திரைக்கதம்பம் -ஜனவரி 23 – சிறகு

  1. துணிவு

சாப்டு பாருங்க! சூப்பரா இருக்கும்! என்று அடிக்கடி சொல்லும்போதே இது தேறாது என்றொரு எண்ணம் எல்லோர்க்கும் வந்து விடும். அது போலத்தான் மச் ஹைப்பும் திரைப்படங்களுக்கு! இதற்கு முன்னால் எந்த உச்ச நடிகர் படங்களும், ஒரே நாளில் மோதாதது போலவும், இதுவே முதல் முறை என்றும் பம்மாத்து காட்டியதும், ஒரு மைனஸ் பாயிண்ட்! தல அஜீத் இருப்பதால் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் கன்டென்ட் அங்கலாய்ப்பில், எதை வேண்டுமானாலும் செய்தியாக வெளியிட்டு எரிகிற தீயில் நெய் வார்த்தன. படம் வெளிவந்ததும் தீ அணைந்து போயிற்று. ஆங்கில நாளிதழ்கள் ஜஸ்ட் ஆவரேஜ் என்று தீர்ப்பு சொல்லின. ‘தல’ ஆசாமிகள் வெள்ளையனே வெளியேறு ரகம் என்பதால், துரை பாசையை புறக்கணித்து விட்டனர். அதனால் அவர்களுக்கு நிதர்சனம் புரியவில்லை. கட் அவுட் கிழி! கொண்டாடு என்று பச்சன் ரகமாக செயல் பட்டார்கள். வெறும் மூணு ஸ்டார் கொடுத்த டைம்ஸ், கதை இல்லை என்று குதறி விட்டது. அதனால், படத்தை விட, அதிக ரத்தம் கொப்பளித்து விட்டது.

அப்படி கதை இல்லாத படம் தான் என்ன? வெறும் செய்திகளின் அடிப்படையில், ஒரு கருப்பு பண பதுக்கலை, தனியார் வங்கியில் நுழைந்து, வெளிக் கொண்டு வரும் கதை நாயகன். வெள்ளை தாடி! வெள்ளை கோட்டு சூட்டு! ஆங்காங்கு ரத்தக் கீற்றாக உதட்டு சாயம். இதற்கு பல கோடிகள் பட்ஜெட்.

முகநூல் போன்ற ஊடகங்களும், ஆன் தி ஸ்பாட் விமர்சனங்களும் சூப்பர் சூப்பர் என்று எடிட் செய்து போட, கல்லா கட்டுகிறது படம். முதல் பத்து நாட்களில் இருநூறு கோடிகள் வசூல். இனி அடுத்த அரைத்த மாவுக்கு தல ரெடி!

ஒன்று சொல்ல வேண்டும். அஜீத்தின் திரை ஆளுமை மறுக்க முடியாதது. ரஜினி வழியில் சட்டென்று ஈர்க்கிறார். கொஞ்சம் நடையை விட்டு விட்டு நடித்தால் ‘உல்லாசமாக’ இருக்கும்! மஞ்சு வாரியர் தான் ரியல் வாரியர். கையில் துப்பாக்கியும் சில தாவல்களும், கிடைத்த குறைந்த இடை வெளியில் ஈர்க்கின்றன.

பின் எது இந்தப் படத்தை ஓட வைக்கிறது? பர பர திரைக்கதை. அதிகம் யோசிக்க விடாமல் அகன்ற திரையை ‘ஆ’ என்று பார்க்க வைக்கிற சாகசம் ஹெச். வினோத்திற்கு கை வந்த கலை! அதனால் மூடு பனி போல வெற்றி. ஆதவன் கிரணத்தில் அதுவும் சீக்கிரம் கலைந்து விடும்!

#

  1. வாரிசு

குடும்பப் படம் என்று பட்டி தொட்டி வெட்டியென்று விளம்பரப்படுத்தப்பட்ட படம். அஜித் படத்தை விட ஐந்து மதிப்பெண் கூட கொடுத்திருக்கிறது டைம்ஸ் நாளிதழ். யூ ட்யூப் ஊடகங்கள் கழுவி ஊத்துகின்றன. சீரியல் போல இருக்கிறது என்று ஒரு குற்றச்சாட்டு. ஆனாலும் ஒரு வாரம் கடந்து, குடும்பப் பெண்கள் குழந்தைகளோடு படம் பார்க்கப் போவதாக ஒரு சர்வே சொல்கிறது. ரஜினி கதைகளைப் போல நாயகன் புறக்கணிக்கப்பட்டு, பின் உழைப்பால், அறிவால் முன்னேறி பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்கும் சுண்டக் குழம்பு கதை. அதை விஜய் எனும் கரிஸ்மாவால் ஈடு கட்ட முயன்றிருக்கிறார் வம்சி படிப்பள்ளி!

