கோயிலுக்குள் பிறந்த பதிகம்
” என்னம்மா ! பையனுக்கு அஞ்சு வயசாயிடுத்தா….ஒருநாள் கம்மியா இருந்தாலும் அடுத்த வருஷம்தான் சேர முடியும் புரிஞ்சுதா ?” என்பது அந்தக்கால ஆரம்பப் பள்ளியில் பெற்றோர்கள் செவிமடுக்கும் வாசகம். எல் கே ஜி , யு.கே.ஜி எல்லாம் இல்லாத காலத்தில், மூன்று வயதுக்கு மேல் உள்ள பிள்ளைகளையும் அவர்கள் அடிக்கும் லூட்டிகளையும் பொறுத்துக்கொள்ள முடியாத தாய் தந்தையர்க்கு இந்த அடிப்படை விதி பெரிய அழுத்தத்தையும் பிரச்சினையையும் தந்தது. எங்கள் அன்னையும் விதிவிலக்கல்ல.
ஆனால் இந்த விஷயத்தில் என் அன்னைக்கு உள்ள பிரச்சினை மற்றவரைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது. காரணம் நானும் என் சகோதரனும் இரட்டையர்கள். தவழ ஆரம்பித்த பருவத்திலிருந்தே எங்கள் இருவரையும் சமாளிப்பது வீட்டில் மிகக் கடினமாக இருந்தது. கண் விழித்ததிலிருந்து உறங்கும் வரை எங்களுக்கு என்ன செய்தாலும் சீராட்டினாலும் , ஒரே மாதிரியாகச் செய்யவேண்டும். இல்லையென்றால் வீடே அதிரும்படி அழுகைதான். இருவருக்கும் ஒரே நேரத்தில்தான் பசி எடுக்கும்; தூக்கம்வரும், பாத்ரூம் போகவரும்; ஜுரம் வரும்; அழுகை வரும் ;கோபம் வரும், அத்தனையும் வரும். இன்று நினைத்தாலும் எங்கள் இருவரையும் வீட்டில் எப்படி சமாளித்தார்கள் என்ற பிரமிப்பு தீரவில்லை.
மேற்படி சிக்கல் அந்தக் காலத்தில் புழக்கத்தில் இருந்த ஒரு பழக்கத்தால் சரி செய்யப்பட்டது. ! அது என்ன ? வயதை அதிகமாகச் சொல்லிப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்துவிடுவது ! இதன் விளைவாக நான் ஐந்து எனச் சொல்லப்பட்டு மூன்றரை வயதிலேயே பள்ளியில் சேர்க்கப்பட்டு, ஒன்றரை வருடம் முன்னதாகவே பணி ஓய்வு பெற்றேன் என்பது என் வாழ்க்கைச் சரிதத்தில் வெளிப்படையாகச் சொல்லமுடியாத விஷயம்.
நிற்க. நான் சொல்லவந்த விஷயம் இதுவல்ல. மூன்றரை வயதே ஆன நான் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த போது, பள்ளி செல்வது எனக்குக் கசப்பான விஷயமாக இருந்தது. நிறைய பயமும் இருந்தது. இதிலிருந்து எப்படி மீண்டேன் என்பதும் சுவையான விஷயம்.
என் வீட்டிலிருந்து தெருக்கோடிக்குச் சென்று அதாவது பத்து வீடுகள் தாண்டி வலதுபுறம் திரும்பி அதே தொலைவு சென்றால் எங்கள் பள்ளி வந்துவிடும். முதல் வகுப்புக்கு டெஸ்க் கிடையாது. நீண்ட பலகைகள் போட்டிருப்பார்கள். அதிலே அமரவேண்டும். எழுதுவதற்கு ஸ்லேட் இருப்பதால் வேறொன்றும் தேவையில்லை.
எங்களைப் போன்ற அழும் பிள்ளைகளுக்கு ஆதரவாக சில அன்னையர்கள் பள்ளி வளாகத்துள்ளேயே எங்கள் வகுப்பு எதிரிலேயே அமர்ந்துகொள்வார்கள். என் அன்னையாரும் இப்படி அமர்ந்திருப்பார்கள். சில நாட்கள், அன்னைக்கு பதிலாகப் பாட்டி வருவாள். முதல் மாதம் இப்படிக் கழிந்தது, பிறகு பள்ளிச் சூழலில் நாங்கள் ஒன்றிய பிறகு , யாரும் துணைக்கு வெளியே காவல் இருக்க வேண்டும் என்ற பரிதாபம் இல்லாமல் போயிற்று.
