2 .குறளும் ”குவிஸ்ஸும்”
” ஏம்பா ! மனுசங்கதானே சொற்பொழிவு கேக்க வருவாங்க ..ஆடு மாடுங்கள்ளாம் வருமா ?”
வராது என்பது போல் கூட்டம் தலையாட்டும்.
“அப்ப இங்க வாராதவங்க எல்லாம் யாரு ?”
கூட்டம் கலகலத்துச் சிரிக்கும்.
“ ஏம்பா ..இராமாயணம் மகாபாரதம் அல்லாத்துக்கும் கூட்டம் போவுது ? திருக்குறள் கேக்கணுமுன்னா மட்டும் வரமாட்டேங்குது ? “
கூட்டம் விடை தெரியாது அமைதியாக இருக்கும்.
“ அதெல்லாம் அடுத்தவன் வீட்டுக் கதை….அவுங்க போடற சண்டை… அதக் கேக்க ஓடுவாங்க. ஆனா திருவள்ளுவர்…நம்ம மடியிலேயே கைவைக்கறாரு ! நீ இப்படி இரு ..இப்படி நடன்னு அறிவுரை சொல்லறாரு.. எவன் கேக்க வருவான்.?”
கூட்டம் கலகலத்துச் சிரிக்கும்.
அவர்தான் திருக்குறள் முனுசாமி. நல்ல சிவந்த மேனி. குள்ளமில்லை என்று சொல்லக்கூடிய உயரம். வகிடெடுத்துப் படிய வாரியிருக்கும் நரைத்தமுடி. எதையும் கூர்மயாகப் பார்க்கும் கண்கள் .தங்க ப்ரேம் போட்ட கண்ணாடி. மடிப்புக் கலையாத வெள்ளை சலவை வேட்டி சட்டை. அவ்வளவு எளிதில் சிரிக்கமாட்டார் என்பது போல ஒருமுகம். ஆனால் அவர் பேச ஆரம்பித்தால் அந்த நகைச்சுவை வெள்ளத்தில் கேட்போர் தலைகுப்புற விழுந்து மூழ்கிவிடுவர்.
.இவர் தமிழறிஞரும் அரசியல்வாதியும் ஆவார். உலகப் பொதுமறை திருக்குறள் நடத்தியும், தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியும் திருக்குறளுக்காகப் பணி செய்தவர். திருக்குறள் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என விரும்பிய இவர், தமிழகத்தின் மூலை, முடுக்கெங்கும் பயணம் செய்து திருக்குறள் பரப்பும் பணியில் ஈடுபட்டார். 1952-1957 காலப்பகுதியில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, நாடாளுமன்றக் கூட்டங்களில் திருக்குறளுடன் பேச்சைத் தொடங்கினார். நாடாளுமன்றப் பதிவேடுகளில் தனது பெயருக்கு முன்பு திருக்குறளார் என்பதை இடம்பெறச் செய்தார்.
திருச்சி தூய சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பொழுதே முனுசாமிக்கு திருக்குறளின் மீது ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டது. 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்த அவர், திருக்குறளை நகைச்சுவையாகவும் நயமாகவும் அன்றாட வாழ்க்கைக்குப் பொருத்தமாக இருக்குமாறும் மக்களுக்குச் சொல்ல வேண்டும் எனும் முயற்சியில் ஈடுபட்டார் 1935 ஆம் ஆண்டில் திருச்சி மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் தனது திருக்குறள் பரப்பும் பணியை ஆரம்பித்தார்.
