சரவணன் பால் பொங்கி வருகையில் உற்சாகமாகப் ‘பொங்கலோ பொங்கல்’ என்று கைகளைத் தட்டிக் கொண்டே கூவினான். அம்மா அவனைத் திரும்பிப் பார்த்து சிரித்தார். அப்பாவும், அம்மாவும் அவனுடன் இணைந்து ‘பொங்கலோ பொங்கல்’ என்று மென் குரலில் சொன்னார்கள். முற்றத்தில் வண்ணக் கோலமிட்டு அதன் மீது பொங்கலுக்காக புது அடுப்பையும், மஞ்சளும், இஞ்சியும் கோர்த்துக் கட்டிய பானையையும் அம்மா வைத்து அதில் பால் ஊற்றி பொங்கி வருகையில் தான் இந்த சந்தோஷக் கூப்பாடு. கதிரவனை வரைந்திருந்த மற்றொரு கோலத்திற்குப் பக்கத்தில் அரிசி நிரம்பிய தலை வாழையிலையில், கலசத் தேங்காய், மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து, புதுக் காய்கள், வாழைப்பழம், கரும்பு, மெது வடை, வெல்லப் பாகில் சுண்டிய சக்கரவள்ளிக் கிழங்கு எல்லாம் தகுந்த பாத்திரங்களில் வைக்கப்பட்டிருந்தன. தென்னங் கூந்தல்களும் தோரணங்களும், மாவிலைகளும் நிலைப்படியையும், முற்றத்தையும் அலங்கரித்தன. அம்மா ‘சூர்ய மூர்த்தே, நமோஸ்துதே’ என்றப் பாடலைப் பாட, அப்பா துதிகள் சொல்லி செவ்வந்தி, செம்பருத்தி, வெண் தும்பையால் அர்ச்சிக்க, வீடே கோயிலானது போல இருந்தது.
‘இன்று இலையில் சாப்பாடு’ என நினக்கும் போதே சரவணனுக்கு இனித்தது. அனைத்தையும் ஒரு கை பார்த்தான். அம்மா சில ஏனங்களில், சர்க்கரைப் பொங்கல், சுண்டிய சக்கரவள்ளிக் கிழங்கு, வடை, கரும்பு என்று எடுத்துக் கொடுத்து சஞ்சையின் வீட்டில் கொடுத்துவிட்டு வரச் சொன்னார். “அவா தாத்தா செத்து ஒரு வருஷமாகல்ல; இதைக் கொண்டு போய் கொடு. அவனும், பவானியும் சாப்பிடுவா; உன்ன மாரி அவாளும் சின்னவாதானே.”
பவானியின் கண்கள் வள்ளிக்கிழங்கைப் பார்த்து விரிந்ததென்றால், சஞ்சையின் கைகள் பரபரத்து வடை ஒன்றைப் பாய்ந்து எடுத்து கபளீகரம் செய்தது. ‘நெறய இருக்குடி, நீயும் எடுத்துக்கோ’ என்றான் சரவணன்.
‘நன்னா இருக்குடா, ஏன் தை மாசம் முதல் தேதி பொங்கல் வரது?’
‘சூர்யனோட கதிர் தெக்குலேந்து வடக்குக்குப் போறது சஞ்சய். அவன் மகர ராசிக்கு வரான்னு அம்மா சொல்வா.’
“ஆமா, கரெக்ட். ஹார்ட் சக்கரத்துக்கு அநாகதம்னு பேரு. அதுக்குக் கீழுள்ள இயக்கம், ஆடிலேந்து மார்கழி வர நன்னாருக்கும்னும், தைலேந்து ஆனி வரைக்கும் மேலியக்கம் நன்னாயிருக்கும்னும் எங்க யோகா மிஸ் சொன்னாங்க” என்றாள் பூரிப்புடன் பவானி.
‘உனக்குத் தெரியுமாடா, சூர்யனோட மேல்பகுதியிலிருந்து ஒரு துண்டு உடஞ்சு அதோட வட துருவப் பகுதில ரெண்டு நாளக்கி முன்ன விழுந்துடுத்து. அத ‘நாசா டெலஸ்கோப்’ படமெடுத்துருக்கு.’
