பெட்ரோகுலஸ் தன்னை அக்கிலிஸ் போர் உடையை அணிந்துகொண்டு டிரோஜன்களை எதிர்த்துப் போரிடும்படி அவனுடைய ஆசான் போன்ற பெரியவர் நெஸ்டர் கூறியதைக் கேட்டதும் என்ன சொல்வதென்று தெரியாமல் ஒரு திகைத்தான்.
பிறகு, “ஐயா! கிரேக்கர்களுக்கு ஆதரவாகப் போரிட அக்கிலிஸும் நானும் எப்போதும் தயாராக இருக்கிறோம். ஆனால் தன்னை மதியாத அகெம்னனுக்கு ஆதரவாகத் தன் ஆயுதத்தை எடுக்கவேண்டுமா ‘ என்றுதான் என் நண்பனும் கடவுளை ஒத்தவருமான அக்கிலிஸ் யோசிக்கிறார். இருப்பினும் உங்கள் கருத்தை அவரிடம் கூறி அவரை டிரோஜன்களுக்கு எதிராகப் போராடும்படி நான் வலியுறுத்துவேன் என்று கூறிப் புறப்பட்டான் பெட்ரோகுலஸ்!
செல்லும் வழியில் ஹெக்டரின் தாக்குதலால் படுகாயமுற்ற தன் கிரேக்க நண்பர்களைத் தூக்கிப்போய் பத்திரமான இடத்தில் விட்டுவிட்டு அக்கிலிஸிடம் நிலவரத்தைக் கூற விரைந்தான் பெட்ரோகுலஸ்.
அதேசமயம் கிரேக்கர்களுக்கும் டிரோஜன்களுக்கும் இடையே பெரும் போராக இல்லாமல் பலமுனைத் தாக்குதலாக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஹெக்டரின் ஆவேசத் தாக்குதலால் பல இடங்களில் கிரேக்கர்களைப் பின்வாங்க வைத்ததால் ஜீயஸ் தங்களுக்கு உதவியாக இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட டிரோஜன்கள் மூர்க்கமாகப் போரிட்டனர்.
கிரேக்கர் படையில் உள்ள முக்கிய தளபதிகள் பலர் தோல்வியைத் தழுவியதால் அதிலும் குறிப்பாகப் பிரதம சேனாதிபதி அகெம்னன் காயப்பட்டதால் அவர்கள் அனைவரும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அரணுக்குப் பின்னால் உள்ள கப்பல்களுக்குச் சென்று பதுங்கினர்.அந்த அரணைத் தாண்டி டிரோஜன் படை வந்தால் அவர்களை எதிர்கொண்டு விரட்டி அடிக்க மற்ற தளபதிகள் தயார் நிலையில் இருந்தார்கள்.
அவர்கள் அமைத்திருந்த அரண் மிகவும் பலமுள்ளதாக இருந்தது. கடற்கரையை ஒட்டிய சமவெளிப் பகுதியில் பலமான மரத் தடுப்பு வைக்கப்பட்டிருந்தது. அதை ஒட்டிய இடங்களில் நீண்ட பள்ளங்கள் தோண்டப்பட்டு அகழி போல இருந்தது. கிரேக்கப் படை பின்வாங்கவேண்டி வந்தால் அது வருவதற்கான குறுகிய பாதையும் எதிரிகள் தொடர்ந்து வருவதைத் தடுக்க மாபெரும் மரக் கதவும் அமைக்கப்பட்டிருந்தது. அரணுக்குள் வரும் எதிரிகளைத் தாக்க தடுப்பு வீரர் படையும் ஆயுதங்களும் தயார் நிலையில் இருந்தன.
வெற்றியின் இனிப்பைச் சுவைத்த ஹெக்டர் அந்த அரணை உடைத்து கப்பலில் பதுங்கியிருக்கும் கிரேக்கர்களைக் கொன்று குவித்துவிடவேண்டும் என்ற வெறியில் இருந்தான். நாடுவிட்டு தங்கள் நாட்டு எல்லைவரை வந்து பத்து ஆண்டுகளாகப் போரிடும் கிரேக்கக் கூட்டத்தை முழுதும் நிர்மூலமாகவேண்டும் என்ற தணியா ஆசையில் எரியும் நெருப்பு போல விளங்கினான் ஹெக்டர். நிதானமாகப் போரிடும்படி வேண்டுகோள் விடுத்த மற்ற உப தளபதிகளின் கோரிக்கைகளையும் நிராகரித்தான். தேர்ப்படை அகழியைத் தாண்டி அரணை உடைக்க சுற்றிலும் செல்லட்டும் என்ற அவனது உத்தரவைக் கேட்டு டிராய் நாட்டு தளபதிகள் திகைத்தனர்.தேர்ப்படை அகழியில் மாட்டி முழுவதும் அழிந்துபோய்விடும் என்ற உண்மையை ஹெக்டருக்கு எப்படிச் சொல்வது என்று தயங்கினர்.
