ராஜேந்திரன்-சோழப்புலி
ராஜேந்திரன் பகைகளை அழித்துப் புகழ்க்கொடி நாட்டிய பின், கோவில்கட்டி, புதுத்தலைநகரை நிறுவியதனைத்தையும் பார்த்தோம்.
அவ்வளவு போர்களைச் செய்த ராஜேந்திரனின் அந்தப்புரமும் நிரம்பி வழிந்தது. அரச குடும்பம் பெரும்பாலும் பழையாறையில் இருந்தது. பழையாறை அக்காலத்தில் ‘முடிகொண்ட சோழம்’ எனப் பெயர் பெற்று இருந்தது.
இராசேந்திரனுக்கு மனைவியர் பலர் இருந்தனர். அவருள் பஞ்சவன் மாதேவியார், திருபுவன மாதேவியார் எனப்பட்ட வானவன் மாதேவியார். முக்கோக்கிழான் அடிகள். வீர மாதேவியார் என்போர் குறிப்பிடத் தக்கவர்.
வீரமாதேவியார் இராசேந்திரனுடன் உடன்கட்டை ஏறினார். இராசேந்திரன் முதல் மனைவியான பஞ்சவன் மாதேவிக்கு அங்குப் பள்ளிப்படை அமைக்கப்பட்டது.
பிள்ளைகள் பலர் இருந்தனர். அவர் நமக்குத் தெரிந்தவரை இராசாதிராசன், இராசேந்திரதேவன், வீர ராசேந்திரன். இம் மூவருள் சடாவர்மன் சுந்தர சோழன் ஒருவனா அல்லது வேறானவனா என்பது விளங்கவில்லை.
பிரானார் எனப்படும் அருமொழி நங்கை ஒரு பெண்;அம்மங்கா தேவி ஒரு பெண்.இராசராசன் மகளான குந்தவ்வைக்கும் சாளுக்கிய விமலாதித்தற்கும் பிறந்த இராசராச நரேந்திரன் என்பவன் இராசேந்திரன் மகளான அம்மங்கா தேவியை மணந்து கொண்டான். இவ்விருவர்க்கும் பிறந்தவனே பிற்காலப் பேரரசனான முதற் குலோத்துங்கன்.
இராசேந்திரன் தாய் வானவன் மாதேவி,. இராசேந்திரன் தாய்க்கு ஒரு படிமம் செய்தான்; அதை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த “செம்பியன் மாதேவி” என்னும் ஊரில் உள்ள கோவிலில் நிறுவினான்.
அரசன் ஆசிரியர் : இராசராசன் காலத்தில் பெரிய கோவிலில் சர்வசிவ பண்டிதர் இராசராசேந்திரனின் பெரு மதிப்புக்கு உரியவராக இருந்தார்.
முன்னர் இராசராசன் சீனத்துக்குத் தூதுக் குழுவைப் பரிசிற் பொருள்களோடு அனுப்பினாற் போலவே, இராசேந்திரன் கி.பி. 1033-இல் தூதுக் குழு ஒன்றைச் சீன அரசனிடம் அனுப்பினான். சீன அரசன் அவர்களை வரவேற்று வேண்டியன செய்தான்.. இந்த உறவால் சோழநாடு சீனத்துடன் கடல் வாணிகம் சிறக்க நடத்திவந்தது.
இராசராசன் தமக்கையான குந்தவ்வையார் கணவனான வல்லவரையர் வந்தியத்தேவன் வடஆர்க்காடு கோட்டத்தில் பிரம்ம தேசத்தைச் சுற்றியுள்ள பகுதிக்குத் தலைவனாக இருந்தான். இவனுடைய வேறொரு மனைவி குந்தள தேவி என்பவள்; மற்றொருத்தி குந்தா தேவியார் என்பவள். குந்தவ்வைப் பிராட்டியார் பழையாறையில் இருந்த அரண்மனையிலேயே இருந்தவர். வல்லவரையன் சாமந்தர் தலைவன் (பெரிய சேனாதிபதி)! இவன் பெயர்கொண்ட நாடு சேலம்வரை பரவி இருந்தது.
