மறைந்த இசைக் குயில் வாணி ஜெயராம் அவர்களுக்கு அஞ்சலி
(படம் நன்றி: நியூஸ் 7)
நினைவு கூர்பவர் : முனைவர் தென்காசி கணேசன்
பள்ளி மாணவனாக எங்கள் ஊர் தென்காசியில் படித்துக்கொண்டிருந்த போது , எனது சகோதரி ஜெயத்தின் கணவர் திரு ராமன் அவர்கள், HMV Fiesta என்ற சூட்கேஸ் போன்ற ரெகார்ட் பிளேயர் கொண்டு வருவார். அதனுடன், 45 , 78, 33 RPM என்று இசைத் தட்டுக்களும் இருக்கும். 1971 இறுதிகளில், அவர் ஒரு ஹிந்தி இசைத்தட்டு – புதிய படத்தின் பாடல் என்று பாடவிட்டார்.அந்தப் பாடலுக்கு, நான் மற்றும் எனது குடும்பம், மற்றும் எங்கள் தெருவின் பல வீடுகள் அடிமையானது. அந்த இசைத் தட்டின் ஒரு புறம் – போலெரே பபி ஹரா ; மறுபுறம் ஹம்கோ மன் கி என்ற குட்டி என்ற ஹிந்திப் படத்தின் பாடல்கள். இந்தி என்றாலே, லதா மங்கேஷ்கர் என்ற நினப்பில் இருந்த அனைவர்க்கும் ஒரு அதிசயம் – யார் இந்தக் குரலுக்கு சொந்தமானவர் என்று. அன்று வாணி ஜெயராம் குரலில் மயங்கிய நான் இன்னும் விடுபடவே இல்லை.
ஆம், 3 பேர் என்பது பல இடங்களில உண்டு. பிரம்மா, விஷ்ணு, சிவன், கங்கை, யமுனை, சரஸ்வதி, பாரதி, வஉசி, சிவா, தியாகராஜர், முத்துசுவாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள், சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி, ஜி இராமநாதன், கே வி மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்ற மூவர் வரிசையில் – சுசிலா, ஜானகி, வாணி ஜெயராம் என்றே ஆகி விட்டது பெருமை.
வாணி ஜெயராம் என்ற பெயர் இசையுடன், திரை உலகுடன், ரசிகர்களுடன் ஒன்றிப்போன ஒன்று. 50 வருடங்களுக்கு மேலாக இசை ரசிகன் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கும் குரல் அது.
நாதம் எனும் கோவிலிலே ஞான விளக்கு ஏற்றியவர். 70 களில் எங்கிருந்தோ வந்த இந்த தேவதையின் குரல் தான் யாரும் செய்யாத, செய்ய முடியாத சாதனைகளைச் செய்தது. – 19 மொழிகளில், 10,000 பாடல்கள் மேல் பாடியவர். ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சி கண்டவர்,
எந்த மொழியில் பாடினாலும், இவரின் தாய்மொழி இது தானோ என்ற வியப்பை ரசிகர்களுக்குத் தந்தவர். நடிகர் திலகம் சிவாஜியைப் போல, இவரை one take பாடகி என்பார்கள். பெரும்பான்மையான பாடல்கள் ஒரே டேக்கில் பாடல்கள் பதிவு செய்தவர் வாணி அவர்கள்.
இவ்வளவு சிறப்புகள் கொண்டவரை பலமுறை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது எனது பெற்றோர் ஆசி. அவரின் இசை ஞானம், குரல் வளம், இவை தவிர, அவரின் பல பரிமாணங்களைப் பார்க்க முடிந்தது. நிறைய புத்தகங்கள் வாசிப்பவர், கவிஞர், எழுத்தாளர்,ஆன்மீக ஈடுபாடு கொண்டவர், ஓவியர் எனக் கூறிக் கொண்டே போகலாம்.
