அ.முத்துலிங்கம் அவர்களுடன் ஓர் உரையாடல்!
2013 ஏப்ரல் மாதம் காலச்சுவடு பத்திரிகையின் வெள்ளி விழா ஆண்டுப் பரிசாகத் திரு.கண்ணன் அனுப்பிவைத்த பரிசுப் புத்தகம் ‘வியத்தலும் இலமே’. – உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள், எழுத்தாளர்களின் நேர்காணல்கள் அடங்கிய புத்தகம் – எளிதில் அணுக முடியாத, தமிழுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத ஆளுமைகளை மிகவும் சிரமப்பட்டு (காத்திருந்து, அவர்களை பேட்டி எடுத்ததைச் சொல்வதே மிகவும் சுவாரஸ்யமான ஒன்று!) சந்தித்து, வெளிக்கொணர்ந்த விபரங்களும், செய்திகளும், அனுபவங்களும் வியக்க வைப்பவை. புத்தகத்தை எழுதியவர் திரு. அ,முத்துலிங்கம்! “வியப்புதான் மனிதனை வாழ வைக்கிறது. எப்பொழுது ஒருத்தர் வியப்பதை நிறுத்திவிடுகிறாரோ, அப்பொழுதே அவர் வாழ்வதை நிறுத்திவிட்டார் என்றுதான் நான் நினைக்கிறேன்” என்று கூறும் அ.மு. வின் சிறுகதைகள், கட்டுரைகள் வியக்க வைப்பவை!
அ.முத்துலிங்கம், இலங்கையின் கொக்குவில் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இலங்கையிலும், ஆப்பிரிக்காவிலும் இன்னும் பல நாடுகளிலும் ஐ.நாவுக்காகப் பணி புரிந்தவர். தற்போது கனடாவில் றொறன்ரோ (Toronto)வில் தன் மனைவியுடன் வசித்து வருபவர். சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், விமர்சனங்கள் என இவரது படைப்புலகம் விரிகின்றது. கட்டுரைகளில் சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், பாரதியார், ஷேக்ஸ்பியர் என அங்கங்கே குறிப்புகள் இருக்கும்! அக்கா, வம்சவிருத்தி, மகாராஜாவின் ரயில்வண்டி, வியத்தலும் இலமே, அமெரிக்க உளவாளி, ஐயாவின் கணக்குப் புத்தகம் – வாசிக்க வேண்டிய தொகுப்புகள்!
சமீபத்தில் அவருடைய ‘தோற்றவர் வரலாறு’ (இரண்டு வருடத்தில் (2014 – 2016) எழுதியதின் தொகுப்பு – நான்கு நேர் காணல்கள், பதினேழு கட்டுரைகள் அடங்கிய சுவாரஸ்யமான தொகுப்பு!) வாசித்து முகநூலில் ஒரு பதிவும் போட்டிருந்தேன். முன்னமேயே ஆனந்த விகடனில் வெளியாகியிருந்த அவரது சிறுகதை ஒன்றை வாசித்து (‘பிள்ளை கடத்தல்காரன்’) அவருக்கு ஒரு விமர்சனக் கடிதம் எழுதியிருக்கிறேன். அதற்கான அவரது பதிலுடன் ‘அப்பாவின் டைப்ரைட்டர்’ புத்தகத்திலும் வெளியிட்டிருக்கிறேன். ’தோற்றவர் வரலாறு’ குறித்த என் கட்டுரையை வாசித்துத் தொலைபேசியில் என்னுடன் இருபத்தி ஐந்து நிமிடங்கள் உரையாடினார். சுவாரஸ்யமான மனிதர் – பேச்சுவாக்கில் பல சுவையான விபரங்கள் வந்து விழுந்த வண்ணமிருந்தன! இலங்கைத் தமிழில் அவருடன் கதைத்தது ஒரு மறக்கமுடியாத அனுபவம்தான்!
நான் ஒரு நரபியல் மருத்துவர் என்ற போது, ‘உங்களுக்கு ஆயிரக்கனக்கான நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களுடன் ஆன அனுபவங்களை நீங்கள் எழுதலாமே’ என்றார். ‘முயற்சிக்கிறேன் சார்’ என்றேன். அவரது நண்பர் ஒருவர் சிறைச்சாலையில் வார்டனாக இருக்கிறார். நன்றாக எழுதக் கூடியவர். அவரது அனுபவங்களையும் எழுதச் சொல்லியிருக்கிறார் அ.மு. ஆனாலும் ’அவர் இன்னும் எழுதத் தொடங்கவில்லை’ என்ற செய்தியைச் சொன்னவர், “எழுத்தாளர்களின் முதல் எதிரி, ‘சோம்பல்’தான்” என்று சிரித்தார். அவரிடம் நான் என்னைப் பற்றி மேலும் பேசவில்லை!
சமீபத்தில் நான் டொரண்டோ வந்திருந்த போது அவரைச் சந்திக்க முயன்றதைச் சொன்னபோது வியந்தார். பொஸ்டனில் இருக்கும் அவர் பெண் வீட்டிற்கும், டொரன்டோவிற்குமாக செல்ல வேண்டியிருப்பதால், எனக்கு நேரம் அளிக்க முடியவில்லை என்றார். அடுத்த முறை பார்க்கலாம்… அப்போது டொரண்டோவில் திரு பசுபதி அவர்களைச் சந்தித்ததைச் சொன்னேன். உடனே, அவர் பசுபதி அவர்கள் உடல் நலம் சுகமில்லாமல், மருத்துவமனைக்குச் சென்றுள்ளதைக் குறிப்பிட்டார். (ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் அவர் அட்மிட் ஆகியிருந்தார் – முகநூல் செய்தி) *எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
‘அகதிகள்’ கதை பற்றிக் கூறும்போது, “அந்தக் கதையில், அவர்களின் நாடு, நகரம் எதையும் நான் குறிப்பிடவில்லை. அகதிகள் படும் துயரங்கள் பொதுவானவை – எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி துன்புறுத்துபவை” என்றார்.
