தாத்தா வேலைக்கு வரியா?
நான் என்னத்தப்பா இனிமே வேலை செய்ய?
சும்மா வா தாத்தா! வந்து ஆளோட ஆளா நில்லு. உன்ன மாதிரி வயசானவங்க வாராங்கள்ள! மம்பட்டிய பிடிச்சுக்கிட்டு கொஞ்ச நேரம் நில்லு. நேரத்தோட வந்திடலாம். நல்ல சம்பளம் தருவாங்க உன் பேரு இருக்குல்ல.
எனக்கு வேண்டாம் அப்பா அந்தக் காசு! வேலை செய்யாமலே காசு வாங்க மனசு வரலை.
சரி ஒன்னோட இஷ்டம்.
கிழவர் அந்தக் காலத்தை அசை போட ஆரம்பித்தார்.
“அந்தக் காலத்துல கோழி கூப்பிட எல்லாரும் கிராமத்திலே எந்திரிச்சிடுவோம். விடியும் முன்னால முதலாளி தொழுவுக்குப் போய், சாணி அள்ளி, குப்பையைப் போட்டுட்டு, மாட்டுக்குப் பொட்டு போட்டு தண்ணீகாட்டத் தொட்டியில் ஆட்டின பருத்திக்கொட்டையைக் கலக்குவோம். தண்ணீர் காட்டிக் கூளம் போட்டுட்டு பகலுக்கு கொஞ்சம் கூளம் புடுங்கி வைப்போம். பலபலன்னு விடிஞ்சிரும். வீட்டுக்குப் போயி கஞ்சியைக் குடிச்சிப்போம். மதியத்துக்குக் கஞ்சியைக் கலையத்துல ஊத்தி கடிச்சிக்க ரெண்டு வெங்காயமோ மொளகாயோ வச்சிக் குடுப்பா பொண்டாட்டி. வேகமாக வந்து மறுபடியும் ஒரு தடவை மாடுகளுக்குத் தண்ணி காட்டி ஏர்க் கால்ல மாட்டினா வெயில் ஏறிவிடும்.
சீக்கிரம் கிளம்புங்க ! பொழுது உச்சிக்கு வர முன்னாடி காட்டுக்கு கிளம்புங்க! முதலாளி சத்தம் கேட்கும். கலையத்த தலையில வச்சுக்கிட்டு கோட்டேரோட நடப்போம். காட்டிலும் வெயிலுக்கு ரெண்டு தடவை நிப்பாட்டுவோம். மாடுகளும் அந்த நேரம் படுத்துக் கொள்ளும். சூரியன் உச்சியை தாண்டி மேக்காம நகண்டா ஏரை நிறுத்திட்டு கஞ்சி குடிப்போம்.
சாயங்காலம் வந்தவுடன் முதலாளி கேட்பார்.
ஒவ்வொருத்தரும் ஒரு ஏக்கராவது உழுதாத்தான் முதலாளி கிட்டப் பேச்சு வாங்காம வீட்டுக்குப்
போகலாம்.
இல்லேன்னா மரத்துக்கு அடியில படுத்துகிட்டியா?. சம்சாரி வேலைக்கு வந்தா வளைஞ்சி வேலை செய்யணும், நாளைக்கு வேற இடம் பாத்துக்க அப்படின்னு தாறுமாறு பேசுவாக.
அதுக்கு பயந்துகிட்டு வேலை நடக்கும் . சாயங்காலம் வந்து மாட்டுக்கு தண்ணி காட்டி கூளம் போடணும். பருத்திக்கொட்டை நனையப் போட்டுட்டு வீட்டுக்குக் கிளம்பினால் பொழுது சாய்ந்துவிடும். சில சம்சாரிக சோளம், கேப்பை, குதிரைவாலி, சாமை, கம்புன்னு கொத்தை நெரந்து குடுப்பாக. ஆனா எங்க முதலாளி வீட்டுல எப்பவும் கம்மம் புல்லு தான். அதுவும் சிந்தச் சிந்த அளந்துபோடுவாக.
