ராஜேந்திரன்-ஸ்ரீவிஜயம்
ராஜேந்திரன் ‘கடலென்னும் காந்தம் அழைக்கிறது’ என்று சொன்னவுடன் மலைத்துப்போகாமல், உவகை கொண்டவர்கள் அந்த மூன்று இளவரசர்களும், படைத்தலைவர்களும் மட்டுமே.
மன்னன் தனது திட்டத்தை விளக்கத்தொடங்கினான்.
“இன்று நம்மிடம் 1000 கப்பல்கள் இருக்கின்றன. மேலும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இன்னொரு 500 கப்பல்கள் அடுத்த மாதத்தில் கட்டப்பட்டு விடும். ஸ்ரீவிஜயம் சென்று அங்கு போரிட பல்லாயிரக்கணக்கான போர்வீரர்கள் வேண்டும். அவர்கள் மாலுமிகளாகவும் இருக்கவேண்டும். நமது காலாட் படையிலிருக்கும் போர்வீரர்களிலிருந்து, ஒரு லட்சம் பேர் இந்த கடல்படையெடுப்புக்குத் தேவைப்படும். இந்த படை பெரிதாக இருந்தால் மட்டும் போதாது. போர்த்திட்டம் எதிரிகளுக்கு எதிர்பாராத விதமான அதிர்ச்சியைத் தரவேண்டும். அவர்கள் நினைக்காத இடத்தில், நினைக்காத பொழுது நாம் தாக்க வேண்டும்.
முதலில், வணிகர்கள் வேடத்தில் சோழ வீரர்கள் அங்குச் சென்று, ஆள் அரவமற்ற தீவுகளில் படை வீடு அமைத்து தங்கிக்கொள்ள வேண்டும். அவர்கள் அங்கிருந்து கொண்டு, ஸ்ரீவிஜய நிலையை நமக்கு அனுப்பிவைப்பர். நமது படையெடுப்பைப் பற்றி அவர்கள் வேண்டுமென்றே மாறுபட்ட செய்திகளை ஸ்ரீவிஜய நாட்டுக்கு சொல்வர்“ என்று சற்று நிறுத்தினான் ராஜேந்திரன்.
யுவராஜன் ராஜாதிராஜன் இருக்கையை விட்டு எழுந்தான்.
“தந்தையே! இதை நான் நடத்திச் செல்ல அனுமதி தரவேண்டும்” என்று விண்ணப்பித்துக்கொண்டான்.
ராஜேந்திரன், “ராஜாதிராஜா! உனது வீரம் அளப்பரியது. நீ, நம் முன்னோர்கள் இராஜாதித்தர், ஆதித்த கரிகாலர் போன்ற மாவீரன். நாம் இந்த பத்து ஆண்டுகளில் நான்கு திசையிலும் வென்று வாகை சூடியதற்கு, உன் வீரம் தான் பெரும் காரணம். எனினும், நீ இன்று சோழநாட்டின் யுவராஜன். அது மட்டுமல்ல, என்னோடு சேர்ந்து, இந்தப் பரந்த நாட்டை ஆளவும் செய்கிறாய். இங்கிருக்கும் பாதிப்படையை வைத்துக்கொண்டு நமது பரந்த எல்லைகளை நீதான் பாதுகாக்க வேண்டும். நமது கடல் படையெடுப்பைக் கேட்டவுடன், நமது பகைவர்கள் – பாண்டியர்கள், ஈழத்தவர்கள், சாளுக்கியர்கள் அனைவரும் துணிவு கொண்டு போர் விரும்பி வரக்கூடும். அப்படி நேருங்கால், நீதான் இங்கு இருந்து சோழநாட்டைக் காக்க வேண்டும்.” என்றவன், தொடர்ந்தான்.
“மீண்டும் போர்த்திட்டத்துக்கு வருவோம். அனைவரும் இதைக்கவனியுங்கள்” என்ற ராஜேந்திரன் அந்த மந்திராலோசனை அறையின் சுவற்றில் தொங்கிய திரைச்சீலையை விலக்கச் சொன்னான். காவலர்கள் அதை விலக்க அங்கு ஸ்ரீவிஜய நாட்டு கடல் வழி குறிக்கப்பட்ட வரைபடம் ஒரு இருந்தது.
