“நிலவே என்னிடம் நெருங்காதே?” என்று மெல்லப்பாடினாள் அல்லிராணி.
“என்னடி அல்லி? நீயும் சினிமாப்பாட்டில் இறங்கிட்ட? உன்னுடைய சயன்ஸ் சரக்கு எல்லாம் காலியா?” என்று சீண்டினாள் அங்கயற்கண்ணி மாமி.
“கேளுங்க மாமி! இந்த கண்ணதாசன் பாட்டுக்கு ஏற்ப, நிலா நம்மை விட்டு விலகிக் கொண்டிருக்கிறதாம்!” என்றாள் அல்லி.
“இது என்னடி புதுக்கதையாக இருக்கு. அப்படின்னா, கொஞ்சநாளில, சந்திரன் காணாமப் போயிடுமா? என்றைக்கும் அமாவாசைதானா?” என்று சொல்லிவிட்டு “சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா?” என்று அல்லியைப்பார்த்து கண்சிமிட்டினாள் மாமி.
“அவசரப்படாதீங்க மாமி! சயன்ஸ் சொல்வது இதுதான். வருஷா வருஷம் நிலா பூமியை விட்டு 3.8 சென்டிமீட்டர் தொலைவு செல்கிறதை அளந்திருக்கிறார்கள்!” என்றாள் அல்லி.
“அடப் பூ.. இவ்வளவுதானா? இதுக்கா இத்தனை பில்டப்? “என்றாள் மாமி. அல்லி தொடர்ந்தாள் “விஷயத்துக்கு வருகிறேன். பூமி சூரியனை சுற்றி வருவது போல், நிலா பூமியை சுற்றி வருகிறது. பூமியில் உள்ள புவி ஈர்ப்பு விசையின் காரணமாக நிலவு பூமியினை சுற்றி வருகிறது. அதே நேரத்தில், நிலவில் இருக்கும் புவி ஈர்ப்பு விசையும் பூமியை ஈர்க்கும். இதனால், பேரலைகள் உருவாகும். இவை அனைத்தும் ஒரே நேரத்தில் நிகழும் போது ‘கிக் பேக் எபெக்ட்’ காரணமாக நிலவு விலகிச் செல்கிறது” என்று சொன்ன அல்லியை இடைமறித்த மாமி,
“நிலவில் உள்ள ‘புவி ஈர்ப்பு’ என்று சொன்னாயே ,அது எப்படி சரியாகும்? ‘நிலவு ஈர்ப்பு’ என்று தானே சொல்லவேண்டும்” என்று ஒரு ஒழுங்குப் பிரச்சினையைக் கிளப்பினாள்.
அல்லி, “மாமி, அது சொற்குற்றம்! தொடங்கிய பிரச்சினைக்கு, அதாவது சயன்சுக்கு வருவோம். நிலா தோன்றிய போது அது நம்ம பூமிக்கு ரொம்பப் பக்கத்தில் இருந்ததாம். அப்போது வெறும் 14 ஆயிரம் மைல் தொலைவில் இருந்ததாம். ஆனால் தற்போது, 2 லட்சத்து 50 ஆயிரம் மைல் தூரம் தொலைவில் வந்துவிட்டதாம். இந்த விகிதத்தில் நிலா விலகிச் சென்றால் அது முழு நிறைவாக கதிரவனை மறைத்து – முழு நிறைவான சூரிய கிரகணம் ஏற்படாது; நமது கடல்கள் அலைகளின்றியும் போகலாம்; இது பூமியின் பல்லுயிர் சூழலை பாதிக்கும்”
மாமி சொன்னாள்: ”அப்ப, நிலா தோன்றிய சமயத்தில் நாமெல்லாம் அமெரிக்கா போறது போல, வெறும் ஏரோப்ளேனிலேயே போய்ட்டு வந்திருக்கலாம்’ என்று ஜோக்கடித்தவள், “அப்புறம், முக்கியமாக, நிலாவைக்காட்டி குழந்தைளுக்கு சோறு ஊட்டும் அம்மாக்கள் பாடு தான் திண்டாட்டம்” என்றாள் முத்தாய்ப்பாக.
இது ஒரு அதிசய உலகம்!
https://www.gearrice.com/update/the-moon-has-begun-to-move-away-from-earth-what-does-this-situation-indicate/