தலைப்பைப் பார்த்து ஆச்சரியமா? தேவையே இல்லை. இக்கட்டுரையைப் படித்து முடித்தபின்பு நீங்களே அனைவருக்கும் இன்னும் ஒரு புதிய செய்தியைக் கூறலாம்!
மனிதர்களுள் ஒரு நாட்டினர் இன்னொரு நாட்டினரையோ, விலங்குகளில் ஒன்று மற்றொன்றையோ தமது வலிமையால் அழிப்பதனைக் கண்டுள்ளோம். ஓரறிவோ, ஈரறிவோ, ஐந்தறிவோ, ஆறறிவோ அனைத்துயிர்களிலும் வலிமை பொருந்தியனவே வெற்றிகரமாக உயிர்வாழ்கின்றன.
சரி, நுண்ணுயிரிகளிடையேயும் (Microbes) இந்தமாதிரி நிகழுமா என ஆய்வாளர்கள் ஆராய்ந்தபோது ஆச்சரியமான பல செய்திகளை அறிந்துகொண்டோம்.
இது வைரஸ்களின் காலம். சமீபத்திய கோவிட் என ஒரு வைரஸ், பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் என வைரஸ், உலகத்தை விட்டே விரட்டப்பட்டுவிட்டதாகக் கூறப்படும் பெரியம்மை (Smallpox) வைரஸ், இன்ஃப்ளூயென்சா எனப்படும் வைரஸ், விலங்கு வைரஸ், பறவைகள் வைரஸ், எனப்பலவிதங்களில் வைரஸ்கள். இவை மிக மிக நுண்ணியவை. பாக்டீரியாக்களைவிட ஆயிரம் மடங்கு சிறியவை. மிக உயர்ந்த தொழில்நுட்பம் கொண்ட மைக்ரோஸ்கோப்பினால் (electron microscope) மட்டுமே இவற்றைக் காண இயலும்.
இவற்றையெல்லாம் தூக்கியடிக்கும் ஒரு செய்தி- பழையதுதான்- ஆனால் இதனை நீண்டநாட்களாக யாரும் கண்டுகொள்ளவில்லை- பாக்டீரியாக்களையும் சில வைரஸ்கள் தாக்குமென்பதுதான். முள்ளை முள்ளால் எடுப்பதுபோல வைரஸால் பாக்டீரியாக்களை அழிக்கலாம் என்று ஆராய்ச்சியினால் தெரிந்துகொண்டோம்.
பாக்டீரியாக்களின் வைரஸ்கள் 1915-ல் ஃப்ரடெரிக் ட்வார்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டன. டி-ஹெரல் என்பவர் இவற்றால் தொற்றைக் கட்டுப்படுத்தலாம் எனக் கண்டறிந்து அந்த ஆராய்ச்சிக்கு வித்திட்டார்.
பாக்டீரியாக்களைத் தாக்கும் வைரஸ்களுக்கு பாக்டீரியோஃபாஜ் (Bacteriophage) அல்லது சுருக்கமாக ஃபாஜ் (phage) என்று பெயர். அதாவது ‘பாக்டீரியாக்களைச் சாப்பிடுபவன்’ என்று பொருள். இது எதனால்? இந்த வைரஸ்கள் தமது மூலக்கூறான டி.என்.ஏவை (DNA) ஒரு புரத (protein) உறையினால் பொதிந்துகொண்டு அமைந்தவை; அமைக்கப்பட்டவை; இவை நடத்தும் நாடகங்கள் மிகமிக சுவாரசியமானவை. இவற்றையெல்லாம் உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி அருமையான ஆராய்ச்சிகளை டி-ஹெரெல் (d’Herelle) எனும் ஒரு விஞ்ஞானி செய்தார்.
இவற்றைப் பார்க்கப் புகுமுன் சில அடிப்படை உண்மைகள்: வைரஸ்கள் தாமே இனைப்பெருக்கம் செய்துகொள்ளும் திறனற்றவை. இவை மற்ற உயிரினங்களின் ‘செல்’களுக்குள் (cell) புகுந்து அங்குள்ள சக்தியை உபயோகித்துத் தம்மைப் பலவாகப் பெருக்கிக் கொள்கின்றன. ஒரு வைரஸ் ஒரு செல்லில் புகுந்து சில மணி நேரங்களில் பல்லாயிரமாகப் பெருகிப் பின் அந்த செல்லைக் கிழித்துக் கொண்டு வெளிவருகின்றது. உடனே அவை அக்கம் பக்கத்து செல்களைத் தாக்கி எண்ணிக்கையில் மேலும் பெருக ஆரம்பிக்கின்றன. இவ்வாறுதான் வைரஸ் தொற்று (infection) பரவுகிறது. தொற்றுள்ள ஒருவரின் மூச்சுக்காற்று, தொடுதல், துணிமணிகள் போன்றவைமூலம் குடும்பத்தினர், மற்ற வெளியுலகத்தோர் அனைவருக்கும் பரவுகின்றன.