பெரும் தொழிலதிபரின் மூன்றாவது மகன் விஜய் ராஜேந்திரனுக்கு சொந்தக் காலில் நிற்க ஆசை! அப்பாவின் நிறுவனத்தில் சேராமல் தனித்து செல்லும் அவரை தந்தைக்கு வந்த பான்கிரியாட்டிக் புற்று நோய் திரும்ப அழைக்கிறது. முழுகும் கப்பலை அவர் எப்படி கரை சேர்க்கிறார் என்பது ஒன்லைன்.

அரசியலுக்கு வந்து விடுவாரோ எனும் ஹேஷ்யத்தில் ஒலி ஒளி ஊடகங்கள் அடக்கி வாசிக்கின்றன. விஜய்யின் காமெடி; நடனம்; ஸ்டண்ட் என்று சிலவற்றை மட்டும் ஹைலைட் செய்து விட்டு, கவனமாக கதையைப் பற்றி பேசுவதை தவிர்த்து விட்டன. பல கோடிகள் செலவில் எடுக்கப்பட்ட படத்திற்கு, இன்னும் சில லட்சங்கள் செலவு கூடினால் என்ன என்று கவர் செய்து விட்டார்களோ என்று தோன்றுகிறது. ஆனாலும் யூ ட்யூப் ஆசாமிகள் கட்சி பிரித்து கொண்டு, பிரித்து மேய்கிறார்கள். இது வேறு வகையில் ஆவலைத் தூண்டி விட்டு, ‘அப்படி என்னதான் இருக்கிறது படத்தில்?’ என்று பார்க்கும் ஆவலை வெகு சனத்திற்கு தூபம் போட்டு  விட்டிருக்கிறது இந்தப் படம்.

உண்மையில் சில அம்சங்கள் கவர்கின்றன! குறிப்பாக ராஷ்மிகா மண்டானா! அமிதாப் பச்சன் படத்தில் செமையாக நடித்த அம்மணிக்கு இங்கு மினி வேடம். ஆட்டம் போட மட்டும் காசு! யோகிபாபு அதிகம் அலப்பறை பண்ணாமல் நடித்தது வெகு பாந்தம். கலாய்க்க இரண்டாம் தர நடிகர்கள் இல்லை என்பதும் ஒரு காரணம். சரத்குமார், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த்(தெலுங்கு) ஷாம், பிரகாஷ் ராஜ் என்று ஏகத்துக்கு பரண் பட்டாளம். ஒரு ஆணியும் பிடுங்கப்படவில்லை என்பது உ.கை.நெ.கனி!

பிளாக் பஸ்டர்; சூப்பர் ஹிட்; என்று கால் பக்க நாளேடு விளம்பரங்கள் எரியூட்ட அடுத்த படத்திற்கு 120 கோடி என்று பயணிக்கிறார் தளபதி. ஒரு நடிகரின் மோசமான படங்கள் கூட, தயாரிப்பாளருக்கு நட்டம் ஏற்படுத்தவில்லை என்பதுதான் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கான விதி! அதை மாஸ்டர் அடைந்து விட்டாரா என்பது கோடி ரூபாய்க்கான கேள்வி!

#

  1. டிரைவர் ஜமுனா

ஐஸ்வர்யா ராஜேஷ் அற்புத நடிகை. ஆனாலும் ஒரு படத்திற்கு கோடி கேட்கிறார் என்றொரு வதந்தி. இது ஒரு திரில்லர் படம். கட்டக்கடைசி வரை நாயகி சூத்திரதாரி என்பதை மறைத்து, பின் கதையில் சில ஷாட்டுகளில், ஷார்ட்டாக சொல்லியதால் கிராம ரசிகனுக்கு புரியாமல் போய் விட்டது. செய்தி ஊடகங்கள் இதைக் கண்டு கொள்ளவே இல்லை.  அதிகம் மெனக்கெடாமல், மகிழுந்து ஓட்டிக் கொண்டிருக்கும் ஐஸைப் பார்த்து யாருக்கும் வேர்க்கவில்லை.

