ஜீயஸ் கடவுளைத் தன் மோகனாஸ்திரத்தில் மயக்கிய ஹீரா அவரை இன்னும் கொஞ்ச காலம் அதே மயக்க நிலையில் வைப்பதற்காக உறக்கக் கடவுளை வேண்டிக்கொண்டாள் . முதலில் மறுத்த அவன் கடைசியில் தன் காதலியைத் திருமணம் செய்துகொள்ள உதவுதாக வாக்குக் கொடுத்ததும் சரி என்று ஒப்புக்கொண்டான்.
ஹீராவுடன் காதல் சுகத்தில் திளைத்த ஜீயஸ் பின்னர் உறக்கத்தின் மயக்கத்தில் துவண்டு விழுந்தார்.
தன்னைச் சுதாரித்துக்கொண்ட ஹீரா சந்தப்பத்தை முழுதும் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்து பொசைடன் என்கிற கடவுளை அனுப்பி கிரேக்கர்களின் தைரியத்தை அதிகப்படுத்தி , தீவிரமாகப் போரிடச் செய்ய உத்தரவிட்டாள்.
ஹெக்டரின் அதி தீவிரத் தாக்குதலால் நிலை குலைந்து போன கிரேக்கர் படைக்கு பொசைடன் வந்தது மிகப் பெரிய தைரியத்தைக் கொடுத்தது. அகெம்னன், டயமிடிஸ், ஓடிசியஸ், அஜாக்ஸ் ஆகிய முக்கிய தலைவர்களை பொசைடன் அழைத்து டிராய் நாட்டை வெல்ல நல்ல தருணம் என்று உற்சாகப்படுத்த அனைவரும் வெறியுடன் திரண்டனர்.
பொசைடன் தனக்கு எதிரணியில் தலைமையேற்று வருவதைப் பார்த்து ஹெக்டர் ஒரு கணம் திகைத்தாலும் தனக்கு ஜீயஸ் கடவுளரின் முழு ஆதரவு இருக்கிறது என்பதை உறுதியாக நம்பிய அவன் தன் வீரர்களை முடுக்கிப் போரின் முன்னணிக்கு வரச் செய்தான்.
அந்த சமயம் மாவீரன் அஜாக்ஸ் தன் திறமையெல்லாம் காட்டினான். போகும் இடமெல்லாம் டிராஜன் படையினரை நிர்மூலம் செய்து ஹெக்டரை நோக்கி முன்னேறினான். அனைத்துத் தளபதிகளும் பொசைடன் உதவியால் ஏக காலத்தில் தாக்கிட டிராஜன் படை அதைச் சமாளிக்க முடியாமல் தவித்தது. ஹெக்டரை நெருங்கிய அஜாக்ஸ் நேரடியாக அவனைத் தாக்கும் பணியில் ஈடுபட்டான். ஹெக்டரின் வீரமும் ஆவேசமும் அந்தக் கணத்தில் ஏனோ அஜாக்ஸ் முன்னால் தோற்றுக் கொண்டிருந்தன. பாறைகளை எறிந்து ஹெக்டரை நகர விடாமல் செய்த அஜாக்ஸ் தனது திறமை வாய்ந்த ஈட்டியால் அவனைக் குத்தி படுகாயமடையச் செய்தான். கீழே விழுந்த ஹெக்டரின் கவசத்தைக் கழற்றி அவன் உடலைச் சின்னாபின்னமாக்க அஜாக்ஸ் அவனை நெருங்கினான். ஆனால் டிராய் நாட்டைக் காக்கும் கடவுளர்கள் அஜாக்ஸ் மற்ற கிரேக்க வீரர்கள் அவனை நெருங்காத வண்ணம் ஒரு வளையமாக நின்று ஒரு புகைப் படலத்தை ஏற்படுத்தினார்கள்.அந்தப் புகையைச் சாதகமாகிக் கொண்டு டிராய்நாட்டு வீரர்கள் ஹெக்டரைத் தேரில் ஏற்றி போர்க்களத்திலிருந்து பாசறைக்கு அப்புறப்படுத்தினார்கள்.
