பிரபா ராஜன் சிறுகதைப் போட்டி – இரண்டாம் பரிசு – வேதாளம் சொன்ன கதை -புவனா சந்திரசேகரன்

 

 

படம்: கிறிஸ்டி நல்லரெத்னம்

 

வேதாளம் சொன்ன கதை

 

      தனது முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் முருங்கை மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த வேதாளத்தை இழுத்துத் தன் தோளில் போட்டுக் கொண்டு காளி கோயிலை நோக்கி, உருவிய வாளைக் கையில் ஏந்தியபடி நடக்கத் தொடங்கினான்.

      “நீயும் உன்னுடைய முயற்சியைக் கைவிடப் போவதில்லை. நானும் உனக்குக் கதை சொல்லாமல் இருக்கப் போவதில்லை” என்று அமைதியாக நடந்து கொண்டிருந்த விக்கிரமாதித்தனைச் சீண்டி விட்டுக் கதையைக் கூற ஆரம்பித்தது.

      “வழக்கமான நிபந்தனை தான். கதையை முடித்ததும் நான் கேட்கும் கேள்விக்கு பதில் தெரிந்தும் நீ சொல்லாவிட்டால் உன் தலை சுக்குநூறாக வெடித்து விடும். நீ சொல்லும் பதில் சரியாக இருந்தால் நான் மீண்டும் முருங்கை மரத்துக்குப் போய் விடுவேன்” என்று சொல்லி விட்டுக் கதையைச் சொல்ல ஆரம்பித்தது.

      “இது எதிர்காலத்தில் கலியுகத்தில் நடக்கப் போகும் கதை. அப்போது மக்களின் வாழ்க்கை எப்படியெல்லாமோ மாறியிருக்கும். அறிவியல் வளர்ச்சியும், தொழில் நுட்பங்களும் சேர்ந்து அன்றாட வாழ்க்கையை எளிதாக்கிய சூழல் நிலவும். இதை மனதில் வைத்துக் கொண்டு கதையைக் கேட்டுக் கொள்” என்றது வேதாளம்.

      மூன்று பெண்களின் கதை.

      மதுரை மாநகரில் சமீபத்தில் புது வீடு வாங்கிக் குடியேறியுள்ள ஜெயலட்சுமி, கடை வீதிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

      “என்ன கிச்சன் வேலை முடிஞ்சதா? கார்த்திகை வருது. விளக்கெல்லாம் வாங்கணும்னு சொன்னயே? இன்னைக்குப் போலாமா?” என்றார் கணேசன்.

      “என்ன டிவில கிரிக்கெட் மேட்ச் ஒண்ணும் இல்லையோ இன்னைக்கு? நான் கூப்பிட்டாலும் வரலைன்னு சொல்வேள்? இன்னைக்குத் தானாவே வெளியே கிளம்பலாம்னு சொல்றேளே?” இது ஜெயா.

      “உனக்குப் போகணுமா, இல்லை இப்போ நான் விளக்கம் சொல்லணுமா?”

      “அச்சச்சோ, இதோ கிளம்பிடறேன். விளக்கமெல்லாம் நீங்க சொல்ல வேணாம். சும்மாத் தான் கலாய்ச்சேன். அனாவசியமாக் கோச்சுக்காதீங்கோ.”

      “சீக்கிரமா வா” என்று கணேசன் முறைப்புடன் நிற்க, ஜெயா விருவிருவென்று கிளம்பி வந்தாள். இரண்டு பேரும் தெருவில் நடப்பது கொஞ்சம் வேடிக்கையாகத் தான் இருக்கும். கணேசன் பத்தடி முன்னால் போய்க் கொண்டிருப்பார். ஜெயா நிதானமாக அவரைப் பின்தொடர்வாள். அவர்கள் நடக்கும் வேகம் அப்படி. ஜெயாவின் முழங்கால் வலி அவளுடைய வேகத்தைப் பெருமளவில் பாதித்து விட்டதால் கணேசனைப் போல துரித அடிகளை அவளால் எடுத்து வைக்க முடியாது.

