பிப்ரவரியில் வெளிவந்த தமிழ் /தமிழில் மொழி மாற்றப்பட்ட படங்களின் விமர்சனம்
டாடா
கல்லூரியின் கடைசி வருடத்தில் காதலில் மூழ்கிய மணிகண்டனும் சிந்துவும் ஒரு கட்டத்தில் முத்தைத் தாங்கும் கட்டத்தை நெருங்கி விடுகிறார்கள். அந்த சின்ன மழலையை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு மணிக்கு வந்துவிட என்னாச்சு என்பதை உணர்வும் சிரிப்புமாக சொல்லத் தெரிந்திருக்கிறது இயக்குனர் கணேஷ் கே. பாபுவுக்கு! கவின் செம்மையாக பாத்திரத்தில் பொருந்திப் போகிறார். சிந்துஅபர்ணா தாஸ் சில இடங்களில் அழுவாச்சியாக இருந்தாலும் மொத்தத்தில் ஈர்க்கிறார். அவருக்கும் கவினுக்குமான காதல் ரசாயனம் நறுமணம். மழலை-இளம் தந்தை நெருக்கக் காட்சிகள் நெகிழ்வும் மகிழ்வும். இப்படியான விமர்சனம் டைம்ஸ் கணிப்பில்!
விபத்தாக உண்டாகும் சிசுவின் கதையும் எதிர்பார்க்காத இளம் தாயும் தந்தையும் என்பது ரசிக்கத் தக்க முடிச்சு! நன்றிக்கடனாக கே.பாக்யராஜை இணைத்திருப்பது புத்திசாலித்தனம். பாக்யாவின் முடிச்சை ஒட்டி நவீன மொஸ்தரில் படம் இருப்பது டூ கே கிட்ஸைக் கவரும்! இப்படி பாராட்டுகிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ்!
ஒரு காதல் கதையை, விரசம் இல்லாமல், உணர்வு பூர்வமாக சொல்ல முடியுமா? டாடா இதை வெற்றிகரமாகச் செய்திருக்கிறது. அதோடு சமமாக நாயகன் நாயகிக்கு தனித்துவம் கொடுத்த வகையில், இது ஃபீல் குட் படமாக மாறி இருக்கிறது என்பது இந்தியா டுடேயின் ஷொட்டு!
அருமையாக எழுதப்பட்ட கதை, திரைக்கதை என்பது சினிமா எக்ஸ்பிரஸின் கைத்தட்டு! புதிய பாதை என்றெல்லாம் இல்லை! ஆனால் நெகிழ வைக்கும் காட்சிகள் இதை மேலெடுத்துச் செல்கிறது – சினிமா எக்ஸ்பிரஸ்!
இந்த டோரா டோராவில் அழுத்தமாக மனதில் பதிபவர்கள் கவினும் அபர்ணா தாஸும்! புதுமுக இயக்குனர் முதல் படத்திலேயே அழுத்தமான முடிச்சை எடுத்தது பாராட்டுக்குரியது – தி ஹிந்து!
#
பகாசூரன்
இணைய வழி விபச்சாரம் தான் மையக் கரு. அதை நிறுத்த நடத்தப்படும் கொலைகள். ஒரு கட்டத்தில் தங்கையை பறி கொடுத்த மேஜர் அருள்வர்மன், இணைய வழியாக கொலைகாரனைத் தேடும் வித்தியாச முடிச்சு. கூத்துக் கலை கலைஞர் பீமராசு செய்யும் கொலைகள்..செல்வராகவன் இந்தப் பாத்திரத்தில் பொருத்தமாக இருப்பது படத்திற்கு பலம், நட்டி நடராஜனும் அருள் வர்மன் பாத்திரத்தில் சோடையில்லை. மோகன் ஜியின் படங்கள் எப்போது வில்லங்க விசயங்களைக் கையில் எடுக்கும். இதுவும் அப்படி ஒரு படம் தான்! சில இடங்களில் புத்திமதி எனும் பெயரில் சொல்லப்படும் வசனங்கள், அறிவுரையாக மாறி விடுவது இந்தப் படத்தின் பலவீனம். எதிர்பார்க்கக் கூடிய நேர்வழி திரைக்கதை, வரப்போகும் காட்சிகளை யூகிக்க வைத்து விடுகிறது. ஃபரூக் பாஷாவின் ஒளிப்பதிவும் சாம் சி.எஸ்ஸின் இசையும் சில கட்டங்களை உயர்த்தும் ஏணியாகிறது. நீண்டு கொண்டே போகும் படம் திரில்லருக்கு உகந்ததல்ல. கடைசியில் லேசான ஈர்ப்புடன் வெளியேறுகிறான் சினிமா ரசிகன் – டைம்ஸ் ஆஃப் இந்தியா!