ஹெக்டர் மரண காயத்துடன் பதுங்கிவிட்டான் என்ற செய்தி பரவியதும் கிரேக்கப் படைக்கு உற்சாகம் தலைக்கு மேல் ஏறியது. முன்னேறி வந்த டிராஜன்களைக் கொன்று குவித்து அவர்களை விரட்ட ஆரம்பித்தனர். ஹெக்டருக்கு ஆதரவான கடவுளர்கள் டிராஜன்களைத் திரட்டி கிரேக்கரைத் தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். மீண்டும் இரு படைகளுக்கிடையே உக்கிரமான போர் நிகழ்ந்தது. இருபக்கத்திலும் முக்கியமான வீரர்கள் பலர் மாண்டனர். அன்றைய போர் நாயகனான அஜாக்ஸ் டிராஜன்களுக்கு சிம்ம சொப்பனமாகக் காட்சியளித்தான். டிராய் நாட்டு தளபதிகளைக் கொன்று அவர்களின் தலையைக் கொய்து பந்தாடினான். இன்னும் கொஞ்சம் அவகாசம் கிடைத்திருந்தால் அன்றே அந்தக் கணமே அஜாக்ஸின் திறமையால் டிராய் நாடு கிரேக்கருக்கு மண்டியிட்டு அடிமைப்பட்டிருக்கும்.
ஆனால் விதி வேறு விதமாக இருந்தது.
உறக்க மயக்கத்தில் இருந்த ஜீயஸ் எதிர்பாராதவிதமாகப் பாதியில் கண் விழித்து நோக்க எல்லாம் தலை கீழாக மாறத் தொடங்கியது. தன் எண்ணத்திற்கு மாறாகக் கிரேக்கர் படை வெற்றிபெறும் நிலையில் இருப்பதைப் பார்த்து ஜீயஸ் திடுக்கிட்டார். ஹீராவைப் பார்த்த ஒரே பார்வையில் அவள் செய்த துரோகத்தைக் கண்டுபிடித்துவிட்டார்.அவளை அசையவிடாமல் செய்துவிட்டு போர்க்களத்தை உற்று நோக்கினார். பொசைடன்தான் கிரேக்கர்களை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்கிறான் என்பதை அறிந்ததும் அவனை அங்கிருந்து புறப்படும்படி உத்தரவிட்டார்.ஹெக்டரின் மயக்கத்தை முறித்து அவனைப் போரின் முன்னணிக்கு வர அவரே நேரடி முயற்சிகளும் எடுத்தார். டிராஜன்களுக்கு புதிய உத்வேகத்துடன் போரிட ஊக்கத்தையும் அளித்தார். விளைவு கிரேக்கப் படைக்கு மரண அடிகளாக விழத் தொடங்கியது.
புதியதாக சாவாமருந்து குடித்ததுபோல எழுந்த ஹெக்டர் இனித் தாமதிக்கக் கூடாது என்று புயல் வேகத்தில் புறப்பட்டான். ஜீயஸ் கடவுள் உத்தரவின் பேரில் அப்பல்லோ கடவுளும் ஹெக்டருக்குத் துணையாக வந்தான். இருவரும் சேர்ந்து முன்னேறிவரும் கிரேக்கப் படையைத் தடுத்து நிறுத்தியது மட்டுமல்லாமல் கிரேக்கர்களை அவர்கள் அரணுக்குள் ஓடவும் வைத்தனர்.தாக்குதல் நடத்திய கிரேக்கப்படை தற்காப்பு வேலையில் ஈடுபடவேண்டியதாயிற்று. அஜாக்ஸ் மற்றும் தளபதிகள் டிராஜன்படை தங்கள் கப்பல்களுக்கு வராமலிருக்க அனைத்துப் படைவீரர்களையும் கப்பல்களின் முனைப்பில் நிறுத்திக் காவந்து செய்தார்கள்.
ஏனென்றால் அந்தச் சமயம் அப்பல்லோ அவர்களின் தற்காப்பு அரண்களையும் அகழிகளையும் அழித்து நிர்மூலமாக்கிக் கொண்டிருந்தான். அரண்களைக் காப்பாற்ற நின்றிருந்த அஜாக்ஸ் மற்றும் அனைவரும் அப்பல்லோவின் சூறாவளித் தாக்குதலால் கப்பலுக்குள் பின் வாங்க வேண்டி வந்தது. கிரேக்கப் படையினர் அனைவரும் கப்பலின் பின் புறத்திற்கு ஓடத் துவங்கினர்.