      “சேந்து வெளியில வாக்கிங் போகணும்னு ஆசைப்படறதை நினைச்சாச் சிரிப்புத் தான் வருது” என்றாள் ஜெயா. கணேசன் காதில் விழுந்தும் விழாதது போல நடந்தார்.

      ஆனந்தா ஸ்டோரில் முதல் மண்டகப்படி. விதவிதமான மண் விளக்குகள், பித்தளை, வெண்கல விளக்குகள் என்று ஆசை தீர வாங்கிக் கொண்டாள். இரண்டு பெரிய பைகள் நிரம்பி விட்டன. சமீபத்தில் தில்லியில் இருந்து மதுரை குடிவந்துள்ள அவர்கள், புதிய வீட்டை வாங்கி, வீட்டு சாமான்களைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். பைகளைத் தூக்க முடியாமல் தூக்கியபடி இருவரும் நடந்தார்கள்.

      “வா தாயி வா, மல்லிகைப்பூ வாங்கிக்க தாயி. உன்னோட முகம் மாதிரியே பூவும் பளிச்சுன்னு இருக்கு” என்று குரல் கொடுத்தாள் நடைபாதையில் பூக்கடை போட்டிருந்த தாயம்மாக் கிழவி.

      “இப்படிப் பேசிப் பேசி கொறஞ்சது ஆயிரம் பூவாவது வாங்க வச்சிருவீங்க தினமும்! இல்லையா?”

      “இல்லை தாயி இல்லை! உன்னை மாதிரி சிலர் கிட்டத் தான் உரிமையா இப்படிப் பேசுவேன் நான்! உன் தலையில் பூவோட பாக்கும் போது எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா?” என்று அவளுக்கு திருஷ்டி கழிப்பது போலக் காற்றில் கைகளை அசைத்தாள்.

      சமீபத்தில் தாயை இழந்திருந்த ஜெயாவாலும் தாயம்மாக் கிழவியின் முகத்தில் சுடர் விடும் அன்பின் ஆழத்தை அடையாளம் காண முடிகிறது.

      “சரி சரி, எவ்வளவு ஆச்சு பூவுக்கு?”

      “உன் இஷ்டப்படி கொடு தாயி! நான் கூப்பிட்டதும் வேணாம்னு சொல்லாம நீ வாங்கிக்கறதே பெரிசு!”

      மதுரை வந்ததில் இருந்து தினமும் பூ வாங்கிச் சூடிக் கொள்ளும் வழக்கமுள்ள ஜெயாவிற்கும் பூக்களின் விலை ஓரளவு தெரியும் என்பதால் சரியாகவே கொடுத்து விடுவாள்.

      “உன் மனசு போலவே உன் கையும் தாராளம் தாயி!” பணத்தை வாங்கிச் சுருக்குப்பையில் முடிந்துக் கொண்டாள் தாயம்மா.

      “எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?”

      “சொல்லு தாயி, சொல்லு.”

      “இந்தப் பை ரெண்டையும் இங்கே வச்சுட்டுப் போறோம். எதுத்த பக்கம் ஒரு கடைக்குப் போகவேண்டிய வேலை இருக்கு. திரும்பிப் போற வழியில இந்தப் பைகளை எடுத்துக்கறோம்.”

      “வச்சுட்டுப் போ தாயி! இதிலென்ன இருக்கு? தாராளமாப் பாத்துக்கறேன்.”

      இதுவரை நடந்த உரையாடலை வாய் திறவாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த கணேசன், விருட்டென்று தலை நிமிர்ந்து ஜெயாவைப் பார்த்து முறைத்தார். அவளோஅவரை அலட்சியம் செய்தபடி பைகளைப் பூக்காரியிடம் வைத்து விட்டு நடந்தாள்.

