பூஞ்சிட்டு – குழந்தைகளுக்கான மாத மின்னிதழ் – அன்னபூரணி தண்டபாணி

பூஞ்சிட்டு இதழைப் படிக்க இந்தச் சுட்டியைத் தட்டவும் !

http://poonchittu.com

முன்னுரை

இந்த மின்னிதழில் அப்படி என்ன ஸ்பெஷல்? இது முழுக்க முழுக்க பெண்களாலேயே தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்படும் மின்னிதழ்.

தொடக்கம்

கனவு காணுங்கள். உங்கள் கனவுகள் உங்களை தூங்க விடாது என்றார் டாக்டர் அப்துல் கலாம். அப்படி ஒரு கனவை டாக்டர் வித்யா அவர்கள் கண்டார். அந்தக் கனவை எங்களுக்கும் கடத்தினார். அந்தக் கனவு இன்று நிஜமாய் மாறியுள்ளது.

டாக்டர் வித்யா செல்வம், ஒரு மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர். சென்னையில் வேலை பார்க்கிறார்.

அவர் இதன் தொடக்கம் பற்றி இவ்வாறு கூறுகிறார்.

“நிஜமா மூன்று வருடங்களுக்கு முன்னால் இப்படி ஒரு குழுவில் உறுப்பினராகி, பெரிய எழுத்தாளர்களோடு, குழந்தைகளுக்கான இதழ் மாதாமாதம் கொண்டு வருவோம்னு சொல்லியிருந்தா நான் நம்பியிருக்கவே மாட்டேன். எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் சொல்றேன், பூஞ்சிட்டு என்னைப் பொறுத்தவரை ஓர் அழகிய கனவு.

எங்க குழு ஒரு கதை சொல்லும் குயில்கள் நிறைந்த பறவை கூட்டம். அந்த கூட்டத்துக்குள்ளே இருக்கிற சேவல் நான். பால் மாற்றி சொல்றதுக்கு ஒரு காரணம் இருக்கு . அதை அப்புறம் சொல்றேன். முதலில் இந்த பறவை கூட்டம் எப்படி ஒன்று சேர்ந்ததுன்னு சொல்றேன். எங்க கூட்டம் தானா சேர்ந்த கூட்டம்.

கொரோனா காலத்தில் கொரோனாவாலோ, அதன் கட்டுப்பாடுகளாலோ நம் இயல்பு வாழ்க்கை ரொம்பவே பாதித்திருந்தது. அதே 2020ல் அண்ணா குழந்தைகளுக்கான சிறுகதைப் போட்டி நடந்தது.

நிறைய எழுத்தாளர்கள் பங்கேற்றார்கள். போட்டி ஒருங்கிணைப்பாளர்கள், போட்டியாளர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொள்ள, ஒரு முகநூல் குழு ஆரம்பித்துக் கொடுத்தார்கள். அந்த குழுவில் எல்லோரும் தங்கள் கதைகளைப் பகிர்வோம். கதைகள் பற்றிய கருத்துகளைப் பகிர்வோம்.

நாம் ஒவ்வொருவருக்கும் வாசிக்க ஆரம்பித்த பருவம், அந்த வாசிப்பு அனுபவம் நம் வாசிப்பு உலகத்தை வெவ்வேறு விதத்தில் விரியச் செய்யும். இப்போ என் பிள்ளைகளுக்கான வாசிப்பு உலகத்தைத் தேடும்போதுதான் ஆங்கிலத்தில் மேஜிக் பாட், டின் டின் போன்ற பல புத்தகங்கள் கிடைச்சது. ஆனா தமிழில் ரொம்பவும் குறைவான வாய்ப்புகளே இருக்கு. ஒரு குழந்தையின் சிந்தனை மற்றும் கற்பனை தாய்மொழியில் இருத்தல் அவசியம்கிற கருத்தை இன்று உலகம் முழுக்க உள்ள அறிஞர்கள் முன்னிறுத்துறாங்க.

தமிழில் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான, அவர்கள் அறிவைத் தூண்டி விடுற மாதிரி, ஜாலியா நல்லவிதத்தில் பொழுது போக்குற மாதிரி பகுதிகள் கொண்ட புத்தகம் தமிழில் இருந்தால் எவ்ளோ நல்லா இருக்கும். அது போல் நாம் ஏன் தொடங்கக் கூடாதுன்னு ஒரு போஸ்ட் போட்டேன்.

