1. என் வீட்டு நூலகத்தில்
நீ படித்ததற்காக மட்டுமே
பாதுகாக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் சில
கேலி செய்கின்றன என்னை
உன் தோழியர்களைப் போலவே
நீ நிச்சயமாய் படிக்கவேண்டுமென
பாதுகாக்கப்படும் புத்தகங்கள்
பொறாமை கொள்கின்றன
என் நண்பர்களைப் போல
நீ மட்டுமே படிப்பதற்காய்
தனித்து வைக்கப்பட்டிருக்கும்
புத்தகங்கள் வெட்கப்படுகின்றன
உன்னைப்போல…
2. நீ செல்லக் கோபம் கொண்டிருந்த
ஓர் காலையில்
‘உன் கோபம் பிடித்திருக்கிறது’ என்றேன்
‘உன் தூபம் பிடிக்கவில்லை’ என்றாய்
‘உன் கொலுசொலி பிடிக்கும்
கொஞ்சம் நட’ என்றேன்
கழட்டி கையில் பொத்திக்கொண்டு
பழிப்பு காட்டி சிரித்தாய்
‘இந்தச் சிரிப்பும் பிடித்திருக்கிறது’
உடனே மௌனமானாய்
‘உன் துப்பட்டாவும் பிடித்திருக்கிறது’
அப்போது உண்மையாகவே
நீ கோபம் கொண்டாய்
அட அதுவும் கூட அழகுதான்
3. கூட்டத்திலிருந்து தனித்துவர மறுக்கிறாய்
உனக்கான முத்தங்கள்
உதடுகளை உசுப்பேற்றிக் கொண்டிருக்கின்றன
என் எல்லா யுக்திகளையும்
தோற்கடித்து விட்டாய்
அறியாமலும் அறிந்தும்
அடுத்த யுக்தியைப் பிரயோகிக்க
அவகாசம் எடுத்துக்கொண்டிருந்த போது
நீயே வந்தாய் புதுக் காரணத்தோடு…
உள்ளரங்கிற்குள் அவசரமாய்
உதிர்ந்து கொண்டிருந்தன நம் முத்தங்கள்