      பை பாஸ் ரோடில் இருந்த மாலை நேர டிராஃபிக்கில் நீந்தியபடி சாலையைக் கடப்பதற்குள் இருவரும் விவாதிக்க நினைத்த விஷயத்தை மறந்தே போனார்கள். ஸில்வர் பேலஸ் கடைக்குள் நுழைந்து கையில் கொண்டு வந்திருந்த பழைய விளக்குகளைப் போட்டு விட்டு, வெள்ளிக் குத்து விளக்குகள் ஒரு ஜோடி வாங்கிய பின்னர், கடையை விட்டு இறங்கினார்கள். வானம் பூந்தூறலைத் தூவி வாழ்த்தியது.

      “அடடா, மழை ஆரம்பிச்சுடுச்சே! குடையும் கொண்டு வரலையே! என்ன செய்யறது?” திகைத்துப் போய் நின்றபோது, கடைக்காரர் கதவைத் திறந்து உள்ளே வரச் சொன்னார்.

      “ஸார், இந்த மழையில் நனைஞ்சுட்டே நடக்க வேணாம். நீங்களும் மேடமும் உள்ளே வந்து உக்காருங்க.. மழை நின்னதும் போய்க்கலாம்” என்று சொன்னதும், அதுவும் சரியென்றே தோன்றியது. உள்ளே சென்று சொகுசு நாற்காலிகளில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்தார்கள். மழை ஓய்ந்தபாடில்லை.

      “எவ்வளவு நேரம் வெயிட் பண்ணறது? ஆட்டோ பிடிச்சுண்டு போலாம் வா” என்றார் கணேசன்.

      “அந்தப் பைகளைப் பூக்காரத் தாயம்மா கிட்ட விட்டுட்டு வந்தோமே? ஆட்டோல போனா அது வேற வழியாச்சே?”

“எனக்கு அப்பவே தெரியும்! உன்னோட புத்திசாலித்தனமான ஐடியால்லாம் இப்படித்தான் அனர்த்தமா வொர்க் அவுட் ஆகப் போகுதுன்னு நினைச்சேன். சரி, விடு, மழை நின்னதும் நான் நடந்து போய் எடுத்துண்டு வரேன். இப்போதைக்கு வீட்டுக்குப் போய்ச் சேருவோம்” என்றவர் ஆட்டோவை அழைத்தார்.

      ஒருவழியாக மழை ஓய ஒன்பது மணி ஆகி விட்டது. கணேசன் போய்ப் பார்த்தபோது தாயம்மாக் கிழவி அந்த இடத்தில் கிடைக்கவில்லை. கடுகடுவென்ற முகத்துடன் வந்தவரின் வெறுங்கைகளைப் பார்த்ததும் புரிந்துக் கொண்ட ஜெயா சமாளிக்க முயற்சி செய்தாள்.

      “நமக்காக வெயிட் பண்ணிப் பாத்துட்டு வீட்டுக்குக் கொண்டு போயிருப்பா. நாளைக்குக் கொண்டு வந்துருவா” என்று நம்பிக்கையுடன் சொன்ன ஜெயாவை எகத்தாளமாகப் பார்த்து விட்டு நகர்ந்தார் கணேசன்.

      அடுத்த நாள் தாயம்மா பூக்கடை போடவில்லை. அடுத்தடுத்து நான்கு நாட்கள் ஓடின. பூக்கடை கண்ணில் படவேயில்லை. கணேசன், ‘அப்பவே சொன்னேனே? பாத்தியா?’ என்று சொல்லாமல் சொல்லியபடி ஜெயாவை முறைக்க, ஜெயாவோ சொல்லத் தெரியாத அவஸ்தையில் நெளிந்தாள்.

      கார்த்திகை தீபத் திருநாளுக்கு முதல் நாள். மாலை நேரம் ஐந்து மணியிருக்கும். வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. ஜெயா சென்று கதவைத் திறந்தாள். வந்தவள் ஓர் இளம்பெண். கல்லூரி மாணவி போலத் தெரிந்தாள். கையில் ஜெயா, தாயம்மாவிடம் கொடுத்த அதே இரண்டு பைகள்.

      “வாம்மா வா, யாரு நீ? தாயம்மாவோட பேத்தியா?”