மன்னன், ”இந்த வரைபடத்தில் காணப்படுவது, ஒரு பசு மாட்டின் இரண்டு காம்புகள் போல இருப்பது. இதில் வலது பக்கம், அதாவது கிழக்கே இருப்பது மலாய் தீபகர்ப்பம். இடது பக்கம், அதாவது, மேற்கே இருப்பது சுவர்ணத்தீவு. பொதுவாக, சோழ வணிகக்கப்பல்கள், ஸ்ரீவிஜய நாட்டுக்குச் செல்லும்போது, சுவர்ணபூமித் தீவுக்கும், ஸ்ரீவிஜய (மலாய) தீபகற்பத்துக்கும் இடையே உள்ள நீரிணை (மலாக்கா) வழியாகச் சென்று சுவர்ணபூமியின் துறைமுகமான லயமூரி அல்லது ஸ்ரீவிஜயத்தின் துறைமுகமான கெடாய் இரண்டில் தான் செல்வது வழக்கம்.
நமது படையெடுப்பை அறிந்தவுடன், சங்கிராமன் மலாய் நாட்டில் தன் படைகளைக் குவித்துவைத்து நம்மைத் தாக்கக் காத்திருப்பான்.
அதே திட்டப்படி நமது கப்பல்கள் அதே பாதையில் போகும்” என்று சொல்லி சற்று நிறுத்தினான்.
ஒரு படைத்தலைவன் எழுந்து, “அப்படியானால், நாம் அவனது வலையில் நேரடியாக அல்லவா விழுவோம்?” என்று சந்தேகம் கேட்டான்.
ராஜேந்திரன் பதில் சொன்னான்.
“திட்டம் முழுவதையும் கேளுங்கள். சுவர்ணபூமியின் வட மேற்குப் பகுதியில் இருப்பது பான்சூர் (இன்றைய பாருஸ்) துறைமுகம். அங்கு நம் சோழ நாட்டு வணிகர்கள் ஏராளம் உள்ளனர். அங்கிருந்து தான் கற்பூரம் அகில உலகுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கற்பூரக்காட்டில், நரமாமிசம் தின்னும் காட்டு மிராண்டி மக்கள் வசித்து வருகிறார்கள். நமது வணிகர் அங்கு ஜாக்கிரதையாகவே வாழ்கின்றனர். சோழப்படைகளும் அங்கு வணிகரைப்போல அங்கு வாழ்ந்து நிஜ வணிகர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்து வருகின்றனர். அங்கு, மேலும் நமது படைவீரர்கள் அடுத்த இரண்டு மாதங்களில் அனுப்பப்படுவர். அது தான் நமது அடித் தளம். நமது கடற்படை முதலில் அங்கு போய் முகாமிடும். அங்கு நமக்குத் தேவையான உணவு, நீர் மற்றும் அத்தியாவசியமான பொருட்களை கப்பலில் ஏற்றிக்கொண்டு படையெடுக்கத் தயாராவோம்.
நமது 500 கப்பல்கள் மட்டும் முதலில் திட்டமிட்டபடி கெடாவை நோக்கிச் செல்லும். எஞ்சியிருக்கும் நமது பெரும்பான்மையான படை – அதாவது ஆயிரம் கப்பல்கள் சுவர்ணத்தீவிலிருந்து பிரிந்து (மலாக்கா) நீரிணையில் பிரிந்து தென்புறம் சென்று, ஸ்ரீவிஜய தீபகற்பத்தின் தெற்குமுனையைச் சுற்றி (இன்றைய சிங்கப்பூர் ஜலசந்தி) வந்து, பின் வடக்கு திரும்பிச் செல்லும். ஸ்ரீவிஜய நாட்டின் தலைநகரான பாலெம்பாங்க் துறைமுகத்தைத் தாக்கி, அங்கு இறங்கி, அங்கிருந்து நிலவழியாக ஸ்ரீவிஜய நாட்டைத் தாக்குவோம். இந்த ஆயிரம் கப்பல்கள் சுவர்ணத்தீவிலிருந்து பிரிந்து பாலெம்பாங்க் போக ஒருநாள் பிடிக்கும்.
