எனக்கு பூனையை பிடிக்காது!
தப்பு, தப்பு…… பூனைகளைணு மாற்றி வாசியுங்கோ. பூனையாம் பூன. அதேன்ன….. நம்ம கண்ணுக்குள்ளயே ஏதோ தேடற பார்வை…’சீ, நீ ஒரு பதர்’ அப்படின்னு பார்க்கிற மாதிரி ஒரு அலட்சிய பார்வ…. மீசையாம் மீசை…. நார் நாரா உதடுக்கு மேல ஈக்கில் போல … பாக்கவே சகிகல… உற்ற்ற்… உற்ற்ற் எணு எப்பவும் வயிற்றுக்குள இருந்து ஒரு இரைச்சல் சத்தம் வேற. வயிறா இல்ல பாக்டரியா? வால் மட்டும் என்னவாம்? எங்க ஜிம்மிக்கு புசு புசுண்ணு என்னமா பஞ்சு மாதிரி சாஃப்டான வாலு…. பாம்புக்கு ஸ்வற்றர் போட்டாபல இருக்கும். பூனையாம் பூன….. ஏதோ திட்டம் போட்டு ஒவ்வொரு அடியையும் அளந்து அளந்து வச்சி தலய மெதுவா திருப்பி பார்த்திண்டு அப்புறம் அலட்சியமா போறப்ப சினிமால ‘உன்ன அப்புறமா வந்து கவனிக்கறணு’ வில்லன் சொல்லறாப்பல இருக்கும்.
என்ன…. ஒரே குற சொல்லற சண்டைக்காரினு நினைச்சீங்களோ? மாமா கூட அம்மா கிட்ட இதேதான் சொன்னார். “கொண்டு வர்ர எல்லா வரன்களையும் வேணாம் வேணானு உதைச்சி தள்ளுறா உன் மக. நாம பார்க்கிற பையங்க வேணாமா இல்ல கல்யாணமே வேணமா? அவளா பாத்து ஒரு டாக்டரையே ஐ.ஏ.எஸ் பையனயோ கூட்டிணு வரட்டும். ஜாம் ஜாம்னு நானே முன்னால நின்னு தாலிய எடுத்து கொடுக்கிறன்.”
மாமா மீது கோபம் பிச்சுகிணு வரும். டாக்டர், ஐ.ஏ.ஸ்ண்ணா கொம்பா? எதிர் வீட்டு கோமதியும்தான் பெரிசா ‘டாக்டர் மாப்பிள, டாக்டர் மாப்பிளணு’ பெரிசா பீத்திக்கிணு மூஞ்ச திருப்பிகிணு பெங்களூருக்கு குடித்தனம் போனா. எட்டு மாசம் தாங்கல….. தனியா டாக்ஸில வந்து இறங்கினா. பாவம்… அழுது முகமெல்லாம் வீங்கி…. என்ன இளவோ.
‘மஞ்சு… கோமதி கத தெரியுமோ? அவ…..’. அம்மா தொடங்கும் முன்னே ‘ஸ்டொப் இட் மா. டோண்ட் டெல் மி’ ணு சொல்லி கட் பண்ணறன். பொம்மனாட்டிக்குள்ள இருக்திற வலியையும் வேதனையும் ஒரு வேடிக்கையா பார்க்கிற சமூகம்…. நிராகரிக்கப்பட்டவள் அப்படீனு சமூகம் முத்திர குத்தி மூலயில போட்ட பொம்மையாட்டம் அவா வாழ்க்கை இப்போ. அந்த சோக சரித்தில ஒரு பார்வையாளனாக்கூட நா பங்கேற்க விரும்பல.
கோமதி என்னமா இருந்தா…? சிட்டுக்குருவியாட்டம் துரு துருண்ணு சைக்கிளில லைபிறறிக்கு போய் கட்டு கட்டா புஸ்தகங்க எடுத்துண்டு வந்து திண்ணையில இருந்து படிப்ப்பா. அவளுக்கும் அந்த கதைகளில் வர்ராப் போல யாரோ ஒரு கற்பனை காதலனோட என்னமா நேசம் இருந்திருக்கும்.