ஒத்த மனமுடைய பலர் கமென்ட்டில் ஆமோதிச்சாங்க. செய்யலாமேன்னு சீரியசா யோசிக்க ஆரம்பிச்சோம். ஆர்வமாய் இருந்தவர்களை இணைத்து தனியாகக் குழு ஆரம்பித்தோம். கலையரசியம்மாவும் அகிலாண்டபாரதி மேடமும் ஆசிரியர் பொறுப்பை எடுத்துகிட்டாங்க. முதல் முன்னெடுப்பு என்னுடையதுனால பெரிசா எழுத்துலகில் பெயர் இல்லாத நானும் ஆசிரியரானேன். என்ன பெயர் வைக்கலாம்னு பயங்கரமா யோசிச்சி பூஞ்சிட்டுன்னு முடிவு பண்ணினோம்‌. வெப்சைட் உருவாக்கினோம்‌. என்னென்ன பகுதிகள் வைக்கிறதுன்னு பேசி முடிவு செஞ்சோம். நிலா சோறு சாப்பிடும்போது அவங்கவங்க தனக்கு என்ன விருப்பமோ அதை சமைச்சி கொண்டு வருவாங்க, இல்லையா? அது போல ஒவ்வொரு எழுத்தாளரும் தனக்கு எந்த பகுதியில் ஆர்வம் அதிகமோ அதற்கு பொறுப்பெடுத்தாங்க.

நான் ஏன் என்னைச் சேவல் சொன்னேன் தெரியுமா. ஒன்றாம் தேதி ஆனால் என்னோட வேலை கொக்கரக்கோன்னு கூவி குயில்களை எல்லாம் எழுப்பி அவங்க கிட்ட இருந்து அவர்கள் படைப்புகளை வாங்குவது. ஒவ்வொரு எழுத்தாளரும் தங்களுக்கு இருக்கும் வேலைப்பளுவுக்கு நடுவில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம தங்கள் படைப்புகளை அனுப்புவாங்க.
இந்த பறவை கூட்டத்தில் இருக்கிற மயில்தான் அப்புசிவா சார். படைப்புகள் அவருக்கு அனுப்பப்பட்டு அவரோட வண்ண ஓவியங்களால் கதைகள், நம் எழுத்தாளர்களின் கற்பனைகள் மேலும் மெருகு பெறும்.

அப்புறம் அந்தந்த மாதம் பதினைந்தாம் தேதிக்குள் அந்த மாத இதழ் ஆசிரியர் குழுவின் பரிசீலிப்பிற்கு பிறகு தளத்தில் வெளியிடப்படும்.

இந்த டெக்னிக்கல் பார்ட் செய்வது என் கணவர் திரு. செல்வம் மற்றும் நண்பர்கள்.

இன்னும் பல குழந்தைகள் கைகளுக்கு எங்க பூஞ்சிட்டு போகனும்னு எங்க எல்லோருக்கும் ரொம்பவே ஆசை. அது நடக்கும்போது எங்களுக்கு பெரிய உற்சாகம் வரும். சேலஞ்சை எல்லாம் அழகாய் சமாளித்து வெற்றி பெற எங்கள் இதழுக்கு கிடைக்கும் அங்கீகாரம் நிச்சயம் உதவும். அதற்கு இந்த குவிகத்தின் கலந்துரையாடல் பெரிதும் உதவி செய்யும்னு நம்புறேன்.” என்றார் டாக்டர் வித்யா.

வளர்ச்சி

பூஞ்சிட்டில் ஓவியம் வரைதல், கதை சொல்லல், பாட்டுபாடுதல், கைவேலை செய்தல் போன்ற போட்டிகள் பல நடத்தப்பட்டு வருகின்றன. குழந்தைகளும் ஆர்வமாகப் பங்கேற்கிறார்கள். திறமை இருக்கும் குழந்தைகளுக்கு ஒரு பெரிய மேடையாக பூஞ்சிட்டு இருந்து வருகிறது என்றால் அது மிகையல்ல.

பூஞ்சிட்டுக்கு தனி யூட்யூப் சேனல் உள்ளது. ஆரம்ப இதழ்கள் அமேசான் கிண்டிலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

பூஞ்சிட்டின் பெரிய பலம் குழந்தைகள்தான். அவர்கள் உலகைப் பற்றி நன்றாகப் புரிந்த பெண் எழுத்தாளர்களின் எதிர்காலம் மிகவும் சவாலானதாகவே இருக்கும். குடும்பம், குழந்தைகள், அவர்கள் படிப்பு, தேர்வுகள், வேலை, படிப்பு, எழுத்துப்பணி என்று அவர்களுக்கு இருக்கும் இருபத்துநான்கு மணி நேரத்தில் பூஞ்சிட்டுக்கும் கொஞ்சம் நேரம் உண்டு.