கெடாவில் தான் நம்மை ஸ்ரீவிஜய மன்னன் எதிர்கொள்ள இருப்பான். நமது 500 கப்பல்கள் மெல்ல மெல்லச் சென்று கெடாவை நெருங்கும். அதைக்கண்ட ஸ்ரீவிஜய கடற்படை நம்மை நோக்கி வரத் தொடங்கும். மெல்ல நெருங்கிய நமது படை, மெல்லப் பின்வாங்கத் தொடங்கும். அந்நேரம் நமது ஆயிரம் கப்பல்கள் தீபகற்பத்தின் கிழக்குப் பகுதி போய்ச் சேர்ந்திருக்கும். அந்த சேதி கிடைத்தவுடன், ஸ்ரீவிஜயப்படை நம்மைத் தொடர்வதை விட்டு, மீண்டும் கிழக்குப்போக எத்தனிக்கும். அந்நேரம் நமது 500 கப்பல்களும், நம்மைத் தாக்க வந்த ஸ்ரீவிஜயக் கப்பல்கள் மீது பாய்ந்து எரியம்புகளால் தாக்கி, வாணவேடிக்கை செய்யும். மேலும் கற்பூரம் ஏற்றிய படகுகள் விரைவாகச் சென்று கெடாவை நெருங்கி, அந்தத் துறைமுகத்தைத் தாக்கும். தாக்கும் நேரத்தில், அந்தப்படகுகள் தீயைக்கக்கும். துறைமுகம் கற்பூரப்படகினால் எரிந்துபோகும். அந்த கற்பூர ஆரத்தி ஜோதியில் வீரலக்குமிக்கு பூஜை நடக்கும்.
இந்த இரண்டு பக்கத் தாக்குதலில், ஸ்ரீவிஜயம் துண்டாகும்” என்றான்.
“ஆஹா! அற்புதம்”, என்று அனைவரும் எழுந்து நின்று கரம் கொட்டினர்.
ராஜேந்திரன் மேலும் சொன்னான்:
“அடுத்தமாதம் நமது படையெடுப்பு நிகழும் மாதம். அப்பொழுது தென்மேற்குப் பருவக்காற்று துவங்கும் மாதம், அது நமது கடற்பயணத்துக்கு அனுகூலகமாக இருக்கும்” என்றான்.
‘என்னே ஒரு அற்புதத் திட்டம்’ என்று அனைவரும் வியந்தனர்.
மன்னனின் போர்க்கூட்டம் முடிந்தது.
மன்னனின் திட்டப்படியே, அடுத்த மாதம், மிகத் துல்லியமாக அந்தப் படையெடுப்பு நடந்தது.
இந்நாள் மலேசியாவின் வடபகுதியான கெடா மாநிலத்தில் அமைந்துள்ள பூஜாங் பள்ளத்தாக்குதான், தமிழ் வரலாற்றில் கூறப்படும் கடாரம் . இந்தக் கெடா சிகரம் (கடாரம்) கடலில் 100 மைல் தூரத்துக்கு அப்பால் இருந்து பார்க்கக் கூடியது.
இந்தப் போர் கடற்போராக மட்டுமல்லாமல் நிலத்திலும் நடைபெற்றது. ஒருபுறம் கடாரமார்க்கமாகவும், இன்னொருபுறம் நிலமார்க்கமாகவும் தாக்குதல் தொடுக்கப்பட்டது. ஸ்ரீவிஜயத்தலைநகரான பாலேம்பாங்க் நுழைவாசலில் வித்தியாதர தோரணம் என்ற புகழ்பெற்ற ‘போர் வாயில்’ இருந்தது. அது வந்தவர்களை வரவேற்கக் கட்டப்பட்டிருந்தது. பொன்னால் கட்டப்பட்டு, விலையுயர்ந்த மணிகளாலும் அழகுபடுத்தப்பட்டிருந்தது.
சோழவீரர்கள் அதை உடைத்தனர். கெடாவின் அரண்மனை சூறையாடப்பட்டது. மன்னன் சங்கராம விஜயத்துங்கவர்மன் சிறைப்படுத்தப்பட்டான்.