20 வருடங்களுக்கு முன்பு, ரசிகன் என்ற தொடர் நிகழ்வு, கலைஞர் தொலைக்காட்சியில் வெளிவந்த போது, எனக்குப் பிடித்த பாடகி என்று இவரைப் பற்றி நான் பேசியபோது – நானே நானா யாரோ தானா ஒரு வகை என்றால், நானா பாடுவது நானா என்பது இன்னொரு வகை. மல்லிகை என் மன்னன் மயங்கும் மற்றும் வேண்டும் வேண்டும் உங்கள் உறவு என்ற பாடல்கள் தாம்பத்தியத்தின் அழகை, உறவை, உணர்வை உணர்த்தும் வேளையில், உறவின் பிரிவை, இவரின், கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான், கண்ணின் மணி சீதை தானும் நடந்தாள் என்ற பாடல் கூறும். இப்படி, கவிஞர்கள் மற்றும் இசை அமைப்பாளர்கள் நினைப்பதை , தனது குரலால் வெளிப்படுத்தியவர் திருமதி வாணி என்று கூறினேன், நெறியாளர் திரு அப்துல் ஹமீத் அவர்கள் மற்றும் திருமதி வாணி ஜெயராம் அவர்கள் என்னைப் பாராட்டினார்கள்.
பல்வேறு இசை அமைப்பாளர்களின் இசையில் அவர் பாடிய பாடல்கள் இறவா வரம் பெற்றவை. ஹிந்தியில் வசந்த் தேசாய் என்ற மாபெரும் இசை அமைப்பாளர், மேடையில் வாணி பாடியதைக் கேட்டு தனது படத்தின் அத்தனை பாடல்களும் இவரையே பாட வைத்தார். குட்டி படம் வந்தவுடன் தேசம் முழுவதும் அவரின் பாடல்கள் பேசப்பட்டன. குறிப்பாக, போலுரே பபி ஹரா , (இந்தப் படம் தான் ஜெயா பாதுரியின் முதல் படம்) மற்றும் ஹம்கோ மன் கி சக்தி தேனா என்ற பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் பரவின, ஹம்கோ மன் பாடல் இன்றுவரை வட இந்தியாவில் பல பள்ளிகளில தினசரி பிரார்த்தனை பாடலாக ஒளித்து வருகிறது. (பாடலாசிரியர் குல்சார் – இசை – வசந்த் தேசாய்) இந்தப் பாடல்களைக் கேட்ட வட இந்தியப் பாடகி லதா ஆடிப்போனதுடன், சில எதிர்மறை வேலைகள் செய்தார் என்பதும் அன்றைய செய்தி.
அப்புறம் வாணி அவர்கள் சென்னை வந்து, இசை அமைப்பாளர திரு எஸ் எம் சுப்பையா நாயுடு (தாயும் சேயும் என்ற படம் – வெளிவரவில்லை) மற்றும் சங்கர் கணேஷ் இசையில் (TMS உடன், ஓரிடம் உன்னிடம் என்ற பாடல்) பாடினார். இருந்தாலும், 1974ல் வெளிவந்த இவரின் பாடல் – மெல்லிசை மன்னர் இசையில் வெளி வந்த மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடல், படத்தின் மன்னனை மட்டும் அல்ல , மாநிலத்தை, மானுடத்தை மயங்கவைத்தது. கிறங்க வைத்தது. திரை உலகின் தீர்க்க சுமங்களியானது இந்தப் பாடல் என்றால் மிகை ஆகாது.
ஸ்வரங்களை அவர் பாடும் அழகே தனி – அக்கா என்ற திரைப்படத்தில் வரும், மாலை மலர் பந்தலிட்ட மேகம் என்ற பாடலில் மற்றும், புன்னகை மன்னன் படத்தில் வரும் கவிதை கேளுங்கள் போன்ற பாடல்களை அவர் அசாத்தியமாக பாடி இருப்பார். சரிகமபதநி என்ற ஸ்வரங்களால் சாகசம் செய்தவர்.
மொழியின் இலக்கணம் அறிந்து பாடுவதில் சமர்த்தர். ஒரு பாடல் போதும் இதைக் கூற – நிழல் நிஜமாகிறது படத்தில் இடம் பெற்ற, இலக்கணம் மாறுதோ – இலக்கியம் ஆனதோ – இதில் வல்லினம் மெல்லினம் வேறுபாடு, துல்லியம் என்றே சொல்லும் :
என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்
புரியாததாலே திரை போட்டு வைத்தேன்
திரை போட்ட போதும் அணை போட்டதில்லை
மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ
விளக்கி வைப்பாயோ
என்ற வரிகளில், தமிழின் உச்சரிப்பு தெரியும். அதேபோல, கவிஅரசின் அந்தாதி வரிகள் கொண்ட , வசந்த கால நதிகளிலே, ஆடி வெள்ளி தேடி உன்னை போன்ற பாடல்களும் இவரின் மொழி அழகிற்கு சான்று.
