(பாம்பின் உருவில் வந்த அகாசுரனைக் கொன்று மாடுகளையும் சிறுவர்களையும் கண்ணன் காப்பாற்றினான்.
பிறகு அவர்கள் மாடுகளை யமுனை நதிக்கரையின் அருகில் இருந்த புல்வெளியில் மேய விட்டு, அங்கிருந்த மணல்திட்டில் விளையாடினர்……)
கண்ணன் குழலிசைத்தல்
பூமரங்கள் சீராட்டப் பொன்வண்டு பாராட்டக்
காமருவு கிளைகளிலே கருங்குயில்கள் தாலாட்டத்
தாமரையின் முகத்தழகன் தளிர்விரல்கள் குழல்தடவத்
தேமதுரப் பண்ணிசையால் திசையனைத்தும் மயங்கினவே
குறுநகையான் கோவிந்தன் குழல்கொண்டு பண்ணிசைக்க
நறுமலர்கள் தேன்பிலிற்ற நனிமழையாய்த் தரைபொழியப்
பறவைகளும் கூடுகளுள் பார்ப்புடனே தாம்மயங்கக்
கறவைகளும் கால்பரப்பிக் கற்சிலைபோல் ஆயினவே
( பார்ப்பு- பறவைகளின் குஞ்சுகள்)
நெற்றியின்வீழ் நீர்வியர்வை நீணிலத்தில் கோலமிடப்
பற்றுகுழல் விரல்தடவிப் பரவியதில் நடனமிடச்
சுற்றிநின்ற சிறுவரெலாம் சொல்மறந்து செயல்துறக்க
மற்றவனும் முல்லைப்பண் மனங்களிக்க ஊதினனே
(முல்லைப் பண்- முல்லை நிலப் பண்- மோகனம்)
காமயங்கும் காய்மயங்கும் கனிமயங்கும் காணழகுப்
பூமயங்கும் புள்மயங்கும் பொலிநதியின் புனல்மயங்கும்
ஆமயங்கும் அவைமேய்க்கும் அச்சிறுவர் அணிமயங்கும்
கோமகனாம் கோபாலன் கோவிந்தன் குழலிசையில்.
அசைவனவும் அவனிதனில் அசையாத அவையாவும்
இசையினிலே இயைந்ததனால் இயல்புநிலை இழந்தனவே
மிசையுலவு மேகநிற மேனியனின் வேய்ங்குழலில்
வசையின்றி வழியினிமை வார்த்தைகளின் வசப்படுமோ
ஆயர் சிறுவர் விளையாட்டு
புல்வெளியில் மாடுகளை மேய விட்டுப்
பொழுதெல்லாம் அங்கிருந்த மணலின் திட்டில்
எல்லொளியில் விளையாடிக் களித்தி ருந்த
எல்லாரும் மாடுகளை மறந்து விட்டார்.
ஒல்லையிலே கதிரவனும் வெம்மை காட்டி
உச்சிக்குச் சென்றதனால் உடல்க ளைத்தார்.
நல்லநிழல் சென்றமர்ந்து கொண்டு வந்த
நாவூறும் உணவுண்டு மகிழ்ந்தார் உள்ளம்.
(எல்லொளி- சூரிய ஒளி)
(ஒல்லையில்- விரைவில்)
மாடு கன்று காட்டுக்குள் மறைதல்
புல்லை மேய்ந்த மாடுகன்று
புதிய புல்லைத் தேடுதற்கு
மெல்ல மெல்லக் காட்டுக்குள்
விழைந்து சென்று மறைந்தனவே.
இல்லை பசுக்கள் என்றறிந்தே
ஏங்கித் தவித்தார் இடைச்சிறுவர்
இல்லம் செலுமுன் கண்டறிவேன்
என்று கண்ணன் வனம்புகுந்தான்.
மாடுகளும், சிறுவர்களும் காணாமல் போதல்
தேடிப் பார்த்தும் கிடைக்காமல்
திரும்பி வந்து பார்க்கையிலே
ஆடிப் பாடி மகிழ்சிறுவர்
அவரை அங்குக் காணவில்லை.
மாடும் கன்றும் மறைந்தனவே,
வந்த சிறுவர் மறைந்தனரே.
ஈடும் இணையும் இல்லாதான்
எல்லாம் அறிந்து புன்னகைத்தான்.
நான்முகன் கர்வம் அடக்குதல்
(கண்ணனைச் சோதிக்க எண்ணிய பிரமன்,மாடுகளையும், சிறுவர்களையும் ஒரு குகையில் அடைத்து வைத்தான் . கண்ணனோ மறைத்து வைக்கப்பட்ட அத்தனை வடிவமாகத் தானே ஆனான். தான் மறைத்தவற்றை வெளியிலும், குகைக்குள்ளும் கண்ட நான்முகன், கண்ணன் ஆற்றல் அறிந்து அடங்கிப் பணிய, எல்லாம் முன்பிருந்த வண்ணம் ஆயின)
மறையை ஓதும் நான்முகனே
மறைத்தான் குகையில் என்றறிந்தான்.
மறையும் முன்னே அங்கிருந்த
வடிவம் அனைத்தும் தானானான்.
சிறையில் பிரமன் மறைத்தவெலாம்
திகழக் கண்டான் இரண்டிடத்தும்
இறையின் ஆற்றல் அறிந்தடங்க,
எல்லாம் முன்போல் ஆயினவே!
( தொடரும்)
இன்னும் ஒரு மயில்பீலி கண்ணனால் அருளப்பெற்றீர்
LikeLike
இனிது இனிது குழலோசை
இனிது அதனினும் இனிது கண்ணன் குழலோசை அதை தங்கள் கவிதையில் சுவைப்பது அதனினும் இனிது
LikeLike