திரைக் கவிஞர்  –  தஞ்சை ராமையாதாஸ்  – முனைவர் தென்காசி கணேசன்

 

அமரகவி' தஞ்சை ராமையா தாஸ் 106-ம் பிறந்த தினம்: ஒரு பள்ளி ஆசிரியர் பாடலாசிரியர் ஆன கதை! | Thanjai Ramaiah Das 106th Birthday - hindutamil.inதஞ்சை ராமையாதாஸ் – கவிஞர் – தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் – வசனகர்த்தா என பல பரிமாணங்களைக் கொண்டவர். பாமரர்களும் ரசிக்குமாறு எளிமையான பாடல்கள் மூலம் சமுதாய மற்றும் தத்துவக் கருத்துகள் கொண்ட பாடல்களை தந்தவர். கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றவர்.

கண்ணதாசனுக்கு முன்பு, கம்பதாசன், உடுமலை நாராயண கவி ,தஞ்சை ராமையதாஸ் என்ற மூன்று கவிஞர்களே பிரபலமானவர்கள் என இருந்தார்கள்.

பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். கதராடை அணிந்து பள்ளி வரக் கூடாது என்று பள்ளி ஆய்வாளர் கூற, வேலையை ராஜினாமா செய்து, நாடகம், திரை என வந்துவிட்டார். தவத்திரு

சங்கரதாஸ் சுவாமிகள் அவர்களை மானசீகக் குருவாகக் கொண்டவர்.

இவரின் பல பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று, இன்னும் ரசிகர்களின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறன.

● பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ (மிஸ்ஸியம்மா)
● தெரிந்து கொள்ளணும் பெண்ணே (மிஸ்ஸியம்மா)
● அழைக்காதே நினைக்காதே அவைதனிலே எனை (மணாளனே மங்கையின் பாக்கியம்)
● சொக்கா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு (குலேபகாவலி)
● மயக்கும் மாலை பொழுதே நீ போ போ… (குலேபகாவலி)
● கல்யாண சமையல் சாதம் (மாயா பஜார்)
● என்னதான் உன் பிரேமையோ (பாதாள பைரவி)
● ஏறாத மலை தனிலே வெகு ஜோரான (தூக்கு தூக்கி)
● வாராயோ வெண்ணிலாவே (மிஸ்சியம்மா)
● ஆண்டவனே இல்லையே தில்லைத் தாண்டவன் உன்போல் தரணி மீதிலே(ராணி லலிதாங்கி)
● காளை வயசு கட்டான சைசு (தெய்வப்பிறவி)

● எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே (மலைக்கள்ளன்)
● புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே! தங்கச்சி கண்ணே (பானை பிடித்தவள் பாக்கியசாலி)
● வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க (மதுரை வீரன்)
● வனிதா மணியே
● கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே (அடுத்த வீட்டுப் பெண்)

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் “ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி” இவரின் முதற் படம். தொடர்ந்து, திகம்பர சாமியார் , சிங்காரி ஆகிய படங்களுக்கும் பாடல்கள் எழுதினார்.
ராமையாதாசின் மச்சரேகை என்ற நாடகம் 200 நாட்களைக் கடந்து மேடைகளில் நடிக்கப்பட்டு வந்தது. நடிகர் டி. ஆர். மகாலிங்கம் அதனை அதே பெயரில் திரைப்படமாகத் தயாரிக்க எண்ணி அவரை 1950-இல் சென்னைக்கு அழைத்தார்.

அந்த ராசியோ என்னமோ, தயாரிப்பாளர் திரு நாகி ரெட்டியின் “பாதாள பைரவி” படத்துக்குத் திரைக்கதை, வசனம், பாடல் எழுதியவர், தொடர்ந்து நாகி ரெட்டியின் மாயா பஜார், மிஸ்ஸியம்மா, கடன் வாங்கி கல்யாணம், மனிதன் மாறவில்லை ஆகிய படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதினார்.
கிட்டத்தட்ட, 140 படங்களில் சுமார் 800 பாடல்கள் வரை இவர் எழுதியிருக்கிறார். அத்துடன் 25 படங்களுக்குக் கதை வசனமும் எழுதியுள்ளார்.

திருக்குறள் இசை அமுதம்” என்ற இவரின் நூலுக்கு முனைவர் மு. வரதராசன், எம். எம். தண்டபாணி தேசிகர் ஆகியோர் அணிந்துரை தந்திருந்தனர்

இவரின் அந்தக் காலப் பாடல்கள், ரசிகர்களை தாளம் போட வைத்ததுடன், விசில் அடிக்கவும வைத்தது.

ஜாலிலோ ஜிம்கானா
டோலிலோ கும்காநா என்றும்

முக்காலும் காலும் ஒன்னு
உன் அக்காளும் நானும் ஒன்னு என்றும்

மேலே பறக்கும் ராக்கெட்
மின்னில் பூச்சி ராக்கெட்

என்றும் எழுதினார். இந்தப் பாடல்களை பலர் விமர்சனம் செய்ததும் உண்டு .