பெங்களூர்ல என்னெல்லாம் நடந்திடுக்கும்னு நா கற்பனை பண்ணறன்.
அவ புருஷன வேலைக்கு அனுப்புன புறம் சாதம் வடிச்சி காய்கறி நறுக்கி நெய், கடுகு, கறிவேப்பில போட்டு தாளிச்சு அவனுக்கு வாய்க்கு ருசியா சமைச்சி வச்சி அப்புறமா வீட்ட எல்லாம் பெருக்கி அவன் டிரஸ் எல்லாம் மடிச்சி வைச்சி அப்புறமா வாஷ் எடுத்து பின்ன ஒரு புஸ்தகத்த படிச்சினே ஒரு குட்டி தூக்கம். ஆறு மணி….. அவன் வந்து கதவ தட்டறான். இவ ஓடிப்போய் கதவ திறக்கிறா. ‘என்ன?.. முன் ஜன்னல் திறந்திருக்கு… அதுக்குள்ளால் முன்னால இருக்கிற ஜிம்க்கு வாற பொற பசங்கள….’. என்ன ஆசையா அவனுக்காகவே அவ வாழறா…… அந்த எருமைக்கு அது புரியனுமே? கோமதி பீரிட்டு வந்த அழுகய சேல தலப்பால மூடி அடக்கிகினு கட்டில்ல குப்பற விழுந்து அழறா. அவா உடம்பு குலுங்கி குலுங்கி அதிருது. இந்த வேதன எல்லாம் யாருக்கும் தெரியறதில்ல. ‘ஐய… புருஷன உட்டுபிட்டு வந்தவனு’ ஒரு வசனத்தில ஜனம் என்னமா பச்சகுத்துது. கோமதி வேதன யாருக்கு புரியும்? அவா சுமைகளை இறக்கி வைக்க தோள்களில்ல.
புத்தகத்தில படிச்ச அந்த காதல் கதைகளில என்னமா அவன் ஆபீஸ்ல இருந்து பூ வாங்கிணு வந்து அவ கூந்தல்ல வைச்சி அப்படியே கட்டி அணைச்சி…..
கணவன பிரிஞ்சி வாழனும்ணு எடுக்கிற முடிவு என்னா பெரிய முடிவு!
வாழ்க்கையின் எல்லையில நின்ணு எடுக்கிற முடிவு.
அம்மா தெனமும் கல்யாண பேச்ச எடுக்கப்ப எனக்கு கோமதி ஞாபகம் வரும். பெங்களூர்ல நடந்த ஒண்ணும் எனக்கு தெரியாது. ஆனா என் கற்பனையே உண்மையா இருந்திச்சினா? அம்மம்மா…..அதேல்லாம் என்னால் முடியாதம்மா. தெரிஞ்சே தன்ன பலி கொடுக்கற வாழ்க தேவைதானாணு எனக்கு தோணறது.
“வை டோண்ட் யூ கெட் மறிட் “…… என்னமாய் கேட்டான் ராகவன்? அட, ராகவன பற்றி சொல்லவே இல்ல இல? நா பீ.ஏ முடிச்சிணு சென்னை ரெயில்வே ஆபீஸ்ல எக்கவுண்டிங் செக்சன்ல வேல பார்த்தனா…. ஒரு நாள் ராமனாதன் சார்தான் ராகவன அழைச்சுண்டு வந்து எனக்கு இன்டடியூஸ் பண்ணறார்… “ஹி இஸ் ராகவன்… இண்ணையில இருந்து உங்க அண்டர் ஸ்டடி. டீச் ஹிம் எவ்ரிதிங்”.
நா நிமிர்ந்து பார்க்கிறன். ஆறடி உயரம்…. வெள்ள சேட் பாண்ட் போட்டு ‘காதலிக்க நேரமில்லை’ ரவிசந்திரனாட்டம் அடக்கமா சீவின முடி….. எக்ஸ்ரா கிறீம் போட்டாப்போல….. மினுங்குது. அடர்தியா புருவம்……ரண்டு புருவமும் நடுவுல சந்திக்குது….நோ இடைவெளி. காலேஜ் பையனப் போல துரு துருணு கண்கள்… அரும்பு மீசை.