கதை என்ன? கூலிப்படையைக் கொண்டு அரசியல்வாதி மரகதவேல் கொலை செய்த தந்தையின் மரணத்திற்கு, பழி வாங்கும் மகள் ஜமுனா! இதைப் போல் எக்கச்சக்க கதைகள் ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும். பாடல் இல்லை என்பது ஆறுதல். ஆங்காங்கு நகைச்சுவையை தெளிப்பதாக எண்ணிக் கொண்டு தோற்றிருக்கிறது  படம். கொஞ்சம் கூட கிச்சு கிச்சு இல்லை.

கூலிப்படையில் ஒருவனாக ஜமுனாவின் தம்பி எனும் ‘அதிர்வு’ திருப்பம் ‘சே’ ஆகி விடுகிறது. நெடுஞ்சாலையில் பயணிக்கும் படம், ஒரு கொண்டை வளைவு கூட இல்லாத ஜாமூனாவாக இருப்பதும் அலுப்பு!

ஆஹா ஓடிடியில் வெளியாகி இருக்கும் படம் போஹா போல சன்னம் என்பது தான் ஃபைனல் தீர்ப்பு!

#

  1. உடன்பால்

செமை காமெடி படம். ஒரு முகமும் அறியாத்தவர்கள். எப்போதோ பாலகுமாராவில் பார்த்த காயத்ரி, இதிலும் சோக முகத்தோடு! ஆனாலும் திரைக்கதையும், பாயச முந்திரியாக தூவப்பட்ட நகைச்சுவை காட்சிகளும் வசனங்களும் புன்னகைக்க வைக்கின்றன. இந்தப் படத்தையும் செய்தி ஊடகங்கள் சட்டை செய்யவில்லை. பத்தோடு ஒன்று என்று புறம் தள்ளி விட்டன.

வள்ளலார் காம்ப்ளெக்ஸ் இடிந்து அதில் மாட்டிக் கொண்ட தந்தை இறந்து போனால் அரசு கொடுக்கும் இருபது லட்சம் கிடைக்கும் என்று கற்பனை செய்து கொள்ளும் அண்ணன் பரமுவும் தங்கை கண்மணியும். சேதாரம் இல்லாமல் திரும்பி வரும் அப்பா வினாயகம் வீட்டில் இறந்து போக, சவத்தை வள்ளலாரிடம் கொண்டு போய் போட்டு விட்டு இருபதை லவட்டலாம் எனும் திட்டத்தில் ஏகத்துக்கு சறுக்கல். கடைசியில் என்ன ஆச்சு என்பது க்ளைமேக்ஸ்!

சார்லி தன் சீனியாரிட்டியை நிறுவுகிறார். சுட்டிகள் இரண்டு செமையாக நடிக்கின்றன.  லிங்கா, சுப்பிரமணியபுரம் சசிகுமாரைப் போல இருக்கிறார். கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார். காமெடிக்கு விவேக் பிரசன்னா. அவருடைய சில டைமிங் வசனங்கள் சிரிக்க வைக்கின்றன. ஜாலியாக போகும் படத்தில் ஏதும் ரத்தக்களறி இல்லை. வன்முறை இல்லை. தனி மனித உளவியல் சரியான விகிதத்தில் கையாளப்பட்டிருக்கிறது.

ஒருவரை ஒருவர் கவிழ்க்க முற்படும் தருணங்கள், விசு படங்களை நினைவுக்கு கொண்டு வருகின்றன என்றாலும் இன்றைய தலைமுறைக்கு தேவையான படம். இயக்குனர் கார்த்திக் சீனிவாசன் அடுத்த வி.சேகர் ஆகலாம்.

நல்ல படங்களை அடையாளம் காட்டும் யூ ட்யூப் சேனல்கள் இந்தப் படத்தை போகிற போக்கில் விமர்சனம் செய்து விட்டு நகர்ந்து விட்டன. ஆஹா ஓடிடியில் வெளியாகி இருக்கும் படம் உண்மையில் ஆஹா தான்!