பொதுவாகவே எழுத்தாளர்கள் நேர்காணல் தர மறுத்துவிடுவார்கள் என்கிறார் அ.மு. அவர்களை இலக்கியக் கூட்டங்கள், விடுதிகள், இரயில் பயணங்கள் எனத் தேடிப் பிடித்து, பேட்டிகள் எடுத்ததைக் கூறினார். அரை மணி நேரத்தில் தொலைபேசியில் எழுத்தாளர் அலிஸ் மன்றோ (Alice Munro) வை பேட்டி எடுத்த பிறகு, மீதிப் பல கேள்விகள் இருந்ததாம் – மீண்டும் எங்கேயாவது பார்க்கும்போது கேட்டுவிட வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டாராம்.
நமது அனுபவங்களே நம்முடைய எழுத்துக்குப் பெரிய உத்வேகம் அளிக்கும் என்றார். அதற்காகப் பெரிய ஓட்டல் ஒன்றின் சமையலறையில் ஒருநாள் முழுவதும் இருந்து, அங்கு நடக்கும் உரையாடல்கள், சண்டைகள், செயல்பாடுகள், கஸ்டமர் கேர் என அனைத்தையும் கவனித்தாராம்!
“தோற்றவர் வரலாறு” பற்றி எழுதக் காரணம் என்ன? என்று கேட்டார். “வாசகர் தேவை”, “பூக்கள் பறப்பதில்லை”, “எழுத்தாளரும் வாசகரும்” போன்ற கட்டுரைகளின் தாக்கம்தான் என்றேன். அதில் இழைந்தோடும் மெல்லிய அங்கதமும், நகைச்சுவையும் என்றும் சொன்னேன். சிரித்துக்கொண்டார். ‘நிறுத்தவே முடியாத மாபெரும் விசை’ என்ற பொருள் கொண்ட ‘Juggernaut’ என்ற ஆங்கில வார்த்தைக்கு வெப்ஸ்டர் டிக்ஷ்னரியில் ‘பூரி ஜெகன்னாத்’ தேர் பற்றிய குறிப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.
சிங்களத்தின் பூசா சிறையின் கொடுமைகள் பற்றியும், அதிலிருந்த கைதி ஒருவர் இவருக்குப் போன் செய்து புத்தகம் கேட்டதையும் பற்றிச் சொன்னார்.(அந்தக் கைதி சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறார். “ஒரு நல்ல சிறுகதை என்றால் எழுத்தாளர் ஓர் அடி முன்னே நிற்பார். வாசகர் பின்னே தொடர்வார். வாசகரால் எழுத்தாளரை எட்டிப் பிடிக்கவே முடியாது. அதுதான் நல்ல சிறுகதை” – ‘நல்ல சிறுகதை’ கட்டுரையில் அ.மி.)
என் புத்தகங்களைப் பற்றிக் கேட்டவர், ‘அப்பாவின் டைப்ரைட்டர்’ என்ற தலைப்பு என் “ஐயாவின் டைரி”யைப் போல உள்ளது என்றார். அந்தக் கட்டுரையை ஈமெயிலில் அனுப்பமுடியுமா என்றார். பயந்து போனேன் – என்னுடையதெல்லாம் கட்டுரைகளாகுமா எனத் தெரியவில்லை!
கதை, கட்டுரைகளைப் பற்றி பேசிய போது, ‘கட்டுரைகளுக்குத் தரவுகள் முக்கியம், கதைகள் எல்லோரிடமும் இருக்கும்’ என்று எழுத்தாளர் விக்கிரமன் கூறுவார் என்றேன். அ.மு. வுக்கு விக்கிரமன் அவர்களைத் தெரிந்திருக்கவில்லை என்பது வியப்பாக இருந்தது.
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் அ.முத்துலிங்கம் அவர்களும் ஒருவர். அவரது கட்டுரைகளை எந்த நேரமும் எடுத்து வாசிக்கலாம். மனதில் ஒரு மகிழ்ச்சி பரவும்!
(பி.கு: ‘அப்பாவின் டைப்ரைட்டர்’ கட்டுரை கிடைக்காததால், அந்தப் புத்தகத்தின் பிரதியையே அனுப்பி வைத்து, ‘உங்கள் கட்டுரைகளை வாசித்த பிறகு, என் கட்டுரைகள் (முகநூலில் எழுதியவை) மிகச் சாதாரண சம்பவக் குறிப்புகளாகத் தோன்றுகின்றன’ என்ற குறிப்பையும் எழுதியிருந்தேன். அதற்கு அவரது பதில், அ.முத்துலிங்கம் என்னும் மனிதநேயப் பண்பாளரை எனக்குக் காட்டியது!
“Thanks. Your writing is good. I am enjoying it. I asked for one flower you have sent a bouquet”
அபாரம், டாக்டர்!
சிறப்பான பதிவு, அரிய அனுபவம். அமு ஓர் அற்புதமான மனிதர், அருமையான எழுத்தாளர்! சக பயணிகளைக் கொண்டாடும் அபூர்வ படைப்பாளி!
LikeLike