“கருப்பட்டி வெல்லம்” என்று செல்லப் பெயரிட்ட எட்டு வயதானவனை அவன் அம்மா தேன்மொழி அழைத்து வந்திருந்தாள். அலுவலக மருத்துவர் பார்க்கச் சொன்னதாக அலுத்துக் கொண்டு தெரிவித்தாள். பள்ளிக்கூடம் தந்திருந்த கடிதத்தையும் தந்தாள். மறுவினாடி மேஜையில் தின்பண்டங்களைப் பரப்பி, பையனைப் பார்த்து “கருப்பட்டி வெல்லம் சரியாகப் பதில் தந்தால் தான் இதெல்லாம்.” வியப்புடன் தலையை அசைத்தான்.
மூன்றாம் வகுப்பில் படிக்கும் இவனுடன் எளிதாகப் பரஸ்பர ஒத்துணர்வை ஏற்படுத்த முடிந்தது. “கருப்பட்டி வெல்லம்” தனது பெயர் மணி என்று தொடங்கியவன் அம்மாவைப் பார்த்த மறுகணமே நிறுத்திவிட்டான். ஒரு கடலை மிட்டாய் எடுத்து தேன்மொழி அவனுக்குத் தந்து, “என்னைக் கேட்காமல் எதையும் சொல்லவோ செய்யவோ மாட்டான். செய்தால் இது எதுவும் கிடையாது” எனக் கூறினாள்.
தேன்மொழியிடம் அழைத்து வந்த காரணத்தை விளக்கச் சொன்னேன். நிலவரத்தைச் சொல்ல ஆரம்பித்த ஐந்தே நிமிடத்தில், “கருப்பட்டி வெல்லம்” என்றதும் “சொல்ல மாட்டேன்” என மணி சொன்னான். அமைதியாக இருந்துவிட்டாள் தேன்மொழி. உரையாடல் பலவற்றைச் சொன்னது. தேன்மொழியை வெளியே உட்காரச் சொன்னேன்.
மணியைப் பள்ளிக்கூட அனுபவங்கள், இன்னல்களை விவரிக்கச் சொன்னேன். ஆரம்பிப்பதற்குள் தேன்மொழி உள்ளே நுழைந்தாள். மேஜை மீது கை போனது. சாப்பிட எதையும் தரவேண்டாம் என்றேன். திகைத்துப் பார்த்தாள்.
மணி ஆங்கிலம் பேச, எழுதக் கடினம் என்றான். ஏன் அவ்வாறு என்று விளக்கச் சொன்னேன். அம்மாவின் முகத்தைப் பார்த்தான். அவள் ஒன்றும் சொல்லாததால் பேசாமல் இருந்தான். தேன்மொழியிடம் ஏதேனும் சொல்ல வேண்டுமா எனக் கேட்டதற்கு, இல்லை என்றதும் மணியிடம் அம்மாவிற்குத் தெரியாததால் பதில் அளிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
உடனே மணி, ஆங்கிலத்தில் பேசப் பார்த்தால் அம்மா கோபமடைவதை விவரித்தான். அம்மாவிற்குத் தலை சுற்றுவது போல தனக்கும் நேருகிறது என்றதும் தேன்மொழி அவனைத் திடுக்கிட்டுப் பார்த்தாள். அதைக் மணி கவனிக்காததால் தழதழத்த குரலில் ஆங்கில வகுப்பில் பலகையில் எழுத அழைத்ததுமே, பிழை நேர்கிறது, அம்மாவுக்குத் தெரிந்து விடுமோ என்று நினைத்ததுமே தலைசுற்றுமாம்.
தவறுகள் நேர்ந்தால் தின்பண்டங்கள் கிடையாது. “சிவா அப்பா போலவே நீ ” எனச் சொல்லி அடிப்பதால், ஆங்கிலத்தால் ஆகிறது என்று ஆங்கிலம் விரோதமானது.