விளைவு பயங்கரமாக இருந்தது.
அகழியைச் சுற்றிலும் சென்ற தேர்ப்படை சின்னாபின்னமாகி டிரோஜன்களுக்கு பலத்த சேதத்தை விளைவித்தது. இனி தாமதித்தால் முழுதும் அழிந்துவிடுவோம் என்பதை உணர்ந்த முக்கிய தளபதி தைரியமாக ஹெக்டரிடம் ‘இது விவேகமான போர்த் தந்திரம் அல்ல; அகழி முழுவதும் தாக்குவதற்குப் பதிலாக கிரேக்கர் பின்வாங்கிச் செல்லும் அந்த இடைவெளிப் பகுதியில் நம் படை புகவேண்டும். கிரேக்கர்கள் கப்பலில் பதுங்கியிருப்பதால் நாம் அரணுக்குள் எதிர்ப்பில்லாமல் உள்ளே சென்று கப்பல்வரை செல்லமுடியும்’ என்று கூறினான்.
ஹெக்டரும் அதுவே சிறந்த போர்த் தந்திரம் என்று தன் திட்டத்தை மாற்றி தன் பிரதம உபதளபதியின் தலைமையில் மிகப் பெரிய தேர்ப்படையை அந்தத் திறவுப் பகுதிக்குள் செல்லுமாறு ஏவினான்.
தடுப்புக்குள் எதிரிகள் செல்ல முடியாமல் தடுத்த பெரிய மரக் கதவை ஹெக்டர் பாறைகளை வீசி உடைத்தான். டிராய் நாட்டுப் படை அரணுக்குள் நுழைந்தது. ஆனால் அங்கே அவர்களுக்குப் பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.
கிரேக்க நாட்டின் மாபெரும் தளபதியான அஜாக்ஸ் தனது திறமையான படைப்பிரிவை அங்கே நிறுத்தியிருந்தான். தானும் அவர்களுக்கு முன்னால் இருந்து எதிர்த் தாக்குதலைத் துவங்கினான். அஜாக்ஸ், உள்ளே புகுந்த டிரோஜன்களை அழிக்கும் சாவுக்கடவுள் போல் இருந்தான். முதலில் சென்ற டிரோஜன் படை முற்றிலும் அஜாக்ஸால் அழிக்கப்பட்டுவிட்டது.
அதைக் கண்ட ஹெக்டருக்கு ஆத்திரம் அதிகமாகியது. மேலும் ஒரு படைப் பிரிவை அந்தத் திறவுப் பகுதிக்குள் சென்று அஜாக்சை முறியடிக்குமாறு அனுப்பினான். அது தற்கொலைக்குச் சமம் என்பதை டிராய் படையில் இருந்த அத்தனை வீரர்களும் அறிந்திருந்தனர்.
அதேசமயம் வானத்தில் ஒரு பாம்பைப் பிடித்துப் பறந்துகொண்டிருந்த கழுகின் கூரிய பிடியிலிருந்து தப்பிய பாம்பு கழுகின் கழுத்தைக் கடித்துவிட, கழுகும் தன் பிடியைவிட பாம்பு தரையில் விழுந்து தப்பி ஓடும் காட்சி டிராய் நாட்டு வீரர்கள் முன்னே நடைபெற்றது.
இது கடவுளர்கள் நமக்குத் தெரிவிக்கும் எச்சரிக்கை மற்றும் சகுனத்தடை என்பதை உணர்ந்த டிராய் நாட்டு ஆலோசகர்கள் தற்சமயம் படை பின்வாங்கிச் செல்வதுதான் சரியான முடிவு என்று ஹெக்டருக்கு ஆலோசனை கூறினார்கள். நம் படை கப்பலுக்குச் சென்று கிரேக்கருடன் போரிட்டால் நாம் கழுகு போலப் பாம்பால் கடிக்கப்படுவோம் என்று கூறினார்கள்.
ஜீயஸ் தன்பக்கம் இருக்கிறார் என்று உறுதியாக நம்பிய ஹெக்டர் என்ன செய்வது என்று தெரியாமல் சற்று தயங்கினான். இப்போது இருக்கும் வெறியுடன் போரிட்டால்தான் கிரேக்கர்களை முற்றிலுமாக அழிக்கமுடியும் என்று திடமாக நம்பினான் ஹெக்டர். ஆனால் டிராய் நாட்டுக்கு உதவும் ஜீயஸின் கண்களை மறைக்க ஒரு மாபெரும் நாடகம் நடந்துகொண்டிருந்ததை ஹெக்டர் அறியவில்லை !