பீகாம் படிப்பு …. இள வயசு.. என்ன இள வயசு?….. என்ன விட ரெண்டு வயசு கம்மி. அதால சொன்னதெல்லாம் சும்மா பஞ்சில மை கொட்டினாப்போல மூளைல ஊறி நின்னிரிச்சி. கற்பூர மூள.
நா சொல்லிக் கொடுக்கிறதல்லாம் கவனமா கேட்டுண்ணு ஸ்கூல் பையனாட்டம் நோட்ஸ் எழுதிகிணுவார். எழுதிகிணுவான் அப்பிடீனு சொல்ல தயக்கமா இருக்கு. அட, அப்படி ஒன்றும் என் மனசில இல்லீங்க. மனுஷாளுக்கு ஒரு பொம்மனாட்டி கொடுக்கிற மரியாதணு வச்சுக்கங்களேன்.
ராகவனப் பற்றி அப்படி ஒணும் பெரிசா தெரிஞ்சிக்க எனக்கு ஆர்வம் இல்ல. என்ன?… நான் என்னா கட்டிக்கவா போறன்?
அவரா சொல்லுவார் : ஊர் வேலூர் . சென்னையில் அத்தை வீட்டில் குடியிருப்பு. வீக்கென்ட் ஊருக்கு போயிருவார். வேலூர் கோட்டை, ஜலகண்டேசுவரர் கோயில், இலட்சுமி பொற்கோயில் அப்புறம் திப்பு சுல்தான் வரலாறுணு கதகதையா சொல்வார். ஏ குட் ஸ்டோரி டெல்லர். கோட்டை கோயில் பற்றி யெல்லாம் சொல்லறப்ப சட்டணு நிறுத்தி “டல் மி…. வாட் டிட் ஐ சே நவ்?” அப்படிணு கேள்வில்ல கேப்பரு! அதனால நா ரொம்ப உன்னிப்பா காலேஜ் பொண்ணு போல கேட்டுகிணு இருப்பேனாக்கும்.
ஒரு நாள் வேல முடிஞ்சாப்பறம் அவர நம்ம வீட்டுக்கு கூட்டியாந்தேன். தயங்கி தயங்கித்தான் சம்மதிச்சு வந்தார். எங்க வீதில இருக்கிறவா எல்லாரும் என்ன ஏதுண்ணு பார்க்கிறா. அம்மா பஜ்ஜியும் காப்பியும் கொடுத்து உபசரிக்கறா. அம்மா ரொம்ப சிரத்தையோட துருவி துருவி பூர்வீகம் எல்லாம் அறிஞ்சுண்டா. எனக்கு என்னவோ போல் இருந்தது. அவர் போனதும் அம்மா: “ரொம்ப நல்ல பையன். உன்ன விட அத்தன உசரமில்ல…. நல்ல குடும்பம்”. அம்மாவின் பேச்சு எங்கு போகிறதுணு எனக்கு தெரியறது. எல்லா தாய்மாருக்கும் உள்ள அந்த ஆதங்கம் அம்மாவிற்கும். அது எனக்கும் புரியறது. நான் பொறந்து மூணு வருஷத்தில அப்பா மார்பு வலிணு நெஞ்ச புடிச்சுணு பரலோகம் போனப்புறம் அம்மாதான் மாமாவோட துணையோட தனிமரமா நின்னு என்ன படிக்கவச்சி ஆளாக்கினா. அவளுக்கு புரியறது தனிமையோட வலி. ஒரு ஆண் துணை இல்லாம வாழற அந்த வாழ்க்கையோட வேதனைய நானும் அம்மா முகத்தில கண்டிருக்கேன். சமையல் கட்டில முந்தானய வாயில வைச்சு அடைச்சிகினு அவா குலுங்கி அழறத நான் பாத்திருக்கேன். ‘மா, ஆர் யு ஓகே?’ ணு கேட்டா தன் கவல எனக்கும் தொத்துநோய் போல பரவக்கூடாதேணு ‘ஒண்ணுமில்ல…… இந்த புகை’ ணு ஏதோ சாக்கு சொல்லுவா. என்னதான் காலம் மாறிண்டே வந்தாலும் ஒரு பெண்ணோ கவல மாறாமலே இருக்கிறது ஒரு சாபம்னு எனக்கு படறது. புருஷன் போனாப்புறம் தனிமைல வாழற வாழ்க்க சோப்பு கட்டி தண்ணீர்ல கரையற மாதிரி கரைஞ்சி போகும் வாழ்க்க. அத அவா வாழ்ந்துதான் கழிக்கணும்.
