என் நண்பன் நம்பி, அவன் மனைவி நங்கை, அவர்களுடைய குழந்தைகள் யாவரும் இருக்கும் வீட்டின் பெயர் ‘வெண்பா வீடு’;
இது என் வீட்டிற்கு அருகில்தான் உள்ளது. எல்லோரும் அங்கே ‘வெண்பா’க்கள் மூலமாய்த்தான் பேசிக்கொள்வார்கள்.
ஒரு நாள் ‘வெண்பா வீட்’டிற்குள் நுழையும் போது, நான் கேட்டது:
நம்பி:
முன்தூங்கிப் பின்னெழுந்து(உ)ன் மூஞ்சிக்குச் சாயமிட்டுப்
பொன்னான நேரத்தைப் புத்தகத்தில் பாழாக்கி
மிஞ்சிடுமிவ் வேளையிலே வீண்வம்பு பேசாமல்
கொஞ்சம்நீ என்னுடன் கொஞ்சு.
‘அடடா, தப்பான நேரத்தில் வருகிறேனோ?’ என்று எனக்குத் தோன்றியது.
எனக்குப் பதில் சொல்வதுபோல் இருந்தது நங்கை
நம்பிக்குக் கூறின பதில்:
நங்கை:
பண்பற்ற நண்பருடன் பாதிநாள் சீட்டாட்டம்;
கண்கெடுக்கும் தீயதொலைக் காட்சி சிலமணிகள்;
மின்னிணைய மேனகைகள் மீதிநாள் வீணடிக்க
என்னிடமின்(று) ஏன்பல் இளிப்பு ?
என்கையில் இருந்த சீட்டுக் கட்டை அவசரம் அவசரமாக மறைத்துக் கொண்டு, நான் வெண்பா வீட்டை விட்டு வெளியேறினேன்.
~o~0~O~0~o
அருமை! அருமை! இறையடி சேர்ந்துவிட்ட தமிழ் ஆர்வலரே! உமது கவிதைகள் அனைத்துமினி அவனுக்கே அர்ப்பணமோ!
LikeLike