சரவணன் வீட்டினுள் நுழையும் போதே உற்சாகமான பேச்சுக் குரல்கள் கேட்டன. நிச்சயமாக அப்பாவின் நண்பர் இராகவன் தான் வந்திருப்பார். அப்பாவின் அறையினுள்ளே போகலாமா என அவன் நினைக்கையில் அப்பா, உல்லாசமாக ஒரு பாடலை சீட்டி அடித்தார். அவன் அறைக் கதவைப் பிடித்துக் கொண்டு நின்றான். அந்தப் பாடலைக் கண்டுபிடிப்பதற்கான போட்டி நடக்கிறது போலும். ராகவனுக்குத் தெரியவில்லை. ‘சரியான ஞான சூன்யம்டா நீ; நீங்க சொல்லுங்க மிஸஸ். ராகவ்’ என்றார் அப்பா. அந்த மாமி பாடியே காட்டினார். ‘மாசி மாசம்தான், கெட்டி மேள தாளம் தான்; மாத்து மாலைதான் வந்து சேரும் வேள தான்.” இப்போது அந்த மாமி சீட்டி அடித்தார். இராகவன் மாமா ‘எங்க பேட்டல ரௌடி இவ’ என்றார் செல்லமாக. அம்மா சரியாக அந்தப் பாடலைச் சொன்னார் “மாசி மாசக் கடசியிலே மச்சான் வந்தாரு; பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு.’ ‘இப்ப பாருடா, நான் பாட்ற ட்யூன உங்களால கண்டே பிடிக்க முடியாது’ என்ற மாமா பாடியது யாருக்குமே புரியவில்லை. அவர் பாடியது ‘மாசில் வீணையும், மாலை மதியமும்’. அப்பா விளையாட்டாக அவரை அடிக்கப் பாய்ந்தார். ‘கூல், கூல், மாசி வரதில்லயா அதுல?’ என்றார் மாமா. ‘ மாசிக்கும் மாசிற்கும் வித்தியாசம் தெரியாத நீ என்னத்தான் சொல்லித் தரியோ காலேஜ்ல.’ என்றார் அப்பா.
‘தப்பு ஒண்ணுமில்லடா, இந்த மாசம் தான மஹா சிவராத்ரி, காரடையார் நோன்பு, மகத் தெப்பம், பூச்சொரியறது, தீர்த்தவாரி எல்லாம் வரது. அதனால் சிவனைப் பத்தின பாட்டு சரி தான்’ என்றார் மாமா.
‘கரெக்ட் தான் மாமா நீங்க சொல்றது. அம்பிகை பொய்கைல வலம்புரிச் சங்காப் பொறந்து சிவன நோக்கி தவம் செஞ்சது இந்த மாசி மாசத்ல. மாசிப் பௌர்ணமி அன்னிக்கு கடல் நீராடறதுன்னு நல்ல வழக்கமெல்லாம் இருந்திருக்கு.. நம்ம மூதாதையர்கள் இயற்கையோட சேந்துதான் அத்தனயும் கொண்டாடி இருக்கா.’ என்றார் அம்மா.
சரவணன் இடையில் புகுந்தான். ‘அம்மா, அப்ப மாசி மகத்தன்னிக்கும் விருந்து சாப்பாடா?’ என்றான் சப்புக் கொட்டிக் கொண்டே.
“அதான பாத்தேன். சாப்பாட்டு ராமன் இன்னும் வாயத் தொறக்கலயேன்னுட்டு. ஏன்டா, இந்த மார்ச்ல ஒன்னு நடக்கப் போறதே, நடக்க ஆரம்பிச்சுடுத்தே, அது என்னன்னு தெரியுமா?”
‘குருவும் சுக்கிரனும் இணயப் போறதுதானப்பா, அது’
“சமத்து, சரூ.” என்றாள் மாமி
நாமெல்லருமா மாடிக்குப் போயி தொலநோக்கியில அதப் பாக்கப் போறோம் என்று சொன்னார் அப்பா.
‘அப்பா, நான் ஓடிப் போயி, சஞ்சய், பவானி, ஜமால், அல்போன்ஸ் எல்லாரையும் கூட்டிண்டு வரேம்ப்பா; ப்ளீஸ். அவாளும் பாக்கட்டுமே.’
“தாராளமா வரட்டும். நான் ‘நொறுக்ஸ்’ நெறய வாங்கி வச்சிருக்கேன். மாடில சூர்யன் மறஞ்ச ஒரு மணி நேரத்ல இந்த ‘கன்ஜங்க்ஷனப்’ பாக்கலாம்.
சரூ குதித்துக் கொண்டு ஓடினான். பட்டாளம் திரண்டு விட்டது. மேலை வானில் ஆதவன் தன் சிவப்பு நிறத்தை மஞ்சள் வர்ண ஆரஞ்சு நிறமாக்கி எழில் மிகு கோலங்களை வானில் வரைந்து கொண்டிருந்தான். வெறும் கண்களில் தென்படும் இந்த இயற்கை வண்ணக் கண்காட்சி துல்லிய நீல நிறப் பின்னணியில் எத்தனை அழகோவியமாய்த் தென்படுகிறது.
பவானி தான் முதல் கேள்வியைக் கேட்டாள். ‘மாமா, இணைப்பு, இணைப்பு அப்படிங்கறிங்க, அது என்ன?”
‘குருவும், சுக்கிரனும் இப்ப ஒன்னுக்கொன்னு சமீபத்ல ஒரே பகுதில தெரியறதே அதுதான்.’