அரசனிடம் யானைப்படை, குதிரைப்படை, காலாட்படைகள் இருந்தன; தேர்ப்படை இல்லை. தேர் இருந்ததாக ஒரு கல்வெட்டிலும் குறிப்பில்லை. எந்த வீரனும் போர்க்களத்தில் தேரைச் செலுத்தி வந்தான் என்னும் குறிப்பே இல்லை. அரசராயினார் யானை அல்லது குதிரை மீது இருந்து போர் செய்தனர் என்பதே காணப்படுவது.
ராஜேந்திர சோழன் கைப்பற்றியவைகள்: ராஜேந்திர சோழன் மெய்க்கீர்த்தி வழி மூலம் தான் வெற்றி கொண்டதும், வெற்றிகொண்ட இடங்களில் பெற்றுவந்த பொருட்களை பற்றியும் நம்மால் அறிய முடிகிறது. அப்படி அவன் கொண்டுவந்த வகைகள் மாற்றார் அரசர்களுடைய முடிகள், அவர்களுடைய தேவியர்களின் முடிகள், மணிமுடிகள், அடிமைப்பெண்கள்,பண்டாரம் என்னும் கருவூலச் செல்வங்கள், குதிரைகள், யானைகள், மலை போன்ற நவ நிதிகள், மாற்றரசர் குலத்து செல்வம் போன்ற பலவும் கைப்பற்றினான். அதுமட்டுமல்லாது கடாரத்து அரசனை வென்று அவன் அரண்மனை வாசலில் இருந்த அழகிய தோரண மணிகள் கோர்த்த புதவம் ( வாயில்) சிறிய கதவு, பெரிய மணிகள் கோர்த்த கதவு என்று பலவும் இன்று நமக்கு காணக் கிடைக்கவில்லை.
ஆனால் நுளம்ப நாடு, போல நாடு, சாளுக்கிய நாடு போன்ற இடங்களில் இருந்து கொண்டுவந்த தூண்கள், சிற்பங்கள் அவனுடைய செப்பேடு முத்திரையில் உள்ள தோரணம் புதவம் போன்றவைகள் இன்று நமக்கு காணக் கிடைக்கிறது. நுளம்ப நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட தூண்கள், திருவையாற்றில் இவனது மனைவி புதுப்பித்த தென்கைலாய கோயில் திருச்சுற்று மாளிகையில், 40க்கும் மேற்பட்ட தூண்கள் கட்டப்பட்ட பகுதியாக சுற்று மாளிகை தாங்கிய வண்ணம் உள்ளது. இவை கருப்பு நிற மாக்கல்லால் ஆன நுணுக்கமான சிற்பங்களை உடைய அழகு தூண்கள் ஆகும்.
பால நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலை கும்பகோணம் நாகேஸ்வரர் சுவாமி கோயில் சந்நிதியின் முன்பாக ஒரு சிறு சன்னதியில் வைத்துள்ளனர்.
- சாளுக்கிய நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட நவக்கிரக பீடம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மகா மண்டபம் முன் வடபுற மாளிகையில் சிறப்பு வழிபாடு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
- சாளுக்கிய நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட துர்க்கை சிற்பம், கங்கைகொண்டசோழபுரம் வீரா ரெட்டி தெருவில் அமைந்தது.
- கலிங்க நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட பைரவர் பைரவி சிற்பங்கள். கங்கை கொண்ட சோழபுரம் ஒட்டிய மெய்க்காவல் புதூரில் அச்சம் தரும் தோற்றத்தில் உயரமாக வைக்கப்பட்டுள்ளது.
சோழப்புலியான ராஜேந்திரன் பல மனைவிகளையும், பல மகன்களையும் பெற்று, பெரு வாழ்வு வாழ்ந்தான்.
அவனைவிட்டு நாம் சரித்திரப்பாதையில் நகருகிறோம். நமக்கு கூடிய விரைவில் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.
சந்ததிச் சங்கிலிக்கு ஆபத்து.
அதை விரைவில் காண்போம்.