வைரஸ் தொற்று மனித ‘செல்’களை அழிப்பதுபோல, பாக்டீரியாக்களுக்கான வைரஸ்களைப் பயன்படுத்தி பாக்டீரியாக்களை அழித்து, அவற்றால் வரும் தொற்றைக் குணப்படுத்தலாம் என்பது 1900களில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதே சமயம் ஆன்டிபயாடிக் என்னும் மருந்தைக் கண்டுபிடித்தபோது இதனை ஆராய்ச்சியாளர்கள் முற்றிலும் புறக்கணித்தனர். இப்போது 150 ஆண்டுகளின்பின் பாக்டீரியாக்கள் ஆன்டிபயாடிக்கை எதிர்க்கக் கற்றுக் கொண்டுவிட்டதை அறிந்து கொண்டுவிட்டோம். வேறு மாற்று மருந்தைத் தேடும்போது, இந்த பாக்டீரியோஃபாஜால் குணமாக்கும் முறை திரும்பவும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது! ஒவ்வொரு விதமான தொற்றுநோய் பாக்டீரியாவையும் ஆயிரக்கணக்கான பாக்டீரியோஃபாஜ் வகைகளில் ஏதாவது ஒன்றுதான் அழிக்க முடியும் எனக் கண்டறியப்பட்டது.
உதாரணமாக, ஒரு பரிசோதனைக்காக வயிற்றுப்போக்கிற்குக் காரணமான பாக்டீரியாக்கள் லாபரட்டரிகளில் பரிசோதனைக் குடுவைகளில் வளர்க்கப்பட்டு, அவற்றைத் தாக்கி அழிக்கும் வைரஸ்கள் பிரத்யேகமுறைகளில் அறுவடை செய்யப்பட்டுப் பத்திரப்படுத்தப்பட்டன. தீவிரமான வயிற்றுப்போக்கில் தவிக்கும் நோயாளிகளுக்கு, மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பவர்களுக்கு இவை இரண்டு மில்லி அளவில் கொடுக்கப்பட்டன. அடுத்தநாள் அவர்களில் பெரும்பாலோர் குணமடைய ஆரம்பித்தனர். 1919-ல் பிரேஸில், சூடான் ஆகிய நாடுகளில் இப்பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
1927-ல் இந்த விஞ்ஞானி இந்தியாவிற்கு வந்து பஞ்சாபில் காலராவை (cholera) இவ்வகையில் குணப்படுத்த முயன்றார். மிகவும் கவலைக்கிடமான நிலையிலிருந்த நோயாளிகளின் உறவினர்களே வேறுவழியின்றி இதனை ஒப்புக்கொண்டனர். பாக்டீரியோஃபாஜ் கொடுக்கப்பட்ட இவர்களில் பெரும்பான்மையினர் பிழைத்தனர். எடுத்துக்கொள்ளாதவர்கள் பெரும்பாலோர் இறந்தனர்.
1926-ல் எகிப்தில் ப்ளேக் (Bubonic plague) எனும் தொற்றுநோயால் தாக்கப்பட்ட நால்வரை அதற்குரிய பாக்டீரியோஃபாஜை செலுத்தி, இவ்வாறு பரிசோதனைகள் செய்து பிழைக்கவைக்க முடிந்தது.
ஸ்டாஃபைலோகாக்கஸ் (Staphylococcus) எனும் பாக்டீரியாவால் வரும் தொற்றால், அழுகும் புண்களை உடையவர்களில் 90 சதவீதம் பேர் கண்டிப்பாக இறந்துவிடுவார்கள். 1929-ல் டி-ஹெரல் மிகத்துணிவாக வேறிடங்களில் செய்ததுபோல் இங்கும் ஒரு பரிசோதனை செய்ய முற்பட்டார். அவருடைய பரிந்துரைத்தல்படி இதற்கான பிரத்யேகமான ஒரு ஃபாஜை இந்தமாதிரியான ஒரு நோயாளிக்கு (சாவின் எல்லையில் நின்று கொண்டிருந்தவர்) சலைன் ட்ரிப்ஸ் (saline drips) வழியாகக் கொடுத்தனர். இதற்கு ஒரு மணி நேரமானது.