ஜீயஸ் கடவுள் டிரோஜன்களுக்கு அவர்கள் தகுதிக்கு மீறி ஆதரவு தருவதை அடியோடு வெறுத்த அவர் மனைவி ஹீரா எப்படியாவது ஜீயஸ் கண்ணில் மண்ணைத்தூவி கிரேக்கர்களுக்கு ஹெக்டரின் இந்த வெறித்தாக்குதல் வெற்றி அடையாமல் செய்யவேண்டும் என்று தீர்மானித்தாள் போதாக்குறைக்கு ஜீயஸ் அந்தக் கடலில் ஒரு புயலையும் ஏற்படுத்தி கப்பலில் பதுங்கியிருக்கும் கிரேக்கர்களுக்கு இன்னும் அதிகத் துன்பத்தைத் தந்துகொண்டிருந்தார். அதைவிட இன்னொரு பாதகத்தையும் கிரேக்கர்களுக்கு எதிராக ஜீயஸ் செய்ததை ஹீராவால் ஜீரணிக்க முடியவில்லை. ஜீயஸ் தனது மகன்களில் ஒருவனையும் அனுப்பி ஹெக்டருக்குத் துணையாகக் கிரேக்க அரணை உடைக்க அனுப்பியிருந்தார்.
இனித் தாமதித்தால் கிரேக்கப்படை முழுவதும் அழிந்துவிடும் என்பதை உணர்ந்த ஹீரா எப்படியாவது கொஞ்ச நேரம் ஜீயசை மயக்கி கண்ணை மூடச் செய்யவேண்டும் என்று எண்ணினாள். ஜீயஸ் அந்த சமயம் தன்னுடன் உறவு கொள்ள வரமாட்டாரே என்பதால் அதற்கு ஒரு திட்டம் தீட்டினாள்.
தன் மகளும் காதல் கடவுளுமான வீனஸிடம் , தந்தை ஜீயஸ் மிகுந்த மனக்குழப்பத்தில் இருக்கிறார் என்றும் அவருடன் உறவுகொண்டு அவர் மனதிற்கு நிம்மதி தரவேண்டியது மனைவியான தன்கடமை என்று கூறினாள் .அதற்கு அவரை உடன்பட வைக்க வசியத் திரவம் தருமாறு வேண்டினாள்.
வீனஸ் கிரேக்கர்களுக்கு எதிரணியில் இருந்தாலும் தாய் தந்தையுடன் உறவு கொள்வதைத் தடுக்க விரும்பவில்லை. அதனால் வீனஸ் தன் மார்பகத்திலிருந்து ஒரு திரவத்தை எடுத்து ஹீராவிடம் கொடுத்து அதை அவளது மார்பகத்தில் வைத்துச் சென்றால் ஜீயஸ் ஆவலுடன் உறவுகொள்ளத் துடிப்பார் என்று கூறினாள் . மன மகிழ்ச்சியுடன் அதைத் தடவிக்கொண்டு தன் அழகெல்லாம் தெறிக்கும்படி உடையணிந்து அலங்கரித்துக்கொண்டு ஒலிம்பஸ் மலையில் இருக்கும் ஜீயஸ் முன்னால் நின்றாள் ஹீரா.
உண்மையிலேயே கிரேக்க டிராய் போரில் முற்றிலுமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த ஜீயஸ் ஹீராவின் அழகைப் பார்த்து தன்னிலை மறந்தார். தான் காதலித்த பல பேரழகிகளை எண்ணிப்பார்த்த ஜீயஸ் அவர்கள் எல்லாரையும் விட ஹீராதான் பேரழகி என்று உணர்த்தார். காதல் போதை அவர் தலைக்கு ஏறியது. ஹீராவை இறுக்கத் தழுவினார். அவள் மார்பில் இருந்த வசியத் திரவம் அவர்மீது படித்தது. விளைவு ஜீயஸ் தன்னை மறந்தார். தன்னை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துவிட்டு ஹீராவின் கட்டழகு மேனியைச் சுமந்துகொண்டு படுக்கை அறைக்குச் சென்றார். ஆவலுடன் உறவுகொண்டு அதன் மயக்கத்தில் விழுந்தார் கடவுளர் தலைவர் ஜீயஸ். அவர் மயங்கிவிட்டார் என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட ஹீரா கிரேக்கர்களுக்கு ஆதரவாகக் காய்களை நகர்த்தத் தொடங்கினாள். பொசைடன் என்ற பூகம்பக் கடவுளை அனுப்பி கிரேக்க வீரர்களுக்குத் தைரியம் கொடுத்து அவர்களுக்கு ஆதரவாகப் போரிடும்படியும் ஆணை பிறப்பித்தாள்.
அது செயலாற்றத் தொடங்கியதும் விளைவு மிகப் பயங்கரமாக இருந்தது பதுங்கிக் கொண்டிருந்த கிரேக்கர் பாயும் புலியாக மாறத் தொடங்கினர். அதிரடித் தாக்குதலாக நடத்தி வெற்றிக்கு மேல் வெற்றி பெற்ற ஹெக்டருக்கு அது பேரதிர்ச்சியாக இருந்தது.
(தொடரும்)