திரை இசைக் கவிஞர் – ஆலங்குடி சோமு- முனைவர் தென்காசி கணேசன்

 

இதே நாளில் அன்று | Dinamalar Tamil News

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை

ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை

 

ஆலங்குடி சோமு அவர்களின இந்த வரிகளைப் பார்த்த, கவிஞர் முத்துக்கூத்தன் , தான் இந்த வரிகளைத் தொகையராவாக உப்யோகிக்கலாமா என்று கேட்க, கவிஞரும் சரி என்று கூற, அந்தப் பாடல் தான் ஆடிவா ஆடிவா என்று, கே வி மகாதேவன் இசையில், டி எம் எஸ் பாட, பட்டி தொட்டி எல்லாம் ஒலித்தது.

ஆலங்குடி சோமு பாடல் வரிகளில் அழகான உவமைகளைக் கையாண்டிருப்பார். நடிகர் திலகம் நடித்து, மிகப் பெரிய வெற்றி பெற்ற சொர்க்கம் படத்தில் இடம் பெற்ற பாடல் அந்தக் காலத்தில் வானொலியில் தினமும் ஒலித்தது. பணக்காரக் கனவு என்பதனால, பாடல் முழுவதும் விலை உயர்ந்த பொருள்களை வார்த்தைகளாக எழுதிஇருப்பது கவிஞரின் சிறப்பு. அந்தப் பாடல் –

பொன்மகள் வந்தாள்

பொருள் கோடி தந்தாள்.

இந்தப் பாடலில், பொன்மகள், பொருள் கோடி, பொங்கும் தேன், பூமேடை, முத்துக்கள், வைரம், செல்வத்தின் அணைப்பு, வெல்வட்டின் விரிப்பு – முத்தாய்ப்பாக செல்வத்தின் உருவாம் திருமகள் சம்மதம் என பயன்படுத்தியிருப்பது மிகச்  சிறப்பு.

அதேபோல,

மலருக்குத் தென்றல் பகையானால்

அது மலர்ந்திடக் கதிரவன் துணை வேண்டும்

நிலவுக்கு வானம் பகையானால்

அது நடந்திடவே இங்கு வழி ஏது ,

கண்ணுக்குப் பார்வை பகையானால்

அதைக் கருத்தால் உணர்த்திட வழி உண்டு

பெண்ணுக்குத் துணையே பகை ஆனால்

அந்தப் பேதையின் வாழ்வினில் ஒளி ஏது ,

 என உவமைகளால் வடித்திருப்பார்.

 

தனது தாய் மறந்த சோகத்தை, அடுத்து வந்த திரைப்படப் பாடலில்,

மலை சாய்ந்து போனால் சிலை ஆகலாம்

மரம் சாய்ந்து போனால் விலை ஆகலாம்

மலர் சாய்ந்து போனால் சரம் ஆகலாம்

ஏழை மனம் சாய்ந்து போனால் என்ன செய்யலாம்

என்று எழுதி இருப்பார்.

 

காதல் என்பது தேன்கூடு

அதை கட்டுவதென்றால் பெரும்பாடு ,

 

ஆண்டவன் உலகுக்கு முதலாளி

அவனிடம் நான் ஒரு தொழிலாளி  –

 

எண்ணப் பறவை சிறகடிக்க

விண்ணில் பறக்கின்றதா 

 

தாயில்லாமல் நானில்லை

தானே எவரும் பிறந்ததில்லை

போன்ற பாடல்களின் வரிகள்  இவரின் கவித்துவதிற்கு ஒரு உதாரணம் எனக் கூறலாம்.

இளையராஜா இசையில் கூட, பதினாறு வயதினிலே படத்தில் – செவ்வந்திப் பூவெடுத்து என்ற பாடலை எழுதினார். உடல் நிலை சரி இல்லாததால், இன்னும் சில பாடல்கள் எழுத முடியாமல் போனது என்று கவிஞரின் மகள் திருமதி காவேரி அவர்கள், கூறுவார்கள்.

சில வருடங்களுக்கு முன், சென்னை எப் எம் வானொலிக்கு,  நானும், கவிஞரின மகளும் இணைந்து ஒரு மணி நேர நிகழ்ச்சியாக, கவிஞரின் பாடல்களைப் பற்றிப் பேசி, ஒலிபரப்பியது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இவரின் பாடல்களில் சில

1932-ஆம் ஆண்டு பிறந்தவர். திரைக்கதை எழுதவேண்டுமென்ற ஆவலோடு திரையுலகை நாடி வந்த சோமுவுக்கு பாட்டெழுதும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தவர் இவரது பள்ளித்தோழனும், பக்கத்து ஊர்க்காரருமான கவிஞர் புரட்சி தாசன். சோமுவைத் தயாரிப்பாளர் சின்னப்பா தேவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.

