நற்றிணை
சங்க இலக்கிய நூல்களான எட்டுத் தொகை நூல்கள் இவைதாம் என்று குறிப்பிடும் பழைய வெண்பாவில் முதலில் குறிக்கப்படுவது நற்றிணை என்பதாகும். நல்+திணை=நற்றிணை; தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே இருந்த நல் ஒழுக்கத்தைக் கூறும் நூல் இதுவாகும்.
இந்நூல் பல புலவர்களால் பல்வேறு காலங்களில் தனித்தனிப் பாடல்களாகப் பாடப்பட்டுப் பின்னர் தொகுக்கப்பட்டதாகும்.
தொகுத்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்று கூறப்படுகிறது.
இந்நூலில் 56 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர் அறிய முடியவில்லை. பாடல்களின் தொடராலேயே வண்ணப்புறப் கந்தரத்தனார், பெருங்கண்ணனார், தேய்புரிப் பழங்கயிற்றினார், தும்பிசேர் கீரனார் , மடல் பாடிய மாதங்கீரனார், மலையனார், தனிமகனார் என்று புலவர்களுக்குப் பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நூல்களில் பாடல்கள் ஒவ்வொன்றும் 7 அடிகள் முதல் 13 அடிகள் கொண்டவையாக உள்ளன. 234-ஆம் பாடல் கிடைக்கவில்லை.
மொத்தம் 400 பாடல்களைக் கொண்டதால் நற்றிணை நானூறு என்றும் இதற்கு ஒரு பெயர் வழங்கப்படுகிறது.
இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலில் திருமால் குறிப்பிடப்படுகிறார். அப்பாடலை எழுதியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.
பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் 1914-ஆம் ஆண்டில் இதற்கு உரை எழுதிப் பதிப்பித்துள்ளார். பின்னர் ஔவை துரைசாமிப் பிள்ளை விளக்கமான உரை ஒன்றும் எழுதி பதிப்பித்துள்ளார்.
குறிஞ்சித்திணையில் 130 பாடல்களும், முல்லைத் திணையில் 30 பாடல்களும், மருதத்திணையில் 32 பாடல்களும், நெய்தல் திணையில் 102 பாடல்களும், பாலைத்திணையில் 105 பாடல்களும் இந்நூலில் காணபப்டுகின்றன.
தலைவன் வரவைக் குறிக்க தலைவி சுவரில் கோடிட்டு எண்னும் வழக்கமும், மகளிர் கால்பந்து விளையாடும் வழக்கமும், காதலன் வரவைப் பல்லி கூறுவதாகக் கருதும் வழக்கமும் இருந்ததைச் சில பாடல்கள் காட்டுகின்றன
நற்றிணையில் மருத்துவம் பற்றியும் காட்டப்பட்டுள்ளது. நம் உடலில் ஏதேனும் ஓர் இடத்தில் வீக்கம் கண்டிருந்தாலோ அல்லது உடலின் மூட்டுகளில் வலி இருந்தாலோ அந்த இடங்களில் பத்துப் போடும் வழக்கம் உண்டு. எடை மிகுந்த பொருள்களைத் தூக்குவதால் முதுகில் வலி உண்டாகும். அப்படி இப்படித் திருப்பும்போது கழுத்தும் வலிக்கும். அதற்கும் பத்துப் போடுவர். அரக்கு, மெழுகு, தானியங்களின் மாவு இவற்றால் பத்துப் போட்டுக் காயவைப்பர். பின் அவை தானாகவே செதில்செதிலாக உதிர்ந்து வலியும் குணமாகிவிடும்.
இந்த மருத்துவ முறையை “அவ்வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன” என்று நற்றிணையில் பேரி சாத்தனார் எழுதியுள்ள 25-ஆம் பாடல் காட்டுகிறது. ‘அழகிய வளைந்த முதுகினை அரக்கு ஈர்த்துப் பிடிப்பது போல” என்று இப்பாடலில் ஓர் உவமை காட்டப்படுகிறது.
உடலில் போடப்படும் அரக்குப் பத்து காயக் காய செதில் செதிலாக அடுக்குகளாகக் காணப்படும். அப்படிப்பட்ட ஒழுங்கான வரி அடுக்குகளைக் கொண்ட பிடவம் பூ பூத்திருக்கிறது. அதன் மணம் தொலைதூரம் வீசும். அத்தகைய பிடவ மரங்கள் மிகுதியாக உள்ள மலைநாட்டின் தலைவன் என்று தலைவனைக் காட்டுகிறது இப்பாடல்.