‘வன் ஸ்வீட் நியுஸ்’ ணு ராகவன் ஒரு திங்கள் காலையில சொல்லாறப்போ எனக்குள்ள என்னவோ பண்ணறது. ‘அம்மா ஒரு மேரேஜ் அரேஜ் பண்ணிட்டாங்க’. இப்படி ஒரு நியூஸ் ஒரு நாள் அவர் வாயில இருந்து வரும்ணு நான் எதிர்பார்த்ததுதான். ஆனா அத உண்மையா கேட்கறப்போ என் காலுக்கு கீழ இருந்து யாரோ இந்த பூமிய இழுத்தவிட்ட மாதிரியும் நான் ‘அலிஸ் இன் வண்டர் லாண்ட்’ ல அந்த பொண்ணு கிடு கிடுணு பாதாளத்தல விழற மாதிரியும் ஒரு பிரமை. என்ன சுற்றி ஆபீஸ்ல இருக்கிற டைப்பிறைட்டர், காப்பி கப், ஃபான், மேச, கதிரை எல்லாம் சுத்தறது.
‘ஆர் யூ ஓகே?’
‘யெஸ்…. யெஸ்’ணு நான் சமாளிச்சிகிறன். கையால மேசைய இறுக்கப் பிடிச்சிணு மெதுவா முகத்த திருப்பி இல்லாத பைஃல தேடறதா பாசாங்கு பண்ணறன்.
அம்மா தோள்ல சாஞ்சி ‘ஓ’ணு அழணும் போல தோணிச்சு.
“வை டோண்ட் யூ கெட் மறிட் ” ணு ராகவன் எப்பவோ கேட்டப நான் ‘ஏன்….. ஒரு பொண்ணு சிங்கிளா வாழக்கூடாதோ? ஒரு மனுஷாளுக்கு வாழ்க்கப்பட்டு ஒரு அடிமை போல அவன சந்தோஷப்படுத்தற, சயன சுகம் தரும் சரீரமா, புள்ள பெத்துகிற யந்திரமாதான் வாழனும்னு ஒரு நியதியா என்ன?’ இத நியாயப்படுத்தறாப்பல ஒரு பெரிய லெக்சரே அடிச்சு முடிச்சன். ராகவனுக்கு ஏன்டா கேட்டோம்ணு இருந்தது. இப்படி ஒரு கேள்வியை கேட்பதற்கு நான்தான் அந்த உரிமையை அவருக்கு கொடுத்தேன் என்பதை ஏனோ என் மனம் சம்மதிக்க மறுத்தது.
இப்போ மட்டும் ஏன் ராகவனின் வெடிங் நியூஸ் என்னை இப்படி போட்டு உடைக்கணும்ணு புரியல்ல.
‘ஆம் ஐ இன் லவ் வித் ஹிம்?’ணு நான் என்னையே கேட்டுகிறன். இதுதான் மனுஷாள் சொல்லற ஊமைக் காதலோ?
‘டோண்ட் பி ஸ்டுப்பிட்’ ணு மனசு சொல்லறது. மனசு, இதயம், ஏக்கம், சோகம்,…… இதெல்லாத்தையும் ஒரு ஊறுகாய் பாட்டலில அடைச்சு பொம்மனாட்டிங்க பொறக்கறப்பவே ஆண்டவன் கூடவே கொடுத்து அனுப்பி வச்சானோணு தோணறது. அப்பப்ப தொட்டுக்க சொட்டு கண்ணீரும் சேத்து வச்சடறான்.
