வேலையிலிருந்து திரும்பி வருகையில் தினந்தோறும் இதே காட்சியைப் பார்ப்பாள் அஞ்சனா. நான்கைந்து பிள்ளைகள் குழுவாக உட்கார்ந்து ஒருவருக்கு ஒருவர் பாடம் சொல்லித் தருவார்கள். நல்லது தான். சனி-ஞாயிறு தோறும் இந்த வசதியற்ற படிக்க ஆர்வம் காட்டுவோருக்குச் சந்தேகங்களைத் தெளிவு படுத்துவதைச் செய்து வந்தாள் அஞ்சனா. சத்தமில்லாமல் நூலகமும் துவக்கினாள். நாளடைவில் ஒரு நாளிதழில் இவர்களின் முன்னேற்றத்தைக் கவனித்து விமர்சித்தார்கள். சில வருடங்களுக்குப் பிறகு இந்தச் செயலை அங்கீகரித்துப் பாராட்டு விழாவும் நடந்தது.
கேட்கவே எனக்குச் சுகமாக இருந்தது! ஏனெனில் அஞ்சனா வாழ்வில் முன்பு விசித்திரமான ஒரு சவால் எழுந்திருந்தது. அதை அஞ்சனா எதிர்கொண்டதை நீங்களும் கேளுங்கள்.
தொலைப்பேசியில் மருத்துவர் அழைத்து அவரிடம் வந்த பத்மாவை என்னிடம் அனுப்புவதாகக் கூறினார். இரண்டு மாதமாகத் துவண்டு விழுகிறாள், ஆனால் சட்டென்று எழுந்து கொள்கிறாள். பலவிதமான பரிசோதனை செய்ததில் எதிலும் பிரச்சினை இல்லை என்றார்.
பத்மாவைக் கையால் தாங்கியபடி அழைத்து வந்தவனைத் தன் மாப்பிள்ளை கண்ணன் என அறிமுகம் செய்தாள். பத்மா ஐம்பது வயதான இல்லத்தரசி. இரண்டு ஆண்டுகள் முன் அறுபத்து ஐந்து வயதான கணவன் திடீர் மரணம். விதவை கோலத்தில் இல்லை.
பத்மாவை மட்டும் உட்காரச் சொல்லி, நேர்வதை விவரிக்கச் சொன்னேன். ஏறத்தாழ ஆறு மாதங்களாக மயங்கி விடுவதாகக் கூறினாள்.
நுணுக்கமாக ஆராய்ந்ததில் பத்மா துவண்டு விழுவது மாலை நேரங்களில் நேர்வதாகவும், சனி-ஞாயிறு மட்டும் ஆகிறது என்று கூறினாள். ஒரு பொழுதும் உடலில் காயம் பட்டதேயில்லை.
எங்கேயாவது போகவேண்டும் என்றால் கண்ணன் இவ்வாறே தாங்கிக் கொள்வான் என்றாள். குணமாகுமா எனக் கேட்டதற்குப் பல ஸெஷன் தேவை என விளக்கினேன்.
தொடர்ந்து ஆராய்ந்ததில் மயங்கும் போது தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது, யார் இருக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்றெல்லாம் தெரிகிறது என்றாள். சில வினாடிகளுக்குள் நினைவு திரும்புகிறது, சோர்வாக இல்லை. மறு வினாடி எப்பொழுதும் போல எல்லாவற்றையும் செய்ய முடிகிறது. பசி, தூக்கம், உணர்வில் எந்த வித்தியாசமும் இல்லையாம்.
சொல்வதிலிருந்து நுணுக்கங்களை அடையாளம் கண்டுகொண்டு, மேலும் கேட்டதும் விவரித்தாள் பத்மா.
மகள் அஞ்சனா, அப்பாவின் செல்லம். அவளுக்குத் தைரியம் அதிகம் என்றதால் பத்மாவிற்கு அவளிடம் பாசம் குறைவே.
