குறுந்தொகை
திருவிளையாடல் திரைப்படத்தில் குறுந்தொகை நூலிலிருந்து ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது.
“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ,
பயிலியது கெழீஇய நட்பின், மயிலியல்
செறியெயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளதோ, நீ அறியும் பூவே”
என்பது அப்பாடலாகும். இது குறுந்தொகையின் இரண்டாம் பாடலாகும். “பல மலர்களிடத்தும் சென்று பூந்தாதினைத் தேடி உண்ணும் அழகிய சிறகுகளை உடைய தும்பியே! என் விருப்பத்திற்கு ஏற்றபடி கூறாமல் நீ ஆராய்ந்து கண்ட உண்மையைக் கூறுவாய்; பிறவிகள் தோறும் என்னுடன் பொருந்திவரும் நட்பினையும், அழகிய சாயலையும், நெருங்கிய பற்களையும் கொண்ட இப்பெண்ணின் கூந்தலைப் போல நீ அறிந்த மலர்களிலே நறுமணம் கொண்ட மலர்களும் உளவோ” என்பது இப்பாடலின் பொருளாகும்.
இப்பாடல் தருமி என்னும் புலவனுக்குப் பொற்கிழி வாங்கிக் கொடுப்பதற்காக மதுரை சொக்கநாதப் பெருமானால் பாடப்பட்டதாகும் என்பர். பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையிலேயே நறுமணம் உண்டு என்று இப்பாடலில் கூறப்படுவது பொருட்குற்றம் என்று நக்கீரர் வாதிட்டதாகத் திருவிளையாடற் புராணம் கூறும். இறைவனே இயற்றிய பாடலாயினும் அதில் குற்றம் இருப்பின் துணிந்து எடுத்துரைப்பவர்கள் சங்க காலப்புலவர்கள் என்று இப்பாடலின் வழி அறிய முடிகிறது.
எட்டுத்தொகை நூல்கள் என்னென்ன என்று கூறும் பழைய வெண்பா ஒன்றில் ’நல்ல’ என்னும் அடைமொழியால் குறிக்கப்படுவதிலிருந்தே குறுந்தொகையின் சிறப்பினை உணரமுடிகிறது. குறுந்தொகை நூலின் பாடல்கள் நான்கு அடிகளிலிருந்து எட்டு அடிகள் வரை உள்ளன. 307 மற்றும் 381-ஆம் பாடல்கள் மட்டும் ஒன்பது அடிகளில் அமைந்துள்ளன. பாடல்களின் அடியளவை நோக்கி இதைக் குறுந்தொகை என வழங்கலாயினர். இந்நூலில் 401 பாடல்கள் உள்ளன. அவற்றில் ஒரு பாடலை இடைச்செருகலாக இருக்கலாம் என்பர். இப்பாடல்கள் 205 புலவர்களால் பாடப்பட்டதாகும். பூரிக்கோ என்பவர் இதைத் தொகுக்கச் செய்தார். தொகுத்தவர் உப்பூரிக்கிழார் ஆவார். இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடி உள்ளார்
இந்நூலின் பல பாடல்களை இயற்றியவர் பெயர் தெரியவில்லை. அப்பாடல்களில் கூறப்பட்டுள்ள உவமைகளின் பெயராலேயே, “செம்புலப்பெயல் நீரார், குப்பைக் கோழியார், மீனெறி தூண்டிலார் என்றெல்லாம் அவர்கள் அழைக்கப்பட்டனர். 1937-ஆம் ஆண்டில் டாக்டர் உ.வே.சாமிநாதையர் இந்நூலைப் பதிப்பித்து வெளியிட்டார். இதில் சங்க காலத் தமிழர்களின் வாழ்க்கை முறைகள் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன.
தலைவி தலைவனுடன் சேர்ந்து இல்லறம் நடத்தும் இனிய காட்சி ஒன்று. அதைக் கண்ணுற்ற செவிலித்தாய் அப்பெண்ணின் நற்றாயிடம் வந்து கூறுகிறாள். [செவிலித்தாய் என்பவர் வளர்ப்புத்தாய். நற்றாய் என்பவர் பெற்ற தாய்] அந்தக் காட்சி இதுதான்.