“அப்போ, நமக்கெல்லாம் ஆபத்தா?”
‘இப்ப வரைக்கும் ஒண்ணும் சொல்லல. வான்வெளிகள்ல இருக்கற விண்மீன் மண்டலங்கள், பிரபஞ்சப் பொருட்கள், ஸ்டாரெல்லாம் எப்படி ஃபார்ம் ஆறதுங்கறப் பாக்கறத்துக்காக ‘ஜேம்ஸ் வெப் வானியல் தொலை நோக்கி’ (James Webb Space Telescope) ஒண்ண நாசா, (NASA) கனடாவோட ஸ்பேஸ் ஏஜென்சி, (Space Agency, Canada) யூரோப்பிய விண் அமைப்பெல்லாம் (European Space Agency) 25/12/2021ல லாக்ரேஞ்ச் 2 ல (Lagrange-2) வச்சாங்க.’ என்றான் சஞ்சய்.
“அதான் ஹப்பிள் (Hubble) இருக்கே. அப்றம் இது எதுக்கு?” என்றாள் பவானி.
‘இது சிவப்புக் கதிர்கள் (Red Rays- Infra Red Rays) மூலமா ஸ்பெஷலா ஆய்வு செய்யும். உனக்குத் தெரியுமில்லையா, ஆரம்பத்ல புற ஊதா, அதான் அல்ட்ரா வயலட் (Ultra Violet) கதிரா இருப்பது, டாப்ளர் எஃபெக்ட்டால,(Dopler Effect) அகச் சிவப்பு, (இன்ஃப்ரா ரெட்) கதிராகி நல்ல தெளிவானப் படங்களக் கொடுக்கும்.’ என்றான் சரவணன்.
“அதுக்கு $10 பில்லியன் செலவாச்சாம். அது இருக்கற லாக்ரேஞ்ச் புள்ளி 2, பூமிலேந்து 15 லட்சம் கி மீட்டர்ல இருக்கு. பூமிக்குப் பின்னாடி ஒளிஞ்சுண்டிருக்கு. அந்த இடத்ல, சூரியனோட ஈர்ப்பு சக்தியும், பூமியோட ஈர்ப்பு சக்தியும் சமமா இருக்கறதால கொறஞ்ச ஃபூயலே (Fuel) போறுமாம்.” என்றாள் பவானி.
‘அதப் பத்தி வேறென்ன தெரியும் உனக்கு?’ என்று அசந்து போய் கேட்டான் சஞ்சய்.
‘இந்த நோக்கியோட பாகங்கள் என்னென்ன, அதோட தனிச் சிறப்பு என்னன்னு சுருக்கமாச் சொல்றேன். கப்தான் இழைகளால வெளிப்பகுதியை அமைச்சு, அதில அலுமினியம் பூசியிருக்காங்க. எடை குறைவா இருக்க, வலுவா இருக்க, வெப்பத்தை வெளி மண்டலத்துக்கே திருப்பத்தான் இந்த ஏற்பாடு. அடுக்கிதழ்களாக அதிகக்கனமில்லாமல் செஞ்சிருக்காங்க. தொலை நோக்குக் கண்ணாடியெல்லாம் அறுகோணம்; சிலிக்கான், பெரிலியத்தால ஆனது இந்தக் கண்ணாடிகள். சும்மா இல்ல, 48.2 கிராம் தங்க முலாம் பூசப்பட்ட கண்ணாடிகளாக்கும் அதெல்லாம். அம்மாவுக்குத் தெரிஞ்சா ஆறு பவுனாச்சேடின்னு பொலம்புவா!” என்று சிரித்தாள் பவானி.