தான் எதிர்பார்த்ததைப் போல் டிராஜன்கள் கை ஓங்குவதைப் பார்த்த ஜீயஸ் முகத்தில் குரூரப் புன்னகை மலர்ந்தது. ஹெக்டருக்கு உற்சாகம் ஏற்படும்படி ஆசி கூறி அவனை இன்னும் தீவிரமாகத் தாக்கும்படியும் ஆணையிட்டார். தனக்குச் சாதகமான நிலை இருப்பதைக் கண்ட ஹெக்டர் பேய்ச் சிரிப்புடன் தன் படை வீரர்களுடன் கிரேக்கர் அரணுக்குள் நுழைந்தான்.
ஹெக்டர் வருவதைப் பார்த்த அஜாக்ஸும் தன் வீரர்களுடன் முன்னணிக்கு வந்தான். இரு திறத்தினருக்கும் கடும் போர் நடந்தது. கப்பல் வரை வந்த டிராஜன் வீரர்களை கப்பல்களுக்குள் ஊடுருவிச் செல்ல இயலாத அளவிற்கு அஜாக்ஸ் மிகத் திறமையாகப் போராடி நிலைமையைச் சமாளித்தான். ஆனால் டிராஜன் வீரர்கள் மேலும் மேலும் வந்துகொண்டே இருந்தனர். ஹெக்டருடன் நேருக்கு நேர் மோதுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அஜாக்ஸ் அவனை நோக்கி வந்தான். “ எதிரிகள் நம் கப்பலுக்கு வர முடியாத அளவிற்கு அவர்களைத் தாக்குங்கள்! இல்லையேல் நாம் அனைவரும் அழிக்கப்படுவோம்’ என்று ஆணையிட்டுக் கூறினான் அஜாக்ஸ்.
ஏற்கனவே அஜாக்ஸால் தாக்கப்பட்டு மரண காயம் அடைந்ததை எண்ணி அதனால் ஏற்பட்ட வெஞ்சினத்தால் அவன் கொடூரமாக தாக்கத் தொடங்கினான். எல்லாவற்றையும் அழிக்கக் காத்திருக்கும் மரண தேவதை போலக் காட்சியளித்தான் ஹெக்டர். அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே கிரேக்கப்படை கலங்கியது.
போரின் உக்கிரம் அதிகமாகிக்கொண்டே இருப்பதைப் பார்த்து குரூரத் திருப்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தார் ஜீயஸ். அகிலிஸின் அன்னையான தன் முன்னாள் காதலிக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற நாம் தற்சமயம் டிராஜன்கள் முன்னேறும்படி செய்யவேண்டும் என்று எண்ணிக்கொண்டார். அதுவும் ஒரு குறிப்பிட்ட எல்லை வரைக்கும்தான் இந்த விளையாட்டு இருக்கும் என்பதும் அவருக்குத் தெரியும். ”இதோ அந்த எல்லைக்கோடு வரப் போகிறது. டிராஜன்கள் கிரேக்கர்களின் கப்பல்களுக்குத் தீ வைக்கும்வரைதான் அவர்கள் ஆட்டம் இருக்கும். அதன்பின் அக்கிலிஸ் அரங்கத்தில் நுழைவான் ! டிராஜன்கள் இனித் தலை தூக்கமுடியாத அளவிற்குத் தோல்வி அடைவார்கள்’. என்ற தனது திட்டத்தை மனதிலேயே நடத்திப் பார்த்து இறுமாப்புக் களிப்பில் மூழ்கியிருந்தார் ஜீயஸ் கடவுள்.
டிராஜன் வீரர்கள் கிரேக்கக் கப்பல் வரைக்கும் வந்ததைக் கண்ட அக்கிலீஸின் நண்பன் பெட்ரோகுலஸ் இனியும் தாமதிக்காமல் அக்கிலீஸிடம் போருக்கு வரும்படி மன்றாட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அக்கிலீஸ் இருக்கும் கப்பலுக்கு விரைந்தான்.