ஆசிரியர் குழு

பூஞ்சிட்டு மின்னிதழில் ஒற்றுமையாகப் பல்வேறு நண்பர்கள் சேர்ந்து உழைப்பது உண்மையில் பெருமைப்பட வேண்டிய விஷயம். ஒவ்வொருவரின் பங்களிப்பும் ஆத்மார்த்தமானது. எந்தவிதப் பிரதிபலனையும் எதிர்பார்க்காத உன்னதமான பங்களிப்பை இவர்கள் அனைவருமே தருகிறார்கள்.

குழந்தைகளுடைய உலகம் மிகவும் விசித்திரமானது. அவர்களுடைய சிந்தனைகள் வேறு மாதிரியானவை. அதுவும் இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு புத்திக் கூர்மை அதிகம். வெளியுலக எக்ஸ்போஷரும் அதிகம். எதையுமே மிகவும் வேகமாகக் கற்றுக் கொள்கிறார்கள். அவர்களுடைய அதீத ஆர்வத்தை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் அவர்களுடைய ஆர்வத்தை சரியான வழிகளில் நாம் திசை திருப்ப வேண்டும். சேனலைஸ் செய்ய வேண்டும்.

அவர்கள் கேட்கும் எண்ணற்ற கேள்விகளுக்கு நாம் பொறுமையாக விடை தரவேண்டும். தட்டிக் கழிக்கக் கூடாது. கேள்விகள் மூலமாகவே நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள் அவர்கள்.

அவர்களுக்கு அறிவுரைகளைக் கூட மறைமுகமாகத் தான் சொல்ல வேண்டியிருக்கிறது. நேரடியாக சொற்பொழிவு தரமுடியாது. உட்கார்ந்து கேட்பதற்கு அவர்களிடம் நேரமோ, பொறுமையோ இல்லை.

அதற்காகவே அவர்களுடைய உலகத்தில் புகுந்து அவர்களுக்கு சரிசமமாக உட்கார்ந்து அவர்களுக்குப் பிடித்த விஷயங்களைப் பேசி அவர்களுடைய கவனத்தை ஈர்க்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. அதைத் தான் பூஞ்சிட்டு பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது.

இதுவரை பலமுறை குழந்தைகளுக்காக ஓவியப் போட்டிகள், சிறுகதைப் போட்டி , விமர்சனப் போட்டி என்று பல்வேறு போட்டிகளை நடத்தியிருக்கிறோம். குழந்தைகளைப் பல்வேறு வகைகளில் ஊக்குவிக்கும் முயற்சியை அவ்வப்போது செய்கிறோம். இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் நேரத்தைத் தன்பால் இழுத்து அடிமைகளாக்கி வைக்கும் டெக்னிகல் அரக்கர்கள் நிறைய நடமாடும் போது , குழந்தைகளுடைய கவனத்தைப் புத்தகங்களின் பக்கம் திருப்பி அவர்களை வாசிப்பை நேசிக்க வைப்பது பூஞ்சிட்டின் முக்கிய குறிக்கோள். பெரிய சவாலான விஷயம் இது.

பகுதிகள்

பூஞ்சிட்டு மின்னிதழில் இருக்கும் பகுதிகள் பற்றி அதன் ஆசிரியர்களுள் ஒருவரான டாக்டர் அகிலாண்டபாரதி அவர்கள் கீழ்வருமாறு கூறியுள்ளார்.

“கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாங்கள் மிகுந்த ஆசையுடன் செல்லக் குழந்தை மாதிரி நடத்தி வரும் இதழ் இந்த பூஞ்சிட்டு.

ஒரு சிறுவர் இதழ் என்றால் கதைகள் புதிர்கள் ஓவியங்கள் இதெல்லாம் இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும்.

பூஞ்சிட்டு இதழில் பிற மொழிகளில் வெளிவந்த பிரபல சிறுவர் கதைகளை மொழி பெயர்த்து எளிமையான தமிழில் பிறமொழி கதைகள் என்ற பெயரில் கொடுக்கிறோம். இதில் நாடோடிக் கதைகள் முதல் சமகால எழுத்தாளர்களின் சிறுகதைகள் வரை வெளியிடுறோம். நான் இதுவரைக்கும் உலக சிறுவர் இலக்கியங்களான Wizard of oz, five children and it, phenix and the carpet, wind in the willows, சீக்ரெட் கார்டன் போன்ற இலக்கியங்களைத் தொடராக நான்கு முதல் ஐந்து இதழ்களுக்கு வருவது போல் கொடுத்திருக்கிறேன்.