ராகவன் திருமணத்திற்கு நானும் ஆபீஸில இருந்த எல்லா மனுஷாள் கூட போயிடறன். பொண்ணு வாட்டசாட்டமா லட்சணமா இருந்தா. நல்லா இருங்கணும்னு வாழ்த்தி எனக்கும் ராகவனுக்கும் இருந்த ஆபீஸ் பந்தத்திற்கு ஒரு முற்றுப்புள்ளிய வைச்சன். இனி ராகவன் அவாக்கு சொந்தம். அவரை என்றும் என் சொந்தமாக வைச்சுகணும்னு நான் நினைச்சதே இல்லையே!
நா அவரை எப்படி பார்த்தேணு இன்றைக்கு கூட தெளிவா தெரியல. ஒரு வேள அவரா வந்து ‘ஐ லவ் யூ’ ணு சொல்லியிருந்தா ‘ஓகே’ணு அந்த பந்தத்தில என்னை இணைச்சிண்டு நாலு புள்ள குட்டிய பெத்துண்டு மற்ற பொண்ணுக போல ஒரு லெளகீக வாழ்க்கையை நானும் அமைச்சுண்டு இருப்பேனோ தெரியாது. இது ஒரு அவிழாப் புதிர்!
இப்போ நெனைச்சு என்ன பண்ண?
*. *. *. *. *. *. *. *. *
வருஷங்கள் என்னமா உருண்டோடிப் போச்சு? அம்மா இப்போ படுத்த படுக்கையா பாரிசவாதம் வந்து இடது கையையும் காலையும் இழுத்துகிணு ஒரு குழந்த மாதிரி ‘மஞ்சு. அத தா, இத எடு’ணு கேட்டுண்டே இருக்கா. நா கண்ணாடில எம் மூஞ்சிய பார்க்கிறன்..,,, தலமுடில வெள்ள கீற்று பரவி காது வரைக்கும் வந்தாச்சு. முகத்திலும் மடிப்புகள் மெதுவாய் கோழிக் கீறல்களாய், விஷேசமா கண்ண சுற்றி வரையத் தொடங்கிடறது. காலம் என்னமாய் தன் கொடிய கலப்பையால பொம்மனாட்டிங்க செளந்தரியத்தை உழுது சின்னாபின்னப்படுத்துறது?
அம்மாவுக்கு முந்திரி போட்டு பால் பாயாசத்தை அடுப்பில் கிளறி மெதுவா இளம் சூட்டில கரண்டியால பருக்கிறன். பாயாசமும் அவா எச்சிலும் கலந்து ஒரு பால் ஆறாகி மெதுவாய் கடவாயில வடிஞ்சி கழுத்தில ஓடி அவாள்ட சுருங்கின கழுத்து மடிப்புல தேங்கி நிக்கிறது. மெதுவாய் அதை துடைத்து அவள் கண்களை உற்றுப் பார்க்கிறன். ஆண்டவன் என்னமா மனுஷாள இப்படி வதைத்து அவாளுக்கிணு இருந்த அடையாளத்தயும் சௌந்தரியத்தையும் அழிச்சி அலைக்கழித்து ‘நீ வாழ்ந்தது போதும்னு’ சொல்லாம சொல்லி சோதிக்கிறான்?
‘இருந்தது போதும். கிளம்பு போகலா’மிணு அதே செளந்திரியத்தோட அழைக்கிணு போனாத்தான் என்னவாம்?
மனுஷாள் ஏன் வயசாகணும்னு விஞ்ஞானம் புட்டு புட்டு வச்சாலும் எனக்கு அத ஏத்துக்கற மனசு இல்ல.
எனக்குள்ள நடந்துகிணு இருக்கிற இந்த தார்மீக விவாதம் எல்லாம் அம்மாவுக்கு தெரியப் போவதில்ல. ஆனா அவாளுக்காகத்தான் நா என்னமா எனக்குள்ளேயே ஒரு ஞான தர்க்கத்த அண்டவனோட போடறணு எப்படி அவாளுக்கு புரியவப்பணு தெரியாம மெதுவா அவா கழுத்தில் தேங்கி நிக்கற பால சேலத்தலப்பால அழுத்தி தொடக்கிறன்.