இப்போதெல்லாம் பத்மாவிற்கு மாதவிடாயின் போது ஏதேதோ உணர்வுகள் பொங்குகிறது, நெருக்கமாக இருப்பதைப் பார்த்தாலே ஏக்கப் படுவது, எனப் பலவற்றை விவரித்தாள். அவளுடைய கைனகாலஜிஸ்ட் இவை மெனோபாஸ் சம்பந்தப்பட்டவை என விளக்கியிருந்தார்கள். மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது என்றாள்.
யாரும் தனக்குக் கவனிப்புத் தருவதில்லை என்று மனதிற்குள் தோன்றுவதாகக் கூறினாள். ஒவ்வொரு முறையும் அஞ்சனாவைப் பார்க்க வேண்டும் என்பேன். சொல்ல மறந்து விட்டதாகச் சொல்வாள். கண்ணனுடன் வருவாள்.
ஸெஷன் துவங்கியது. பத்மாவிற்குக் கைகொடுத்துத் தாங்குவது அவசியமற்றது எனக் கண்ணனுக்குப் புரிய வைத்ததும் நிறுத்தினான்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு வந்த அஞ்சனாவிடம் கேட்டபோது அம்மாவிற்கு இதுபோல மயக்கம் முன்பு இல்லை என்றாள். அப்பா இருந்தவரை தலைவலி எனப் படுத்து இருப்பாள்.
தனக்கு இருபத்தி எட்டு வயதில் கல்யாணமாகி ஒன்றரை வருடம் ஆகிறது என்றாள் அஞ்சனா. கணவன் கண்ணனின் வயது இருபத்தி ஒன்பது.
கண்ணனின் அப்பா தியாகராஜனும் அஞ்சனாவின் தந்தையும் பால்ய நண்பர்கள். பக்கத்து வீட்டில் வசித்தார்கள். நண்பனைப் பார்க்க வரும் போதெல்லாம் ஏதோவொரு மனவீராங்கனைச் செயலை அஞ்சனா செய்ததாக நண்பனுடன் பகிர்வது வழக்கமானது. தியாகராஜனுக்கு அது தன் இறந்த மனைவி விசாலாட்சி செய்வது போலத் தோன்றியது. அப்பா மகன் பந்தம் அந்த அளவிற்கு நெருக்கமாக இருக்க, மகன் கண்ணனிடம் பேசினார். அவனது ஒப்புதல் தெரிந்ததுமே கையோடு குலம்-கோத்திரம் கேட்காமல் மகனுக்கு அஞ்சனாவைக் கேட்டார். கல்யாணம் நடந்தது.
அஞ்சனா படிப்பை ரசிப்பவள். நிறையப் படித்தது புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவன வேலையிலும் உதவுகிறதாம்! வேலைப் பொறுப்பை ஆறு மணியுடன் நிறுத்திக் கொண்டு, ஏழு மணி அளவில் வீட்டிற்கு வந்து விடுவாள். இருவரும் ஒன்றாகச் சாப்பிட்டு, பேசிய பின் அறைக்குள் சென்று விடுவார்கள். எட்டரை மணியிலிருந்து தாயம், செஸ், புத்தகம் படிப்பது, பாட்டுக் கேட்பது என்று இருப்பார்கள். கல்யாணமான முதல் வருடம் முழுவதும் இப்படி.
கடந்த ஆறு மாதங்களாக பத்மாவும் அவர்களுடனேயே இருக்கிறாள். மகளின் வீட்டில் இருப்பதாலும், அஞ்சனா வேலைக்குப் போவதாலும், பத்மா சமையல் செய்வதைத் தன் இலாகாவென வைத்துக் கொண்டாள். இருவரும் சாப்பிட்டபின் தன் அறைக்குச் சென்று சேர்ந்து இருக்கையில் பத்மா வருவாள், உற்றுப் பார்த்துச் சென்று விடுவாள்.