      “ஆமாம். என் பேர் தெய்வா. ஆனா நான் அவங்களோட நெஜப் பேத்தி இல்லை. என்னை அவங்க எடுத்து வளத்தாங்க. இந்தப் பைகள் உங்களோடது தானே? நீங்க இந்த அபார்ட்மெண்ட்டில் இருக்கீங்கன்னு மட்டும் தான் பாட்டிக்குத் தெரியுமாம். ஆனா வீட்டு நம்பர், உங்க பேரு எதுவும் அவங்களுக்குத் தெரியலை. ஆனா எப்படியாவது உங்களைக் கண்டுபிடிச்சு உங்க கிட்ட இதைச் சேக்கணும்கறது பாட்டியோட கடைசி ஆசை” என்றாள் தெய்வா கண்ணீருடன்.

      “என்ன கடைசி ஆசையா? என்னம்மா சொல்லறே?”

      “ஆமாம். பாட்டி இறந்து போய் ரெண்டு நாளாச்சு.”

      “அச்சச்சோ, எப்படி ஆச்சு?” மனதில் துக்கம் பொங்கிப் பொங்கி வந்தது ஜெயாவுக்கு.

      “நாலு நாளைக்கு முந்தி சாயந்திரம் மழை கொட்டுச்சு இல்லையா? அன்னைக்கு மழையில் நனைஞ்சுட்டே வீடு வந்தாங்க. ராத்திரியில் இருந்து குளிர் காய்ச்சல். ரெண்டே நாட்களில் டக்குனு போயிட்டாங்க. நினைவு தப்பறதுக்கு முன்னாடி இந்தப் பைகளைக் காமிச்சு எப்படியாவது உங்க கிட்ட சேக்கச் சொல்லிச் சொன்னாங்க. நானும் அவங்க சொன்ன தகவல்களை வச்சு ஒருவழியாக் கண்டுபிடிச்சுட்டேன்.”

      “அடடா, நம்பவே முடியலையே? நான் கடைசியாப் பாத்த போது கூட நல்லா இருந்தாங்களே!” அழுகை முட்டியது ஜெயாவின் குரலில்.

      “புண்யாத்மா, அதிகம் கஷ்டப்படாமல் உசுரை விட்டுருக்காங்க. உன்னைப் பத்திச் சொல்லும்மா. நீ எப்படி தாயம்மா கிட்ட வந்தே? இப்போ என்ன பண்ணறே?” என்றார் கணேசன். தாயம்மாவைத் தவறாக நினைத்ததற்காக மனம் வருந்திப் பேசினார் இப்போது.

      “பொறந்ததும் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குழந்தை நான். இப்போ சமீபத்தில் தான் எனக்கே தெரிய வந்தது. அதுவும் பாட்டியோட சொந்தக்காரங்க வீட்டில் ஒரு விசேஷத்துக்குப் போனபோது தான் தெரிஞ்சுது. அதைப் பாட்டி கிட்டயே நேரடியாக் கேட்ட போது தன்னோட கதையைச் சொன்னாங்க. குடிகாரப் புருஷன் குடிச்சுட்டு வந்து தினமும் இவங்களை அடிச்சுத் துன்புறுத்தியிருக்கான். புகுந்த வீட்டுப் பெரியவங்க கிட்ட இவங்க சொன்ன போது, ‘உன்னால குழந்தை பெத்துத் தர முடியலை. அந்த துக்கத்தை மறக்கத் தான் அவன் குடிக்கறான் பாவம்!’னு அவனுக்கு வக்காலத்து வாங்கிருக்காங்க. ஒருநாள் அடிக்க வந்தவனோட கையைத் தடுத்து நிறுத்தி முறிச்சதோட, அவன் கட்டின தாலியையும் அறுத்துப் போட்டுட்டு வந்துட்டாங்களாம்.