2011 ஆம் வருடம், எனது ரசிகாஸ் அமைப்பின் சார்பில், மெல்லிசை மன்னர் டி கே ராமமூர்த்தி அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டு விழா நடத்தியபோது, முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல், ஒரு மதிய நேரம், என் சகோதரருடன் அவரின் இல்லக் கதவைத் தட்டினேன், கணவருடன் உணவு அருந்தி கொண்டிருந்த திருமதி வாணி அவர்கள், பாதியில் எழுந்து வந்து, கதவை திறந்தார். உங்களுக்கு உணவு தராமல், நாங்கள் சாப்பிடுகிறோம் என்று கூறியவர், அவரே மிக்சியில் பழத்தைப் போட்டு, ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தார்.
சுமார் இரண்டு மணி நேரம், அவரும், கணவர் திரு ஜெயராம் அவர்களும் இசை, பாடல்கள், எம் எஸ் வி, கண்ணதாசன், மற்ற இசையமைப்பாளர்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். தனது அலமாரியில் இருந்த புத்தகங்களின் தொகுப்பு காண்பித்தார்கள்.
நான் குறிப்பிட்ட நிகழ்வு தினம் அன்று, ஹைதராபாதில் ஒரு நிகழ்வில் இருப்பதால், வர முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்ததோடு, நிகழ்வு அன்று, ஒரு கடிதமும் அவர் கைகளால் எழுதி அனுப்பி இருந்தார். இன்றும் அந்தக் கடிதம் என்னிடம் உள்ளது. மெல்லிசை மன்னர்கள் இசையின் காலத்தில் தான் பாடாமல் போனது மிகுந்த வருத்தம் என்று கூறினார்கள்.
தேன் தமிழ் குரலில் இவர் தந்த பாடல்கள் தான் எத்தனை எத்தனை ? திருவாளர்கள் விஸ்வநாதன், கே வி மகாதேவன், டி கே ராமமூர்த்தி, வி குமார், கோவர்தன், விஜயபாஸ்கர், சங்கர்கணேஷ், குன்னக்குடி வைத்தியநாதன், ஜயவிஜயா, இளையராஜா , கங்கை அமரன், எம் எல் ஶ்ரீகாந்த, ரஹ்மான், என அத்தனை பேர் இசையிலும் பாடல்கள் தந்தவர்.
இலங்கையின் இசைக்குயில்
தத்திச் செல்லும் முத்துக்கண்ணன்
வசந்த கால நதிகளில்
ஆடி வெள்ளி
பாரதி கண்ணம்மா
இலக்கணம் மாறுதோ
மேகமே மேகமே
வா வா என் வீணை
மழைக்கால மேகம் ஒன்று
நாள் நல்ல நாள்
மதனோத்சவம் ரதியோடுதான்
யாரது யாரது சொல்லாமல் இங்கே
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
நீராடும் நேரம் நல்ல நேரம்
நானா பாடுவது நானா
நானே நானா யாரோ
என் கல்யாண வைபோகம்
கவிதை கேளுங்கள்
முத்தமிழைப் பாட வந்தேன்
கங்கை யமுனை இங்குதான்
வேண்டும் வேண்டும் உந்தன் உறவு
அந்தமானைப் பாருங்கள்
நினைவாலே சிலை செய்து
தங்கத்தில் முகம் எடுத்து
இது தான் முதல் ராத்திரி
மண்ணுலகில் தேவன் இறங்கி
கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
கண்ணாடி அம்மா உன் இதயம்
இல்லம் சங்கீதம்
என எத்தனைப் பாடல்கள் ? அத்தனையும் செவிக்கு அமுதம்.
சில கவர்ச்சி மற்றும் – ஹோட்டல் நடனப் பாடல்கள் கேட்கும்போது, வாணி ஜெயராம் கூட இப்படிப் பாடுவாரா என்று எண்ணத் தோன்றும்.