தலைச் சுற்றல் விடுமுறைகளில் வருவதில்லை! பள்ளி நாட்களில் படிப்பதை அம்மா கவனித்தபடி இருப்பாள். மணிக்குத் தலைச்சுற்றல், உடல் உபாதை வந்துவிடும். இதனால் பள்ளிக்குப் போகாமலிருந்தால் அம்மா கூடவே இருப்பாள். இரவு பத்து மணி வரை பாடம் படிப்பது தொடரும்.
பள்ளிக்குப் போவதால் படிப்பு, அம்மா கூர்ந்து கவனிப்பதும் அடிப்பதும். பள்ளி இல்லையேல் இவை நேராது என மணி புரிந்து கொண்டான்.
பள்ளிக்குப் போகாமலிருப்பது அதிகமானது. தேன்மொழியும் வீட்டிலிருந்தாக வேண்டும்! வேலை இடத்திலும் பள்ளிக்கூடத்திலும் எச்சரித்ததால் மணியை அழைத்து வந்தாளாம். தின்பண்டங்களைச் சேகரித்து “மணி உனக்கு கிடையாது” என்றாள். மணி விவரித்தவற்றை இப்போதுதான் கேட்பதாகக் கூறி, முகம் கடுகடுக்க, “என் கருப்பட்டிக்கு இல்லை. நீ சிவா” என்றாள். அம்மாவின் கோபத்தைப் பார்த்து மணி பயந்தான்.
கவனத்தைத் திருப்ப, மேஜையிலிருந்த பண்டங்களை மணியை மீண்டும் பையில் வைத்து, வெளியே உட்கார்ந்தபடி பண்டங்களை வரைந்து, தெரிந்த பாஷையில் பெயரிடச் சொன்னேன்.
ஏழு நிமிடத்தில் ஆர்வமாக உள்ளே ஒடி வந்த மணி எழுதியதைக் காட்டினான். ஓரிரண்டு ஆங்கிலத்தில் எழுதியிருப்பதைப் பார்த்துப் பாராட்டினேன். தேன்மொழி முகம் சுளித்தாள். மணி வருத்தத்துடன் வெளியேறினான்.
தேன்மொழியிடம் பிடிக்காத பத்தை எழுதச் சொல்லிவிட்டு மணியுடன் ஸெஷன் தொடங்கினேன். தன் நண்பர்கள் ஸாகேத், ரூபேஷின் அம்மாவின் செயல்களை விவரித்து, தேன்மொழி என்றைக்குமே அன்பாகப் பாசமாக ஆசையாகப் பார்த்துக் கொண்டதில்லை என வருத்தப் பட்டான் மணி. தன்னைப் பிடிக்கவில்லையோ?
ஒன்றைப் பெறுவதற்கு வேறொன்று செய்தால், எங்கள் துறையில் லஞ்சம் என்போம்! அம்மா விருப்பம் போல நடந்தால் மட்டுமே தனக்கு நன்மை. நண்பர்களுடன் பழகத் தடை ஏன் என்று அம்மாவைக் கேட்கக்கூடப் பயம்!
பொருத்தமான சிறிய பாட்டுகளை வர்ணிப்புடன் அறிமுகம் செய்தேன். பாடப் பாட, உச்சரிப்பில் கவனம் செலுத்தினோம். கடுகளவு தைரியம் தென்பட்டதும் எமிலீ டிக்கின்சன், ஆர். எல். ஸ்டீவென்ஸனின் குழந்தைகள் கவிதை, கதைகளைப் படித்ததை, நிழலாக மணி ஆங்கில வரிகளைக் கூட்டிப் படித்தான். முயற்சிகளைப் பள்ளியில் பாராட்டினார்கள். நாட்கள் ஓடின. புரியாத ஆங்கிலத்தைப் படித்து, எழுதினான். விளக்கம் கேட்க முடிகிறது என மணி மகிழ்ந்தான்!
