கீதாவிற்கும் ரகுவிற்கும் திருமணம் நிச்சயம் ஆகப்போகிறது. ரகுவின் வீட்டிலிருந்து பெண் பார்த்து சென்றவுடனே அவன் சம்மதம் தெரிவித்து விட்டான். ரகுவின் பெற்றோர்கள், ஓர் நாளாவது போகட்டும் பொறுத்து பதில் கூறலாம் இல்லாவிடில் , ‘சரியான பறக்காவெட்டி குடும்பம்,’ என்று நினைத்து விடுவார்கள் என்று பயந்து, மறுநாள் காலை ரகுவின் பதிலை தெரிவித்தனர். கீதாவின் பெற்றோரும் திருமணத்திற்கு வேகமாக தலையசைத்து, “ஓ! உங்க குடும்பத்த எங்களுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு… ரகு மாதிரி தங்கமான பையன் கிடைக்க எங்க கீதா கொடுத்து வெச்சுருக்கணும்,” என்று ஏகத்துக்கு புகழ்ந்து, கீதாவின் அலைபேசி எண்ணையும் உடனுக்குடன் பகிர்ந்தனர்.
ரகு, கீதாவின் ஃபோன் நம்பர் கிடைத்த குஷியில் குதுகலிக்க, கீதாவோ, ரகு நல்லவனா? கெட்டவனா? என்று மனக் குழப்பத்தில் சிக்கி இருந்தாள். “ எவன் ஓகே சொன்னாலும் என்னை அவன் தலைல கட்டிடுவாங்களா,” என்று புலம்பினாள்.
ரகு, இரண்டு நாள் ஓயாமல் திட்டம் போட்டு, குட் மார்னிங், குட் நைட், இன்னிக்கு நாள் எப்படி போச்சு, என்று வாட்ஸ்ஆப்பில் அவளோடு உரையாடி, ஒரு வழியாக மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளை மொபைல் ஃபோனில் அழைத்தான். கீதாவும் அதனை எடுத்தாள். அந்த தடுமாற்றம் நிறைந்த முதல் அலைபேசி உரையாடல் துவங்கி, தினமும் ஃபோனில் கடலை போட ஆரம்பித்தார்கள் ரகுவும் கீதாவும்.
ஒரு வாரம் இப்படியே ஃபோனும் கையுமாக நகர, நிச்சயத்திற்கு முன்பு ஒரு முறை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும் என்று இருவருக்கும் ஆசை எழுந்தது. காலை மாலில் ஓர் திகில் திரைப்படத்திற்கும், பிறகு ஓர் நல்ல உணவகத்திற்கும், நேரமிருந்தால் சாயங்காலம் கடற்கரைக்கு சென்று அறுபடை வீடு முருகனை தரிசித்து, சிறிது நேரம் கடலருகில் காற்று வாங்கி வரலாம் என்று திட்டம் தீட்டினர் இருவரும்.
திருமணத்திற்கு முன் தனியே சந்திப்பது என்பது ஓர் குஷியான அனுபவம். அதனை அனுபவித்தவர்களுக்கு அதன் த்ரில் புரியும். இந்நிலையில் ரகு மற்றும் கீதாவின் மனதில் எண்ணற்ற ஆசைகள்.
கீதாவின் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், கீதாவை யார் தயவையும் எதிர்பாராமல் தன்னம்பிக்கையுடன் வளர்த்தனர். ஒப்பீடு செய்து வளர்க்க அவள் குடும்பத்தில் அண்ணன், தம்பி இல்லாத காரணத்தால், பல நேரங்களில் கீதாவிற்கு அவள் ஓர் பெண் என்பதே மறந்துவிடும். அப்படி ஓர் குடும்ப சூழலில் வளர்ந்தாள் அவள்.
ரகுவை பற்றிய அவளது எதிர்பார்ப்புகளை சற்று பார்ப்போம்…
ரகு மாடர்னா ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்து அவனது நவீன ரக பைக்கில் வர வேண்டும். வந்தவன் அவளை அவளது வீட்டிற்கு சென்று அழைத்துச் செல்ல வேண்டும். அவள் வீட்டு நபர்களிடம் எதார்த்தமாக, முடிந்தால் சற்று ஹாஸ்யமாகவும் உரையாட வேண்டும். அவளிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். அலைபேசியை கவனியாமல் அவளை பார்த்து பேச வேண்டும்; குறிப்பாக கண்களை பார்த்து பேச வேண்டும், முக்கியமாக அவள் கூறும் விஷயங்களை காது கொடுத்துக் கேட்டு உள்வாங்க வேண்டும் என்பது போல மன கோட்டைகள் பலவற்றை கட்டினாள். மேற்கூறிய விஷயங்களில் ரகு பாஸ் மார்க் வாங்கினால், அவனை கடற்கரையில் அவளது கைகளை பிடிக்க அனுமதிக்கலாம் என்று எண்ணினாள்.
