கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்:
நீ நடந்தால் நடையழகு…!
‘ஏன்பா.. அந்த டாக்டர் ரொம்ப ஸக்ஸஸ்ஃபுல்லா உன் கால் எலும்பு முறிவை ஆபரேட் பண்ணி ரொம்ப அழகா செய்துட்டாரே… பின்னே ஏன் அவரை இப்படித் திட்டறே…?’
‘அட, நீங்க ஒண்ணு.. ஆபரேஷன் முன்னாலே நான் கொஞ்சம் விந்தி விந்தி நடப்பேன்.. அப்போ என் ஃப்ரண்ட்ஸெல்லாம் ‘மச்சான்,, உன் நடைதான் உனக்கே அழகு’ என்று பாராட்டுவாங்க… இந்த டாக்டர் ஆபரேஷன் செய்யற போது அந்தக் குறையையும் சரி செய்துட்டாரு… இப்போ எங்கே என்னுடைய அந்த அழகான நடை..?’
‘!!!!!’
குட்டீஸ் லூட்டீஸ்:
குண்டக்க மண்டக்க.. !
என் நண்பன் ஆபீஸ் வேலையாக இரண்டு நாள் டூர் வந்து என்னுடன் தங்கியிருந்தான்.
காலையில் எழுந்து வந்தவனிடம், ‘என்னப்பா.. நல்லா தூங்கினியா?’ என்றேன் சம்ப்ரதாயமாக.
‘’எங்கேப்பா.. புது இடம்ங்கறதாலோ என்னமோ… சரியா தூங்கவே இல்லே..’ என்றான் யதார்த்தமாக.
என்னருகிலிருந்த என் மகள் மிதிலா அவனைக் குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘அடக் கடவுளே… இவளொன்றும் குண்டக்க மண்டக்கன்னு ஏதாவது கேட்காமல் இருக்க வேண்டுமே’ என்று எனக்குத் தெரிந்த கடவுள்களையெல்லாம் வேண்டிக் கொண்டேன்.
என் பிரார்த்தனை கடவுள்களை சென்றடையவில்லை போலும்.
‘அப்பா.. ராத்திரி கண் விழித்துக் கொண்டிருந்தால் குறட்டை விடுவாங்களா..” என்றாள்
‘அதெப்படீம்மா.. நன்னா தூங்கிட்டிருக்கும்போதுதான் குறட்டை விடுவாங்க… எதுக்கும்மா கேட்கறே…’ என்றான் என் நண்பன் என்னை முந்திக் கொண்டு. வேண்டுமா அவனுக்கு…?
‘ஓ அப்படியா… இல்லே.. நேத்து ராத்திரி நீங்க படுத்திட்டிருந்த ரூமிலிருந்து வந்த குறட்டைச் சத்தத்தாலே ஹாலில் படுத்திட்டிருந்த அப்பாவும், நானும் தூக்கம் வராம தவிச்சிட்டிருந்தோம். அதனாலேதான் கேட்டேன்’ என்று சொல்லி விட்டு சமயலறைக்கு சென்றாள்.
மேலாகச் சிரித்தாலும் தர்ம சங்கடத்தில் நெளிந்தோம் நானும் என் நண்பனும்.
‘அட.. ஏதோ சம்ப்ரதாயமா பதில் சொன்னதை வைத்து என்னை மடக்கிட்டாளே அந்தச் சுட்டிப் பெண்..’ என்ற தர்மசங்கடம் நண்பனுக்கு.
‘தேவையில்லாம குண்டக்க மண்டக்கன்னு கேள்வி கேட்டு நண்பனை சங்கடத்தில் ஆழ்த்தி விட்டாளே என் பெண்’ என்ற தர்மசங்கடம் எனக்கு.