காலண்டரில் தேதி கிழித்த கீதா சந்தோஷமடைந்தாள். இன்று மார்ச் 8. உலக மகளிர் தினம். போன வருஷம் மாதிரி இந்த வருஷமும் அவள் கணவர் சங்கர் என்ன பரிசு வாங்கி வரப் போகிறார். ஆவலுடன் சாயங்காலம் வரை காத்திருப்போம். அதோடு இந்த வருஷம் பிளாட் மாடியில் நடக்கும் சின்ன விழாவிற்கு தேங்காய் சாதம் செய்வதாகக் கூறியுள்ளோம். அதற்கு தேங்காய் திருவ வேண்டும் என்று தேங்காயைக் கையில் எடுத்தாள்.
காலண்டரில் கண் மறுபடி போயிற்று. அடடா இன்னும் இரண்டு மாதங்களில் எழுபதாவது பிறந்த நாள். கீதாவிற்கு வியப்பு! ‘நமக்கா, எழுபதா, கிடுகிடு கிழவியாகிறேனா! சின்ன வயதில் ஒவ்வொரு பிறந்த நாளையும் எவ்வளவு சந்தோஷமாகக் கழித்தேன்! பிறகு என் அக்கா கொடுக்கும் சின்ன சின்ன அழகான (எல்லாமே புதிதாக, அழகாக இருக்கும்) பரிசுகளுக்காகக் காத்திருந்தேன். அதன் பிறகு என் பிள்ளைகள் நடு இரவில் எழுப்பி வாழ்த்துச் சொல்வதை தூக்கக் கலக்கத்தோடு கேட்டு மறுநாள் இரசிப்பேன். இப்போது பேரன் இராத்திரி பன்னிரெண்டு (நாம் என்ன மேல் நாட்டிலா இருக்கிறோம்?) தன் பிஞ்சு கைகளால் கண்ணைப் பொத்தி அழைத்துக் கொண்டு போய் கேக்கை தான் வெட்டி (யார் பிறந்த நாளாக இருந்தாலும் சரி) டேஸ்ட் பார்க்கிற மாதிரி பாதி கேக்கை முடித்து விடுவான். இந்த வருடம் 6 லிருந்து 7 க்குத் தாவப் போகிறான்’ என்றெல்லாம் எண்ண அலைகள் மனத்தில் ஓடின. கணவரும், பிள்ளையும், பெண்ணும் கூடி கூடிப் பேசி ஏதோ ஏற்பாடுகள் செய்வது தெரிகிறது. சந்தோஷமாக இருந்தாலும் சிறிது அச்சமும். கீதாவிற்கு நம்ப முடியவில்லை. இந்த வருடம் ஏதாவது புதிதாக, அரிதாக, மனித இனத்திற்குப் பயன்படும் வகையில் செய்ய வேண்டும். யோசித்து அப்படியே கண்களை மூடிக் கொண்டாள்.
