikeLike
Nice story.Some women take up new roles like this for example Pappammal.
LikeLike
பாரதி கண்ட புதுமைப்பெண். வாழ்க
LikeLike