அதான் நீ, நான்னு அடிச்சு கிட்டு அவுக வீட்டுக்கு வேலைக்கு வருவாங்க. கம்பு சோராக்குறதோ லேசு. கம்ப இடிச்சி சோறு கவுத்திட்டா சாப்பிடச் சாப்பிட அவ்வளவு ருசியா இருக்கும். அஞ்சாறு கத்திரிக்கா, நெத்திலிக் கருவாடு போட்டு புளி குழம்பு வச்சு என் பொண்டாட்டி அன்னைக்கிப் போட்ட சோறு தான் இன்னைக்கும் என்னை நடமாட விடுது. ஆஸ்பத்திரி என்னன்னு தெரியாது.
இன்னைக்குப் புள்ளைக இம்முன்னா ஆஸ்பத்திரிக்கு ஓடுதாங்க! காடுக அன்னைக்கு அப்படி விளையும். குப்பை அடியே ஒரு மாசம் நடக்கும். கோடை உழவு கிட்டப் பிடிச்சி உழுவோம்.
விதைச்சா நாலாம் பக்கம் முளைத்துவிடும் . களை எடுக்க பக்கத்து ஊரு ஜனங்களெல்லாம் வரும். வெளைச்சல் அப்படி இருக்கும். வெளைஞ்சதைக்கொண்டு போய் வீட்டில் போட்டா வீடு பிடிக்காது. பருத்தி அடைஞ்சா தாட்டுகளை பிடிச்சு மிதித்து வண்டியில காட்டில் இருந்து கொண்டு வரணும் .
இன்னைக்கு ஊர்ல ஒரு ஜோடி உழவுமாடு கிடையாது . முத்தம் தொழிக்க கூட பால்காரர் வீட்டுல தான் சாணி எடுக்க வேண்டியது இருக்கு. உழவு மாடு போயி டக்கரு வண்டி வந்து உழவு, விதைப்பு எல்லாம் அதுல தான் . மூடை உரத்தைப் போடுதாக !கண்ட கண்ட மருந்த அடிச்சு நெலம் கெட்டுப் போச்சி. மகசூலும் முந்தி மாதிரி இல்லை. களைக்கு அடிக்கும் மருந்து பயிரைத்தாக்காம இருக்குமா? மழை பழைய மாதிரிப் பெய்யுதா? காட்டுல உள்ள மரத்தைப் பூரா வெட்டி தீப்பெட்டி ஆபீசுக்குப் போகுது! கரி மூட்டம் போடுதாங்க! மழையை எப்படி வரும்? இன்னைக்கு ஒன்பது மணிக்கு களை எடுக்கப் போய் மதியம் ஒரு மணிக்கு வீட்டுக்கு வந்து இருக்காங்க அதுல காட்டுக்காரர் வடை வாங்கி கொடுக்கணும்! சேவு வாங்கி கொடுக்கணும்!! காப்பி தண்ணி வேற! வெத்தல பாக்கு! பாக்கெட் பாக்கு!!
எல்லாம் சம்சாரி தாங்க முடியுமா?
அதான் கிடைக்கும் மருந்து அடிக்காக!!! மாசூலும் நாலுக்கு ஒன்று ஆயிடுச்சு! சோறு சாப்பிடாமல் எத்தனை நாளைக்கு காப்பி தண்ணி குடிச்சு உழைக்க முடியும் இல்லையா? அப்படித்தான் ஆயிருச்சி பொழப்பு! அன்னைக்கு மூணு படி கொத்துக்கு நீ நானுன்னு அலைஞ்சோம இன்னைக்கி மருந்து அடிக்கவும் செடி புடுங்கவும் களத்து வேலைக்கும் வேலையாள் தேடி சம்சாரி வேலைக்கு ஆள் கிடைக்காம சுத்திகிட்டு இருக்காங்க நிலத்துக்காரங்க. எவனுக்கும் சம்சாரி வேலை செய்ய சம்மதம் இல்லை. உடம்புல தெம்பு இல்லை!