என்னைப் பொறுத்தவரை, இதன் முக்கியக் காரணம் என் அன்னை எனக்குக் காட்டிக் கொடுத்த “முப்பாத்தம்மன் கோயில்”
ஆம் ! எங்கள் ஆரம்பப் பள்ளி வளாகத்துக்குள்ளேயே இருந்த ஒரு சிறு கோயில். அன்னை பராசக்தி முப்பாத்தம்மனாக வீற்றிருப்பாள். கறுப்புவண்ணச் சிறு சிலை. பட்டுப் பாவாடை, காலில் கொலுசு; மிகப் பெரிய குங்குமப் பொட்டு.நான்கு கரங்கள். காலுக்குக் கீழே ஓர் அரக்கன் தலை கவிழ்ந்து கிடப்பான். தொடுத்த பூ மாலைகளும் சந்தண வாசனையும் மணக்கும். சன்னிதானத்தில் அன்னையின் அருகே இடப்புறம் ஒரு சரவிளக்கு ஒளிவீசிக் கொண்டிருக்கும். வேறு எந்த சன்னதியும் கிடையாது. பிறகு அது நிறைய சன்னதிகளுடன் பெரிய கோயிலாகிவிட்டது.
அன்று எனக்கு அந்தக் கோயிலே ஒரு பெரிய ஆதரவாக மாறிவிட்டது. முப்பாத்தம்மன் எனக்கு இன்னோர் அம்மாவாகிவிட்டாள்; அவளே என் விளையாட்டுத் தோழி; அவளே என் பாதுகாப்பு; அவளே என் பயம் தீர்த்த நாயகி. அவளே என் ஆராதனை தெய்வம். தினம் பள்ளிக்கு வந்து வகுப்புக்குச் செல்லுமுன் அவளை தரிசனம் செய்வேன். எனக்கு மட்டுமல்ல; எங்கள் பலருக்கும் அவளே துணை. இடைவேளைகளில் அவள் பிராகாரத்தில் நாங்கள் நண்பர்களோடு அமர்ந்திருப்போம்.
மனப்பாடப்பகுதி மறந்துவிட்டதா ? வீட்டுப்பாடம் எழுதிவரவில்லையா ? நெருங்கிய நண்பனிடம் “டிபன் பாக்ஸ்” காரணமாகச் சண்டையா ? கபடி விளையாட்டில் கீழே விழுந்து காலிலும் கையிலும் காயங்களா ? எல்லாச் சிக்கல்களுக்கும் , பிரச்சனைகளுக்கும் அவளே துணை. அது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல அவள் பலமுறை என்னைக் காப்பாற்றி இருக்கிறாள். என் நண்பர்களையும் காப்பாறியிருக்கிறாள். ஆம் ! அவளே எங்கள் காவல் தெய்வம்.
கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றிலிருந்து ஐந்து வகுப்புவரை உள்ள அந்த ஆரம்பப் பள்ளியின் நூற்றைம்பது குழந்தைகளுக்கும் அவளே புகலிடமாகிவிட்டாள்.
தேர்வு சமயங்களில் அவள் சன்னதியில் கூட்டம் அதிகமாகிவிடும். நாங்கள் எழுதிய விடைத்தாள்களைத் திருத்தும் ஆசிரியர்கள்தான் மதிப்பெண்கள் கொடுக்கிறார்கள் என்பதை அன்று நாங்கள் நம்பியதே இல்லை. எல்லாம் அவள் செயல். அவளை வேண்டிக் கொண்டால் பாஸ்; அவளை வேண்டிக்கொண்டால் ஐம்பத்துக்கு மேல்; அவளை வேண்டிக் கொண்டால் முதல் ரேங்க். அவரவர்கள் அவரவர் தகுதிக்கு ஏற்ப வேண்டிக் கொள்வார். எனவே அம்மனுக்கும் பிரச்சினை இல்லை.
