பிப்ரவரி மாதத்தில் நான் தேர்ந்தெடுத்த கதை காலச்சுவடு என்ற பத்திரிகையில் வெளிவந்த ‘பாட்டு வெயில்‘ என்ற சாந்தன் கதை.- அழகிய சிங்கர்
நான் முதலில் சிறுபத்திரிகைகளிலிருந்து பிப்ரவரி மாதக் கதையைத் தேடத் தொடங்கினேன். நான் எடுத்து ஒரு பத்திரிகையிலிருந்து கதையைப் படிக்க ஆரம்பித்தபோது எனக்குத் திருப்தி இல்லை. சற்று ஏமாற்றமாக இருந்தது.
பொதுவாக சில பத்திரிகைகளிலிருந்து நான் கதைகள் எடுக்க வில்லை. அவற்றிலிருந்து வெளிவரும் கதைகளை எப்படி வகைமைப் படுத்துவது?
பொழுதுபோக்கு அம்சத்தைப் பிரதானமாகக் கொண்டு இயங்கும் அப் பத்திரிகைகள் கதைகள் என்று வெளியிடுவதை எப்படி ஏற்றுக் கொள்வது ?
பிப்ரவரி மாதத்தில் நான் தேர்ந்தெடுத்த கதை காலச்சுவடு என்ற பத்திரிகையில் வெளிவந்த ‘பாட்டு வெயில்‘ என்ற சாந்தன் கதை.
சலூன் கடையில் காத்திருப்பதைப்பற்றி தான் இந்தக் கதை. ஆனால் நினைவோடை (Stream of Consciousness) உத்தியில் எழுதப்பட்ட சிறப்பான கதையாக நான் கருதுகிறேன்.
இலங்கையில் சாந்தன் என்ற எழுத்தாளர் சிறப்பாகக் கதை எழுதக் கூடியவர். தலை முடிவெட்ட ஒரு வயதானவர் அவருக்குத் தெரிந்த சலூன் கடைக்கு வருகிறார். விஜய் என்ற தலைமுடி வெட்டுபவனுக்காகக் காத்திருக்கிறார். ஏன் இன்னும் சிலபேரும் காத்திருக்கிறார்கள்.
அங்கு இருந்துகொண்டு அவருடைய எண்ண அலைகள் வேகமாகப் போய்க் கொண்டிருக்கின்றன.
அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கையைப் பற்றி விவரம் வருகிறது. அங்கு இப்படி விவரிக்கிறார். போர்க்காலத்தின் ஊரடங்கு, இடப்பெயர்வு இவற்றின் பிறகு இப்போதான் இப்படி அமைதி சேர்ந்த வெறுமையைக் காண முடிகிறது.
சலூன் கடையில் காத்துக்கொண்டிருக்கும்போது தற்கால நினைவுகளும், பழைய நினைவுகளும் சேர்ந்து வருகின்றன. காத்துக் கொண்டிருக்கும்போது ஒரு மஞ்சள் நாயொன்று வருகிறது. வாட்டசாட்டமாய் இருக்கும் அந்த நாயைப் பற்றிப் பயப்படுகிறார்.
இறந்த காலம் நிகழ்காலம் என்று நினைவுகளின் தொடுப்பு இக் கதை. சிறப்பாக அதை விவரிக்கிறார். ஒரு பெண்ணைக் கடை வாசலில் சந்திக்கிறார். அந்தப் பெண் ஏற்கனவே அறிமுகமானவள் போல் தெரிகிறார். இவருக்கு ஞாபகமில்லை. அவளுக்கு 60வயது இருக்கும். பேச்சு வாக்கில் அவள் சொல்கிறாள். அப்ப நீங்கள் நலல வடிவு என்று.
இவருக்கு ஒரு வாளி ஐஸ் தண்ணீரை யாரோ இருந்தாற்போல் தன் முகத்தில் வீசியடித்தது போலிருந்தது.
துவைத்த துணியொன்றால் போர்த்தபடி சலூன்காரர் விஜய் கேட்டார்.” ஐயா, தாடியும் எடுக்கிறதோ” என்று “இல்லை அது இருக்கட்டும்” என்கிறார் இவர்.
இந்தக் கதை உள் மன வெளியை வெளிப்படுத்தும் கதை. சிறப்பான கதை.
பிப்ரவரி மாதத்தில் நான் படித்த இன்னொரு கதை அன்பழகன் ஜி எழுதிய காலணி ஆதிக்கம். தினமணி கதிரில் 05.02.2023ல் பிரசுரமான கதை. இந்தக் கதையின் விசேஷம் தேள் பற்றிய குறிப்பு வருகிறது. தேள் பற்றி நான் படித்த மூன்றாவது கதை இது. க.நா.சு, அசோகமித்திரன் அதன் பின் இவர் எழுதிய கதை.
அம்ருதாவில் பிரசுரமான எஸ்.செந்தில்குமாரின் நீவல் என்ற கதையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். குடை, மழை, தாரா இதுதான் இந்தக் கதை. மூவரையும் பிணைத்து அற்புதமாக எழுதப்பட்ட கதை.
தினமணி கதிரில் வெளிவந்த ஸிந்துஜாவின் ‘அற்றக்குளத்து‘ என்ற கதை குறிப்பிடும்படியான கதை. எளிதாக சரளமாக எழுதுவதில் வல்லவர் ஸிந்துஜா.
மற்றபடி நான் படித்த பல கதைகள் எனக்குத் திருப்தியைத் தரவில்லை. ஆனந்தவிகடனிலிருந்து நான் படித்த கதைகளை என்னால் ஏற்க முடியவில்லை.
அதேபோல் சொல்வனம் இணையத்தில் வெளிவந்த கதைகளை என்னால் கொஞ்சங்கூட படிக்க முடியவில்லை.
நான் பெரிதும் எதிர்பார்த்த உயிர்மையில் வெளிவந்த கதை எனக்கு ஏமாற்றமாக இருந்தது.
நான் தினமலரில் வெளியாகும் கதைகளை எப்போதுமே கதைகளாக எடுத்துக்கொள்வதில்லை. அதே போல் குமுதம், குங்குமம் போன்ற பத்திரிகைகளையும். சில கதைகளை சில வரிகள் படிக்கும்போதே அக் கதைகளின் தன்மை எனக்குப் புரிய ஆரம்பித்து மேலே படிக்கவிடாமல் செய்து விடுகிறது.
மேலே குறிப்பிட்ட காலச்சுவடு கதை மட்டும் என் மனதை விட்டு அகலவில்லை. அதைப் பதிவு செய்வது அவசியம்.
அழகியசிங்கர் என்றால் அழகியசிங்கர் தான்! தயங்காமல் தன் கருத்தை வெளியிடும் பழக்கம் அவரிடம் இருந்து எப்போதும் விலகாது!
LikeLike