மினுக்காக் கடையில நாலு இட்லியை சாப்பிட்டுட்டு, ரேஷன் அரிசி சோத்தை சாப்பிட்டால் உடம்புல வலு எங்க இருந்து வரும்? நிழல்ல வேலை பார்க்க டவுனுக்கு போயிடு தாங்க! பொம்பளைங்க தீப்பெட்டி ஆபீசுக்கு பாட்டு கேட்டுகிட்டு வேலை செஞ்சி பாக்கறாங்க . இப்பதான் அந்த கட்சி இந்த கட்சின்னு 1008 பேர். அன்னைக்கு எலக்சன்னா ஒரு பெரிய முதலாளி கூப்பிட்டு இந்த சின்னத்தில் குத்தும்பாங்க. குத்திட்டு வருவோம்.
அன்னைக்கு ஓட்டு போட்டுட்டு அவங்க கொட்டாயில தான் சாப்பாடு. மதிய சாப்பாடு நெல்லு சோறு சாம்பார் கூட்டுனு வயிறு நிறைய சாப்பிடுவோம் பிறகு ஒரு நாள் சம்பளத்தையும் கொடுத்தாக. இளவட்டாங்க தல எடுத்த பிறகு அவங்க சொல்ற படத்துக்கு குத்த சொல்றாங்க . ஊருக்குள்ள பல சாதி இருந்தாலும் குழப்பம் இல்லாமல் தாயா புள்ளையா இருந்தோம். இப்ப சாதிக்கு சாதி கட்சி ஆகி ஊருக்குள்ள எலக்சன்னா வெட்டு குத்து தான் . ஒத்துமை போயிடுச்சு .
ஆள்கள்ட துட்டு பெருத்துப் போச்சு! துட்டு இருந்தாத் தான் எதுவும் நடக்கும் என்று ஆகிப் போச்சி!
அப்போல்லாம் ஏக்கர் கணக்குல புஞ்சை காடு இருந்தாதான் மரியாதை! முதலாளி பட்டம்!! இன்னைக்கு ரோட்டு அடியில் விளைஞ்ச காடு பூராவும் கல்லா நட்டிருக்கான்.
பிளாட்டாம்? காட்டில் வீடு கட்டினா எங்கே போய் சாப்பிட?
நாள் பூரா உழைச்சா மூணு படி புல்லு இல்லையென்றால் சோளம் கொத்தா கிடைக்கும். இன்னைக்கு சும்மா போய் ஆளாநின்னு சம்பளம் வாங்க கூப்பிடுறாங்க. ஊரோட போறாங்க. வேலை லேசு! ஆளா போய் வர வேண்டியதுதானே ன்னு கூப்புடுதாங்க.
ஊரைச் சுற்றி வேப்ப மரம். நல்ல நெழல். சைக்கிளில் வடை, காபி டயத்துக்குள்ள கொண்டு வாரான். சொல்லுங்க நம்ம கையில இருந்து சம்பளம் கொடுத்தால் இப்படி இருக்க விடுவமா?
சொல்லுங்க!
வேலை வாங்காமல் விடுவோமா? விவசாயம் பார்க்க வர மாட்டேன் என்கிறார்கள்!
வெயில்ல உழைக்கணும் இல்ல!
நான் கம்பை ஊனிக்கிட்டே நடக்கேன்.
இதுல போய் வேலை செஞ்சைன்னு ஏமாத்தி சம்பளம் வாங்க மனசு கூசுது இல்லே!
கிடைக்கிற கஞ்சியே கொஞ்சம்னாலும் ஏமாத்தாம குடிக்கிறது தானே மனுஷனுக்கு மரியாதை! நிம்மதி! அதானே உடம்புல ஒட்டும்!
நீங்க என்ன சொல்லுதிக?