அதற்கு அவரும்,

தில்லா டாங்கு டாங்கு
திருப்பிப் போட்டு வாங்கு
என்று எழுதினால் தான், வசதியற்ற பாமர மக்கள் மனம் திறந்து சிரிப்பார்கள். அதை விட்டு, வண்டார்குழல் பூச் செண்டாட – அழகு கொண்டாட என்று எழுதினால எவ்வளவு பேர் ரசிப்பார்கள் என்பாராம்.

ஆனாலும, நல்ல தமிழில் அற்புத பாடல்களும் தந்திருக்கிறார்.

முருகா என்றதும் உருகாதா மனம்
மோகனக் குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா

ஓம்காரமாய் விளங்கும் நாதம்
அந்த ரீங்காரமே இன்ப கீதம்
என்ற பாடல் தெய்வீகம் நிறைந்தது.

குணசுந்தரி படத்தில்,
கலையே உன் விழி கூட கவி பாடுதே – தங்கச்
சிலையே உன் நிழல் கூட ஒளி வீசுதே

அடுத்த வீட்டுப் பெண் படத்தில்,
கண்களும் கவி பாடுதே
கண்ணே உன் கண்களும் கவி பாடுதே
விண்மணி போல ,மண்மேலே விளையாடும்
கண்மணி நீயே – பெண்மானே செந்தேனே

மக்களைப் பெற்ற மகராசியில்,
போறவளே போறவளே பொண்ணுரங்கம்
புரிஞ்சிக்காம போரயேடி சின்னரங்கம்

மலைக்கள்ளன படத்தில,
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே
சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும்
கொள்ளை அடிக்கிறார்

மதுரை வீரன் படத்தில்,
ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா
எண்ணிபாருங்க,
என்று எழுதி இருக்கிறார்.

நடிகர் திலகம் நடித்த, வணங்காமுடி படத்தில இடம்பெற்ற, ஐம்பெரும் காப்பியங்களையும் இணைத்து எழுதி, சங்கீத சாகரம் ஶ்ரீ ஜி ராமநாத அய்யர் அவர்களின் அற்புத இசையில், சங்கீத வாணி எம் எல் வசந்தகுமாரி அவர்கள் பாடிய சுத்த தன்யாசி இராகப் பாடல், மிக அருமை.

சிகரமதில் திகழ்வது சீவக சிந்தாமணி
செவிதனில் மிளிர்வது குண்டலகேசி
திருவே நின் இடையணி மணிமேகலையாம்
கரமதில் மின்னுவது வளையாபதியாம்
கால்தனில் ஒலிப்பது சிலப்பதிகாரம்
கண்கண்ட ஐம்பெரும் காவியத் திலகமே !
வா வா வளர்மதியே வா – கலைமதியே வா

அதேபோல, வணங்காமுடி படத்தில இன்னொரு பாடலிலும் தமிழின் அழகைத் தருகிறார்,

மலையே உன் நிலை எண்ணிப் பாராய்
கலைஞன் கை உளியாலே காவியச் சிலையான
மலையே உன் நிலை எண்ணிப் பாராய்

நடிகர் திலகம் நடித்த, ஹரிச்சந்திரா படத்தின் பாடல்கள் வெளிவரும்போது, இவர் உயிருடன் இல்லை. ஆனால் பாடல்கள் மிக அருமை

உலகம் அறியாத புதுமை
இந்த உலகம் அறியாத புதுமை
என் உடல் பொருள் ஆவியை கடனுக்கே விற்பது
உலகம் அறியாத புதுமை

இன்னொரு பாடலும் மிகச் சிறப்பான வரிகள் கொண்டது.

ஆதியிலும் பறையனல்ல
ஜாதியிலும் பறையனல்ல
நீதியிலும் பறையனல்லவே
நான் பாதியில் பறையனானேனே

இப்படிப் பல கவித்துவமான பாடல்களை தந்திருக்கிறார்.

மிகத் தைரியமான மனிதர். எம்ஜிஆரை வைத்து ராணி லலிதாங்கி படம் எடுத்து, பாதியில் இருவருக்கும் தகராறு வர, மீண்டும் சிவாஜியை வைத்து எடுத்து , அதே படம் வெளி வந்தது. அதோடு, எம்ஜிஆர் மீது வழக்குப்போட்டு, வெற்றியும் பெற்றார்.

நிறைய பட வாய்ப்புக்களும், பணமும் சேர, வடபழனியில் பெரிய தோட்டம் (வாத்தியார் தோட்டம் என் இன்னும் இருக்கிறது) பங்களா, கார் என வசதிகள் சேர, உடன் அதிகமான குடிப் பழக்கமும் சேர, 50 வயதுக்குள் மறைந்தும் விட்டார். அவர் மகளை ஒருமுறை vintage நிகழ்வு ஒன்றில் சந்தித்துப் பேசினேன்.

கல்லூரிக்குச் சென்று தமிழ் படித்த, நல்ல கவிஞர் திரு தஞ்சை ராமையதாஸ் அவர்கள்.

மீண்டும் அடுத்த மாதம், இன்னொரு கவிஞருடன் சந்திப்போம். நன்றி
 

One response to “திரைக் கவிஞர்  –  தஞ்சை ராமையாதாஸ்  – முனைவர் தென்காசி கணேசன்

  1. ஆஹா தஞ்சை இராமையாதாஸ் பற்றிய விவரங்கள் தெர்ந்து கொண்டேன். நன்றி

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.