முதற்பாடல் 1960-இல் வெளிவந்த ‘’யானைப்பாகன்’’ திரைப்படத்தில் ஏ.எல்.இராகவனும், எல்.ஆர்.ஈஸ்வரியும் இணைந்து பாடிய ’ஆம்பளைக்குப் பொம்பளை அவசியந்தான்’’ என்ற பாடல்.

 ‘கொங்கு நாட்டுத் தங்கம்’ படத்துக்காக ’கந்தா உன் வாசலிலே கார்த்திகைத் திருநாள்’, ‘கலையரசி’ படத்தில் ’நீல வானப் பந்தலில்’, ’காஞ்சித் தலைவன்’ படத்தில் ‘அவனியெல்லாம் புகழ் மணக்கும் அம்மன் அருள்’, பி.பானுமதி பாடிய ’மயங்காத மனம் யாவும் மயங்கும்’ போன்ற பாடல்கள் ஆலங்குடியாரின் பிரபலமான பாடல்களாகும்.

‘தொழிலாளி’ படத்தில் ‘ஆண்டவன் உலகத்தின் முதலாளி’ என்ற பாடல் பொதுவுடமை, சகோதரத்துவம், ஒற்றுமை என்பவற்றை அழகாக எழிய தமிழில் எடுத்துக் கூறிய பாடல்.

1965-ஆம் ஆண்டு 10 படங்களுக்குப் பாடல் எழுதும் சந்தர்ப்பம் அமைந்தது. ‘இரவும் பகலும்’, ’எங்க வீட்டுப் பிள்ளை’, ‘ஒரு விரல்’, ‘கார்த்திகை தீபம்’, ‘எங்க வீட்டுப் பெண்’, ’பூஜைக்கு வந்த மலர்’, ‘நாணல்’, ’நீர்க்குமிழி’, ‘விளக்கேற்றியள்’ என்பவை . 

நடிகர் எஸ்.ஏ.அசோகன் பாடிய ஒரே பாடலான, ‘இறந்தவன சுமந்தவனும் இறந்திட்டான், அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்’ , நல்ல தத்துவப் பாடல்.

 டி .எம்.எஸ்.பாடிய, ஜெய்சங்கர் அறிமுகப் படமான இரவும் பகலும் படத்தில் வந்த, இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்’, உள்ளத்தின் கதவுகள் கண்களடா என்ற  பாடல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றப் பாடல்களாகும்.

‘எங்க வீட்டுப் பிள்ளை’க்காக இவர் எழுதிய எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினருடன் பாடிய ‘கண்களும் காவடிச் சிந்தாகட்டும், காளையர் நெஞ்சத்தைப் பந்தாடட்டும்’ என்ற பாடலை எழுதித்தரும்படி கேட்டவுடன் ஏழே நிமிடங்களில் எழுதிக்கொடுத்தார் ஆலங்குடி சோமு, என்பார்கள்.

‘குடியிருந்த கோயில்’ படத்தில் இவர் எழுதிய ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்’ என்ற டி..எம்.எஸ், பி.சுசீலா பாடிய பாடலைக் கேட்டு ரசிக்காத உள்ளங்கள் இல்லையெனலாம். இதே படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ‘துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை’ என்ற பாடலும் அன்றைய காலத்தில் மட்டுமல்ல, இன்றைக்கும், ரசிகர்களைத் துள்ளி ரசிக்க வைக்கிறது.

‘காதல் படுத்தும் பாடு’, ‘சாது மிரண்டால்’, ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’, ‘செல்வம்’, ‘தேன் மழை’, ‘நான் ஆணையிட்டால்’,  ‘காவல்காரன்’, ‘அரசகட்டளை’, ‘பக்தப்ரஹலாதா’ போன்ற படங்களுக்கு இவர் பாடல்கள் எழுதினார்.

டி. எம்.எஸ். பாடிய ‘அடங்கொப்புறான சத்தியமா நான் காவல்காரன்’ என்ற பாடல் மிக மிகப் பிரபலமானது. இதே படத்தில் மற்றொரு பாடல் ‘கட்டழகுத் தங்க மகள் திருநாளோ, அவள் கிட்டே வந்து கட்டி முத்தம் தருவாளோ’ என்ற பாடலும் மிகப் பிரசித்தம் பெற்றது.

‘கணவன்’, ‘கண்ணன் என் காதலன்’, ’காதல் வாகனம்’, ‘சத்தியம் தவறாதே’, ‘தெய்வீக உறவு’, ‘பொம்மலாட்டம்’  எனப் பல படங்கள்., பொம்மலாட்டம் படத்தில் , வி குமாரின் இசையில், சுசீலா பாடிய ‘மயக்கத்தைத் தந்தவன் யாரடி மணமகன் பேரென்ன கூறடி’, பாடல் ரசிகர்களை மயங்கச்செய்தது.