காலம் கடந்த க்ரிஞ் என்கிறது இணைய விமர்சன தளம் மூவி க்ரோ! ஆனாலும் செல்வராகவனையும் நட்டியையும் பாராட்டத் தவறவில்லை. இங்கு பழைய சோற்றை விரும்பிச் சாப்பிட யாருமில்லை!
திரைக்கதை நாடகத் தன்மையுடனும் எளிதில் யூகிக்கும்படியும் இருப்பது படத்தின் பெரிய குறை – குமுதம்!
#
வாத்தி
சாட்டை, அப்பா படங்களின் வரிசையில் இன்னொரு கல்வி படம்! ஆனாலும் நிறையப் பேசினால் ஆவணப்படமாக மாறி விடும் என்பதை உணர்ந்து, இதன் இயக்குனர் வெங்கி அட்லூரி திரைக்கதையில் சில சுவாரஸ்யங்களைச் சேர்த்து ரசிகனைக் கட்டிப் போட்டு விடுகிறார். முக்கியப் பாராட்டு இந்த கதையில் நடிக்க சம்மதித்த தனுஷுக்கு. காதல் மிக மெல்லியதாக நாகரீகமாக காட்டப்பட்டிருப்பது! அனாவசிய ஹீரோ பில்ட் அப் இல்லாமல், முக்கியமாக, சண்டைக் காட்சிகள் இல்லாமல், அவசியமில்லாத விரச ரெட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல் இருப்பது ஆரோக்கிய சினிமாவுக்கான முதல் படி! மொழி மாற்றுப் படம் போல இல்லாமல் நேரடியாக தமிழிலும் தெலுங்கிலும் தனித்தனியாக எடுக்கப்பட்டதால் உதட்டசைவோடு வார்த்தைகள் ஒத்துப் போகின்றன. இவ்வளவு கவனத்தை மேற்கொண்ட தயாரிப்பு நிறுவனம், சாலைகளையும் ஓடும் பேருந்துகளையும் தமிழ் எழுத்தோடு படமாக்கி இருக்கலாம். துணை நடிகர்கள் கூட பல தெலுங்கு முகங்கள் என்பது நெருடல்!
ஜி.வி. பிரகாஷ் குமாரின் பாடல்களும் பின்னணி இசையும் வெகு பாந்தம். படத்தின் உணர்வை மேல் எடுத்துச் செல்லும் பாதையில் இசை பயணித்திருக்கிறது!
ஒரே ஒரு காட்சியில் தோன்றும் இயக்குனர் இமையம் பாரதிராஜா, தன் நடிப்பால் ரசிகனை கைத்தட்ட வைக்கிறார். சம்யுக்தா மேனன் முதல் படத்திலேயே உள்ளத்தை கொள்ளை கொண்டு விட்டார். முதல் இருபது நிமிடங்கள் வக்கிரமாக தோன்றும் இரு ஆசிரியர்களை நீக்கி விட்டால் படம் இன்னும் கேட்குமே மோர்!
நான் லீனியராக படத்தை எடுத்ததில், கடைசி காட்சி முதல் வகுப்பிலேயே வந்து விட்டதால், க்ளைமேக்ஸ் என்ன என்பது முதலிலேயே புரிந்து விடுகிறது.! இது ஒரு குறை!
2018ல் வந்த கொரியன் படமான லிட்டில் பிட் மாஸ்டரின் சாயல் சில காட்சிகளில் உண்டு! அதோடு ஹிரித்திக் ரோஷன் நடித்த சூப்பர் 30! அதன் தாக்கத்தையும் இதில் ஏற்படுத்த தவறவில்லை. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
வாத்தி, கல்விக்கான உரிமை எல்லோர்க்கும் உண்டு என்பதை அடி நாதமாகக் கொண்டிருக்கிறது. தொண்ணூறுகளில் கல்வி, சில சாதிகளுக்கு மறுக்கப்பட்டதையும் அதை தகர்க்க நாயகன் போராடுவதாகவும் கதை என்றாலும், நிகழ் கால அவலத்தை கையில் எடுத்து சொன்ன வகையில் பா.ரஞ்சித்தின் காலாவும் லோகேஷின் மாஸ்டரும் தந்த தாக்கத்தை இந்த படம் தரவில்லை என்பதே உண்மை – இந்தியன் எக்ஸ்பிரஸ்!
