இந்தக் கதை ஹிந்தியில் அனு சிங் சௌதரி அவர்களால் எழுதப்பட்ட BLUE SCARF என்ற கதைத் தொகுப்பிலிருந்து எடுத்து சுருக்கி மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கதையின் ஓட்டம் ஏதும் தடைபடவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இன்றும் சுச்ருதா வீட்டுப்பாடம் செய்து வரவில்லை. எந்தவிதத்திலாவது ஆசிரியரை அவமானப்படுத்துவது, வகுப்பிலுள்ள மற்றவர்களிடம் வம்பு செய்வது, கேட்கப்படும் கேள்விகளுக்கு மாற்று பதில் தருவது – இவை அனைத்தும் அவளது பழக்கங்கள். அவளது டைரியில் எழுதி அனுப்பியும் பெற்றோர்கள் தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. தன் குழந்தை மீது அக்கறை இல்லையா!
‘சுச்ருதா பாண்டே, சுச்ருதா.. நான் கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறேன். இன்றும் வீட்டுப்பாடம் செய்யவில்லையா? என்ன காரணம்?’ ‘எல்லாக் காரணங்களும் சொல்லி விட்டேன், புதிதாக ஒன்றும் இல்லை’. நான் ஸ்தம்பித்துப் போய் விட்டேன். வகுப்பில் எல்லோரும் சிரித்தார்கள். முதல்வரிடமோ, மற்ற ஆசிரியர்களிடமோ, டைரியில் எழுதுவதாலோ எந்தப் பயனும் இல்லை. ‘நீதான் வகுப்பு ஆசிரியர். இதனை நீதான் சமாளிக்க வேண்டும்’ என்று சொல்லி விடுவார்கள். வகுப்பை விட்டு வெளியே வந்தேன், சுச்ருதாவின் கண்கள் என் பின்னாலேயே.
‘ஆறு மாதங்கள் நான் கப்பலிலேயே இருப்பேன். அப்போது நீ தனியாக குழந்தையுடன் என்ன செய்வாய்? மேலே படி, உன் விருப்பம் போல் ஏதாவது வேலை தேடிக் கொள்’ என்று கணவர் சொல்ல, நான் எம்எஸ்ஸி படித்து விட்டு, பிஎச்டி படித்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் பள்ளியில் ஐந்து வருடங்களாக வேலை செய்து கொண்டிருக்கிறேன். என் பெண்ணிற்கும் இப்போது ஆறு வயது. பெரிய வகுப்பு எடுப்பது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல.
நான் சுச்ருதாவை வரச் சொன்னேன். ‘என்ன டீச்சர், ஏதாவது உபதேசம் பண்ணப் போகிறீர்களா?’ ‘இல்லை எனக்கு உங்கள் அம்மாவைப் பார்த்து சில உதவிகள் கேட்க வேண்டும். ஃபோன் இருக்கிறதா?’ ‘நீங்கள் உங்கள் வீட்டு நம்பர் கொடுங்கள். நான் வரச் சொல்கிறேன்’. நான் அவளைப் பற்றி ஏதாவது புகார் சொல்வேனோ என்று அவளுக்கு சிறிது சந்தேகம். வேலையில் இருந்து கொண்டே குழந்தையை வளர்ப்பது மிகவும் சிரமம், அதுவும் கணவர் நாடாறு மாதம், கடலாறு மாதம் என்று இருந்தால். மாமியாரையோ, அம்மாவையோ எதிர்ப்பார்க்காததால் குழந்தைக்கு லீவு வரும்போது காப்பகத்தில் விட வேண்டி இருக்கிறது.
சாயந்திரம் சுச்ருதா ஒரு பையனுடன் வண்டியில் வந்து இறங்கினாள். வீட்டைச் சிறிது ஒழுங்குபடுத்தி அவர்களை உட்காரச் சொன்னேன். அவள் ஒரு பேப்பரைக் கொடுத்தாள். அதில் பால், வேலையாள், மின்சாரம், மளிகை கடை, பிளம்பர் எல்லோருடைய ஃபோன் நம்பர்கள் இருந்தன. மேலும் அவள் “உங்கள் பெண் இவ்வளவு சின்னவள் என்று தெரியாது, நாளை நான் மருத்துவமனை, மருந்து கடை நம்பரும் எடுத்து வருகிறேன்’ என்றாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. வகுப்பில் கவனக் குறைவாக இருக்கும் இவளா இப்படி! இவளால் நான் எத்தனை தடவை வேலையை ராஜினாமா செய்ய யோசித்துள்ளேன்? ’டீச்சர் நீங்கள் ஸ்கூலுக்குப் போனால் குழந்தையை யார் பார்த்துப்பார்கள்?’ பதின்மூன்று வயது பெண் கேட்ட மாதிரி இல்லை. ‘சியா அப்பா இங்கே இருந்தால் அவர் பார்த்துப்பார், இல்லாவிடில் காப்பாகம்தான்’ என்று சொன்னேன். தன்னுடன் வந்தவனை நண்பன் என்று அறிமுகம் செய்து விட்டு நான் ஜூஸ் கொண்டு வருவதற்குள் இரண்டு பேரும் என் குழந்தையுடன் விளையாட ஆரம்பித்தனர்.