தியாகராஜனும் இவர்களுடன் இருந்தார். கண்ணன் ஒரே மகன். அப்பாவுடன் நெருக்கம், அவரைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு தங்களது எனக் கணவன் மனைவி ஒருமனதாக எடுத்த முடிவு. வீட்டில் மூன்று படுக்கையறை என்பதால் சரியாக இருந்தது. அவர் கணிதம் பேராசிரியர். வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பக்கத்தில் உள்ள கல்வி இடங்களில் பாடம் சொல்லிக் கொடுப்பார், பிள்ளைகள் சந்தேகம் தீர்த்துக்கொள்ள வீட்டுக்கு வந்தாலும் சொல்லித் தருவதைச் செய்து கொண்டிருந்தார். இதனால் அடிக்கடி வெளியே சென்று வருவார்.
பத்மா முதலில் இதைப் புகழ்ந்தாள். போகப்போகச் சலித்துக் கொண்டு தியாகராஜன் மனசாட்சி இல்லாதவன், தனக்கு உளைச்சல் ஏற்படுகிறதென முணுமுணுத்தாள். கண்ணன், அப்பாவைக் கோபித்துக் கொண்டான். மகனின் சொல், செயலில் தியாகராஜன் வியந்தார். ஏதோ சரியில்லை எனத் தோன்றியது.
ஸெஷன்களுக்கு, பத்மா ஏதோ விழாவிற்குப் போவது போல அலங்கரித்துக்கொண்டு வருவாள். அஞ்சனா இவ்வாறு இல்லாததால் கணவன் அவள்மேல் ஆசையாக இல்லாததாகப் பத்மா நினைத்தாள். இதை நாங்கள் அலச, தனக்கு அஞ்சனாவைப் பிடிக்காவிட்டாலும் கண்ணனைப் பிடித்திருக்கிறது என்றாள்.
அஞ்சனா வேலையிலிருந்து வருவதற்குச் சற்று தாமதமானால், அவள் வருவதற்கு முன்பே பத்மா கண்ணனுக்கு உணவைப் பரிமாறி விடுவாள். ஞாயிற்றுக்கிழமைகளில் தலையில் எண்ணெய் தேய்த்து விடுவாள், படங்களுக்குப் போகும் போது அவன் கையைப் பற்றியபடி படம் பார்ப்பாளாம். அவனிடம் ஏதோ ஈர்ப்பு என்றாள்.
பத்மா இவ்வாறு செய்கையினால் தம்பதியர் உறவின் மேல் தாக்கம் என்னவென்று அறிய, அடுத்த ஸெஷனில் அஞ்சனாவுடன் தொடங்க நினைத்தேன்.
வந்ததோ தியாகராஜன். மனம் குழப்பத்தில் இருப்பதாகக் கூறினார். தன்னுடைய வேலை நேரங்கள் ஒரே மாதிரி இல்லாததால் வெவ்வேறு நேரத்தில் வீட்டிற்குத் திரும்புகிறார். சம்பந்தியம்மா இது தனக்குக் கஷ்டமாக இருப்பதாகக் கண்ணனிடம் சொல்லிய விவரத்தைப் பகிர்ந்தார்.
இதைச் சீர்செய்ய வேண்டும், தன்னால் கணவன்-மனைவி உறவில் எந்த வித்தியாசமும் வரக்கூடாது என முடிவு செய்தார். இதுவரை அப்பா பிள்ளை உறவில் விரிசலே இருந்ததில்லை. படித்த கல்லூரியில் வேலை அழைப்பை ஏற்றுக்கொள்ள நினைத்தார். ஓரிரு ஸெஷனில் நிலைமையைச் சமாளிக்க வழி வகுத்தோம். செய்து வந்தார். பத்மா முணுமுணுக்கவில்லை. மயக்கமும் குறைந்தது. கண்ணனுக்கு பத்மா செய்வதைத் தகப்பனாக ஏற்றுக்கொள்ளத் தயக்கமாக இருக்கிறது என்றார். அதனால் கண்ணன்-அஞ்சனா இடையே இடைஞ்சலோ?