#

  1. வல்லவனுக்கு வல்லவன்

நல்ல நடிகராக அறியப்பட்ட பாபி சிம்ஹா, புதுமுகம் ஸ்ஸ்விதாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த படம், பல நாட்கள் கிடப்பில் போடப்பட்டு, இப்போது தான் வெளிவந்திருக்கிறது! கார்த்திக் சுப்பாராஜின் கம்பெனி நடிகை பூஜா தேவரய்யாவும் இதில் உண்டு! படம் பழைய பரணை வாசத்துடன் இருப்பதாக மூக்கைப் பொத்திக் கொண்டு நெட்டிசன்கள் சொல்கிறார்கள். செய்தி ஊடகங்கள் இதை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை என்பதே சற்று தாமதமாகக் கிடைத்த செய்தி!

எண்பதுகளில் வந்திருக்க வேண்டிய படம். சிம்ஹாவின் பாத்திரத்தில் புதுமை ஏதும் இல்லை! படத்தில் சேர்க்கப்பட்ட டார்க் காமெடி கிஞ்சித்தும் போணியாகவில்லை!

டைம்ஸ்,  சின்னக் குத்தூசியாக ஏழு வருடங்களுக்கு முன்பு வந்திருந்தால் ஒரு வேளை ரசிக்கும்படியாக இருந்திருக்கலாம் என்று உள் காயமாக எழுதி இருக்கிறது!

  1. எஸ்டேட் ( 2022)

அசோக்செல்வன், கலையரசன், ரம்யா நம்பீசன், சுனைனா என்று பெத்த நடிகர்கள். இருட்டில் எடுக்கப்பட்ட அமானுஷ்யம் என்பதால் ஒரு முகமும் தெரியவில்லை. தலைப்பை வேஸ்ட் என்று வைத்திருக்கலாம்!

டைம்ஸ் இப்படி ;சொல்கிறது: முதல் பாதி எதையோ எதிர்பார்க்க வைத்து க்ளைமேக்ஸில் குப்புற தள்ளி விடுகிறது சரியாக எழுதப்படாத திரைக்கதை!

இசையில் மட்டும் திரில்லிங்கை வச்சா போதுமா என்கிறார் ஒரு விமர்சகர்! குழப்பங்களுக்கு தீர்வு கொடுக்க முடியாம குழம்பி போயிட்டார் இயக்குனர் என்பது இன்னொரு தீர்ப்பு!

#

 

7.பிகினிங்

ஒரு திரையில் இரண்டு கதைகள் அக்கம் பக்கமாக என்பது புதுமை. இதன் இயக்குனர் ஜகன் விஜயா, திரைத்துறைக்கு வருவதற்கு முன், ஒரு நிறுவனத்தில் சிசிடிவி திரைகளை கண்காணிக்கும் வேலையில் இருந்தாராம். அந்த அனுபவம் ஸ்பிளிட் ஸ்கிரீன் எனும் இந்தப் படைப்பை தர உதவியிருக்கிறது. புதுமுகம்  வினோத் கிஷன் மனநலம் குன்றிய இளைஞராக (ஸ்பாஸ்டிக்) நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

புதுமை என்பதைத் தாண்டி இதன் பிரதான கலைஞர்கள் இந்தப் படத்தைக் காப்பாற்றி இருக்கிறார்கள் என்கிறது டைம்ஸ்!

மாலை மலர், நாயகன் நாயகி பாத்திரங்களைக் கொண்டாடி இருக்கிறது. படத்திற்கு எழுபது விழுக்காடு மதிப்பெண்களும் கொடுத்திருக்கிறது!

  1. லத்தி

விஷாலுக்கு குழி தோண்டிய படம். இடைவேளை வரை பரவாயில்லை ரகம். பின்பாதி விஷாலின் நடிப்பையும் அடிப்பையும் காட்ட இழுக்கப் பட்டதால் நேற்று மென்ற சூயிங்கம் போல இழுவையாக படம்!

  1. டி எஸ் பி

ஜஸ்ட் பாஸ் நாப்பது மார்க். விஜய் சேதுபதி சம்பளக் கோடிகளில் கவனம் கொண்டு நல்ல கதைகளைத் தேடி நடிப்பதை கோட்டை விட்ட படம். பத்து வருடங்களுக்கு முன்னால் வந்திருக்க வேண்டிய படம் என்கிறது டைம்ஸ்! ஒளிப்பதிவும் இசையும் நாயகனை முன்னிறுத்தும் தலையாய பணியைச் செய்து தோற்றுப் போயிருக்கின்றன. விஜய் சேதுபதி கொஞ்சம் ஓய்வெடுத்து யோசிக்கலாம் என்கிறார் ஒரு சினிமா ஆர்வலர்.