மறுநாள் ஒரு வீட்டு வேலை செய்பவளைக் கூட்டுக் கொண்டு வந்தாள். ‘நான் சிறிது நேரம் சியாவை பார்க்குக்குக் கூட்டிச் செல்லவா’ என்று கேட்டாள். அவள் கூட்டிச் சென்றால் எனக்கும் கொஞ்சம் வேலை ஆகும். ஆனால் பையன்களுடன் சுற்றுபவளுடன் என் குழந்தையை அனுப்ப விருப்பம் இல்லை. ‘பெண் ஒரு பையனுடன் சுற்றுவதைக் கூட கவனிப்பதில்லை. இவள் அம்மா ஏன் இப்படி இருக்கிறார்கள். ஒருவேளை அவளுக்கு நேரம் இல்லையோ? வெளியில் வேலை செய்கிறாளோ? அப்பாவும் என் கணவர் மாதிரி வெளி வேலையோ?’ இப்படி பலவாறாக யோசித்தேன். சுச்ருதாவை விரும்பவும் முடியவில்லை, வெறுக்கவும் முடியவில்லை. ஸ்கூலுக்குப் போகும்போது என் வண்டியை நிறுத்தி ஏறிக் கொள்கிறாள். என்ன பெண் இவள்! ஆனால் அதற்கு கைமாறாக இப்போதெல்லாம் வீட்டுப் பாடம் எழுதுகிறாள், டெஸ்ட் எழுதி அதில் தேர்வும் பெறுகிறாள். முதன் முதலாக பெற்றோர் தினத்தன்று அவளது அப்பா ஸ்கூலுக்கு வந்தார். ஆனால் அவரும் எல்லா விஷயத்தைப் பற்றி பேசினாலும், இவளது படிப்பைப் பற்றி மட்டும் பேசவேயில்லை.
ஒரு ஞாயிறன்று சுச்ருதா ஒரு மாதுவுடன் வந்து, ‘இது என் அம்மா. நீங்கள் அம்மாவுடன் பேசிக்கொண்டிருங்கள், நான் டீ போடுகிறேன்’ என்று ஸ்வாதீனமாக உள்ளே சென்றாள். நான் அவள் அம்மாவை ஆபீசில் வேலை செய்பவள் மாதிரி எண்ணிக் கொண்டிருந்ததால், இந்த மாதிரி சாதரணமானவளை எதிர்பார்க்கவில்லை. ‘சுச்ருதாவிற்கு நீங்கள் கணக்கும், அறிவியலும் சொல்லித் தர வேண்டும்’ என்று அவள் அம்மா ஆரம்பித்தாள். ‘ஆனால் நான் வீட்டில் யாருக்கும் பாடம் சொல்லித் தருவதில்லை’. ‘சுச்ருதா சொல்லியிருக்கிறாள்’. என்ன மனிதர்கள் இவர்கள். பிறரைப் பற்றி நினைப்பதேயில்லை. எல்லாம் தனக்கு வேண்டிய மாதிரி நடக்க வேண்டும். இப்படித்தான் சுச்ருதாவும் இருக்கிறாள். ‘நான் சியாவை எடுத்துக் கொண்டு வெளியில் போகிறேன். நீங்களும் அம்மாவும் பேசுங்கள்’. ‘சியா எங்கேயும் வெளியில் போக வேண்டாம்’ எப்போதும் போல் என் கோவம் சியாவின் மீதுதான். ‘அப்ப நாம் பால்கனியில் உட்கார்ந்து பேசுவோம்’ என்றாள் அம்மா.