தனுஷ் மட்டுமே இதைக் காப்பாற்றும் ஒரே நல் அம்சம் என்று போட்டு உடைத்திருக்கிறது இண்டியா டுடே! ஜோதிகாவின் ராட்சசியை தனுஷாக மாற்றியது போல் இருக்கிறது! தொல்லு பிரேமா எனும் பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் வெங்கி அட்லூரி, தமிழ் ரசிகனை புரிந்து கொள்ளத் தவறிவிட்டார் என்பதும் அதன் வாதம்! தனுஷை நீக்கி விட்டால் இந்தப் படத்தில் ஒன்றுமில்லை என்பதும் உண்மை!
வாத்தி மசாலா ஜாஸ்தி என்று முத்தாய்ப்பு வைக்கிறது குமுதம். கூடவே பாடம் எடுப்பதை விட ரவுடிகளைப் புரட்டி எடுப்பதே தனுஷுக்கு வேலையாக இருக்கிறது என்று புட்டு வைக்கிறது! தெலுங்கு ரசிகர்களே தெறித்து ஓடும் அளவிற்கு பல காட்சிகள்!
#
மாளிகைபுரம் ( மலையாளம்/தமிழ் )
பத்து வயதாகும் கல்லு எனும் கல்யாணிக்கு சுவாமி அய்யப்பன் மீது தீராத பக்தி! விலக்காகும் வயதுக்குள் சபரிமலைக்கு போகும் திட்டம் தள்ளிப் போய் விட, பள்ளித் தோழன் பிரகாசனுடன் தன்னந்தனியாக பயணம் மேர்கொள்ளும் இந்த சுட்டிகளைக் காப்பாற்றி மலை சேர்க்க சுவாமியே ஒரு பயணியாக அவர்களுடன் பயணிக்கும் ஃபான்டசி முடிச்சு!
சிறுமி தேவ நந்தா கல்லுவாக வெகுளித்தன்மையுடன் வெகு பாந்தம். காக்கும் அய்யப்பனாக உன்னி முகுந்தன் அளவாக தைத்த சட்டை. கடைசியில் மதவாதிகள் எதிர்ப்பு வரும் என்று கடவுளை காவலராக ஆக்கி விட்டனர்! உன்னி முகுந்தனின் திரை வரலாற்றில் ஒரு மாதத்தில் ஐம்பது கோடிகள் கல்லாக் கட்டிய படம் இது ஒன்று தான்!
இதற்கு வசனம் எழுதியவர் அபிலாஷ் பிள்ளை! அவரைக் கூப்பிட்டு ஒரு படம் இயக்கச் சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளராகி இருக்கும் சவுந்தர்யா ரஜினிகாந்த்! வேறு சொல்லவும் வேண்டுமோ இது நல்ல படம் என்பதற்கு!
இறை நம்பிக்கையை மனதில் வைத்து எடுக்கப்பட்ட சிறுவர் படம்! சம்பத் ராமின் மாயா எனும் வில்லன் பாத்திரத்தைக் என்ன செய்வது தெரியாமல் பாதியிலேயே கழட்டி விட்டிருக்கிறார் இயக்குனர் விஷ்ணு சசி ஷங்கர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
உன்னி முகுந்தன் திரையில் பார்க்க அம்சமாக இருக்கிறார். முதல் பாதி உங்களுக்கு வெளியில் போக வாய்ப்பு தரும். அதோடு கதையின் மையப் புள்ளியை நெருங்க வெகு நேரமாவது இதன் குறை- கோல்மால் டாட் காம்!
அரை வேக்காடான ஒரு முயற்சி மத நம்பிக்கைத் துளிர்க்கச் செய்ய! மதமென்பது அர்த்தமற்றதாக ஆகிவிடக் கூடாது எனும் பதைப்பு படம் நெடுக! சரியாக எழுதப்படாத படம் – லென்ஸ்மென் ரிவ்யூஸ் டாட் காம்!