பெட்ரோகுலஸ் வருவதற்கு முன்னரே விஷயத்தைப் புரிந்துகொண்ட அக்கிலிஸ் அவன் சொல்வதை முழுதும் கேட்டுவிட்டு உரைத்தான் “ நண்பா ! இனியும் நான் கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தால் உலகம் என்னை ஏசும் . கோழை என்று தூற்றும். ! பெருமதிப்பிற்குரிய நெஸ்டர் அவர்கள் கூறியதுபோல நீ என் கவச உடை அணிந்து கொண்டு போரிட முன் செல்! நான் மற்ற படை வீரர்களுடன் அணிவகுத்து வருகிறேன். அதுமட்டுமல்லாமல் உன் வெற்றிக்காக ஜீயஸ் கடவுளிடம் பிரார்த்தனை செய்துவிட்டு உடனே பின்னால் வருகிறேன்!” என்று கூறினான்.
பெட்ரோகுலஸ் மனமகிழ்ந்து அக்கிலிஸின் போர்க் கவச உடை அணிந்து கப்பல்களைத் தாக்க வரும் இணைந்த படையை அழித்து சின்ன பின்னப் படுத்த புயலாகச் சென்றான். அவனது போர் வேகம் டிராஜன்களை முன்னேறவிடாமல் தடுத்து நிறுத்தியது. டிராய் நாட்டு பல உப தளபதிகளைக் கொன்று குவித்தான். ஹெக்டர் எங்கிருக்கிறான் என்று தேடி அவனை நோக்கிச் சென்றான். அவன் வரும் வேகத்தைப் பார்த்து அவனை எதிர் கொண்ட ஹெக்டருக்கு பெட்ரோகுலஸை சமாளிக்க முடியாதோ என்ற பயப்பிராந்தி கண்களில் தெரிந்தது. அதனால் பெட்ரோகுலஸ் உடன் போரிட தனக்குத் துணையாக வந்த ஜீயஸ் கடவுளின் மகனை ஏவினான். ஆனால் போர் வெறியின் உச்சக் கட்டத்தில் இருந்த பெட்ரோகுலஸ் ஜீயசின் மகனைத் தான் வாளால் வெட்டி வீழ்த்தினான்.
தன் மகன் பலியாவதை ஜீயஸ் கடவுள் விரும்பவில்லை . ஆனால் அவரது பிரியமான மகன் அன்று இறக்கவேண்டும் என்பது விதி. அந்த விதியை மாற்றி அவனை அங்கிருந்து அப்புறப்படுத்த ஜீயஸ் விரும்பினது உண்மை . ஆனால் அவரைப் பின்பற்றி மற்ற கடவுளர்களும் தங்கள் மகன்களைக் காப்பாற்ற முயலுவார்களே என்ற எண்ணத்தினால் தன் அன்பு மகன் சாவதைக் கண்ணீர் விட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார் ஜீயஸ் கடவுள். தன் மகன் சாவதற்குக் காரணமான பெட்ரோகுலஸை அவமானப்படுத்தி அழிக்கும்படி அப்பல்லோவிற்கு உத்தரவிட்டார்.
ஜீயஸ் மகனைக் கொன்று ஹெக்டரையும் கொல்ல அவனை நோக்கிச் சென்றான் பெட்ரோகுலஸ். ஹெக்டருக்கும் அவனுக்கும் இடையே கடும் போர் நிகழ்ந்தது. ஹெக்டரின் கை சளைக்கத் தொடங்கியது. அப்போது யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அப்போலோ பின்னாலிருந்து அவன் கவச உடையை அவிழ்த்தான். அந்த ஒரு கணம் போதுமாயிருந்தது ஹெக்டருக்கு. தன் ஈட்டியால் பெட்ரோகுலஸைக் குத்தினான். அப்போலோவும் அவனது உடைகளைக் களைந்து அவனை நிர்வாணப்படுத்தினான். அதன் பின் நடந்தது கொடூரம். அத்தனை டிராஜன் தலைவர்களும் பெட்ரோகுலஸைக குத்தி அவனைச் சின்ன பின்னமாக்கினர்.கடைசியாக அவன் தலையைக் கொய்யா வந்த ஹெக்டரிடம்” என உயிர் நண்பன் அக்கிலிஸ் என்னைப் போலவே உன்னையும் கொன்று பழி தீர்ப்பான்” என்று வீரமொழி கூறி உயிர் துறந்தான் பெட்ரோகுலஸ்!
அதே சமயம் கிரேக்க போர்க் கப்பல் ஒன்று டிராஜன் வீரர்களால் எரிக்கப்பட்டு அதன் புகை அக்கிலிஸ் முகத்தில் படிந்தது.
இலியட் போரில் புதிய அத்தியாயம் துவங்கியது..