சமையலறையில் அத்தலைவி சமைத்துக் கொண்டிருக்கிறாள். அவள் புளிக்குழம்பு வைக்கப்போகிறாள். அக்குழம்பிற்கு முற்றிய தயிரைப் பிசைந்து கலப்பது அக்கால வழக்கம்போல் இருக்கிறது. எனவே கட்டித் தயிரைத் தன் கைகளால் பிசைகிறாள். அந்தக் கையை அப்படியே தன் புடவையில் துடைத்துக் கொள்கிறாள். அந்த ஆடையைத் துவைக்கவும் நேரமில்லை. அவ்வறையில் தாளிக்கும்போது கிளம்பும் புகையானது மை தீட்டப்பட்ட அவள் கண்களில் சென்று நிறைகிறது. அந்தக் கோலத்துடனேயே தன் கணவனுக்கு உணவு பரிமாறுகிறாள். தானே தன் கையினால் துழாவிச் சமைத்த அப்புளிக்குழம்பினை உண்ணும் அவன் பார்வையாலேயே ‘இனிது’ எனப் பாராட்டி உண்கிறான். அதைக் காணும் அழகிய நெற்றியை உடைய அத்தலைவியின் மனம் மகிழ்ச்சி அடைகிறது.
“தான் துழந்து அட்ட என்பது பணியாளர் பலரிருந்தும் தானே ஆக்கித்தரும் விருப்போடு சமைக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது
”முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்,
கழுவுறு கலிங்கம், கழாஅது, உடீஇ,
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான்துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
‘இனிது’ எனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே. [167]
இப்பாடலைப் பாடியவர் கூடலூர் கிழார் என்பவராவார்.
ஒரு பெண்குரங்கின் அன்புடை நெஞ்சின் இயல்பைக் காட்டித் தோழி தலைவியின் அன்பு மிக்க நெஞ்சத்தைத் தலைவனுக்கு உணர்த்துவதாகக் குறுந்தொகையின் 69-ஆம் பாடல் காட்டுகிறது.
“கருங்கண் தாக்கலை பெரும்பிறிது உற்றென,
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி,
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சாரல் நாட! நடுநாள்
வாரல்! வாழியோ! வருந்துதும் யாமே!”
இப்பாடலைப் பாடியவர் கடுந்தோட் கரவீரனார் என்னும் புலவராவார். சங்க இலக்கியத்தில் இவர் பாடியதாக இப்பாடல் ஒன்று மட்டுமே உள்ளது.
ஆண்குரங்கு இருளால் கருமை படர்ந்திருக்கும் இடங்களிலும் மரத்துக்கு மரம் தாவிக்கொண்டிருக்கும் இயல்பை உடையது. அப்படித்தாவும்போது ஒரு நாள் அந்த ஆண்குரங்கு கீழே விழுந்து இறந்துவிடுகிறது. அந்தக் குரங்கிடம் மிகுந்த விருப்புகொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மந்தியானது கணவனில்லாமல் இனி வாழ விரும்பவில்லை. ஆனால் அதற்கொரு கடமை இருக்கிறது. அதாவது இன்னமும் தன் தொழிலைக் கற்காத தன் குட்டியை வளர்க்க வேண்டும் அல்லவா? அதனால் இப்பொழுது பெண்குரங்கு தன் குட்டியைத் தன் உறவுக் குரங்குகளிடம் அடைக்கலமாக விடுகிறது. பின் அந்த மந்தி ஓங்கி உயர்ந்த மலைமீது ஏறிக் கீழே குதித்துத்தன் உயிரை விடுகிறது.
அப்படி மந்தியும் பிரிவாற்றாப் பேரன்புடன் விளங்கும் சாரலை உடைய நாட்டைச் சேர்ந்தவன் தலைவன். அவன் தலைவியை மணந்து கொள்ளாமல் காலம் தாழ்த்துகிறான். ஆனால் அவளைக் காண இரவுப் பொழுதில் வருகிறான். அவனிடத்தில் தோழி கூறும் பாடல் இதுவாகும். “இனி இரவில் எம்மைக் காண வராதே. ஏனெனில் நீ அப்படி வரும்போது உனக்குத் துன்பம் உண்டாகுமே எனக்கருதி நாங்கள் வருந்தியிருப்போம்” என்று தோழி கூறுகிறாள். ஆண்குரங்கு இறந்த பின்னர் கைம்மையுடன் உயிர் வாழ விரும்பாத பெண்குரங்கு தன் உயிரைப் போக்கிக் கொண்டதைப் போல இரவில் வரும் உனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் இத்தலைவியும் உன்னைப் பிரிந்து வாழ விரும்பாமல் இறந்து விடுவாள். எனவே நீ அவளை விரைவில் வந்து மணம் புரிந்து கொள் என்பது உள்ளுறை உவமமாகும்.
சங்க காலத்தில் நன்னன் என்னும் பெயரில் பல சிற்றரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். அவர்களில் பெண்கொலை புரிந்த நன்னன் என்பவன் ஒருவன். அவனைக் குறுந்தொகை 292-ஆம் பாடல் சுட்டிக் காட்டுகிறது. இப்பாடலைப் பாடியவர் பரணர் ஆவார்.