#
ரேஸ் குர்ரம் ( தெலுங்கு/ தமிழ் )
பழைய எங்க வீட்டுப் பிள்ளை தான்! உத்தம புத்திரர்களாக ராம் மற்றும் லட்சுமணன்! ஒருவன் காவல் துறை டிஜிபி! இன்னொருவன் அலப்பறையாக ஊர் சுற்றும் தம்பி! கடைசியில் ஒரு நாள் முதல்வர் போல், ஒரு நாள் காவல் அதிகாரியாகி சேட்டைக்காரர்களை தம்பி லட்சுமணய்யா வேட்டையாடும் ஃபினிஷ்!
ஷாம், ராம் வேடத்தில் பொருந்திப் போகிறார். அளவான பாவங்கள். அமைதியான நடிப்பு. இன்னொரு பக்கம் அல்லு அர்ஜுன் லட்சுமணாக அல்லு விடறார். கவர்ச்சிக்கு லூஸுப் பொண்ணாக சுருதி ஹாசன். அவர் காட்டில் சிரபுஞ்சி! ஒரே வருடத்தில் அடுத்தடுத்து சிரஞ்சீவி காரு,, ஜூனியர் என் டி ஆர் என்று கலந்து கட்டி அடித்து இப்ப அல்லு அர்ஜுனுடன் செமை குத்து போட்டிருக்கிறார்.
வசூல் ராஜா எம் பி பி எஸ்ஸுக்குப் பிறகு பிரகாஷ் ராஜுக்கு காமெடி வேடம். டப்பிங் குரல் சற்று அண்டா சுரண்டல். இன்னும் பிரம்மானந்தம், அலி என்று காமெடி ஸ்டார் காஸ்ட்! சில திருப்பங்கள் நேர்க்கோடு என்றாலும் பார்ப்பது தெலுகு தமிழ் டப்பிங் படம் என்பதை நினைவில் கொண்டால் ரசிக்கலாம்!
சரியான விகிதத்தில் மசாலா சேர்த்த பொழுதுபோக்கு சித்திரம் என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா!
இது ஏதோ காவியம் என்று பம்மாத்து காட்டவில்லை இந்தப் படம்! இது முழுக்க முழுக்க அல்லு அர்ஜுன் முத்திரைகள் நிறைந்த படம் – தி ஹிந்து.
அரங்கை விட்டு வெளியே வரும்போது கொடுத்த காசுக்கு நட்டமில்லை என்று உணர வைக்கும் முழு கேளிக்கை படம் – 123தெலுகு டாட் காம்!
#
பல்த்து ஜன்வார் ( மலையாளம் / தமிழ் )
அக்மார்க் மலையாளப் பட ரசிகர்களுக்கு ஒரு விருந்து! அறியப்படாத முகங்கள் பாத்திரங்களாய்! கூடவே அறிமுக இயக்குனர் என்று கலந்து கட்டி ஹிட் அடித்திருக்கிறது இந்தப் படம். களம் புதிது! பாத்திரங்கள் அன்றாட வாழ்வில் காண முடியாதவை. ஆனாலும் படம் முடியும்போது கனத்த இதயத்துடன் விலகுகிறோம்!
அனிமேஷன் தொழிலில் மெல்ல முன்னேறி வரும் பிரசூன் கிருஷ்ணகுமார், அப்பாவின் அகால மரணத்தால் அரசு வேலையை ஒப்புக்கொள்ளும் நிர்பந்தம். கிடைத்த வேலை கிராமத்தில் கால்நடை மருத்துவமனையில் உதவியாளர். மிருகங்களை அனிமேஷனில் மட்டும் அறிந்த பிரசுன் வெற்றி பெற்றானா என்பது இந்த வித்தியாச முடிச்சு!
தவறான வழிகாட்டலால், மிகுதியாக மருந்தைச் செலுத்தி, காவல் துறை மோப்ப நாய் இறக்க காரணமாகும் பிரசூன், வேலையை விட்டு விலகத் தீர்மானிக்கும்போது, டேவிஸின் மோலிக்குட்டி எனும் பசு, கரம்பில் மயங்கி விழுந்து விட, அதைக் காப்பாற்றும் பொறுப்பு இவன் தலையில் விழுகிறது. பிரசூன் மோலிக்குட்டியை காப்பாற்றினானா? கண் விழித்த மோலிக்குட்டி பிரசவ வேதனையில் துடிக்க, அதன் சிசுவையும் காப்பாற்ற செய்த அவன் முயற்சி வெற்றி பெற்றதா?