‘எப்போதிலிருந்து அவளுக்குப் பாடம் எடுக்க வேண்டும்’ என நான் கேட்க ‘நீங்கள் எப்போது சொல்கிறீர்களோ. சுச்ருதா என்னுடைய இரண்டாவது பெண் குழந்தை. 18 வருடங்களுக்குப் பிறகு பிறந்தவள். அவளுக்கு முன் பிறந்த பையன் கணக்கில் சிறிது மார்க் குறைவாக எடுத்தான். அப்பா திட்டுவார்களோ என்று பயந்து தூக்கில் தொங்கி தற்கொலை பண்ணிக்கொண்டான். நாங்கள் இதைப் பொறுத்துக் கொள்வோம் என்று எண்ணினான் போலும். அதனால்தான் நாங்கள் சுச்ருதாவை படிப்பில் தீவீரப்படுத்தவில்லை. அவள் குறும்புக்காரிதான், ஆனால் நல்ல குணமுடையவள்’ என்று அவள் அம்மா நீளமாகப் பேசினாள். எப்படி அவர்களை சமாதானப் படுத்துவது என்று தெரியவில்லை. இப்போது எனக்கு சுச்ருதாவைப் பற்றி எல்லாம் புரிந்தது. ஆனால் அவனுடன் வந்த பையனைப் பற்றி எப்படி சொல்வது! சரி அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். இவளிடம் சியாவை விடுவது சரிதான் என்று தோன்றிற்று. இப்போது என மனமும் இலேசாகியது.
மறுநாளிலிருந்து சுச்ருதா என் வீட்டிற்கு வர ஆரம்பித்தாள். கணக்கு சொல்லிக் கொடுத்தபின் அவள் சியாவுடன் விளையாடுவாள். நான் என் வேலைகளைக் கவனித்தேன். திடீரென்று ஒரு நாள் அந்தப் பையனைக் கூட்டி வந்து ‘துஷ்யந்தனுக்கும் நீங்கள் கணக்கு சொல்லிக் கொடுப்பீர்களா’ என்றாள். எனக்குக் கோவம் வந்தாலும் அவன் நல்ல விதமாகத்தான் நடந்து கொண்டான். சில நாட்கள் கழித்து ‘நான் துஷ்யந்தனுடன் இப்போது பழகுவதில்லை’ என்றாள். எனக்கு கஷ்டமாக இருந்தது. பதிமூன்று வயது பெண்ணிற்கு இதெல்லாம் தேவையா என்று. பள்ளி முடிந்தவுடன் அவளுடைய ரிசல்ட் வாங்க யாருமே வரவில்லை. நானும் என் கணவருடன் வெளியூர் சென்று விட்டதால் சில நாட்கள் கழித்து அவர்கள் வீட்டிற்கு முதன் முறையாக ரிப்போர்ட் கார்ட் கொடுக்கச் சென்றேன். அவள் அம்மாதான் வரவேற்று உட்கார வைத்தாள். வீட்டில் எங்கு நோக்கினும் பையனுடைய போட்டோதான் இருந்தது. பேச்சும் பையனைப் பற்றியே இருந்தது. ஓ அம்மா, அப்பா இருவரும் இறந்து போன பையனைப் பற்றியே நினைக்கிறார்கள், இவளைப் பற்றி நினைப்பதேயில்லை. இவளது படிப்பைப்பற்றி மட்டுமல்ல இவளைப் பற்றியே யோசிப்பதில்லை. சுச்ருதா அதனால் தான் வெளியில் துணையையும், அவர்களுடன் உறவாடுவதையும் தேடுகிறாள் என்று எனக்குப் புரிந்தது. இப்போது எனக்கு சுச்ருதா ஏன் அவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறாள் என்று தெளிவாயிற்று.
நான் சுச்ருதாவிடம் கார்ட் கொடுத்து விட்டு ‘நாளை முதல் படிக்க வந்து விடு. சியாவும் ஷ்ருதி அக்காவிடம்தான் படிப்பாளாம்’ என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.
Anu Singh Choudhary, a celebrated author in Hindi, is one of the few truly bilingual and multimedium writers. Her years as a documentary filmmaker and award-winning journalist make her stories an authentic chronicle of the zeitgeist. Her diverse experience in storytelling, publishing and communications consulting took shape at multiple platforms such as NDTV, Save the Children, Gaon Connection, Yatra Books, Harper Collins India and Amazon-Westland. As a Screenwriter, Anu has adapted two bestselling novels for screen for a leading digital platform.
மூலக் கதை , மொழிபெயர்ப்பு இரண்டும் அருமை. காலத்திற்கு ஏற்ற கதை.
LikeLike