நன்னன் என்ற சிற்றரசன் மாமரம் ஒன்றைக் காவல் மரமாக வைத்திருந்தான். காவல் மரத்தின் காயையோ கனியையோ தின்றாலும் அம்மரத்திற்கு ஊறு செய்தாலும் கடுந்தண்டனைகள் வழங்கப்பட்டன. அக்காவல் மரத்திலிருந்து விழுந்த காய் ஒன்று ஆற்று நீரில் மிதந்து வந்தது. ஆற்றில் குளிக்கச் சென்ற பெண் ஒருத்தி அந்த மாங்காயைத் தின்றாள். அதைக் கண்ட நன்னனின் வேலையாள்கள் அவனிடம் சென்று அந்தப் பெண் மாங்காயைத் தின்ற செய்தியைக் கூறினர். அதைக் கேட்ட நன்னன், அந்தப் பெண்ணை அழைத்துவரச் சொன்னான். அப்பெண் செய்த குற்றத்திற்காக அவள் தந்தை அப்பெண்ணின் எடைக்கு ஈடாகப் பொன்னால் செய்யப்பட்ட பாவையையும், எண்பத்தோரு யானைகளையும் நன்னனுக்குத் அளிப்பதாகக் கூறினான். நன்னன் அதை ஏற்க மறுத்து, அப்பெண்ணைக் கொலை செய்யுமாறு தன் வேலையாள்களைப் பணித்தான். அவர்களும் அவ்வாறே செய்தனர். நன்னன் பெண்கொலை செய்தவன் என்று பலராலும் பழிக்கப்பட்டான். அவன் செயலால் அவனது குலத்தினரும் நீங்காத பழி உற்றனர். இச்செய்தி புறநானூற்றுப் பாடல் 151 – இல் குறிப்பிடப்படுள்ளது.
மறைவாக வந்து நிற்கும் தலைவனும் கேட்குமாறு தோழி இச்செய்தியைக் கூறுகிறாள். “ஒருநாள், மலர்ந்த முகத்துடன் விருந்தினனைப் போல் தலைவன் வீட்டுக்குள் வந்ததைக் நம் அன்னை கண்டாள். அதுமுதல், பகைவரின் போர்முனையில் இருக்கும் ஊர்மக்களைப் போல், அன்னை பல நாட்களாகத் தூங்காமல் இருக்கிறாள். நீராடுவதற்காகச் சென்ற, ஒளிபொருந்திய நெற்றியை உடைய பெண், அந்த நீர் கொண்டுவந்த பச்சை மாங்காயைத் தின்ற குற்றத்திற்காக, அவள் தந்தை எண்பத்தொரு ஆண்யானைகளோடு, அவளது எடைக்கு ஈடாகப் பொன்னால் செய்த பாவையையும் கொடுத்ததை ஏற்றுக்கொள்ளாமல், அப்பெண்ணைக் கொலைசெய்த நன்னனைப் போல, நம் அன்னை மீளமுடியாத நரகத்திற்குச் செல்வாளாக!”
வந்தவன் தலைவன் என்று அன்னைக்குத் தெரிந்துவிட்டது. அதனால் அவள் தலைவிக்குக் காவலைப் பலப்படுத்துகிறாள். எனவே தோழி இவ்வாறு கூறுகிறாள்.
சங்க காலத்தில், ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குச் செல்பவர்கள் தங்குவதற்கு ஏற்ற விடுதிகள் இல்லை. தம்முடைய ஊருக்குப் புதிதாக வந்து, தங்க இடமில்லாமல் இருப்பவர்களுக்கு, அவ்வூரில் இருப்பவர்கள் அவர்களை விருந்தினராக உபசரிப்பது வழக்கம். அப்படித்தான் தலைவன் வழிப்போக்கன் போல் வந்தானாம்.
“மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று– ஒன்பது களிற்றொடு, அவள்நிறை
பொன்செய் பாவை கொடுப்பவும், கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல,
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை!-
ஒருநாள் நகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக ஊரின், துஞ்சலோ இலளே.
இப்பாடலில் உள்ள ‘வரையா நிரையம் என்பது மீள முடியாத நரகம் என்பதைக் குறிக்கும்.