‘எல்லாம் சரி. இப்ப அது என்னென்ன செஞ்சிருக்குன்னு உனக்குத் தெரியுமா, சரூ?’ என்றான் சஞ்சய்
‘அட்டகாசம்டா, அது. முதல்ல அத்தன தொலவுல ஒரு டெலெஸ்கோப்! ஈகிள் நெபூலா படம் (Eagle Nebula Photo) பாத்திருக்கியா? தூண் தூணா இருக்கும். அந்த புக மண்டலத்துக்குப் பின்னே சின்னச் சின்ன சிவப்பு புள்ளியாத் தெரியறத, இது படம் பிடிச்சிருக்கு. அது ஸ்டார்ஸ் பொறக்கப் போறத சொல்லுதாம். அந்த விண்மீன்கள்ல ஹைட்ரஜன் இன்னும் எரிய ஆரம்பிக்கல; அப்படி ஆச்சுன்னா 2 மில்லியன் செல்சியஸாக இருக்குமாம் அதோட வெப்பம்.’
‘ஹப்பிள் டெலஸ்கோப் ‘எக்சோ பிளெனெட்’ (Exo Planet) அதாண்டா புறக்கோள காமிச்சிருந்தாலும், இந்த ஜேம்ஸ் வெப், ஒண்ணக் காட்டியிருக்கு. ஹெச் ஐ பி 65426 பின்னு(HIP 65426 B) பேரு. அதோட முதல் நேரடி படத்தை இது காட்டியிருக்கு. நம்ம சூர்யக் குடும்பத்ல பல கிரகங்கள் இருக்கில்ல; ஆனா, இந்தக் கோள் அதனோட நக்ஷத்திரத்லேந்து ரொம்ப ரொம்பத் தொலவுல இருக்கு.’ என்றான் சஞ்சய்.
“நாம கன்யா ராசின்னு சொல்றோமே. அந்த விண்மீன் கூட்ட்த்ல, நம்மோட சூர்ய அமைப்பத் தாண்டி இருக்கற வாஸ்ப்-96 பிங்கற (WASP-96B) கோள இது படம் பிடிச்சுருக்குடா. அது 700 ஒளி ஆண்டுகள் தள்ளி இருக்கு. அதோட அட்மாஸ்பியர்ல கார்பன் டை ஆக்ஸைட் இருக்குங்கறதை இந்த டெலஸ்கோப்தான் முதமுதலா கண்டு பிடிச்சிருக்கு.” என்றாள் பவானி.
‘நெறயாப் படிக்கறன்னு தெரியறது. டபிள்யூ ஆர் 140 (WR140) மேலோட்டைப் பத்தியும் செய்தி வந்திருக்கு. கிட்டத்தட்ட செத்துப் போச்சுன்னு நெனச்ச உல்ஃப் ரே (Wolf-Rayet) நக்ஷத்ரத்தைச் சுத்தி நம்ம கை விரல் ரேகை மாரி அழகா ஒரு படம் வந்திருக்கு பாரு, செம அசத்தல்.’ என்றான் சரவணன்.
‘எனக்கு ஒண்ணு ஞாபகம் வரதுடா. பழுப்புக் குள்ளர்கள்ல (Brown Dwarf) மண் மேகங்களை இது காட்டுது. இந்தப் பழுப்பு குள்ளர்கள், கிரகங்களை விடப் பெரிசு, ஆனா விண்மீன்னு சொல்ல முடியாத அளவுக்கு சின்னது. அதோட பேர மறந்துட்டேன்’
‘வி ஹெச் எஸ் 1256 பி’(VHS 1256 B) என்றான் சரவணன்.
‘இன்னும் நெறயா இருக்கும் விண் விந்தைகள். போகப் போகத் தெரிஞ்சுப்போம்.’
“ஆமா, ஏன் சக்கரைப் பொங்கல், வாயில கரையற வள்ளிக் கிழங்கு, மிருதுவான வட எல்லாம் சூர்யனுக்குக் கொடுக்கறாங்க?” என்று கேட்டாள் பவானி.
இருவரும் முழித்தார்கள்.
“அவனுக்குப் பல் கெடையாதாம்.”
‘இதென்ன கத? அப்போ கரும்பு?’ என்று கேட்டான் சஞ்சய்.
“அத அவர் ஜூஸா உறிஞ்சிடுவார்” என்றாள் பவானி. எல்லோரும் சிரித்தார்கள்.