இப்பாடல் அடிகளில் மற்றும் ஓர் உவமையையும் காணலாம். அந்தப் பிடவம் பூவின் மகரந்தத் தூள்கள் அப்பூவிற்கு வந்து தேன் உண்ணும் வண்டின் உடலில் ஒட்டிக்கொள்ளும். அந்த வண்டானது பொன் உரைத்துப்பார்க்கும் கட்டளைக்கல் போலத் தோன்றுமாம்.
நற்றிணையின் பாடல்:
“அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன
செவ் வரி இதழ சேண் நாறு பிடவின்
நறுந் தாது ஆடிய தும்பி, பசுங் கேழ்ப்
பொன் உரை கல்லின், நல் நிறம் பெறூஉம்
வள மலை நாடன்…………………………”
நற்றிணையில் ஒரு காட்சி: பிரிந்திருந்த தலைவன் வரப்போகிறான். அவன் வரவு கண்டு, தோழி தலைவிக்குச் சொல்ல இருவரும் மகிழ்கின்றனர். வெளிச்சம் இருக்கும் உப்பங்கழி. கொம்பு உள்ள சுறாமீன் மேயும் உப்பங்கழி. நீலமணி நிறத்தில் நெய்தல் பூக்கள் நிறைய பூத்திருக்கின்றன. அதில் புன்னைமரம் தன் பொன்னிறம் கொண்ட பூக்களைத் தூவுகிறது. அது கானல் நிலம். அங்கே விழுது தொங்கும் தாழம்பூவின் மணம் கமழ்கிறது. இப்படிப் பூக்கள் எல்லாம் கூட நம் தலைவனை வரவேற்கக் காத்துள்ளன எனறு மறைமுகமாகத் தோழி கூறுகிறாள்.
”மாலை நேரம் வந்துவிட்டது. வெளிச்சம் மங்கிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தனிமையில் இருக்கிறோமே என்னும் நினைவலைத் துன்பம் வருவது இயல்பே. இந்தத் துன்பத்திலிருந்து இப்போது தப்பிவிட்டோம். தோழி! உள்ளுக்குள்ளே காது கொடுத்துக் கேள். தலைவன் வரும் தேரின் மணியோசை கேட்கிறது. தலைவன் மனநிலை குதிரைக்குப் புரிகிறது. எனவே அது கோல் ஓச்சல் இல்லாமல் மகிழ்வோடு குதிரை அந்தத் தேரை இழுத்துக்கொண்டு வருகிறது. பறவை போல் பறந்து இழுத்துக்கொண்டு வருகிறது. உப்பங்கழியில் அதன் சக்கரம் இறங்கிவிட்டாலும் கவலைப்படாமல் இழுத்துக்கொண்டு வருகிறது. அவன் வரவால் நம் துன்பம் நீங்கி நமக்கு மகிழ்ச்சி பொங்குகிறது.
”கோட் சுறா வழங்கும் வாள் கேழ்இருங் கழி
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய,
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்,
வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல்,
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை,
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்;
கேட்டிசின் வாழி, தோழி! தெண் கழி
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும்,
புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா
வலவன் கோல் உற அறியா,
உரவு நீர்ச் சேர்ப்பன், தேர்மணிக் குரலே!
இது நற்றிணையின் 78-ஆம் பாடலாகும். இப்பாடலைப் பாடியவர் கீரங்கீரனார் ஆவார்
நற்றிணையின் 269 -ஆம் பாடல் ஒரு அழகான காட்சியைக் காட்டுகிறது. தலைவியின் அழகு இப்பாடலில் தெரிகிறது. அவளின் மகன் அணிந்துள்ள அணிகலனும் காட்டப்படுகிறது.”தென்னம்பூக் குரும்பை போன்ற மணிப்பூண் கிண்கிணியை அணிந்துகொண்டு பாலுண்ணும் செவ்வாயை உடைய என்மகன் தன் மார்பில் ஏறி விளையாடும்படி, மாலைகள் கட்டியுள்ள கட்டிலில் என் காதலி படுத்திருக்கிறாள்.
அவள் வயிற்றில் அழகு ஒழுகுகிறது. அவளது வாய்ச்சிரிப்பில் மாட்சிமை தோன்றுகிறது.