“ஐ, எவ்ளோ அழகா இருக்கு. ரெண்டு பிரகாசமான நட்சத்திரம் போல”
ஜமால் கேட்டான், ‘இப்படி ரெண்டு கோள்கள் இணையறது அபூர்வமா சார்?’
“அடிக்கடி நடக்காததெல்லாம் அபூர்வம் தான். ஆனா, குருவும் சுக்கிரனும் கிட்டத்தட்ட 13 மாசத்துக்கு ஒருமுற ஒருத்தருக்கொருத்தர் கிட்டக்க வருவாங்க. ஆனா, ஒவ்வொரு 3.7 ஆண்டுகள்ல இவ்வளவு நெருக்கமா வரதும், வெறும் கண்ணாலக்கூட அதப் பாக்க முடியறதும், அதுவும் நம்மால பாக்க முடியறதும் பெரிய விஷயமில்லையா?” என்றார் மாமா.
‘இது எப்படி நடக்கறது, சார்’ என்றான் அல்போன்ஸ்
“சஞ்சய், நீ சொல்லலாமே?’
‘நம்ம சூரியக் குடும்பத்ல, கோள்கள், அதச் சுத்தி வரது. குரு கோள் இருக்கே, அது, பூமியோட சுற்றுப்பாதைக்கு வெளில சூரியனைச் சுத்தறதால, பூமில இருக்கற நமக்கு அது வெளி கிரகம். ஆனா, சுக்ரன் இருக்கே, அது நம்ம பூமியோட சுற்றுப் பாதைக்கு உள்ளயே ஆதவனச் சுத்தறது. குரு நல்ல வெயிட்டான கிரகம். வெள்ளியோ பாறைகள் நெறஞ்ச சின்னக் கிரகம்.’
பவானி இடை புகுந்தாள் “ஆமாம். குரு கோள்ல நெறய வாயு இருக்கு. அது ஒரு வருஷம் எடுத்துக்கறது சூரியனச் சுத்த.”
‘கரெக்ட். அப்ப, எப்படி சூரியன ஒட்டியே போற வெள்ளியும், தள்ளி இருக்கற வியாழனும் சந்திச்சுக்கும்?’
“நாம் சொல்றேன், நான் சொல்றேன். இந்தக் கோளெலெல்லாம் முட்ட வடிவப் பாதல தான் சுத்தறது. ஒன்ன ஒன்னு சந்திக்க முடியறது அதனாலத்தான்.’ என்றான் சரூ.
‘வேற கோள்கள் இப்படியெல்லாம் சேராதா, சார்?’ என்றான் அல்போன்ஸ்.
‘சேரும்ப்பா, வியாழனும், சனியும் சேர்றது இருவது ஆண்டுக்கு ஒரு முற நடக்கும். எல்லாம் கதி வேகத்தப் பொறுத்தது.’
“ஐயோ, மோதிட்டா என்னாகும்?” என்றாள் கலவரமாக மாமி.
இராகவன் சிரித்தார். “எல்லோருக்கும் மோக்ஷம் தான். அப்படியெல்லாம் நடக்கல. இன்னொன்னும் புரிஞ்சுக்கணும். மார்ச்1, 2 தேதிகள்ல நல்ல பிரகாசமா மேக்கு வானத்ல வியாழனும், வெள்ளியும் வெறும் கண்ணுக்கே தெரிஞ்சுது. பூமிலேந்து பாக்கறப்போ நெருக்கமா இருக்கும். ஆனா, ரெண்டுக்கும் இடைல பல லட்சம் கி மீட்டர் இடவெளி இருக்கும். 29.4 ஆர்க்மினிட்னு அதச் சொல்வா. அளவைப் பாத்தோம்னா -2.1 வெள்ளிக்கும், -4 குருவுக்கும் இருக்கும். இந்தக் கணக்கெல்லாம் அஸ்ட்ரானமி கணக்கு. அவன் அறைக் கதவைப் பிடித்துக் கொண்டு நின்றான். இன்னும் கொஞ்சம் வருஷம் போனா உங்களுக்குப் புரியும்.”
அம்மா சொன்னார் “மார்ச் 24-ம் தேதி சந்திரன் வெள்ளிய மறைப்பான். அது தற்காலிகமானது. ஆசியா, ஆப்பிரிக்காவுல நன்னாத் தெரியுமாம். இந்த இணைப்பு இருக்கே நம்ப மீனராசின்னு சொல்றோமே அதுலதான் வரது.”
‘பாரேன், நம்ப ஜோசியத்ல, பஞ்சாங்கத்ல குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, கிரகணம், மட்டுமில்ல, செவ்வாய், வெள்ளி, புதன் இதோட சஞ்சாரமும்னா சொல்லியிருக்கா’ என்று அதிசயித்தாள் மாமி.
வானம் நமக்கொரு போதி மரம்; நாளும் நமக்கது சேதி தரும் என்று பாடினார் மாமா.
அம்மா, மாடியிலேயே, சாம்பார் சாதம், அப்பளம், வறுவல், தயிர் சாதம், வத்தக் குழம்பு என்று அனைவருக்கும் அளித்தார்.
சிறு வயதினர் செவிக்கும், மூளைக்கும், வயிற்றிற்கும் உணவு கிடைத்ததல்லவா? நாமும் ஏன் இதையெல்லாம் கற்றுக் கொள்ளக் கூடாது?