கண்ணனின் விளக்கம், கல்யாணமான முதல் வருடம் திருப்தியாக இருந்தது. பத்மா கூடச் சேர்ந்ததிலிருந்து ஏதோ மாதிரி ஆனது. ஏறத்தாழ ஆறு மாதமாக மாமியாரை அந்த ஸ்தானத்தில் வைத்துப் பார்ப்பதில் சங்கடப் படுவதாக விளக்கினான்.
சம்பவங்களின் விவரங்களைச் சேகரிப்பதற்கு கேள்விகளை அமைத்தேன். பத்மா அவ்வளவு நெருக்கமாக உட்காருவது, உணவைப் பரிமாறுவது என்று சிலவற்றைக் கண்ணன் கூற, எதனால் சங்கடம் என்று கவனித்து வரப் பரிந்துரைத்தேன்.
பத்மா, கண்ணன் தனக்குக் கணவராக வராதது வருத்தம் என்று வெளிப்படையாகச் சொன்னாள். கண்ணனுக்குச் சேவை செய்வதற்கு இடையூறு சம்பந்தி தியாகராஜன் என்றாள். கண்ணனும் ஈடுகொடுக்க, இப்படி மகளின் வாழ்க்கையில் குறுக்கிடுவது தவறென்று நினைக்கவில்லை என்றாள். இத்தகையான மனோபாவம், பத்மா மயக்கத்திற்கானச் சிகிச்சை அணுகுமுறையை விரிவாக வேறொரு முறை பார்ப்போம்.
பத்மா, தன்னால் தியாகராஜனுடன் பகல் வேளையில் தனியாக இருக்க முடியாது என்றதை அவரால் தாங்க முடியவில்லை. மறுநாள் வந்து இதைச் சொல்லி வருந்தினார். மகனும் அவர் தரப்பில் ஏதும் சொல்லாததால், கல்லூரியில் வேலையை ஏற்றுக் கொண்டு விட்டேன் என்றார். அஞ்சனாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
அஞ்சனா வந்தாள். தியாகராஜனின் நிலையை விளக்கினாள். தன்னால் அம்மாவை குறைகூற மனம் வராததைப் பற்றிப் பேசினாள். அம்மா கண்ணனைக் கவர்ந்தது மனதை வலித்தது. கணவன் இவ்வாறு ஈர்ப்புப் படுவான் என்று நினைக்கவேயில்லை என அழுதாள். எடை குறைந்து கொண்டே போனது.
இந்த தருணத்தில், அவள் செய்துவந்த ஆராய்ச்சியைச் செயல்படுத்த இந்தோர் போய் பத்து மாதங்கள் இருக்கும்படி நேர்ந்தது. கண்ணன் அவளைத் தனியாக அனுப்பி வைக்க விரும்பவில்லை. தன் வேலையில் சொல்லி ஊர்மாற்றம் ஏற்பாடு செய்தான், இருவரும் ஒன்றாகச் சென்றார்கள். ஸெஷன்கள் ஆன்லைனில் தொடர்ந்தது.
அங்கு அஞ்சனா-கண்ணன் வாழ்க்கை மறுமலர்ச்சி அடைய, பலவிதமான முன்னேற்றத்தைக் கண்டார்கள். கண்ணன் பத்மாவின் ஈர்ப்பை ஸெஷனில் எடுத்து பரிசீலனை செய்து வர, இருவருக்கும் இடையே இருந்த வேறுபாடுகள் கரைந்தது, ஓர் வருட ஸெஷன்களுக்குப் பிறகே. அதன் ஓர் பிரதிபலிப்பே முதலில் அஞ்சனா சந்தித்த வெற்றி!
கண்ணன் அப்பாவுடன் உறவைச் சரிசெய்ய விரும்பினான். தியாகராஜனோ நம்பிக்கைத் துரோகத்திலிருந்து வெளிவர மனம் வராததால் தயக்கத்துடன் பங்களிப்பைத் தரச் சம்மதித்தார். அந்தப் பயணமும் தொடர்கிறது!