1970களின் இறுதியில், கவியரசு கண்ணதாசன் அவர்கள் குமுதம் வார இதழில் – இந்த வாரம் சந்தித்தேன் என்று ஒரு பகுதி எழுதி வந்தார், அந்த வாரம் தான் சந்தித்த மனிதர்கள் பற்றி எழுதிய அவர், ஒரு வாரம் திருமதி வாணி பற்றி எழுதினார். ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுக் குடும்பப் பெண் என்று எண்ணும்படியான தமிழ் பெண் , மற்றும் தனித்தன்மையான குரல் கொண்டவர் என்றெல்லாம் புகழ்ந்து எழுதி உள்ளார். கண்ணதாசன் மிகவும் விரும்பிய பாடகியாகவும் இருந்தார்.
கவிஞர் வைரமுத்து கூட, அவரது புத்தகத்தில், வாணி அவர்கள் கிளப் டான்ஸ் பாடல்கள் பாடும்போது, குத்து விளக்கில், சிகரெட் பற்ற வைப்பது போல எனக்குத் தோன்றுகிறது. வாணி அவர்கள் இது போன்ற பாடல்களை தவிர்க்கலாம் என்று எழுதி உள்ளார். பல பாடல்களை முறையற்ற வரிகளைக் காட்டி, பாடாமல் சென்றிருக்கிறார் என்று கூறுவார்கள். அதேபோல, அனாவசிய அரட்டை, பேச்சு என்பதே கிடையாது அவர்க்கு என்பதை திருமதி சுசிலா உட்படப் பலர் கூறி இருக்கிறார்கள்.
2021 ஆம் வருடம், கொரோனா பாதிப்பு காலம். வாணி அவர்கள் திரை உலகு வந்து 50 வருட நிறைவு. கோவையில் இருந்து கிளாசிக்கல் என்று வாட்ஸ்அப் குழு நடத்திவரும் , எனது நண்பர், ஆடிட்டர் திரு கிருஷ்ணகுமார் அவர்கள், என்னிடம் இணைய வழி நிகழ்வு ஒன்று நடத்தலாம் என்று கூற, உடனே வாணி அவர்களின் சகோதரி திருமதி உமா அவர்கள் மூலம் திரு கிருஷ்ணகுமார், அதை உறுதி செய்தார். ஆழ்வார்பேட்டையில் இருக்கும் அவர் சகோதரி இல்லத்தில் நடந்த இந்த நிகழ்வில் பல ரசிகர்கள் கலந்து கொண்டு, கேள்விகள் கேட்க, திருமதி வாணி அவர்கள் பதில் அளித்தார்கள். 4 மணி நேரம் நடந்த இந்த நிகழ்வில் நான் அறிமுக உரை நிகழ்த்த, திரு கிருஷ்ணகுமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். திரு வாஞ்சி ஹரி அவர்கள் நன்றி கூறினார்கள். மிகவும் சிறப்பாக நடந்த இந்த நிகழ்வை திருமதி வாணி அவர்கள் பெரிதும் பாராட்டினார்கள.
அப்போது நான் அவர்களிடம், நினைவுப் பரிசு தந்து, பொன்னாடையும் அணிவித்தேன். எனது மனைவியுடன் சென்றிருந்த எனக்கு, அவர்கள் தனது கை எழுத்திட்ட அவர்களின் கவிதைப் புத்தகத்தை எனக்குத் தந்தார்கள். என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் அது. அவர்களின் எளிமை, நேர நிர்வாகம், உண்மைத்தன்மை, விளம்பரம் விரும்பாமை எல்லாம் அப்போது வெளிப்பட்டது
மீண்டும் வாணி அம்மாவை சந்திக்கும் வாய்ப்பு எனது ரசிகாஸ் அமைப்பு மூலம் வந்தது. 2021 ஆம் வருடம், முப்பெரும் விழா – மகாகவியின் நூற்றாண்டு விழா, நடிகர் திலகத்தின் பிறந்தநாள் விழா, வாணி அவர்களின் திரை உலக 50 வது வருட நிறைவு விழா என, மிக பிரமாண்டமாக, தி நகர் கிருஷ்ணகான சபாவில் நடந்தது. UK முரளியின் இசைக்குழுவுடன், பாராட்டு விழா,
அப்போது கூட, அவரின் எளிமை மற்றும் கண்ணியத்திற்கு ஒரு உதாரணம் – நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து, மல்லிகை, ஏழு சுரங்களுக்குள், இலக்கணம் மாறுதோ என பாடிக் கொண்டே போக, என்னை அருகில் அழைத்த வாணி அவர்கள், என் காதில் ரகசியமாக, சிவாஜி அவர்களின் புதல்வர் ராம்குமார் மற்றும் அவர் மனைவி , அவரின் ரசிகர்கள் அமர்ந்திருக்கும்போது, சிவாஜி படத்தில் நான் பாடிய பாடல்கள் அல்லது சிவாஜி பாடல்களைப் பாட சொல்லுங்கள். மற்ற படங்களின் எனது பாடல்கள் மட்டும் பாடுவது மரியாதை இல்லை என்றார்கள். சபை நாகரிகம் தெரிந்த பெண்மணி.