கண் திறந்து பார்த்தால் எதிரே ஒரு வட்டமான பெரிய உலோகத்தட்டு கண் முன்னே இருந்தது. ஏதோ எழுதியிருந்தது. கண்ணாடியை மாட்டிக் கொண்டு பார்த்தாள் ‘இது காலச் சக்கரம். இதன் மீது ஏறி நின்று கொண்டு ஒரு முறை சுற்றினால் பத்து ஆண்டுகள் பின்னே போகும்’. ‘ஓ எனக்குக் கூட இதில் ஏறி சுற்றிப் பார்க்க ஆசையாக இருக்கிறது’ என்று எண்ணிக்கொண்டே ஏறி ஆசையில் வேகமாக ஆறு முறை சுற்றினாள். ஓ இதென்ன 10 வயதுக் குழந்தை. 5 பைசே (இந்தக் காலத்தவர்கள் யாரும் அதைப் பார்த்திருக்க மாட்டீர்கள்) அப்பாவின் பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொண்டு போய் பொட்டுக்கடலை (வேர்க்கடலை 5 பைசேவிற்கு 5 கூட வராது) வாங்கித் தங்கையுடன் உடன்படிக்கை (யாருக்கும் சொல்லக் கூடாது என்று) செய்து பகிர்ந்து கொண்டாள். பக்கத்து வீட்டுப் பையனுக்கு, வீட்டில் யாருக்கும் தெரியாமல், தன் நோட்டிலிருந்து இரண்டு பேப்பர் கிழித்துக் கொடுத்தாள் (நோட்டிலிருந்து கிழிப்பது பெரிய குற்றம்). இவை குழந்தைப் பருவத்து விளையாட்டு என்றாலும் சொர்க்கத்தில் இருக்கும் அப்பா அம்மாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
மறுபடியும் சக்கரத்தில் ஏறி நின்று ஒரு சுற்று சுற்றியதில் 20 வயது. வருஷத்திற்கு ஒருமுறை அழைத்துச் செல்லும் சினிமா ‘தில்லானா மோகனாம்பாள்’ பற்றி பக்கத்து வீட்டுப் பையனுடன் அம்மாவிற்குத் தெரியாமல் ஒரு சின்ன அரட்டை. இப்போது போலவா எப்போதும் காதில் ஒட்டிக்கொண்டு செல்போன்! (அப்போதெல்லாம் நண்பி (நண்பனது பெண்பால்) வீட்டிற்கு செல்வதற்கு அனுமதி வேண்டும்). இதற்கும் அம்மாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
மறுபடியும் ஒரு சுற்று. 30 வயது. கல்யாணம், கணவர், குழந்தைகள். எதையும் ஒளிவு மறைவின்றி செய்யும் சுதந்திரம். ஆனால் வீடு, ஆபீஸ், வேலைக்காரி லீவு, வேறோர் உதவியின்மை என்று கஷ்டப்பட்டதில் கத்தல் ஆரம்பமாயிற்று. ஆபீஸில் காட்டமுடியாத ஆதங்கத்தை வீட்டில் காட்டலாயிற்று. பாவம் குழந்தைகளும், கணவரும். இதற்கு அவர்கள் மூவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் வீட்டில் இருந்தால் மிகவும் உதவி செய்வார்கள்.
மறுபடியும் ஒரு சுற்று. 40 வயது. மெதுவான முதுமை. இயலாமை. ஆனால் மன திடம். சிறிது சிறிதாக வாழ்க்கை புலப்படலாயிற்று.
மேலும் ஒரு சுற்று. 50 வயது. தேகத்தில் தெம்பு குறைய மனத்தில் தைரியம், உறுதி, புரிந்து கொள்ளல், நேர்மறை எண்ணங்கள் என்று மேம்படலாயிற்று.
ஒரு சுற்று. 60 வயது. பேரனை அழைக்கும்போது நம் மேல் மோதி அழ ஆரம்பித்தான். அவனிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்! ஆனால் மெல்ல வாழ்க்கை புரிபடலாயிற்று. இத்தனை சின்ன விஷயத்திற்கா கோவப்பட்டோம், ஆசைப்பட்டோம்! சரி யாரிடமெல்லாம் நாம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கீதா நினைக்க ஆரம்பித்தாள். அப்பா அம்மா, அக்காள், தம்பி, கணவர், எதிர் வீடு, அடுத்த வீடு, அவசரமாக சில நாட்கள் பூஜை செய்ததில் கடவுள் இப்படி நீண்டு கொண்டே போகிறது. திடுமென்று ஒரு சத்தம் கேட்கவும் எழுந்து உட்கார்ந்தாள். ஓ இது வரை கண்டது கனவோ! பரவாயில்லை. இதுவும் நல்லதிற்குத்தான்.