கீதா ஒரு ரகம் என்றால், ரகு வேறு ரகம். அவன் கறாரான அப்பாவிற்கும், பழைய பஞ்சாங்கம் அம்மாவிற்கும் பிறந்த ஒரே மகன். அவனுடைய குடும்பத்தில் சகோதரிகள் இல்லாததால், பெண்களுடன் பழக அவனுக்கு வாய்ப்பு குறைவாகவே இருந்தது. தோழிகள் என்று சொல்லும் அளவிற்கு யாரும் இல்லை. காதலிக்கவும் தைரியம் இல்லை. ஆனால், அவனுக்கு கீதாவை பார்த்தவுடன் பிடித்து போய்விட்டது. எதிர் துருவங்கள் ஈர்க்கும் என்பது இவர்கள் கதையில் பலித்துவிட்டது.
அவன் மனதில் ஓடும் எண்ணங்களை சற்று பார்ப்போம்…
பைக்கில் வேகமாக செல்ல வேண்டும். அவள் பயத்தில் கண்ணை மூடிக்கொண்டு அவனை அனைத்தபடி அமர வேண்டும். திரைப்படத்தில் திகில் காட்சிகளின் போது அவள் பயந்து இவன் தோளில் சாய, அவன் அவளது பயத்தை போக்கி, அவளது தோளை பிடித்து ஆறுதல் சொல்ல வேண்டும். எதாவது ஓர் உடுப்பி ஹோட்டலில், குறைந்த செலவில் வயிறு நிரம்ப சாப்பிட வேண்டும். அவளோடு ஆள் நடமாட்டம் இல்லாத தெருவில் நடக்க வேண்டும்; அப்போது யாரும் பார்க்காத நேரத்தில், சரியான சந்தர்ப்பம் அமைந்தால், அவளுக்கு ஓர் முத்தம் தர வேண்டும் என்று எண்ணியபடி கனவுலகில் மிதந்தான் ரகு .
இதெல்லாம் டிரெய்லர் தான் இன்னும் மெயின் பிக்சர் வரவில்லை என்பதைப் போல இப்போது நிகழ் காலத்திற்கு வருவோம்!
இரவு வெகுநேரம் அலுவலக வேலை செய்து, அவர்கள் சந்திக்கும் தினத்தன்று காலை 9 மணிக்கு தான் கண் விழித்தான் ரகு . அதற்கு பின் எங்கு ஷவரம் செய்வது என்று 3 நாள் தாடியுடன், கையில் கிடைத்த முதல் சட்டை பேண்ட்டை மாட்டிக்கொண்டு, காலை 11 மணி ஷோவிற்கு வீட்டிலிருந்து 9:30 மணிக்கு புறப்பட்டான் நம் கதாநாயகன்.
“என்ன பைக்லயா போற? முதன்முதல்ல அவள கூட்டிட்டு வெளியில போற, கார்ல போடா, அப்போ தான் மரியாதையா இருக்கும்,” என்றார் அப்பா .
“ என்ன நிச்சயம் கூட ஆகாம பொண்ணோட வெளியில போறியா? எங்க காலத்துல எல்லாம் கல்யாணம் முடிஞ்சு தான் பேசவே முடியும்! இவங்க தான் ஆசை படறாங்கன்னா? பொண்ண பெத்தவங்களுக்கு எங்க போச்சு புத்தி? இப்போவே என் பையன மடக்க பார்க்கறாங்க. அதெல்லாம் நீ ஒன்னும் போக கூடாது,” என்றாள் அம்மா.
“ அம்மா, பிளீஸ்… அவங்க வேண்டாம்னு தான் சொன்னாங்க, நாங்க தான் ஆசை பட்டோம். இப்போ முடியாதுன்னு சொன்னா நல்லா இருக்காது. அப்பா… கொஞ்சம் சொல்லுங்களேன்,” என்று கெஞ்சினான் ரகு.
அடுத்து அரைமணி நேர வாக்குவாதம் கழித்து, “ சரி போயிட்டு வா… ஆனா அவங்க வீட்டுக்கு போய் அவள கூட்டிக்க கூடாது… மெயின் ரோடு ல வந்து ஏற சொல்லு, என்ன ஏமாத்த கூடாது, நா அவங்க வீட்டுக்கு ஃபோன் பண்ணி செக் பண்ணுவேன்… அப்பறம் சினிமா முடிஞ்ச உடனே வீட்டுக்கு வந்துடனும், நாள் முழுக்க சுத்த கூடாது,” என்று அறிவுரைகள் பலமாக கொடுத்து அம்மா வழியனுப்பிவைத்தார். ரகுவும் கிளம்பினால் போதும் என்று ஒருவாறு 10 மணிக்கு கிளம்பினான்.