அது அவளது குற்றமற்ற கோட்பாட்டின் வெளிப்பாடு. அவள் நம் உயிரைக் காட்டிலும் விரும்பத்தக்கமேம்பாடு உடையவள். அவளது திருமுகத்தில் கண்கள் நாள்தோறும் சுழன்றுகொண்டிருக்கின்றன.”என்றெல்லாம் அவன் நினைக்கிறான்
அப்போது தோழி தலைவனிடம்கூறுகிறாள். ”பெருமானே! கொடிபோல் படர்ந்து அவள் உன்னைப் பற்றிக்கொண்டிருக்கிறாளே என்று எண்ணாமல், பல குன்றங்களைத் தாண்டிப் பொருளீட்டச் செல்வாயாயின், அச் செயலின் நிலைமையையும், அவர் நினைக்கும் பொருளின் முடிவையும் இன்று அறிபவர் யார்? எதுவும் நேரலாம் அல்லவா? தோழி தலைவனிடம் இவ்வாறு கூறுகிறாள். தன் தலைவி மகனுடன் மகிழ்ச்சியாக இருப்பதையும், அவன் பிரிந்து சென்றால் அவள் துன்பப்படுவாள் என்பதையும் தோழி தலைவனுக்குத் தெரிவிக்கும் பாடல் இது. அவனைக் கொம்பாகவும் அவளைக் கொடியாகவும் உவமித்துக் கூறும் தோழியின் சொல்லாட்சி இன்புறத்தக்கது.
”குரும்பை மணிப் பூண் பெருஞ் செங் கிண்கிணிப்
பால் ஆர் துவர் வாய்ப் பைம் பூட் புதல்வன்,
மாலைக் கட்டில், மார்பு ஊர்பு இழிய,
அவ் எயிறு ஒழுகிய அவ் வாய் மாண் நகைச்
செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெங் காதலி 5
திருமுகத்து அலமரும் கண் இணைந்து அல்கலும்,
பெரும! வள்ளியின் பிணிக்கும் என்னார்,
சிறு பல் குன்றம் இறப்போர்;
அறிவார் யார், அவர் முன்னியவ்வே?
இப்பாடலைப் பாடியவர் எயினந்தை மகன் இளங்கீரனார் என்பவராவார்.
யாம் மற்றும் எம் போன்ற சொற்கள் தன் பெருமையை உயர்த்திக் கூறும் சொற்கள் ஆகும். தலைவன் தன் ஊரை “எம் ஊர்”என்று பெருமிதம் தோன்றக் கூறுவதும் தோழி தலைவியின் காதலனை“நம் காதலர்” என்று தலைவிக்கும் தோழிக்கும் இடையேயுள்ள நட்புரிமை தோன்றக் கூறுவதும் பண்டைய மரபு. அத் தலைவன் தன் சொந்த ஊருக்கு அவளை அழைத்துச் செல்கிறான். அப்பொழுது அழகான இயற்கைக் காட்சிகளைக் காட்டுகிறான் இந்த 264-ஆம் பாடலில். தலைவன் கூறுகிறான்
“மடந்தைப் பெண்ணே! பொழுது இருட்டுவதைப் பார். பாம்பு வளைக்குள் நுழையும்படி
வானம் மழை பொழியும் காலம் தோன்றும்போது, மணிநிறப் பிடரியைக் கொண்ட ஆண்மயில் தன் அழகு ஒளிறும் தோகையை விரித்துக்கொண்டு ஆடுவது போல, பூச் சூடிய உன் மென்மையான கூந்தல் காற்றில் அசைந்தாடச் செல்வாயாக. மூங்கில் காட்டில் மேய்ந்த பசுக்களைக் கோவலர் ஓட்டிக்கொண்டு வீடு திரும்பும் மணியொலி இங்குக் கேட்கிறதே அதுதான் என்னுடைய நல்ல சிற்றூர்.” காதலியைத் தன்னுடன் அழைத்துச் செல்லும் காதலன் காதலிக்கு அவர்கள் ஊருக்கு அருகில் வந்துவிட்டதைத் தெரிவித்துத் தெம்பூட்டுகிறான்.
பாம்பு அளைச் செறிய முழங்கி, வலன் ஏர்பு,
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை,
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும்
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல, நின்
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர
ஏகுதி மடந்தை! எல்லின்று பொழுதே:
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த
ஆ பூண் தெண் மணி இயம்பும்,
ஈகாண் தோன்றும், எம் சிறு நல் ஊரே
உடன் போகாநின்ற தலைமகன், தலைமகளை வற்புறீஇயது;
உடன்போய் மறுத்தரா நின்றான் ஊர்காட்டி, வற்புறீஇயதும் ஆம்.
இது ஆவூர்க் காவிதிகள் சாதேவனார் பாடல் ஆகும்.
இப்படி நற்றிணைப் பாடல்கள் வாழ்வின் சில தருணங்களையும் உவமைகளையும் தலைவன் தலைவி தோழி ஆகியோரின் ஒழுக்கங்களையும் நமக்கு வெளிப்படுத்துகின்றன.
==========================================================================
சில குறிப்புகள்:
நற்றிணையின் ஆங்கில மொழிபெயர்ப்பு :
THE NARRINAI FOUR HUNDRED
Translated by Dr. A. Dakshinamurthy
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
International Institute of Tamil Studies
C.P.T. Campus, Tharamani, Chennai – 600 113 2001, 830 pages
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0890_02.html