டாக்டர் வேலாயுதம். அவர் ஒரு சிறந்த உலகப் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் மற்றும் பறவைகள் ஆர்வலர். அவர் மாதா மாதம், தான் எடுத்த சிறப்பான புகைப்படத்துடன் ஒரு பறவையைப் பற்றிய அறிமுகத்தையும் நம் தோழன் என்ற பகுதியில் கொடுக்கிறார். திருமதி கலையரசி அவர்களும் ஒரு பறவை நல ஆர்வலர் தான். அவங்களும் பறவைகள் பற்றிய அறிமுகம், டைனோசர் பற்றிய ஒரு தொடர் தந்திருக்கிறார்கள் .

நம்ம ஒவ்வொருத்தருக்கும் நம்ம வேலை சம்பாத்தியம் இது தாண்டி மனசுக்குப் பிடிச்ச விஷயம்னு ஒன்னு இருக்கும் இல்லையா? அதை குழந்தைகளுக்கு சொல்வது நமக்கு எப்பவுமே பிடிக்கும். உதாரணமா நாம விளையாடிய விளையாட்டுக்கள், நாம தேடி தெரிஞ்சுகிட்ட விஷயங்கள், கஷ்டப்பட்டு படித்த சமையல் குறிப்புகள் இதெல்லாம் அப்படிப்பட்டவை தானே! அத நம்ம வீட்டுக்கு குழந்தைகளுக்கு சொல்ற மாதிரி பூஞ்சிட்டு வாசகர்களுக்கும் சொல்றது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது.

சுட்டி மித்துவம் பட்டாபி தாத்தாவும் என்கிற பெயரில் பாரம்பரியமா நாம விளையாடிய விளையாட்டுகளை எல்லாம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்த பகுதி இருக்கு. எண்ணும் எழுத்தும் என்ற பகுதியில் எளிமையா கணிதத்தை விளையாட்டு, புதிர்கள் மூலமாக குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து கணக்கு நாளே வேப்பங்காய் கசக்கிற நிலைமையை மாற்றி அதிக ஆர்வத்துடன் படிக்கிற சூழ்நிலையை உருவாக்கும் தொடரிது.

புதிர்வனம் பகுதி சிக்கலான தமிழ் வார்த்தையை எளிமையாக குழந்தைகள் புரிந்து கொள்கிற வண்ணம் அறிமுகப்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் இருக்கும் பல ஊர்களுடைய பெயர் காரணத்தை சுவாரசியமான குறிப்புகளுடன் விளக்கும் பகுதி கதை கதையாம் காரணமாம்! கடந்த இதழில் பொய்மான் கரடு, மீமிசல் ஆகிய ஊர்களுக்கு எப்படி அந்த பெயர் வந்திருக்கும் என்று விளக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் நிறைவடையும்போது அது ஒரு மிக முக்கியமான தொகுப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

சிலருக்கு நடந்த கதைகளை அப்படியே சொல்வது பிடிக்கும், சிலருக்கு கற்பனைகள் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில் ஃபேண்டஸி கதைகள் எல்லாருக்குமே பிடித்த ஒன்று. மாயவனம் என்ற தொடரில் ஷிவானி என்கிற சிறுமி, எப்படி சாக்லேட் மலையைப் பார்த்தாள்; அதில் ஐஸ்கிரீம் அருவி எப்படி கொட்டியது என்றெல்லாம் விளக்கும்படியாகவும் வியக்கும்படியாகவும் அருமையான தொடர் கதைகள் கதைத்தோரணம் பகுதியில் உள்ளன. அதே போல் கதைத்தோட்டம் பகுதியில அழகழகான குட்டி கதைகள் அறிவுரை கதைகள் இயற்கை பற்றிய கதைகள் உள்ளன.

அப்துல் கலாம் பக்கங்களில் வீட்டில் கிடைக்கிற பொருட்களை வைத்து எப்படி பல அறிவியல் தத்துவங்களை புரிந்து கொள்ளலாம் என்ற விளக்கம் உள்ளன.