      ஒரு பொம்பளையால தனியா வாழ்ந்து ஜெயிக்க முடியும்னு உலகத்துக்குக் காட்ட நினைச்சாங்களாம். ஒரு ஸ்கூலில் ஆயா வேலை பாத்துப் பொழைச்சிருக்காங்க. அந்த சமயத்தில் என்னைப் பாத்து எடுத்து வளத்திருக்காங்க. நீ நல்லாப் படிச்சு முன்னுக்கு வரணும்னு சொல்லிட்டே இருப்பாங்க. வயதானதும் ஸ்கூல் வேலையில் இருந்து ஸ்கூல்காரங்க அனுப்பிட்டாங்க. அப்போது தான் இந்தப் பூ வியாபாரம் ஆரம்பிச்சாங்க. காலையில் சில வீடுகளில் பாத்திரம் தேய்ச்சு வீடு துடைக்கற வேலை. சாயந்திரம் பூக்கடை. எனக்காக பேங்க் அக்கவுண்ட் ஆரம்பிச்சுப் பணம் கூடக் கணிசமாச் சேத்து வச்சிருக்காங்க. காலேஜில் படிச்சுட்டு இருக்கேன். ஆனா வீட்டில் தனியா இருக்க முடியலை என்னால” என்று சொல்லி அழுதாள் தெய்வா.

      அவளருகில் சென்று அவளை அணைத்துக் கொண்ட ஜெயா, அவளுடைய கண்களைத் துடைத்தாள்.

      “தனியா இருக்க வேண்டாம் கண்ணு. எங்க வீட்டுக்கு வந்துரு. எங்க பசங்க வெளிநாட்டில் இருக்காங்க. எப்போதாவது தான் வருவாங்க. எங்களுக்குன்னு யாரும் இங்கே இல்லை. நாங்க உன்னைப் பாத்துக்கறோம்” என்று சொன்ன ஜெயா, தெய்வாவின் கண்களைத் துடைத்து விட்டாள். கணேசனும் அவள் சொன்னதை ஆமோதித்துத் தலையாட்டினார்.

      இத்துடன் கதையை முடித்தது வேதாளம்.

      “இந்தக் கதையில் வந்த மூன்று பெண்களில் யார் மிகவும் சிறந்தவர்? பாட்டியின் இறுதி வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து அவள் ஆசையை நிறைவேற்றிய தெய்வாவா, அனாதைக் குழந்தையை எடுத்து வளர்த்து ஆளாக்கிய ஏழைப் பெண் தாயம்மாவா, இல்லை அறிமுகமேயில்லாத தெய்வாவுக்கு ஆதரவு தந்த ஜெயாவா? “என்று கேட்டது.

      விக்கிரமாதித்தன் சிறிது யோசித்து விட்டு பதில் கூறத் தொடங்கினான்.

      “அனாதையான தன்னை எடுத்து வளர்த்த பாட்டிக்கு ஒரு சிறிய நன்றிக் கடனாவது பதிலுக்கு செய்ய நினைத்தாள் தெய்வா. அதில் ஆச்சரியமே இல்லை.

      தனியாக வாழ்ந்து ஜெயித்துக் காட்ட நினைத்த தாயம்மா, தன் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வேண்டும் என்று தீர்மானித்ததால் தான் குப்பைத் தொட்டியில் கிடந்த குழந்தையை எடுத்து வளர்த்துத் தனது தனிமையைப் போக்கிக் கொண்டாள். அதுவும் ஓர் ஏழைக்கு மிகப்பெரிய விஷயம் என்றாலும் அந்தச் செயலில் தன்னலம் கலந்த எதிர்பார்ப்பு இருந்தது.

      ஆனால் ஜெயா, செல்விக்கு ஆதரவு தர முன் வந்தது எந்தவிதமான காரணமோ, நிபந்தனையோ இல்லாமல் மனதில் தானாகவே மலர்ந்த கருணையினால். எனவே மூவரிலும் சிறந்த பெண் ஜெயா தான்”

      விக்கிரமனின் சரியான பதிலால் வேதாளம் முருங்கை மரத்தில் மீண்டும் தாவி ஏறித் தொங்கியது.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.