  1. செம்பி

மைனா புகழ் பிரபு சாலமனின் படம். கோவை சரளாவிற்கு அழுத்தமான வீராயி பாத்திரம். சில பெருந்தலைகளால் ஊரை விட்டு விரட்டப்பட்டும் செம்பி எனும் பத்து வயது சிறுமியும் பாட்டியும். சமூகம் அவர்களுக்கான நியாயத்திற்கு போராடுமா?

பேத்தி செம்பிக்கு எப்படி தேனெடுக்க வேண்டும் என்று பாட்டி வீராயி சொல்லும் காட்சியில் நடிப்பில் அதகளம் செய்திருக்கிறார் கோவை  சரளா!

அன்பு பேருந்தில் தப்பி செல்லும் செம்பியும் பாட்டியும்! உடன் பயணிக்கும் ஒவ்வொரு பயணியும் விதவிதமான குணச்சித்திரம். பிரபு சாலமன் இன்னொரு மைனா எடுத்திருக்கிறார் என்று கூடச் சொல்லலாம்!

ஜீவனின் ஒளிப்பதிவும் நிவாஸ் பிரசன்னாவின் இசையும் படத்தை பல உயங்களுக்கு கொண்டு செல்கின்றன. சரளாவிற்கு விருது கிடைக்கலாம்!

(என் முகநூல் பதிவு)

மீண்டும் மைனா டெம்ப்ளேட்டில் ஒரு சரி விகிதமான திரில்லர். இம்முறை அமலாவுக்கு வயதாகி கோவை சரளா ஆகிவிட்டார். ஆனாலும் அந்த கொடைக் காடுகளும் மாசற்ற சூழலும் படத்தை வேறு கொண்டை வளைவுக்கு எடுத்து செல்கிறது. சரளாவைத் தாண்டி அஸ்வின் குமார் லட்சுமிகாந்தன் கவர்கிறார். செம்பியை போட்டு தள்ள வரும் கும்பலும், அதிலிருந்து தப்பிக்க அவள் பயணிப்படும் ‘அன்பு’ பேருந்தும் கூட படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக மாறியிருப்பது பிரபு சாலமனின் டச். பஸ் பயணிகள் ஒவ்வொருவரும் ஒரு குணச்சித்திரம். மனதில் பதியும் நல் சித்திரம்.

 

11.ஏஜெண்ட் கண்ணாயிரம்

தெலுங்கு படம் ஏஜெண்ட் சாய் சீனிவாச ஆத்ரேயாவின் கல்லா கட்டலைப் பார்த்து, சந்தானம் சுட்டுக் கொண்ட படம். திரைக்கதையில் தவிர்க்க வேண்டிய விசயங்களை புகுத்தி காமெடியா சீரியஸா என்று சீரியஸாக யோசிக்காமல் எடுத்த படம், வேகாத ஒரு பக்க தோசையாக மாறி இருக்கிறது. டைம்ஸ் கொடுத்தது நாப்பது மார்க். எடிட்டிங் கத்தரிக்கு சாணை பிடிக்க வேண்டுமோ என்று பல காட்சிகளில் தவளைப் பாய்ச்சலாக எகிறி ரசிகனை மண்டையை பிய்த்துக் கொள்ள வைத்திருக்கிறது படம்.

சூப்பர் ஸ்டார்களுடன் காமெடிக்கு திரும்ப வேண்டிய தருணம் வந்தாச்சு சந்தானத்திற்கு!

12.வரலாறு முக்கியம்

வெகு நாட்களுக்குப் பிறகு ஜீவா படம். இயற்கை, கற்றது தமிழ் படங்களில் நடித்த ஜீவாவா இது என்று வருத்தத்துடன் பார்க்க வேண்டிய படம். வயது வந்தவர்களுக்கு மட்டுமான அடல்ட் காமெடி கதை என்று எடுத்து, ஜன்னல் ஜாக்கெட் கூட இல்லாமல் தைத்திருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் ராஜன். க்ளைமேக்ஸ் பில்ட் அப், பேஸ்மென்டைத் தாண்டவில்லை என்பது தான் தீர்ப்பு! ஜீவா மோசமான கதையில் கடுமையான உழைப்பைக் கொட்டி இருக்கிறார். ஆனால் எவ்வளவு பாலீஷ் போட்டாலும், அது வெறும் கல் என்பதை அவர் உணரவேயில்லை என்கிறது இந்தியா டைம்ஸ் ஊடகம்!