1985 என்று நினைவு. முதன் முதலில் மயிலையில் உள்ள திருவள்ளுவர் கோயில் வளாகத்துள் நடந்த “குறள் கருத்தரங்கில்” ஐயா அவர்கள் தலைமையில் நான் பேசியது நினைவுக்கு வருகிறது. அவருக்கு அப்போது வயது எழுபது இருக்கும். அன்று நான் பேசியது “வான் சிறப்பு” அந்த அதிகாரத்தில் கொஞ்சம் கடினமான குறள்.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
இதை நான் பரிமேலழகர் உரையால் விளக்கிவிட்டு, தாவரயியல் படித்தவன் என்ற முறையில் நீரின் இன்றியமையாத தன்மையை எடுத்துச் சொன்னேன். நீரின் வேதியியல் பண்புகள் பற்றியெல்லாம் விளக்கினேன். கூட்டம் கைதட்டி வரவேற்றது, உடனே நான் இருக்கைக்குச் சென்று அமர முடியாது. திருக்குறளார் தலைமை என்றால், பேசும் பேச்சாளர் பேசி முடித்துவிட்டு அங்கேயே ஒலிபெருக்கி முன் நிற்கவேண்டும். ஐயா அவர்களின் பின்னுரைக்குப் பின்தான் அமரவேண்டும். நான் காத்துக் கொண்டிருந்தேன்.
தொண்டையைச் சற்றே செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தார் திருக்குறளார்.
” தம்பி நல்லா பேசினாரு. குறளை தெளிவாகச் சொன்னாரு..பலபேர் இந்தக்குறளின் கடைசி ரெண்டு சீர்களை “தூவும் மழை” என்பார்கள் அதை “துப்பாயதூம் மழை “ என்றுதான் உச்சரிக்கவேண்டும்.
ஆனா அதே அதிகாரத்தில் இருக்கும் வேறு சில குறட்பாக்களைச் சொல்லும் போது முதலடியைச் சொல்லிட்டு அடுத்த அடி சொல்லாமல் விட்டுட்டாரு….. பாவம் வள்ளுவரு…அவுரு எழுதினதே ஏழு சீர் குறள்தான்..அதுலேயும் ஒண்ணு ரெண்ட விட்டுடலாமா?
தண்ணீரோட பெருமையெல்லாம் பேசினாரு..,,சயின்ஸ் படிச்சவரு. தம்பி. ஆனா முக்கியமா இங்க தண்ணி.என்பதைவிட மழைக்குத்தான் வள்ளுவப் பெருந்தகை சிறப்பு கொடுத்திருக்காரு..மழையோட சிறப்பைத்தான் அதிகம் பேசணும். “ என்று தன் கருத்தைச் சொல்லி முடித்தார். கூட்டம் கைதட்டியது. நான் தப்பித்தோம் பிழைத்தோம் என இருக்கைக்குச் சென்று அமர்ந்தேன்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு பேசிய அனைவருக்கும் சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது ஐயாவுடன் பேச நேரம் கிடைத்தது.
“ஐயா ! நீங்கள் சொன்ன கருத்துகள் பயனுள்ளவை. இனி, குறளை மேற்கோள் காட்டிப் பேசும் போது குறளை அரைகுறையாகச் சொல்லாமல் முழுக்குறளையும் சொல்வேன்” என்றேன்.
“நல்லது. நீ எல்லாக் குறளையும் மனனமாகக் கற்றுக் கொண்டுவிட்டால் இந்தப் பிரச்சனையே வராது..”என்று புன்னகைத்துக் கொண்டே சொன்னார்.
“ஐயா ஒரு சந்தேகம்.. தவறாக எண்ணவில்லையென்றால் கேட்கிறேன்”
“ அப்படின்னா என்னை ஏதோ கேள்வி கேட்டு மடக்கப்போறே..அப்படித்தானே..சரி சரி கேளு “ என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.
ஐயா !நீரைப் பற்றித்தானே குறள் முழுதும் பேசுகிறது. கடைசியில் நீர்தானே, தானும் உணவாக மாறுகிறது. நமக்கு உணவாகும் தாவரங்கள் உண்டாகவும் அதைத் தவிர தாகத்துக்கு அதுவே உணவாகவும் மாறுவது நீர்தானே ! ஆனால் நீங்கள் மழையைத்தான் வள்ளுவர் சிறப்பாகச் சொன்னார் என்றீர்கள்..அதை விளக்கவேண்டும்” என்றேன்
“ஏன் தம்பி ! இதக் கேக்க என்ன தயக்கம் ? இப்ப ஒன் சந்தேகம் மழையா ? நீரா ? எதற்குச் சிறப்பு ? என்பதுதானே ? சொல்லறேன் கேளு. பயன்படு பொருள் நீர்தான் சந்தேகமில்ல .ஆனால் சிறப்பு அதை இன்னார் இவரென்று பாராமல் உலகமுழுதும் கொண்டு சேர்ப்பது மழைதானே ! வெவசாயத்துக்கு நீர் பாய்ச்சுவீங்க..அது எங்கிருந்து வருது ? மழை பெய்யலைன்னா நிலத்துல ஏது தண்ணி ?