எங்கள் வகுப்பில் இருந்த மணி , பிரபு இருவரும் படிப்பில் மகாசூரர்கள்; இருவரும் முதலிடம் பெற வேண்டுதல் செய்திருப்பார்கள். அம்மன் சமாளித்துவிடுவாள். மணி கணக்கிலும் , பிரபு ஆங்கிலத்திலும் முதல் மதிப்பெண் பெற்றுவிடுவார்கள்.
இன்னொரு நண்பன் வேலு. அவன் வீட்டில் படித்தவர் யாரும் கிடையாது. அவன் தந்தை மெகானிக் வேலை பார்த்துவந்தார். முக்கால்வாசி நேரம் அவன் “பார்டர் லைன்” பாஸ் பெறுவான். இதற்கு முக்கிய காரணம் அம்மன் அருள் தான் என்று நாங்கள் அனைவருமே நம்பினோம்.
அம்மன் சிலையைச் சுற்றிச் சுவர் எழுப்பிக் கட்டப்பட்ட கோயில் சிறு கோபுரம். வெளிப்புறப் பக்கச் சுவர்களிலும் பின்புறச் சுவரிலும் வெள்ளை அடித்திருப்பார்கள். குறிப்பாகப் பின்புறச் சுவரில் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை கறுப்பு மையிலோ, பேனா பென்சில்களினாலோ எழுதி வைப்பார்கள். போகப் போக நீண்ட வாக்கியங்கள் எழுத இடம் இல்லாததனால் பள்ளிச் சிறுவர் சிறுமியர் தங்கள் வகுப்பு தேர்வு எண் இரண்டை மட்டுமே எழுதிவிட்டுச் செல்ல ஆரம்பித்தனர். ஆமாம் ! அன்னைக்குத் தெரியாதா ஏன் நம்பரை எழுதிவிட்டுச் செல்கிறார்கள் என்று !
முப்பாத்தம்மன் கோயிலுக்கு கன்னியப்ப நாய்க்கர் என்பவர் உரிமையாளர். இன்று அவருடைய வாரிசுகள் அந்தப் பொறுப்பில் இருக்கிறார்கள். கன்னியப்பன் சின்னச் சின்ன வேலைகளை மிக அருமையாகச் செய்பவர். சிறிய உபகரணங்களை வைத்துக் கொண்டு பம்பரங்கள் செய்து விற்பார்; நவராத்திரி நேரத்தில் மண்பொம்மைகள் செய்வார். தீபாவளி சீஸனில் பட்டாசுகள் செய்வார். ஆண்டுக்கு ஒருமுறை ஆடி மாதத்தில் அம்மனுக்குத் திருவிழா நடக்கும். கோயிலின் அருகே உள்ள எங்கள் பள்ளி மைதானத்தில் கலைவிழாக்கள் நடக்கும்.
ஒரு வாரம் நடக்கும் விழாவின் கடைசி நாளன்று அம்மன் வீதி ஊர்வலம் வருவாள். அம்மன் ஊர்வலம் கிளம்பும் போது பெரிதாக வெடி போடுவார்கள். அம்மன் அருமையாகச் சிம்ம வாகனத்தில் அமர்ந்து பலர் இழுத்துவரும் அலங்கார வண்டியில் இருப்பாள்; வண்டிக்கு முன்னால் ஆண் பெண் உருவங்களில் பெரிய திருஷ்டி பொம்மைகள் ஆடிவரும்; அதனைத் தொடர்ந்து கரகாட்டம், அதன் பின் நாதஸ்வரம்.
அம்மன் ஊர்வலம் கோயிலின் கிழக்கு முகமாக ஆரம்பித்து உஸ்மான் ரோடு, துரைசாமி ரோடு என்று திரும்பி பிரதட்சணமாக சுற்றிக் கடைசியில் எங்கள் தெரு வழியாகக் கோயிலுக்குத் திரும்பும். இரவு பத்து மணிக்கு ஆரம்பிக்கும் ஊர்வலம் வீடு வீடாக நின்று எங்கள் தெரு வந்து சேர இரவு பண்ணிரண்டு மணிக்கு மேல் ஆகிவிடும்.