கூடவே தேன்மொழியுடன் ஸெஷன்கள் போய்க் கொண்டிருந்தது. பள்ளியில் படிக்கும்போது பிழைகளால் தண்டனைகளைச் சந்தித்ததால் தவறு செய்யவே கூடாது என எண்ணி, அதுவே கொள்கையானது. மணியின் தவறுகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காதலித்துக் கணவனான சிவா போல வளர்ந்து விட்டால்? இந்த ஆதங்கங்கள் கோபமானது. சரிக்கட்டத் தின்பண்டங்கள்.
சிவாவை விரும்பி காதலித்து மணந்திருந்தாள். இரு குடும்பத்தினரும் ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.
கணவனைப் பற்றி மேலும் பேசுகையில், சிவாவின் பெற்றோரும் உற்றுக் கவனிக்கும் கண்டிப்பானவர்கள் என்று கூறினாள். அவர்களுக்குத் தெரியாமல் சிவா செய்ய முடிந்தது, காதலிப்பதுதான். செய்தான். பெற்றோரிடம் கூறாமல் கல்யாணம். தன் வெற்றி என்றான்.
கல்யாணத்திற்கு பிறகே சிவாவிற்கு எழுதப் படிக்க இயலாததைக் கவனித்தாள். தன்னை விட மந்த புத்தி எனத் தோன்றியதும் வீட்டிலிருந்து வெளியேற்றினாள். வெளி உலகினருக்கு ஓடி விட்டான் என்றாள்.
கசப்பான பள்ளி அனுபவங்களுப்பின் மணி வீடு திரும்பியதும் படிக்க, செய்ய வேண்டியவற்றின் பட்டியல் உண்டு. பலமுறை சொன்னால் மட்டுமே செய்வான். தேன்மொழி தனக்குத் திருப்தி தரும் வரை மணியைச் செய்ய வைப்பாள். ஸெஷனில் இதை ஆராய்ந்ததில் இது பர்பெக்ஷனிஸம் (perfectionism) என அடையாளம் கண்டுகொண்டாள். இதனால் மணிக்கு ஏற்படும் சிரமம், சலிப்பைப் புரிந்து கொள்ளவில்லை. மணிக்கு உடன்பாடு இல்லை என்பதால் செய்ய வைக்க லஞ்சம் கருவியானது.
தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதைப் போல் செயல்படுகிறோம் என்றதை உணர்ந்து வந்தாள். தேன்மொழி உபயோகிக்கும் கருவிகளை வரிசைப் படுத்தினோம்.
மணிக்கும் அவளைப் போலவே தலைச்சுற்றல் போன்ற உடல், மன உபாதைகள் உண்டாகுவதை கற்றுத் தரும் பாடங்களை உபயோகித்து விவரித்தேன்.
அடுத்ததாக மகனைக் கருப்பட்டி வெல்லம் என அழைப்பது மணிக்குச் சம்மதமா? தேன்மொழி, இவ்வாறு அழைக்கும் போது மணி கூச்சப்படுவது பிடிக்கும் என்றாள். உடல் நிறத்தைக் குறிப்பிடுவதால் சிந்திக்கச் செய்தேன். கணவன் வைத்த பெயரைச் சொல்ல நா வரவில்லை, அவன் ஞாபகம் வருவதாலும், நிறம், சாயல் கணவனைப் போல இருப்பதாலும் உள்மனத்தில் மணியைப் பிடிக்கவில்லை என்றதால் மணியின் அவஸ்தை மனதைத் தொடவில்லையாம்.
மணியுடன் ஸெஷன் சென்று கொண்டிருந்தது. அவனும் அம்மாவிற்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்பதற்குப் பல நிகழ்வுகளை உதாரணம் கூறினான். இந்நாள் வரை அவனைக் குளிப்பாட்டி, சாப்பாட்டு ஊட்டுவதும் தேன்மொழிதான். அவனாகச் செய்ய முயன்றால் கோபித்துக் கொள்வதால் செய்வதில்லை. பாடங்களுக்கு விளக்கம் கேட்டால் எப்போதும் அப்பன் சாயல் எனக் கேலி, கிண்டல் செய்வாள்.