அத விடு ! காடு மலையில நீ போயி தண்ணி ஊத்தியா மரம் செடிகளை வளக்கற ..அங்க மழையை நம்பித்தானே எல்லா ஜீவராசிகளும் கெடக்கு! இந்த வழியில யோசிச்சுப் பாரு அப்ப எதுக்கு சிறப்புன்னு புரியும் !
பழம் நல்ல சுவையா இருக்குன்னா ..சிறப்பு மரத்துக்குதானே ! எல்லாத்துக்கும் மேல குறள் அதிகாரத் தலைப்பை புரிஞ்சிக்கணும்…அங்கே ”வான்” எனச் சொன்னது வானத்தை அல்ல ; வான் அளிக்கும் ”மழை” ..சரியா?” என்று கேட்டார்.
என் கூட இருந்த மற்ற அனைவருமே இந்த விளக்கத்தை மகிழ்ந்து கேட்டனர். மேடைக்கு வெளியே ஒரு நல்ல கருத்து கிடைத்தது. இதன் பிறகு அவரோடு பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
அவரது சொற்பொழிவுகள் மிகவும் பிரபலம் .அதனை நூலாக ஆக்கச் சொன்னபோது அவர் மறுத்துவிட்டார். என்றாலும் அவரது நண்பர்கள் ஒலிவடிவில் இருந்த அவற்றைக் கட்டுரையாக்கி ஆனந்தவிகடனில் தொடராக வெளிவரச் செய்தனர். அவர் அதற்கு மகிழ்ந்தாலும் கூட்ட்த்தில் பேசுவதையே அவர் மிகவும் விரும்புவார்.
ஒருமுறை திருக்கோவிலூரில் கபிலர் விழா சிறப்பு நிகழ்ச்சிகள். கல்வியாளரும் தகுதி மிக்க பெரியவருமான திரு தியாகராஜன் நடத்தும் விழா. சென்னையிலிருந்து நாங்கள் ஒரு சிலர் ஐயாவோடு திருக்கோவிலூருக்குப் பயணம் செய்தோம். வழி நெடுக அவர்கள் தன் அனுபவ்ங்களைப் பகிர்ந்துகொண்டு வந்தார்கள். மலேசியா , சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அவரது இலக்கியப் பயணம் மிகச் சிறந்து அமைந்ததை நாங்கள் அறிவோம். அதுபற்றியும் பேசிக் கொண்டு வந்தார்.
கூடவந்த இன்னொரு பேச்சாள நண்பர் “ ஐயா !ஒங்களோட பல கூட்டங்களுக்கு வரோம். ஒரு பத்து “ஜோக்”கையே திரும்பத் திரும்பச் சொல்லுறீங்க…ஆனால் எல்லா முறையும் ஏதோ புதுசாக் கேக்கறாப்பல ஜனங்க விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க ..இதுமாதிரி நாங்க சொன்னா எங்கள ஓட்டி விட்டுவாங்க..ஒங்களுக்கு மட்டும் இது எப்பிடி சாத்தியம்?” என்று கேட்டார்.
திருக்குறளார் உடனே பதில் சொல்லவில்லை. ஒரு நிமிட இடைவெளிக்குப் பின்னர், கூட அமர்ந்திருப்பவர்களை ஒருமுறை கூர்ந்து பார்த்துவிட்டு நிதானமாகச் சொன்னார்.