சோழப்படை அத்துடன் நிற்கவில்லை. அனைத்துத் துறைமுக நகர்களையும் வென்றது. அனைத்தும் மின்னல்வேகத்தில் நடந்தது. போரில் சங்கிராம விஜயோத்துங்க வர்மனின் படையில் இருந்த யானைகளையும், அந்த அரசன் சேமித்து வைத்திருந்த எண்ணற்ற செல்வங்களையெல்லாம் எடுத்துக் கொண்டார்கள். பிறகு சோழப்படை, சுமத்திராவின் கீழ்க்கரையில் உள்ள பனி அல்லது பன்னெய் என்ற ஊரை வென்றது. அடுத்து சோழப்படை மலேயா தீபகற்பத்தின் தென்கோடியில் பழைய சிங்கப்பூர் ஜலசந்திக்கு வடக்கே மலாயூர் என்ற பகுதியை கைப்பற்றியது. மாயிருடிங்கம், மாபப்பாளம், தலைத்தக்கோலம் (தாய்லாந்து), மானக்கவாரம்(நிக்கோபார் தீவு), இலாமுரி தேசம் அனைத்தையும் சோழப்படை வெற்றி கொண்டது.
சோழர்களால் கைப்பற்றப்பட்ட பிறகும், பரம்பரை மன்னர்களே அங்கு தொடர்ந்து ஆட்சி செய்ய அனுமதிக்கப்பட்டனர். அங்கு சோழக் குடியிருப்புகளையோ, படைகளையோ நிறுத்தவில்லை. மீண்டும் சங்கராம விஜயதுங்கவர்மனே மன்னனாக சோழர்களால் முடிசூட்டப்பட்டான் திறையாக, முறையாக, இவ்வளவு செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் ஆட்சி திரும்பக் கொடுக்கப் பட்டது.
இந்தச் சாதனையை இவனுடைய தமிழ் மெய்க்கீர்த்தி மிக விரிவாகச் சொல்கிறது.
“அலை நிறைந்த கடலின் நடுவே பல கப்பல்களை இராஜேந்திரன் அனுப்பினான்; கடாரத்தை ஆண்ட சங்கிராம விஜயோத்துங்க வர்மனையும், புகழ் படைத்த அவனுடைய படையில் இருந்த யானைகளையும் பிடித்துக் கொண்டான். நியாயமான வழியில் அந்த அரசன் சேமித்து வைத்திருந்த எண்ணற்ற செல்வங்களையெல்லாம் இவன் எடுத்துக் கொண்டான்; பரந்துவிரிந்திருந்த இந்த நகரத்தின் “போர் வாயில்” அருகேயுள்ள வித்தியாதரதோரணம் என்ற வளைவை வெற்றி முழக்கத்துடன் கைப்பற்றினான்.”
சோழப்புலி ஒன்று, கடல் தாண்டி, பிரம்மாண்ட வெற்றியை நிகழ்த்தியது. ராஜேந்திரன் உலகச் சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்றான். அதை எழுதியதால் நானும், அதைப்படிப்பதால் நீங்களும் அடையும் பெருமை அளவிடத்தக்கதா?
இராசேந்திரசோழனது மெய்க்கீர்த்தி “திருமன்னி வளர இருநில மடந்தையும்/ போர்ச்செயப் பாவையும் சீ்ர்த்தனிச் செல்வியும்/ தன்பெருந் தேவிய ராகி இன்புற” எனத் தொடங்குகின்றது. இம்மெய்க்கீர்த்தி இவன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டுக்களில்தான் முதன்முதலில் காணப்படுகின்றது என்று தி.வை. சதாசிவ பண்டாரத்தார் கூறியுள்ளார்.