‘அடிமைப்பெண்’, ‘அத்தை மகள்’, ’கன்னிப்பெண்’, ‘மனசாட்சி’ ‘பத்தாம் பசலி’, ‘சொர்க்கம்’, குமரிக்கோட்டம்’ ‘உனக்கும் எனக்கும்’, ‘வரவேற்பு’, ‘திருமலை தெய்வம்’ ‘பொன் வண்டு’ ‘இதயம் பார்க்கிறது’, ‘தாய் பிறந்தாள்’, ‘திருமாங்கல்யம்’ ,‘பணம் பெண் பாசம்’, ’ஆசை 60 நாள்’, ’மழை மேகம்’, ’16 வயதினிலே’, ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ ஆகிய படங்களுக்குப் பாடல்கள் எழுதினார்.

1960 தொடங்கி, 1997 வரை 35 ஆண்டுகளில் எண்பது படங்களுக்கு சுமார் 200 பாடல்கள் எழுதியுள்ளார் ஆலங்குடி சோமு. இவர் கடைசியாக  ‘பொற்காலம்’ படத்திற்கு எழுதியது 1997-இல் வெளிவந்தது.

பிற்காலத்தில் பாரிஸவாத நோயினால் பாதிக்கப்பட்டு மறைந்த இவர் கே.பாலசந்தரின் இயக்கத்தில் நாகேஷ், ஜெமினிகணேஷ், ராஜஸ்ரீ, நடித்த ‘பத்தாம் பசலி’ என்ற படத்தையும், ஜெய்சங்கர், ஜெயகௌசல்யா, ஜே.பி.சந்திரபாபு, நடித்த ‘வரவேற்பு’ என்ற படத்தையும் சொந்தமாக தயாரித்தார். இவ்விரு படங்களும் வெற்றி பெறவில்லை. வரவேற்பு படம் தேவையற்ற அரசியல் பிரச்சினைகளையும் இவருக்கு உருவாகியது.

இந்தப் படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும, பத்தாம் பசலியில் இடம் பெற்ற ‘அம்மாடி எம்புட்டு தூரம் நடக்குறது’, ‘வெள்ளை மனம் கொண்ட பிள்ளையொண்ணு’, ’போடா பழகட்டும் ஜோடி’, ‘பத்தாம் பசலி மாமா…. மாமோய், ஆகிய பாடல்கள் , இசை அமைப்பாளர வி குமார் இசையில், ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. அது போல ‘வரவேற்பு’ படத்தில் இடம்பெற்ற ‘பொன் வண்ண மாலையில் நீ தொடும்போது’, ‘வரவேண்டும் மகராஜா தரவேண்டும் புதுரோஜா’, ‘ஆடல் அரங்கம் எந்தன் விழிகள்’ ஆகிய பாடல்களும் , சங்கர் கணேஷ் இசையில், அன்றைய காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்களாகும்.

வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று

வேடிக்கை காட்டுது தூக்கமின்னு

முல்லைச் சரமே செல்லக்கிளியே

கண்மூடித் தூங்கம்மா, 

என்ற பாடல், தாலாட்டுப் பாடலுக்கு ஒரு உதாரணம். வி குமாரின் இசையில், டி எம் எஸ் குரலில் நம்மை மயக்க வைக்கும் வரிகள்.

மெல்லிசை மாமன்னர் டி கே ராமமூர்த்தி இசையில், இசை மேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடிய, சாது மிரண்டால் படத்தில் இடம் பெற்ற  அருள்வாயே நீ அருள்வாயே என்ற சிந்துபைரவி இராகப் பாடல் இவர் எழுதியது தான்.

 நான் ஆணையிட்டால் என்ற படத்திற்காக,

ஓடி வந்து மீட்பதற்கு  உண்மைக்கோ கால்கள் இல்லை

ஓய்ந்திருந்து கேட்பதற்கு நீதிக்கோ நேரமில்லை

பார்த்த நிலை சொல்வதற்கு பரமனுக்கோ உருவம் இல்லை

என்று ஒரு பாடல் எழுதி இருப்பார். அவரின்  நேர்மையான வாழ்க்கையின் வடிவம் இந்த வரிகள் எனலாம். அதேபோல,

வெள்ளி நிலா வானத்திலே  வந்து போகுதடா  – அது

வந்து போன சுவடு அந்த வானில் இல்லையடா

என்று அவர் எழுதினார்.

ஆனால் ஆலங்குடி சோமு வந்து போன சுவடு காலத்தால் மறையாதது – கனிந்த பாடல்களால் நிறைந்திருப்பது என்றால் மிகை ஆகாது.

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.