நடு கூடத்தில் ஆசை ஆசையாகப் போட்ட ஊஞ்சலில் ஆடிக் கொண்டே யோசிக்க ஆரம்பித்தாள். ‘மன்னித்து விடு’ இது இப்போது சகஜமாகி விட்டது. தப்பு செய்து விட்டு பிறகு மன்னிப்பு கேட்பது எந்த விதத்தில் நியாயம்? சரி அதற்காக தப்பே செய்யாமல் இருப்பது இயலுமா? முடியாது. ஏனெனில் தப்பு என்பது தெரிந்து செய்வதில்லை. நடந்து முடிந்த பிறகுதான் தப்பு புலப்படுகிறது. அதுவும் இல்லாமல் நமக்கு சரி என்று படுவது மற்றவருக்கும் சரியாக இருக்க வேண்டியது என்று இல்லை. ஆனால் நாம் ஒன்று நினைக்க அதை வேறு விதமாகப் புரிந்து கொண்டு விட்டால் அதற்கு யாரைப் பொறுப்பாக்க முடியும்! உதாரணத்திற்கு ‘பேரனது பள்ளி பெயர் என்ன’ என்று கேட்டதற்கு பெண் “ஜெம்ஸ் மெட்ரோபோல்’ என்று சொன்னாள், ஆனால் அவனது பாட்டி அவனுக்கு பள்ளியில் ‘வசந்த் நாராயணன்’ என்று பெயர் என்று சொன்னால் கேட்ட கேள்வி எப்படி தப்பாக முடியும்? ஆகவே தப்பு எது சரி எது என்பதற்கு என்ன அளவுகோல்!
ஆனால் அவளுக்கு இப்போது புரிந்து விட்டது இதற்கெல்லாம் மேலானது வாழ்க்கை. இது ஒரு முறைதான் வரும். கோபப்படவோ, வருத்தப்படவோ, பொறாமைப்படவோ அல்ல இது. கீதாவிற்கு நேற்று படித்த செய்தி ஞாபகத்திற்கு வந்தது: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பூமி கிரகம் தொடர்பான ஒரு முக்கியமான விண்வெளி மர்மத்திற்கான (ஸ்பேஸ் மிஸ்டரி) விடையை கண்டுபிடித்துள்ளனர். என்றாவது ஒருநாள் நம் பூமி கிரகத்தின் மீது சந்திரகிரகம் வந்து மோதும் அப்போது நம் பூமி என்னவாகும் என்று தெரியாது! ஆகவே நாளை என்றிடாமல் இன்றே செய்ய நினைத்ததைச் செய்ய வேண்டும். நமது எண்ணங்களைச் சீராக்க வேண்டும்.
“வினை பகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்”
மன்னிப்பதும், மறப்பதும் நாம் மற்றவர்களுக்கு மட்டுமல்ல இந்த மனித இனத்திற்கே செய்யும் அறிய செயலாகும். அவளுக்குத் தோன்றியது மறப்பது ஓர் எதிர்மறையான எண்ணமல்ல. அது ஒரு நல்ல குணம். அதுவும் மற்றவர்கள் நமக்கு செய்யும் எந்த ஓர் எதிர்மறை செயலையும் மறக்க வேண்டும். அதே மாதிரி மன்னிப்பு கேட்பதும் ஓர் உயர்ந்த பண்பாகும்.
இவ்வாறு முடிவு செய்த கீதா நிம்மதியுடனும், புன்முறுவலுடனும் தனது அலுவல்களைத் தொடர்ந்தாள்.
வாழ்க்கையின் நிதர்சனங்கள் புரிவதற்கு காலச்சக்கரத்தில் பின்னோக்கிசென்று பார்க்கும்பொழுது மனது ஏற்றுக்கொள்ளும். அவ்வப்பொழுது ஏற்றுக்கொள்ளும் பக்குவம், வயது மட்டுமே அளிக்கும் என்பதை வெகு சிறப்பாக கதையாக புனைந்து அளித்துள்ளார்.
LikeLike