என்ன ஆச்சரியம். அடுத்தநாள் அவர் ஜுரம் குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக படிப்படியாக குணமாகி ஏழெட்டு நாட்களில் வீடு திரும்பிவிட்டார். அப்போதிலிருந்து இந்த மாதிரி நோயாளிகளை இத்தகையதொரு முறையில் குணப்படுத்தலாயினர். இந்த வைத்தியமுறை பிரபலமாகிக்கொண்டு வந்தது.
மற்ற தொற்றுநோய்களான டைஃபாயிட் முதலானவைக்கும் இவ்வாறான ஃபாஜ் முறையைப் பயன்படுத்தி குணப்படுத்த முடிந்தது.
ஒரு சுவாரசியமான செய்தி: சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விஞ்ஞானி தாம் சொற்பொழிவாற்றிய ஒரு கான்ஃபரன்ஸில் அனைவருடனும் ஒர் செய்தியைப் பகிர்ந்து கொண்டார். பாக்டீரியாக்களின் வைரஸான பாக்டீரியோஃபாஜ்களைப் பயன்படுத்தி தொற்றுக்களைக் குணமாக்குவது பரவலாக இருந்த அக்காலம்; அமெரிக்கா முழுவதும் ஆங்காங்கே புதுத் தேடல்களில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்களால் ஒரு நூற்றாண்டுக்குமுன்பு மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்டும் வந்தது. நம் விஞ்ஞானியின் தந்தையும் ஒரு மருத்துவர். அவருடைய தாய்க்கு டைஃபாயிட் தொற்றுவந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆஸ்பத்திரியிலேயே இருந்தார். சுரம் குறையவேயில்லை. மருத்துவரான தந்தை சால்மொனெல்லா டைஃபி (Salmonella typhi) எனும் டைஃபாய்டு தொற்று பாக்டீரியாவினைத் தாக்கும் பாக்டீரியோஃபாஜ்களை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியாளர்களிடமிருந்து வரவழைத்துத் தாயாருக்குக் கொடுத்தார். மருந்துகள், சிகிச்சை முறைகள் பற்றிய கட்டுப்பாடுகள் பெரிதாக செயல்படுத்தப்படாத நாட்கள் அவை! 48 மணி நேரத்தில் தாயின் சுரம் இறங்கி படிப்படியாக அவர் குணமடைந்தாராம். மிகவும் பெருமையாக ஃபாஜ் மருத்துவத்தின் மகிமை பற்றிக் கூறி இதனை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
இப்போது பெனிசில்லின், (Penicillin) குளோரம்ஃபெனிகால், (Chloramphenicol) இன்னும் இது போன்ற மற்ற ஆன்டிபயாடிக்குகளுக்கு தொற்றுநோய் பாக்டீரியாக்கள் எதிர்ப்புத்தன்மையை (resistance) உருவாக்கிக் கொண்டுவிட்டன. இது மருத்துவ அறிவியல் உலகின் ஒரு பெரிய சவாலாகவே ஆகி விட்டது. இதற்குக் காரணங்கள் பலப்பல. அவற்றை நாம் இப்போது இங்கு விவாதிக்கப் போவதில்லை. முடிந்தால் பின்னொரு நாளில் பார்க்கலாம்.
பாக்டீரியோஃபாஜ் கொண்டு குணப்படுத்தும் முறையை உலகளாவிய பல சிறு ஆராய்ச்சி நிறுவனங்கள் பெரிய அளவில் ஆராய ஆரம்பித்துத் தேடலில் இறங்கியுள்ளன. இது பெருமளவில் பயனளிக்க இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் தேவை. அவை தொடங்கப்படுவிட்டன என்பதே நமக்கு மகிழ்ச்சிதரும் ஒரு செய்தி ஆகும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உதவிய கட்டுரைகள்:
Bacteriophage as a treatment in Acute medical and surgical infections- F. d’Herelle- 1931: Bulletin of the New York Academy of Medicine.