(கம்சன் அனுப்பிய பகாசுரன் என்ற அரக்கன் கொக்கின் உருவில் வந்தான். கொக்கின் அலகைப் பிளந்து கொன்றான் கண்ணன்.
அண்ணன் இறந்ததை அறிந்த பகாசுரனின் தம்பி அகாசுரன் பழிதீர்க்க வந்தான்)
அகாசுரன் சொல்வது
படைக்கலம் ஏதும் இன்றிப்
பாய்ந்துதன் அலகால் யாவும்
உடைக்கவே வல்ல என்றன்
உறுதிறன் மிக்க அண்ணன்,
இடைக்குலச் சிறுவ னாலே
இறுதியை அடைந்த செய்தி
கிடைக்கவே வந்தேன், அந்தக்
கேட்டினைத் துடைப்பேன் என்றான்.
பாம்பின் உருவில் காத்திருத்தல்
பிள்ளைகள் மாடு மேய்க்கும்
பெரியதோர் வனத்தை மேவித்
தள்ளியே புதரின் பின்னே
தன்னுரு மறைத்தி ருந்தான்
கள்ளமே மிக்க பாம்பாய்க்
கடிதினில் உருவம் கொண்டான்
துள்ளியே வருவோர் தம்மைத்
துற்றென விழங்கு தற்கு.
(துற்று – சோற்றுக் கவளம்/ உணவு)
மாடு மேய்க்கும் சிறுவரின் விளையாட்டுகள்
கூடிக் குதிப்பர் சிலசிறுவர்
குழலை இசைப்பர் சிலசிறுவர்
ஓடி ஒளியும் விளையாட்டில்
உவகை கொள்வர் சிலசிறுவர்.
பாடிப் பறந்து செல்கின்ற
பறவை நிழலைப் பிடிப்பதற்கு
நாடிச் செல்வர் சிலசிறுவர்
நகரும் பொழுதை மறந்திருப்பர்
அன்னம் போலச் சின்னநடை
அசைந்து செல்வர் சிலசிறுவர்
மின்னும் மடுவில் தம்முருவம்
மேவக் காண்பர் சிலசிறுவர்
தின்னும் உணவை மறைத்துவைத்துத்
தேட வைப்பர் மற்றவரை
இன்னும் குறும்பு பலவற்றை
இனிதே இயற்றி மகிழ்ந்தனரே
அரக்கன் எடுத்த பாம்புருவின் வருணனை
மலைபோல் இருக்கும் பெரும்பாம்பின்
வடிவம், வயிறோ பசித்தீயால்
உலைபோல் கொதிக்கும், உதடுகளோ
ஒருங்கே விண்ணும் மண்தொடுமே
சிலைபோல் விரிந்த பேழ்வாயும்
சிறுவர் நுழையும் குகையென்ற
வலைபோல் அமைய அவ்வரக்கன்
வஞ்சம் மிஞ்சக் காத்திருந்தான்.
(பேழ்வாய் – பெரிய வாய்)
விளக்கம்:
பாம்பின் வடிவம் மலைபோல் இருந்தது. அதன் வயிறு, பசித் தீ எரியும் உலை போல் இருந்தது. அப்பாம்பின் மேல் உதடு விண்ணையும், கீழ் உதடு மண்ணையும் தொட்டன. சிலைபோல் காட்சியளித்த பெரிய வாய் விரிந்து, சிறுவர் நுழையக் கூடிய குகையாகிய வலைபோல் அமைந்திருந்தது.இப்படிப்பட்ட பாம்பின் தோற்றத்தில் அவ்வரக்கன் காத்திருந்தான்.
பாம்பின் வாய்க்குள் அனைவரும் புகுதல்
சிரித்தவாய்ச் சிறுவர், தேரை
சிக்குதல் போல அங்கு
விரித்தவாய்க் குகையின் உள்ளே
விருப்புடன் பசுக்க ளோடு
வருத்தமே இன்றிச் செல்ல
மாயனும் தொடர்ந்து போக
நரித்தன அரக்கப் பாம்பு
நச்சுவாய் இறுக்கி மூடும்
கண்ணன் தன் உருவத்தைப் பெரியதாகச் செய்தல்
மூடிய வாய்க்குள் சென்றார்
மொய்த்திருள் சூழக் கண்டார்
வாடியே மயங்கி வீழந்தார்
மாயனும் சிரித்துக் கொண்டான்
கூடிய வேளை இஃதே
கொல்லவே, என்று தன்னை
நீடிய உருவாய் ஆக்கி
நெடுமரம் போல்வ ளர்ந்தான்
அகாசுரன் இறத்தல்
வெடித்தவவ் வுருவம் மேலும்
விரைவுடன் வளர்ந்தே ஓங்கத்
துடித்தது அரக்கப் பாம்பு
தொண்டையும் புடைத்துக் கொள்ள
அடித்தது தரையில் வாலை
அக்கணம் உயிர்பி ரிந்து
படைத்தவன் பாதம் சேரப்
பார்த்தவர் வியந்தார் அம்மா!
(வெடித்த – மேலே கிளம்பிய)
(தொடரும்)
கண்ணனின் லீலைகள் பல அதில் இது ஒன்று வர்ணனை மிக அருமை
LikeLike
Nice depiction of the epic in vernacular. Expecting next episode. “Vazhga, valarga tamizh Bharatham.”
LikeLike