#

  1. ராங்கி

குந்தவை திரிஷா திரில்லர்! ஃபைவ் ஸ்டாரில் பார்த்தது போலவே இருக்கிறார் இந்த காயகல்ப அழகி! கதை ஏ.ஆர்.முருகதாஸ். இயக்கம் அவர் சிஷ்யன் எம்.சரவணன். பரபரவென திரைக்கதை; முகநூல் நட்பில் இணையும் லிபியா தீவிரவாத இளைஞன் ஆலிம் என்று போகும் வித்தியாச முடிச்சு; சின்ன பாவங்களில் கட்டிபோடும் திரிஷை என செம கலக்கல். குருவின் ‘துப்பாக்கி’ படத்தில் வரும், மும்பை தெருக்களில் தீவிரவாத வேட்டை என்பது போல, இதில் லிபியாவின் தெருக்களில் ஒரு துரத்தல். சில சென்டிமென்ட் காட்சிகளும் பாயசத்தில் முந்திரி!

இந்தியா டைம்ஸ் அழகான திரில்லர் என்று சான்றிதழ் கொடுத்திருக்கிறது! எழுபது விழுக்காடு மதிப்பெண்கள்! பார்த்து ரசிக்கலாம்! இந்தியன் எக்ஸ்பிரஸ் மாறுபடுகிறது! ராங்கி லாஜிக் மறந்த அசட்டுத்தனமான படம்! குந்தவைக்குப் பிறகு இப்படி ஒரு படத்தில் நடிக்க வேண்டுமா திரிஷா எனும் முத்தாய்ப்பும் வைக்கிறது!

இந்தியா டுடே, ரிடிகுலஸ் மொமென்ட்ஸ் என்றொரு பதத்தை பயன்படுத்துகிறது. நம்பமுடியாத..சாத்தியம் இல்லாத பல தருணங்களைக் கொண்டதால் முனகலுடன் முடிகிறது படம் என்பது அதன் விமர்சனம்.

  1. பத்தான் ( தமிழ் மொழி மாற்று படம்)

ஷாருக் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இரண்டரை மணி நேர பரபர திரைக்கதை! ரசிகர்களை மொத்தமாக அள்ளி முடிந்து கொண்ட கிங் கான்! இந்திய அமைப்பு ரா அனுப்பும் ஜவான் பத்தான்; ஐஎஸ் ஐ தரப்பிலிருந்து கவர்ச்சி குறையாத தீபிகா படுகோன். இந்திய 007 படத்திற்கான அத்தனை கலவைகளும் சரியான விகிதத்தில். ஆனால், சமயத்தில் கொட்டாவி வருவதைத் தவிர்க்க இயலவில்லை என்கிறது இந்திய எக்ஸ்பிரஸ்! நல்லா தூங்கிட்டு வாங்க என்று சொல்லியிருக்கலாம் ஷா கான்! சல்மான் கானின் டைகர் படத்தை ஒட்டியிருக்கிறது என்றொரு விமர்சனமும் உண்டு! இயக்குனர் சித்தார்த் ஆனந்தின் திறமையை ஒட்டு மொத்த ஊடகங்களும் கொண்டாடுகின்றன.

இதுவரை 750 கோடி வசூலாம்! ஆயிரத்தை தொட்டு விடுமாம். பத்தான் கெத்தான் தான் போல!

  1. தி கிரேட் இண்டியன் கிச்சன்

முதல் பார்வையில் மலையாள ஒரிஜினல் சற்று ஈர்ப்பில் கூடுதலாக இருந்ததோ எனும் சந்தேகம் ரசிகனுக்கு வரலாம். அதை தள்ளி வைத்து விட்டுப் பார்த்தால் இது ஒரு நல்ல படம். மலையாளத்தில் பட்டையைக் கிளப்பிய நிமிஷா சஜயனும் சூரஜ் வெஞ்சரமூடுவும் இதில் ஐஸ்வர்யா ராஜேஷாகவும் ராகுல் ரவீந்திரனாகவும் மாறியிருப்பது தமிழுக்கு நட்டமில்லை. சரியாகவே பாத்திரத்தில் பொருந்திப் போகிறார்கள் இருவரும். இணைப் பாத்திரங்கள் இன்னும் செறிவாக நடித்திருக்கலாம் எனும் குறை உள்ளூரத் தோன்றினாலும் தமிழுக்கு இது ஒரு செப்பேடு! பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவும் லியோ ஜான் பாலின் எடிட்டிங்கும் மலையாளப்  பரபரப்பை தக்க வைத்தது வெற்றிக்கு அறிகுறி.