பாஸில் ஜோசப் அதகளம் செய்கிறார் பிரசூனாக! எங்கும் நடிக்கவில்லை என்பது அவருக்கான பாராட்டு. இன்னும் இன்னொசென்ட்ஸ், ஜானி ஆண்டனி, திலீஷ் போத்தன் என்று சில ஆழமான பாத்திரங்களில் வலம் வரும் தெரிந்த முகங்கள்!
சங்கீத் பி ராஜனின் இயக்கமும், ஜஸ்டின் வர்கீஸின் இசையும் படத்தை இன்னொரு தளத்திற்கு இட்டுச் செல்கின்றன. அருமையான படம் என்று சொல்வதற்கு, கேக் மேல் வைத்த பிளம் பழம் போல், இதை தயாரித்தது பாகத் பாசில் என்பது தான் தகவல்!
#
வசந்த முல்லை
பல நாள் கிடப்பில் இருந்த படம்! சற்று பெயர் கிடைத்தவுடன் மளமளவென்று பாபி சிம்ஹா அள்ளிப் போட்டுக் கொண்ட படங்களில் ஒன்று, அவரது அணுமுறையாலும் காசு பிரச்சினையாலும் தள்ளி போய் விட்டது. ஆங்கிலப் படத்தின் தாக்கம் கொண்ட கதை! காதலியுடன் உல்லாசமாக இருக்க அத்வானத்தில் தங்கிய வசந்த முல்லை விடுதி, ஹாரரை விதைக்கிறது எனும் முடிச்சு!
பாதி ரஜினி! மீதி விஜய் சேதுபதி எனும் வித்தியாச கலவை பாபி சிம்ஹா! நடிப்பில் குறை வைக்கவில்லை என்றாலும் குழப்படி திரைக்கதை பார்வையாளனை ஈர்க்காமல், வாசமற்றுப் போகிறது என்பது குமுதம் விமர்சனம். ஆர்யா சில காட்சிகளில் வந்தாலும் படம் நெடுக வந்தது போன்ற உணர்வு அவருக்கான அப்ளாஸ்!
எவ்வளவோ பாபி முயன்றும் இந்த சுமார் திரில்லரை தூக்கி நிறுத்த முடியவில்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
சுவாரஸ்யமான கரு இருந்தும் அதை திரையில் காட்சிகளாக கொண்டு வரத் தெரியவில்லை இயக்குனர் ரமணன் புருஷோத்தமனால்! அதோடு அனாவசிய திருப்பங்கள் படத்தின் பயணத்தை பாதாளத்தில் தள்ளுகின்றன – இந்தியா டுடே!
வெண்ணைத் தாள் மாதிரி மெலிசான கதைக்கு, இறுக்கும் சுருக்கென திரைக்கதை வேண்டும். அதன்றி படம் தோல்வியைத் தழுவுகிறது – சினிமா எக்ஸ்பிரஸ் .
மொத்தத்தில் பாபி சிம்ஹா எனும் நல்ல கலைஞர் நல்ல கதைகளை தேர்வு செய்யும் பக்குவம் பெற வேண்டும்!
#
8..தக்ஸ்
சுவந்திரம் அர்த்த ராத்திரியில் எனும் 2018 படத்தின் மறு உருவாக்கம் இந்தப் படம். இயக்குனர் பிருந்தா சுவாரஸ்யமாக படத்தை நகர்த்திச் செல்கிறார். பின் பாதியில் சிறையை விட்டு தப்பிக்கும் சேதுவும் கூட்டாளிகளும்.. அவர்களைத் துரத்தும் காவலர் குழுவும் எனும் பரபரப்பு நிமிடங்களும் நன்றாக காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. முதல் பாதியில் கதைக்கு நெருக்கமாக வர நிறைய நேரம் செலவிடுகிறார் இயக்குனர். சிறையிலிருந்து தப்பிக்க வேண்டிய நோக்கம் என்ன கைதிகளுக்கு என்று தெளிவாகச் சொல்லவில்லை! பாபி சிம்ஹாவும் ஆர் கே சுரேஷும் கொடுத்த பாத்திரங்களை சேதாரம் இல்லாமல் செய்திருக்கிறார்கள். ஹிர்து ஹரூன் தன் பவர் ஹவுஸ் நடிப்பால் மற்றவர்களை பின்னுக்கு தள்ளி விடுகிறார்! இவர் புதுமுகம் தானா எனும் சந்தேகம் வரும் அளவிற்கு பங்களிப்பு – டைம்ஸ் ஆஃப் இந்தியா!
நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டரின் முதல் இயக்கம் ஹே!சினாமிகா! ஓரளவு பேசப்பட்ட அந்தப் படம், இவரது இரண்டாவது படமாக வந்திருக்கும் இந்தப் படத்தின் மேல் எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது.
#
9..சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும்
காமெடியா சீரியஸா இல்லை நல்லதொரு செய்தி சொல்லும் படமா? இது எதுவும் இல்லாத மூணுங்கெட்டான் படம் என்று சொல்கிறார் யூட்யூப் அருண்!
ஷங்கராக மிர்ச்சி சிவா தன் பங்கை சரியாக செய்திருக்கிறார். அவரது காமெடி ஒன் லைனர்ஸ் அருமை. அவரது நண்பனாக வரும் ம.கா.பா ஆனந்த், தன் பங்குக்கு கிச்சுகிச்சு மூட்டுகிறார். செயற்கை அறிவு கொண்ட செயலி சிம்ரனாக மேகா ஆனந்துக்கு அதிக வேலையில்லை என்றாலும் வந்த வரையில் சோடையில்லை. யோசிக்காமல் ஒரு காமெடி படம் பார்க்க வேண்டுமா? இதுவே ரைட் சாய்ஸ் – டைம்ஸ் ஆஃப் இந்தியா!
#
10..தங்கம் ( மலையாளம் / தமிழ் )
ஓரு நிசமான திரில்லர். வித்தியாசமான கதைக்களம்! பிஜு மேனனும் வினீத் சீனிவாசனும் அழுத்தமான நடிப்பு களஞ்சியம்! கடைசி சில நிமிடங்கள் வரும் கலையரசன் மனதில் நிற்கும் பாத்திரம். எங்கேயும் அதிக நடிப்பைக் கொட்டாத அபர்ணா பாலமுரளி வெகு பாந்தம்.
குடும்பத்தில் பாசத்தைக் கொட்டும் கண்ணனுக்கு சாந்தா எனும் மனைவி! தங்க வர்த்தகத்தில் சேச்சியுடன் ஏஜன்டாக பணிபுரியும் முத்துவுக்கு நெருக்கமான நண்பனாகவும் கண்ணன். மும்பைக்கு போன இடத்தில் எடுத்துச் சென்ற தங்கமும் காணாமல் போக, கண்ணனும் சடலமாக, துப்பு துலக்கும் மும்பை காவல்துறையும் அதன் விசாரணை பயணமும் தான் படம்!
பல அடுக்குகள் கொண்ட திரில்லர்! காவல் துறை அணுகுமுறை விஸ்த்தாரமாக சொல்லப்பட்ட படம்! தங்க விற்பனையில் ஈடுபவர்களின் உளவியலை சரியாக படம் பிடித்த விதத்தில் இது வித்தியாசமான முயற்சி – தி ஹிந்து!
ஒரு கடனாளியின் மன உளைச்சலை பார்க்க வற்புறுத்தும் படம்! படங்களின் திருப்பங்களும் கடைசி முடிவும் எதிர்பார்க்க முடியாதது! – தி இந்தியன் எக்ஸ்பிரஸ்.
ஃபாகத் பாஸில் கை கொடுக்கிறார் என்றால் அது நல்ல படம் என்று உறுதியாகச் சொல்லலாம். வினித், பிஜுவைத் தாண்டி மும்பை காவல் அதிகாரியாக வரும் கிரீஷ் குல்கர்னி, வெறும் கண்களாலேயே மிரட்டி விடுகிறார். சரியான திரில்லர்! – இந்தியா டுடே.
டிஸ்னி ஹாட் ஸ்டாரில் காணக் கிடைக்கிறது இந்த அற்புதப் படம்!
#