முழு மெய்க்கீர்த்தி
-
திருவன்னி வளர விருநில மடந்தையும்
-
போர்ச்சயப் பாவையுஞ் சீர்த்தனிச் செல்வியுந்
-
தன்பெருந் தேவிய ராகி யின்புற
-
நெடிதிய லூழியு ளிடைதுறை நாடும்
-
தொடர்வன வேலிப் படர்வன வாசியும்
-
சுள்ளிச் சூழ்மதிற் கொள்ளிப்பாக்கையும்
-
நண்ணற் கருமுரண் மண்ணைக் கடக்கமும்
-
பொருகட லீழத் தரசர்த முடியும்
-
ஆங்கவர் தேவய ரோங்கெழின் முடியும்
-
முன்னவர் பக்கற் றென்னவர் வைத்த (10)
-
சுந்தர முடியு மிந்திர னாரமும்
-
தொண்டிரை யீழ மண்டல முழுவதும்
-
எறிபடைக் கேரளன் முறைமையிற் சூடும்
-
குலதன மாகிய பலர்புகழ் முடியும்
-
செங்கதிர் மாலையும் சங்கதிர் வேலைத்
-
தொல்பெருங் காவற் பல்பழந் தீவும்
-
செருவிற் சினவி யிருபத் தொருகால்
-
அரசுகளை கட்ட பரசு ராமன்
-
மேவருஞ் சாந்திமத் தீவரண் கருதி
-
இருத்திய செம்பொற் றிருத்தகு முடியும் (20)
-
பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட்
-
டொளித்த சயசிங்க னளப்பரும் புகழொடு
-
பீடிய லிரட்ட பாடி யேழரை
-
யிலக்கமு நவநிதிக் குலப்பெரு மலைகளும்
-
விக்கிரம விரர் சக்கரக் கோட்டமு
-
முதிர்பட வல்லை மதுரை மண்டலமும்
-
காமிடை வளைஇய நாமணைக் கோணமும்
-
வெஞ்சின வீரர் பஞ்சப் பள்ளியும்
-
பாசடைப் பழன மாசுணி தேசமும்
-
அயர்வில்லண் கீர்த்தி யாதிநக ராகவையிற் (30)
-
சந்திரன் றொல்குலத் திந்திர ரதனை
-
விளையமர்க் களத்துக் கிளையொடும் பிடித்துப்
-
பலதனத் தொடுநிறை குலதனக் குவையும்
-
கிட்டரஞ் செறிமிளை யொட்ட விஷயமும்
-
பூசுரர் சேருநற் கோசல நாடும்
-
தன்ம பாலனை வெம்முனை யழித்து
-
வண்டுறை சோலைத் தண்ட புத்தியும்
-
இரண சூரனை முரணறத் தாக்கித்
-
திக்கணை கீர்த்தித் தக்கண லாடமும்
-
கோவிந்த சந்தன் மாவிழிந் தோடத் (40)
-
தங்காத சாரல் வங்காள தேசமும்
-
தொடுகழற் சங்குகொ டடல்மகி பாலனை
-
வெஞ்சமர் வளாகத் தஞ்சுவித் தருளி
-
ஒண்டிறல் யானையும் பெண்டிர்பண் டாரமும்
-
நித்தில நெடுங்கட லுத்தர லாடமும்
-
வெறிமலர்த் தீர்த்தத் தெறிபுனற் கங்கையும்
-
அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச்
-
சங்கிராம விசையோத் துங்க வர்ம
-
னாகிய கடாரத் தரசனை வாகையும்
-
பொருகடல் கும்பக் கரியொடு மகப்படுத் (50)
-
துரிமையிற் பிறக்கிய பருநிதிப் பிறக்கமும்
-
ஆர்த்தவ னகநகர்ப் போர்த்தொழில் வாசலில்
-
விச்சா திரத்தோ ரணமு மொய்த்தொளிர்
-
புனைமணிப் புதவமுங் கனமணிக் கதவமும்
-
நிறைசீர் விசயமுந் துறைநீர்ப் பண்ணையும்
-
வன்மலை யூரெயிற் றொன்மலை யூரும்
-
ஆழ்கட லகழ்சூழ் மாயிரு டிங்கமும்
-
கலங்கா வல்வினை இலங்கா சோகமும்
-
காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும்
-
காவலம் புரிசை மேவிலிம் பங்கமும் (60)
-
விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்
-
கலைத்தக் கோர்புகழ் தலைத்தக் கோலமும்
-
தீதமர் பல்வினை மாதமா லிங்கமும்
-
கலாமுதிர் கடந்திற லிலாமுரி தேசமும்
-
தேனக்க வார்பொழில் மானக்க வாரமும் (65)
-
தொடுகடற் காவற் கடுமுரட் கடாரமும்
-
மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பரகேசரி வன்மரான
-
உடையார் ஸ்ரீராசேந்திர சோழதேவர்க்கு யாண்டு…”