இந்த நேரத்தில் இன்னொரு தகவல் – நடிகர் திலகம் புதல்வர் தளபதி ராம்குமார் அவர்கள் என்னிடம் சொன்னது – 1974ல் வாணி – விஸ்வநாதன் – கண்ணதாசன் கூட்டணி தான் முதலில் பாடல் ஒலிப்பதிவிற்குத் தயாரானது – சிவாஜி புரொடக்க்ஷன்ஸ் தங்கப்பதக்கம் படத்திற்காக. ஏதோ காரணங்களினால் அது தள்ளிப்போக, தீர்க்க சுமங்கலி படத்திற்காக,மல்லிகை என் மன்னன் பாடல் பதிவாகி பிரபலமானது.
அவரைச் சந்தித்த போதேல்லாம், என்னிடம், பலமுறை, நீங்கள் கண்ணதாசன் பிரியர் – என்னிடம் அவர் கை எழுத்து போட்ட , அவர் தந்த பல புத்தகங்கள் உள்ளன. நீங்கள் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார். மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டதும், உடனே அவரைத் தொடர்பு கொண்டு, வாழ்த்திப்பேசி, வருகின்ற மார்ச் மாதம், ரசிகாஸ் சார்பில் விழா எடுக்கிறேன் என்று கூறினேன். இரண்டுமே நிறைவேறாமல் போனது எனது துரதிர்ஷ்டம்.
அவருக்கு முறையான வாய்ப்புகள் வராதது, விருதுகள் வழங்குவதில் தாமதம், மற்ற மாநிலங்களில் கொடுக்கப்படும் அரசியல் மற்றும் மொழி சார்ந்த ஆதரவு தமிழ்நாட்டில் இல்லாதது, , மெல்லிசை மன்னரின் இசை மேதமையைப் பற்றி நிறையப் பேசியதால், மற்ற சிலருக்குப் பிடிக்காமல் போனது, பல நேரங்களில் கடினமான சங்கதிகள் கொண்ட high pitch பாடல்கள் பல தனக்கு வந்தது, எனப் பல தகவல்களை என்னிடம் கூறி இருக்கிறார்.
ஆனாலும், இறைவன் மீது நம்பிக்கை வைத்ததுடன், யாரையும் குறை கூறாமல், தேவையற்ற பேச்சு மற்றும் விளம்பரம் விரும்பாத எளிமையான அற்புதமான இசை வடிவமான சிறந்த மனுஷி அவர்.
தெளிவான மொழி உச்சரிப்பு, சங்கதிகளை உள் வாங்கி பாடுதல், தொடமுடியாத சங்கதியையும் பிசிறில்லாமல் பாடும் திறமை என்று வலம் வந்த கலைவாணி அவர்கள், இறைவனடி சேர்ந்தாலும். அவரின் அழியாப் பாடல்கள் இருக்கும் வரை, இசைப் பிரியர்களுக்கு, இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்குமே ஆனந்தம் தானே.!
வாழ்க இசை அரசி வாணி அம்மாவின் புகழ் !
மிகவும் அற்புதம் அய்யா.. சிறப்பான புகழஞ்சலி. கொண்டாடும் ஒரு கலைஞரை அருகே சென்று வாழ்த்தி மகிழும் வாய்ப்புகள் எல்லோருக்கும் வாய்க்காது!
வாணி ஜெயராம் அவர்களுக்கு மெல்லிசை மன்னர் இசை மேதைமை மீது இருந்த பக்தி தான், பின்னாட்களில் அவருக்கான வாய்ப்புகள் அருகிப் போனதற்கு ஒரு முக்கிய காரணம் என்று நான் ஊகித்து எழுதி இருந்தேன், நெருக்கமாக அவரை அறிந்த உங்கள் எழுத்து இன்று வாசித்தேன்.
அன்பும் வாழ்த்தும்!
LikeLike