அலைபேசியில் கீதாவை அரைகுறையாக சமாதானம் செய்து மெயின் ரோட்டிற்கு வரவழைத்தான் ரகு. அவனை பார்த்த கீதாவிற்கு பலத்த ஏமாற்றம். அவள் புத்தாடை அணிந்து, ஆசையாக அலங்கரித்து, அவனை பார்க்க கிளம்ப, அவனோ வியர்த்த முகத்துடனும், தாடியுடனும், அவன் நிறத்திற்கு சிறிதும் பொருந்தாத ஒரு சட்டையை மாட்டி வந்து நின்றான். அவன் இருந்த மன நிலையில், கார் என்ஜின் வேறு அடிக்கடி ஆஃப் ஆனது. “ இப்போ தான் கார் ஓட்ட கத்துகிட்டியா ரகு? தடுமாறாத ஓட்டு, நா ஒன்னும் கோவப்படல,” என்று அவனை தேற்றினாள் கீதா. அவனது பதற்றத்தை குறைக்கும் வண்ணம் இனிய காதல் பாடல்களை அலைபேசியில் போட்டு விட்டாள்.
11 மணி படத்திற்கு அவர்கள் 11.30 மணிக்கு மாலிற்கு செல்ல, மாலில் பார்கிங் நிரம்பிவிட்டது என்று கூறி அங்கே பணிசெய்யும் காவலாளி அவர்களை நிறுத்தினான். சுற்றி உள்ள தெருக்களில் அலைந்து, பாதுகாப்பான ஓரிடத்தில் அவர்கள் வாகனத்தை நிறுத்தி, அவர்கள் மாலிற்கு மீண்டும் வந்த போது மணி பன்னிரெண்டை தாண்டி இருந்தது. அவன் அதே பதற்றத்தோடு சினிமா தியேடரை நோக்கி நடக்க, அவள் அவன் கையை பிடித்து நிறுத்தி, சினிமா போகாட்டி பரவால்ல, முதல்ல ரிலாக்ஸ் ஆகு, வா ஒரு காபி குடிக்கலாம் என்று ஒரு கேபிடேரியாவிற்கு அவனை அழைத்துச் சென்றாள். அடுத்த ஒரு மணி நேரம் போவதே தெரியாமல் அவர்கள் மனம் விட்டு பேசினர். வந்த பில்லை கீதாவே கட்டி, “உனக்கு ஒரு சட்டை வாங்கித் தரட்டுமா? வா ஷாப்பிங் போகலாம்,” என்று அவனை அழைத்து துணிக் கடைக்குச் சென்றாள்.
ரகு, இவள் மற்ற பெண்களைப் போல் இல்லாமல் இப்படி இதமாக பேசுகிறாள், பழகுகிறாள், தனது குறைகளை பெரிது செய்யாமல் தன்னை மரியாதையுடன் நடத்துகிறாள் என்று ஆச்சரியப்பட்டான். இதற்கு நடுவில் அவன் தாயிடம் இருந்து இரண்டு மூன்று அழைப்புகள் வர, “ அம்மா, நாங்க சினிமா போகல, வண்டி பஞ்சர் ஆயிடுச்சு, அவள வீட்டுக்கு ஆட்டோ புடிச்சு அனுப்பி விட்டுட்டேன். ரமேஷ் தான் ஹெல்ப் பண்ணினான். இப்போ நானும் அவனும் ஷாப்பிங் போறோம். சாயங்காலம் வரேன்,” என்று விடையளித்தான் ரகு.
இதை கேட்டும், கேட்காதது போல உடை தேர்ந்தெடுத்துக்கொண்டு வலம் வந்த கீதாவிற்கு மனதில் சின்னதாய் ஒரு சந்தோஷம். ரகு அவனது அம்மாவிடம் பொய் கூறியதற்காக இல்லை, ஆனால், அவன் அவனது அம்மாவின் மனது புண்படாத வகையில், அதே நேரத்தில், அவளோடும் மாலை வரை நேரம் செலவிழிக்க போட்ட திட்டத்தை எண்ணி .
மாலை வரை இருவரும் மாலிலே நேரம் கழித்தனர். இதுதான் பேச வேண்டும் என்று இல்லாமால், பல விஷயங்களைப் பற்றி இயல்பாக பேசினர். ஓர் முன் பின் தெரியாத நபருடன் ஒரு நாள் முழுவதும் எதார்த்தமாக கழிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. இருவருக்கும் இடையே ஒரு நல்ல புரிதல் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். அன்று மாலை வீட்டிற்கு புறப்படும் சமயத்தில், பிரிய மனமின்றி இருவரும் விடைபெற்றனர். அந்த சந்திப்பிற்கு முன்னிருந்த அவர்களது எதிர்பார்ப்புகளும், திட்டங்களும் தவிடுபொடியான போதும், அன்று அவர்கள் இருவர் மனதிலும் ஓர் இணக்கம் மற்றும் புரிதல் ஏற்பட்டது. கண்களில் புலப்படாத காதல் என்னும் அந்த அழகிய உணர்வு இருவர் மத்தியில் துளிர் விட்டது.
காதலர் தின ஸ்பெஷல் போல உள்ளது. கீதா மாடர்ன், ரகு எதிர் எப்படி இவர்கள் சேருவது?
LikeLike