இந்தியா டைம்ஸ் சொல்கிறது: மூலக்கதையை நீர் சேர்க்காமல் அப்படியே கொண்டு வந்ததில். ஆர். கண்ணனின் இயக்கத்தில் இது ஒரு அழுத்தமாக படமாக மாறியிருக்கிறது. ஒரிஜினலைப் பார்த்தவர்களுக்கு இது கொஞ்சம் கைவிட்ட படமாகத் தெரியும் என்பது இன்டியா டுடேயின் விமர்சனம்.

  1. பொம்மை நாயகி

பா.ரஞ்சித்தின் குறியீடுகளை அழுத்தமாக பதிவு செய்யப்பட்ட படம். தயாரிப்பு மட்டும் தான் அவர் என்றாலும் அவருடைய சிஷ்யர் ஷான் தன் இயக்கத்தில் இதை வெளிப்படுத்த தவறவில்லை. சுவரில் ஒரு வாசகம்: நான் சாகடிக்கப்பட்டாலும் தோற்கடிக்கப் பட மாட்டேன் என்பது பா.ரஞ்சித் முத்திரை தான்! குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி சட்டென்று மனதில் சம்மணம் போட்டு உட்கார்ந்து விடுகிறாள். அடுத்து குட்டிப் பெண்ணின் தாயாக வரும் சுமத்ரா! நெஞ்சு நிறைய சோகம் கொப்பளிக்கும் ஒரு பாத்திரத்தை வெகு இயல்பாக செய்திருக்கிறார் அவர். யோகி பாபுவைப் பொறுத்தவரை இதுவும் ஒரு மண்டேலா மாதிரியான பாத்திரம் தான் என்றாலும், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ என்று அவ்வப்போது தோன்றுகிறது. கே எஸ் சுந்தரமூர்த்தியின் இசை இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பலம் என்பதில் ஐயம் ஏதுமில்லை. முதல் அரை மணிநேரம் கதை துவங்கவே இல்லை என்பது இந்தப் படத்தின் முதல் பலவீனம்! துணைக் கதை மாந்தர்கள் யாருமே நம்மை ஈர்க்கவில்லை என்பது இரண்டாவது வீனம். இதைக் களைந்து விட்டிருந்தால் இது இன்னமும் ரசிகனை ஈர்த்திருக்கும் என்பது தான் வெகு சன ரசிகனின் தீர்ப்பு.

விளிம்பு நிலை மக்களின் நியாயத்திற்கான தொடர் போராட்டம் தான் களம்! இதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது  படம் என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ்! மெல்ல தொடங்கி உணர்வுகளின் உச்சம் தொடுகிறது இந்தப் படம் என்று சொல்கிறது தி ஹிந்து! யோகி பாபுவுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறது!

 

  1. ரன் பேபி ரன்

ஆர்.ஜே. பாலாஜியின் காமெடி கலக்காத திரில்லர் படம்! முதல் பாதி பரபர திரைக்கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது.  இதற்கு முழு முதற் காரணம் எடிட்டர் மதனின் கத்தரி! அனாவசிய நீட்டல்கள் இல்லாதது டெம்போவை தடம் புரளாமல் பார்த்துக் கொள்கிறது. பாலாஜியும் ஐஸ்வர்யா ராஜேஷும் கொடுத்த பாத்திரங்களை சரியாக உள்வாங்கி நடித்திருக்கிறார்கள். சாம் சி.எஸ் இசை படத்தின் தன்மையை மீறாமல் இருப்பது இதம். இடைவேளைக்கப்புறம் படம் தடுமாறுகிறது. உண்மைக்கு நெருக்கமில்லாத லாஜிக் மீறல் படத்தில் உண்டு! பல கேள்விகள் பதில் சொல்லப்படாமல் கடந்து போகின்றன. ஆனாலும் திரில்லர் ரசிகர்களுக்கு பிடிக்கக் கூடிய படமாக இது இருக்கும்!

நல்ல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக இருப்பதாக சொல்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ். லகுவாக நகைச்சுவை பாத்திரத்திலிருந்து இந்த திரில்லர் நாயகனுக்கு மாறியிருக்கிறார் ஆர்.ஜே. பாலாஜி.