மனுஷாளுக்கு வர்ற சோகம், வஞ்சன, குரோதம்…… இதேல்லாத்தையும் இப்படி தொடச்சி எறிய முடிஞ்சா என்ன நல்லா இருக்குமிணு யோசிச்சி எனக்குள்ளேயே சிரிச்சிகிறன்.
சுவர் கடிகாரம் ‘டங்…. டங்… டங்’ னு பத்து அடிச்சி ஓயறது. வெளி முற்றத்தில நல்ல இளவெய்யில் காயறது.
அம்மாவ பன்னிரண்டு மணிக்குத்தான் குளிப்பாட்டணும்.
அதுவர என்ன செய்யலாமிணு யோசிக்கிண்டு முன் முற்றத்திக்கு வந்து அப்பாடானு கதிரையில சாஞ்சு வானத்த அண்ணாந்து பார்க்கிறன். வெள்ள பஞ்சு பஞ்சா வானத்தில் மேகம் சோம்பலோட கும்பல் கும்பலா நகர்ந்துகிணே இருக்கு. நா சின்ன குழந்தாட்டம் வானத்தில முயல தேடறன். என்னோட கவனெல்லாம் வானத்தில.
“மியாவ்” ……..” மியாவ்”
ஏதோ கனவுல இருந்து விழிச்ச மாதிரி சத்தம் வந்த திசையில கண்கள இடுக்கி பார்க்கிறன்.
அடுத்த வீட்டு மங்களம் மாமி மதில் சுவரில ஒரு வெள்ள பூனை. என்ன ஒரு அலட்சியமா பாத்திண்ணு அப்புறம் எங்க தோட்டத்தில இருந்த வைக்கோல் கட்டில் பாய்ந்து ஒரு சின்னப்புலியாட்டம் நா பதியம் போட்ட தக்காளி செடிகளுக்கால நடந்து என் முன்னால இருந்த படியில ஏறி எம்முன்னால வந்து முகத்தை நிமிர்த்தி என் மூஞ்சிய பார்க்கிறது.
மெதுவா குனிஞ்சி முன் காலால தன் முகத்த நீவி விடறது. ‘இந்த சனியனுக்கு என்ன திமிர்’ ணு நா யோசிக்கிறன்.
இண்ணைக்குத்தான் நா இத முதல்ல பார்க்கிறன்.
மங்களம் மாமியோட ஆத்துக்காரர் போன மாசம்தான் நெஞ்சு வலியில கண்ண மூடிண்டார்.
ஓ! அந்த தனிமய போக்கத்தான் இந்த செருக்கு புடிச்ச இளவ அவா வளர்க்கிறாரோ?
இப்போ நா பூனய உத்து அதனோட கண்ணுக்குள்ள பார்க்கிறன். என்னமோ…… அது கண்கள சோகமா வைச்சிணு என்னையே பாக்கிறது.
அது என்ன என்னமோ பண்ணுறது.
வாழ்க்கையில் பல சமயம் நாம காரணம் புரியாம ஏதோ ஒரு ரசனயையோ, மனுஷாளையோ, வெஜிடபிளையோ வெறுகிறோமே? எல்லாத்துக்கும் காரணம் காரியம் பாத்தா செய்யறம்? ஏதோ மனசுல ‘டக்’ எணு அந்த வெறுப்பு அம்மியில உளியால அடிச்சாப்பல பதிஞ்சிடறது.
நா ஏதோ ஒரு மந்திரவாதியால மனோவசியம் செய்யப்பட்ட விக்டிம் மாதிரி எழுந்து போய் பிரிஜ்ஜை திறந்து ஒரு தட்டில பாலை ஊத்தி மெதுவா மெதுவா வந்து பூன முன்னால் வைக்கறன். அது தட்டையும் என்னையும் மாறி மாறி பார்க்கறது. ஒரு தயக்கம். அப்புறம் மெதுவா ரெண்டு அடி வச்சு முன்னால வந்து தட்ட மோர்ந்து பார்க்கறது. அப்புறம் அது குனிஞ்சி பால ஒரு நக்கு நக்கி அப்புறம் நிமிர்ந்து பார்க்கிறது. பார்வையில ஒரு பரிவு இருக்கிறதா எனக்கு படறது.