சங்க காலத்திலும் மக்கள் கூட்டுறவு முறையில் தொழில் செய்து வந்தனர். ஏழு ஊர் மக்களும் ஒன்று சேர்ந்து ஒரு கருமாரப் பட்டறை வைத்துள்ளனர். அதில் உள்ள துருத்திக்கு ஓய்வே இருக்காது. ஏனெனில் அத்துருத்தி ஏழு ஊரைச் சார்ந்தவர்களுக்கும் பணிசெய்து கொண்டே இருக்கவேண்டும் அன்றோ? இடைவிடாது வேலை செய்வதால் அத்துருத்தி வருந்துவது போல என் நெஞ்சம் வருந்துகிறது என்று இப்பாடலில் தலைவி கூறுகிறாள். மாலைக்காலத்தைக்குறிக்க இப்பாடலில் வௌவால்கள் பறந்து செல்வதையும் இப்பாடல் காட்டுகிறது
”தோழி! வலிமையையுடைய அழகிய சிறகையும், மென்மையாகப் பறக்கும் இயல்பையும் உடைய வௌவால்கள், பழுத்த மரங்களை நோக்கிச் செல்லும் மாலைக்காலம் இது. மேலும் இது தனியாக இருப்பவர்களுக்குத் துன்பத்தைத் தரும் காலமாகும். நாம் தனியாக இருக்கும்படி, எம்மைவிட்டுப் பிரிந்த தலைவர், தாம் தனிமையாக இருப்பதால் மகிழ்ச்சியாக இருப்பாரோ? ஏழு ஊரில் உள்ளவர்களுக்குப் பொதுவாகப் பயன்படும்படி, ஓர் ஊரில் அமைத்த, கொல்லன் உலையில் பொருத்திய துருத்தியைப் போல, எல்லையில்லாத் துன்பத்தை அடைந்து என் நெஞ்சு வருந்துகிறது” என்று தலைவி கூறுகிறாள். குறுந்தொகையின் 172-ஆம் பாடலான இதைப் பாடியவர் கச்சிப்பேட்டு நன்னாகையார் என்பவராவார்.
தா அம் சிறை நொப்பறை வாவல்
பழுமரம் படரும் பையுள் மாலை
எமியம் ஆக ஈங்குத் துறந்தோர்
தமியர் ஆக இனியர் கொல்லோ?
ஏழூர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த
உலை வாங்கு மிதிதோல் போலத்
தலைவரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே.
ஆட்டனத்தி என்ற ஒரு நடனமாடும் இளைஞனைச் சோழமன்னன் கரிகால் வளவனின் மகள் ஆதிமந்தி காதலித்தாள். அவன் காவிரியாற்றுக் கரையில் நடனம் ஆடியபொழுது, காவிரியில் தோன்றிய வெள்ளப்பெருக்கு அவனைக் கவர்ந்து சென்றது. ஆதிமந்தி அவனைப் பல இடங்களிலும் தேடி அலைந்ததாகவும், பின்னர் இருவரும் ஒன்று கூடியதாகவும் கூறுவர்.
இருபதாம் நூற்றாண்டில், சிறந்த கவிஞராக விளங்கிய கவியரசு கண்ணதாசன், ஆதிமந்தியின் வரலாற்றை ”ஆட்டனத்தி – ஆதிமந்தி காவியம்” என்று ஒரு நூலாக இயற்றியிருக்கிறார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆதிமந்தியின் வரலாற்றை “சேர தாண்டவம் “ என்ற பெயரில் ஒரு நாடகமாக இயற்றியுள்ளார். ஆட்டனத்தி – ஆதிமந்தியின் காதலை மையமாக வைத்து ”மன்னாதி மன்னன்” என்ற திரைப்படம் 1960- ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படி ஆதிமந்தி தேடியதைக் குறுந்தொகையின் 31-ஆம் பாடல் கூறுகிறது. இதை எழுதியவர் ஆதிமந்தியார் ஆவார்,
“மாட்சிமை பொருந்திய தகுதியை உடைய என் தலைவனை வீரர்கள் கூடியுள்ள விழா நடைபெறும் இடங்கள், ஆண்கள் மகளிரைத் தழுவி ஆடுகின்ற துணங்கைக் கூத்து நடைபெறும் இடங்கள் ஆகிய எல்லா இடங்களிலும் தேடினேன். ஆனால் அவனைக் காணவில்லை. நான் ஒரு நாட்டியம் ஆடும் பெண். சங்கை அறுத்துச் செய்யப்பட்டு, ஓளியுடன் என் கையில் விளங்குகின்ற வளையல்களை நெகிழச் செய்த பெருமை பொருந்திய தலைவனும் நாட்டியம் ஆடுபவன்தான்” என்று பல இடங்களிலும் தேடிய தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.
இவ்வாறு குறுந்தொகை பண்டைய அரசர்கள் பற்றிய செய்திகள், சங்ககால வாழ்வு முறைகள் ஆகியவற்றைத் தெரிவிப்பதோடு சிறந்த உவமைச் சிறப்பும் கொண்டு விளங்குகிறது.
அருமை ஐயா! சங்கத் தமிழ்ச் சாறு.. சுவை பொங்கும் இளநீரு !
LikeLike