“நீங்க எல்லாம் கேக்கறவன் மூளைக்கு ஜோக் சொல்லுறீங்க ..அது ஒருமுறை புரிஞ்சிட்டா அப்பறம் எடுக்காது பழசாயிடும்.. நான் சொல்லறது அவன் மனசுக்கு… அது கிட்ட வந்து “கிச்சு கிச்சு” மூட்டற மாதிரி…. எத்தன தடவ செஞ்சாலும் சிரிப்பு வரும்”
அதனாலதான் ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் கூட்டம் என்றாலும் அவர் ஜோக்குக்கு அனைவரும் சிரிப்பார்கள். ஆண் பெண்ண், சிறுவர் சிறுமியர், இளஞர்கள், படித்தவர் படிக்காதவர் அனைவரும் சிரிப்பார்கள்.
விலங்குகளை உதாரணம் காட்டி பல விஷயங்களைப் புரிய வைப்பார்.
ஒரு காளைமாடு தெருவில் நடந்து செல்கிறது. ஒரு கடையில் வாழைப்பழங்கள் தொங்கிக்கொண்டு இருக்கின்றன. அதைப் பார்த்ததும் அது நேரே போய் பழங்களை உண்ணத் தொடங்கிவிடும். “பர்மிஷனா” கேக்கும் ! கடைக்காரன் விரட்டினால் நகர்ந்துவிடும். பிறகு திரும்பவும் அதையே செய்யும். தான் செய்தது தவறு என்னும் அறிவு அதற்குக் கிடையாது. ஒரு மனிதன் அப்படிச் செய்வானா ? பசியில் திருடினாலும் பிறகு அது தவறு தண்டனை கிடைக்கும் என்று உணர்ந்து திருந்திவிடுவான். ஆக ! தவறு செய்தால் திருத்திக் கொள்ளத் தெரிந்தவன் மனிதன்…ஏ மனிதா ! இதைப் புரிந்துகொள் இல்லாவிட்டால் நீ யார் எனக் கேட்டு நிறுத்திவிடுவார்.
“ ஐயா ! ஏன் விலங்கு உதாரணமே நெறைய சொல்லுறீங்கன்னு கேட்டோம். அவர் சொன்னார். எல்லா மனுஷனுக்குள்ளேயும் அதுதான் நெறைய இருக்கு ..ஈஸியாப் புரிஞ்சிப்பான்” என்றார்.
ஒருமுறை சென்னை சூளைமேடு பகுதியில் ஒரு பள்ளியில் திருவள்ளுவர் விழா . நான் ” திருக்குறள் வினாடி வினா “ நிகழ்ச்சி நடத்திக் கொண்டு இருந்தேன். அதிலே ஒரு கேள்வி கேட்டேன்
“திருக்குறளுக்கும் நமது கர்நாடக இசைக்கும் உள்ள ஒரு ஒற்றுமை என்ன ?”
ஒரு சிறுமி சரியாக பதில் சொன்னாள். “ம்யூஸிக்” கற்றுக் கொள்கிறாள் போலும்;
“ குறளில் ஏழு சீர்கள்; இசையில் ஏழு ஸ்வரங்கள்”
என் பின்னால் இருந்து “பலே” என்று யாரோ கைதட்டுவது கேட்டேன். அடுத்த சொற்பொழிவுக்குக் கொஞ்சம் முன்னதாகவே வந்திருந்த திருக்குறளார் அங்கே நின்றிருந்தார்.
“தம்பி ! நான் அம்பது வருஷத்துக்கு மேல திருக்குறளைப் பரப்ப ஒழச்சிண்டு இருக்கேன். இனி ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். ஒரு பதினைந்து நிமிடமா இந்தக் கேள்வி பதிலைக் கேட்டுக்கொண்டே அமர்ந்திருந்தேன். வெவ்வேறு துறைகளோடு குறளை இணைத்து நீங்க கேக்கற கேள்வியும் அதுக்கு சலிக்காம பிள்ளைகள் பதில் சொல்லறதையும் கேட்டா , நாங்க பட்ட கஷ்டம் வீணாப் போகலைன்னு தெரியுது “ என்று என் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னார்.
இதைவிடச் சிறந்த பாராட்டு வேறெதுவாக இருக்கமுடியும் ?
(இன்னும் வளரும் )
திருக்குறளார் அவர்களின் குரலைக் கேட்க இந்த சுட்டியைத் தட்டவும்.
https://soundcloud.com/kallappa-naidu-selvan/sets/thirukural-munusamy
“