சிறுவர்களாக இருக்கையில் இரவு சாப்பிட்ட பிறகு ஒன்பது மணிக்கெல்லாம் உறங்கப் போய்விடுவோம். அம்மன் திருவிழா ஊர்வலதினத்தன்று இரவு பன்னிரண்டுவரை தூக்கம் வராது. ” தூங்கிவிட்டால் எழுப்பிவிடு “ என்று அம்மாவிடம் சொல்லிவைத்திருப்போம். ஆனால் அதற்கு அவசியம் இருக்காது. ஊர்வலம் எங்கள் இல்லத்தைத் தாண்ட அரைமணி நேரம் முன்னேயே வெடிச் சத்தம் காதைப் பிளக்கும், பட்டாசு மத்தாப்பு வகைகளின் ஒளி இரவைப் பட்டபகலாக்கிப் பரவசம் அளிக்கும்.
நாதஸ்வர இசை கேட்கும்போது ஊர்வலம் எங்கள் வீட்டின் முன் நிற்கிறது என்று புரிந்துகொண்டு வெளியே ஓடிவருவோம். இதற்குள் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் தாம்பூலத் தேங்காய் கற்பூரத் தட்டுடன் என் அப்பா அம்மா அண்ணா அக்கா எல்லோரும் இருப்பார்கள். வண்டியின் பலகையில் அம்மன் உருவத்திற்கு அருகில் நின்றுகொண்டு குருக்கள் அர்ச்சனை செய்து பிரசாதத்துடன் தட்டைத் திருப்பிக் கொடுப்பார். சில நேரங்களில் கிட்டே நின்றால் குருக்கள் எங்கள் நெற்றி நிறை திருநீற்றையும் குங்குமத்தையும் வண்டி அளவு பூசிவிட்டுவிடுவார். தூக்கக்கலக்கத்தில் படுக்கையில் விழுந்து மறுநாள் எழுந்து பார்த்தால் தலையணை எல்லாம் விபூதி மணக்கும்.
நாங்கள் மாம்பலம் தெருவில் இருந்தவரை, கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள், நாங்கள் தினம் முப்பாத்தம்மன் கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். என் வாழ்வின் அழியாத தடங்களை இட்டு என்னை ஆளாக்கியது அந்தக் கோயில்.
அம்மன் கோவில் ஆராதனைகள். ஆடித் திருவிழாக்கள், கச்சேரிகள் ,இரவில் வெடிச் சத்தம் கேட்க அம்மன் கம்பீரமாக வீதி உலா வருதல், பொங்கல் படையல், பாம்புப் புற்றுக்குப் பால், என்று அம்மன் கோவிலை நினைத்தாலே பல பசுமையான நினைவுகள்.
எங்கள் குடும்பத்தின் வாழ்வுக்கும் வளத்திற்கும் நலத்திற்கும் அவளே துணை. 1970-களில் சின்னஞ்சிறியதாக இருந்த அன்றைய கோவில் பிராகாரத்தைச் சுற்றிவரும் போது, ஒருநாள் திடீரென மனத்துக்குள் ஓர் ஆரவாரம். ஏற்கனவே கவிதைகள் எழுதிவந்த எனக்கு, அம்மனைப் பற்றியும் அவள் அழகு அருள் பற்றியும் பாடவேண்டுமென்று உள்ளே ஓர் உத்வேகம். பிராகாரத்தைச் சுற்றி வந்து நின்ற போது ஒரு பாடல் வந்தது. அடுத்த பாடல் அடுத்தநாள் பிறந்தது. இவ்வாறு ஒவ்வொருநாளும் ஒரு பாடலாகப் பத்து நாட்களில் “முப்பாத்தம்மன் பதிகம்” பிறந்தது. 1975 -ல் அதனை ஒரு சிறு நூலாக சைதை பாரதி கலைக் கழகம் வெளியிட்டது.
இந்த பக்திப் பனுவல்தான் எனது முதல் இலக்கியப்படைப்பு.
என்று படிக்கும் பாக்யம் கிடைக்குமோ தெரியவில்லை. அவள் அருள் வேண்டி நிற்கிறேன்
LikeLike
காணாத அம்மனைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள் சார்! அருமை! அழகு!
LikeLike