“என்னை வாழவைத்த தெய்வமே. என் வாழ்நாள் பூரா உனக்கு கடமைப்பட்டிருக்கேன். செய் நன்றி மறவேன்”…..ஏதோ சினிமாப் பாணியில பூன பேசறதா யோசிச்சி நா சிரிச்சிகிறன்.
நா பலமா சிரிச்சிரிக்கணும்….. அம்மா உள்ள இருந்து “யாரும்மா வந்திருக்கா” ணு கேக்கறா.
நா என்ன சொல்வதாம்? ‘அம்மா, மிஸ்டர் பூனை இஸ் ஹியர்’னு சொன்னா அவா நம்பவா போறா? இரு பரம விரோதிகளின் சந்திப்பு!
பூன தட்ட காலி செஞ்சி அப்புறம் விடாம தட்ட தொடர்ந்து நக்குறது. ரோஜாப்பூ கலர் நாக்கு தட்ட தொட்டு தொட்டு மறையறத நா பாத்திண்டே இருக்கேன். தட்டு ‘சர்ர்ர்… சர்ர்ர்’னு வழுக்கிக்கிணு மெதுவா நகர்ந்து நகர்ந்து என் காலடிக்கு வந்து நிக்கறது. நா மெதுவா குனிஞ்சி பூனேட முதுக தடவறன். ஜிம்மியோட ரோமமும் இதே மாதிரி சொஃப்டா இருந்தது இப்போ ஞாபகத்தில வர்றது.
பூன நிமிந்து என பார்த்து “மியாவ்” ணு என் அன்ப ஆமோதிக்கற மாதிரி ஏதோ சொல்ல நெனக்கறது. என் கால்ல மெதுவா தன்னோட ஒடம்ப உரசறது. அதோட ஸ்பரிசம் என்ன என்னமோ செய்யறது. என்ன என்னமா நம்பி தன்ன பரிபூரணமா என் காலடியில் ஒப்படைத்து ‘நீ என என்னவேணுமானாலும் செஞ்சிக்கோ’ அப்படீனு சொல்லற பரிசுத்தமான அன்ப நா உணர்ந்து பூரிக்கிறன். அதோட நட்பின் அடர்த்தி எனக்கு இப்போ புரியறது. ‘நமக்குள்ள என்ன பகை?’ அப்படீணு கேக்கணும் போல இருக்கறது. ஒரு அதீத உரிமையோடு இந்த ஜீவன் என்னுள் நுழைந்து என்னை ஆட்கொள்வதை நான் உணர்கிறேன்.
ஒரு பந்தத்திற்குள் என்னை கட்டிப்போட முயலும் இந்த மாயக்கயிறு இத்தனை நாள் எங்குதான் இருந்ததாம்?
நா குனிந்து விரலால பூனேட கழுத்துக்கு கீழ கீச்சு கீச்ச மூட்டறன். அது தன் முன் கால் இரண்டாலேயும் என் கைய கவ்வுறது. தன்னோட கால் நகங்கள உள்ளிளுத்து ‘நா இவாள காயப்படுத்தக் கூடாது’ணு ஒரு கரிசனையோட துளிர்க்கும் இந்த புது உறவை கொண்டாடறது.
இந்த விளையாட்டு இருபது நிமிடம் வரை தொடர்கிறது . அப்புறம் மெதுவா சில அடிகள் வைத்து என்ன விட்டு விலகிச் சென்று தன் கழுத்தை திருப்பி என கனிவோடு பார்த்து பின் வந்த வழியே ஓடி மதிலின் மேல் பாய்ந்து மறைகிறது.
நா இப்போ தினமும் காலையில அம்மாவுக்கு பாயாசம் கொடுத்தாம்புறம் ஒரு தட்டல பால் வார்த்து வச்சி என் நட்பிற்காய் காத்திருக்கிறேன்!
‘யெஸ், ஐ டூ லைக் கட்ஸ் நவ்!’
ஆமா, எனக்கு இப்போ பூனைகளை பிடிக்கும்!