  1. மைக்கேல்

பழி வாங்கும் கதை கதம்பத்தில் இதுவும் ஒரு மருவு!  கிரன் கவுசிக் ஓளிப்பதிவில் காட்சிகள் ரத்தம் தெறிக்க, போதாது என்று கிராபிக்ஸில் சிகப்பை மட்டும் அள்ளி தெளித்திருக்கிறது டி ஐ டீம்! சந்தீப் கிஷன் இன்னும் உயரம் தொடலாம்..ஆனால் பாத்திரம் எழுதப்பட்ட விதம் முழுமையில்லை என்பதால் அவரால் எட்ட முடியவில்லை. சாம் சி.எஸ்ஸின் இசை படத்திற்கு தேவையான பங்களிப்பு. ‘நீ எனக்குப் போதுமே’ மெலடியாக சில வாரங்களுக்கு நம் காதுகளில் ஒலிக்கும். விஜய் சேதுபதி, கவுதம் மேனன், வரலட்சுமி சரத்குமார் போன்றவர்களின் அனுபவம் கெத்தாக படத்தில் தெரிகிறது. இந்தப் படத்தின் திரைக்கதை, காட்சிகளைப் பொறுத்தவரை ஒரு மாஸ் ஹீரோ நடிக்க வேண்டிய படம். சந்தீப் கிஷன் இதில் ஒட்டவில்லை என்பதே விமர்சகர்களின் கருத்து.

டைம்ஸ் ஆஃப் இந்தியா: திரில்லான கதை. சிறப்பான இயக்கம்.

துணிவான முயற்சி என்பது ஹிந்துஸ்தான் டைம்ஸின் கருத்து!

ரசிகனை சீட்டு நுனியில் வைப்பது ஒரு ரகம். எது நடந்தாலும் கவலையில்லை என்று அசிரத்தையாக உட்கார வைப்பது இன்னொரு ரகம். மைக்கேல் இதாகவும் இல்லாமல் அதாகவும் இல்லாமல் நடுவாந்திரத்தில் இருப்பதாகச் சொல்கிறது தி ஹிந்து!

மொத்தத்தில் ஜஸ்ட் பாஸ் தான் மக்களே!

  1. தலைக்கூத்தல்

இது போல ஒரு சிறு படம் கே டி என்கிற கருப்புதுரை வந்திருக்கிறது. அதேபோல பாரம் எனும் கலைப்படமும் இதைத்தான் பேசியது!

கிராமத்தில் ஒரு வழக்கம் உண்டு. வயதான பெற்றோரை தலையில் எண்ணை தடவி ஊற வைத்து குளிர் நீரைக் கொட்டி நோயாளி ஆக்கி சாகடிப்பது தலைக்கூத்தல். சமுத்திரக்கனியும் வசுந்தராவும் அழுத்தமாக மனதில் பதிய, பரியேறும் பெருமாள் புகழ் கதிர் பின்னூட்ட காட்சிகளில் கவர்கிறார் என்பது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சனம். படத்தின் குறை: இம்மாதிரி அழுத்தமான கதைகளை இயக்குபவர்கள், திரைக்கதையை ஒரு கலைப்பட பாணியில் அமைத்து விடுவது தான்! காசு கொடுத்து அழுவதற்கு யாரும் தயாரில்லை என்பதால் இம்மாதிரி படங்கள் போணியாவதில்லை.

படம் நடுவே பாரதிராஜாவின் முதல் மரியாதை பற்றிய நினைவும் வந்து போகிறது. அதோடு எந்தவித திருப்பங்கள் இல்லாத எதிர்பார்க்கக் கூடிய காட்சிகள் அடுத்தடுத்து வருவது இந்தப் படத்தின் பலவீனம். ஒரு நல்ல கதையை அழுத்தமாகச் சொல்லத் தவறி விட்டார் இயக்குனர் ஜெயப்பிரகாஷ்!

தி ஹிந்து: தந்தையை கட்டாய சாவிலிருந்து காப்பாற்ற மகன் நடத்தும் போராட்டம் உண்மையிலே மனதைப் பிசைகிறது!

நெருங்கி வராமல் கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்கிறது இந்தப் படம் என்கிறது கலாட்டா டாட் காம்!

பார்வையாளனை நெகிழ்ச்சியில் மூழ்கடிப்பதில் வெற்றி கண்டிருக்கிறது என்பது இந்தியன் எக்ஸ்பிரஸின் வாதம்.

#

 

 

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.