எங்கள் மனநல துறையில் பிரபலரான எரிக் எரிக்சன் (Erik Erikson) சொல்வது, பள்ளி வயதான ஆறிலிருந்து பன்னிரண்டு வயதுவரை திறன்கள் உருவாகும் நிலை. அதற்குக் குழந்தைகள் பலவித உழைப்பில் ஈடுபடுவது நன்கு. தாயால் ஒரு வழியில் நிராகரிக்கப்படுவதை மணி உணர்ந்து, அது அவனுடைய நிலைக்குக் காரணியானது.
தேன்மொழி ஸெஷனில் தனது வாழ்க்கை நினைவுகள், மகிழ்ச்சியான காலங்கள், மனவலி, பற்றிப் பகிர்ந்தாள். மணியின் கர்ப்பத்தின் போது கணவனின் குறைபாடுகளைக் கவனித்தாள். வெறுக்க ஆரம்பித்தாள். கர்ப்பமான நிலையில் கணவனின் சம்பாத்தியம் தேவைப்பட்டது. இருக்க விட்டாள். பிரசவ வலி கணவரால் என வெறுத்தாள். மணி பிறப்பதும் பிடிக்கவில்லை. மருத்துவமனையில் மருத்துவர்கள் வற்புறுத்தியதால் தாய்ப் பால் தந்தாள். இரண்டாவது மாதத்தில் நிறுத்திவிட்டாள்.
மணி உடல்நிலையில் உபாதைகளைச் சந்ததிக்கும் போதெல்லாம், ஏன் பிறந்தான் என வருந்தினாள். மனம் குறுகுறுத்தது. ஈடுகட்ட, அவனுக்கு எல்லாம் செய்வதும் தின்பண்டங்கள் திணிப்பதும், தன் உள்ளுணர்வை யாரும் அறியாமல் இருக்கவே! தன் செயலால் மணியைக் கணவனைப் போல உருவாக்கி அவளுடைய எதிர்பார்ப்பை எட்ட முடியாத நிலை உருவாக்கி வருவதை அறியவில்லை.
அவர்கள் தெருவிலேயே வேரொரு வீட்டில் மணியைத் தேன்மொழி அடிக்கடி விட்டு விடுவாள். வருடங்கள் போக, மணியை நாங்களே வளர்க்கவா எனக் கேட்டார்கள். கணவன் சாயலான மணியைக் கொடுத்துவிடத் தேன்மொழி நினைத்தாள்.
அதே சமயம் ஸெஷனுக்கு அழைத்து வரும்போது பரபரப்பாக வருவதும், காலில் சுடுதண்ணீர் விழுந்தது போலத் திரும்புவதையும் உணர்ந்தாள். தன் கட்டுப்பிடிப்பை விட்டு விட விருப்பப்படவில்லை.
தன்மேல் அக்கறை கொள்ளாததை மணி அறிந்துகொண்டது தேன்மொழியை ஆச்சரியப் படுத்தியது. பள்ளியில் தண்டனை விதிக்கப்பட்டதைத் தேன்மொழியிடம் சொல்லும் போது, ஆறுதல் சொன்னதில்லை.
சிவா போலவே இருப்பதே காரணி என்றாள். அதனால் தான் அவனைப் பக்கத்தில் விட்டுவிடுவதாகக் கூறினாள். நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். இவனுக்கு ஈடான வயதில் மகன் உண்டு. மணியை வளர்ப்பதைச் சொன்னதும் முறையாக எடுத்துக்கொள்ள எங்கள் குழுவின் வக்கீலைச் சந்திக்கப் பரிந்துரைத்தேன்.
வளரும் வயதில் சூழலுக்கு முக்கிய பங்குண்டு. உடல் மன வளர்ச்சி குன்றிய நிலையில் இருக்கும் நிராகரிக்கப்பட்ட மணிக்கு இவர்களின் அன்பு, பாசம் தேவையே!