சின்னக் குழந்தைகளுக்கான இதழ்தானே? பெரியவர்கள் பங்களிப்பு மட்டும் போதுமா? ஆமாம். குழந்தைங்களின் பங்களிப்பும் நிச்சயமாக உள்ளது. பத்து வயதான அனுகிரகாவின் நாலு கால் நண்பர்கள் என்ற கதை, பூஞ்சிட்டில் தொடராக வந்தது. பரிசாக வரும் ஒரு டி-ஷர்ட்டில் இருந்து படமாக இருக்கும் நான்கு மிருகங்கள் உயிரோடு வந்து குழந்தைகள் கூடவே உலவுவது போல ஒரு கதை. அது பாரதி புத்தகாலயம் சார்பில் புத்தகமாக வெளிவந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எல்லா புத்தக கண்காட்சிகளிலும் சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. அனேகமாக மிகக் குறைந்த வயதில் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருக்கும் எழுத்தாளர் இவர்களாகத்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவளை விட சிறியவனான யூகேஜி படிக்கும் கவின் கிருஷ்ணா சொன்ன கதைகள், கவின் சொன்ன கதை என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

இவர் யார் தெரியுமா, பகுதியில் நமக்குத் தெரிந்த ஆளுமைகள், அவர்களை பற்றிய தெரியாத விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இது சிறியவர் பெரியவர் என அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எளிமையான உணவுப் பொருட்களை குழந்தைகளே செய்து பார்க்கும் வகையில் அமைந்த பகுதி கூட்டாஞ்சோறு.

ஜிகினா பக்கங்களில் எளிய கைவேலைகள் நிறைய செய்து காட்டப்பட்டுள்ளது.

கற்றல் இனிது என்ற ஒரு வித்யாசமான பகுதி. அதாவது வளரும் குழந்தைகளுக்கு நம் வீட்டுக்குள்ளேயே நிறைய பொருட்களை அறிமுகப்படுத்தும் விதமாக அந்தத் தொடர் உள்ளது. நம் வீட்டில வெள்ளை நிறத்தில் என்னென்ன பொருட்கள் உள்ளது; காலையில் எழுந்ததும் என்ன செய்ய வேண்டும் போன்ற நல்ல பண்புகளை சொல்லிக் கொடுக்கும் வகையில் இந்தத் தொடர் உள்ளது.

ஊர் சுற்றலாம் வாங்க பகுதியில் நம்ம ஊர் மாமல்லபுரம் தொடங்கி அமெரிக்காவின் டிஸ்னிலேண்ட் உட்பட பல பகுதிகளை நமக்கு சுற்றிக் காட்டுவது போல் சிறுவர்களுக்கான அருமையான பயண கட்டுரைகள் உள்ளன.

குழந்தை பாடல்கள் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய பகுதி இது. பழைய மழலையர் பாடல்களையே பாடிக் கொண்டிருக்கும் பள்ளிகளில் இந்தப் பாடல்களை பாடச் சொல்லிக் கொடுத்தால் அது குழந்தைகளுக்கு புதுமையான அனுபவமாக அமையும்.

குட்டி பீமா அறிவியல் உண்மைகளை விளக்கக்கூடிய கற்பனை கதைகள் கொண்ட பகுதி இது. முதல்லில் ஒரு கற்பனைக் கதையைச் சொல்லி அதன் பின் அதில் இருக்கும் அறிவியல் உண்மைகளை உணர்த்தும் விதமாக அமைந்தது.

வழிகாட்டி

சிறுவர் எழுத்தாளர் விழியன், நண்பர்கள் கபிலன் காமராஜ், ரவிசங்கர் அய்யாக்கண்ணு போன்றவர்கள் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சிறந்த புகைப்படக் கலைஞரும் மற்றும் பறவை ஆர்வலருமான டாக்டர். வேலாயுதம் அவர்களின் பங்களிப்பிற்கும் பூஞ்சிட்டு குழுவின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்களுடைய மின்னிதழில் தொடராக வந்த ஒரு கதையும், டாக்டர். அகிலாண்டபாரதி எழுதிய பிறமொழிக் கதை, மாமல்லபுரம் பற்றிய சுற்றுலாத் தொடர் பிரேமா ரவிச்சந்திரன் எழுதியது இவை இரண்டும் தனிப் புத்தகங்களாக ஏற்கனவே வெளிவந்திருக்கின்றன.

குழந்தை அனுக்ரஹா கார்த்திக் எங்கள் இதழில் எழுதிய தொடர்கதை, நாலுகால் நண்பர்கள், பாரதி புத்தகாலயம் வாயிலாகப் புத்தகமாக வந்துள்ளது. பூஞ்சிட்டு இதழில் தொடர்களாக வெளிவந்த பல கதைகள் தற்போது அச்சில் தயாராகிக் கொண்டிருக்கின்றன. விரைவில் எதிர்பார்க்கிறோம். இதற்காகவே முயற்சி எடுத்து எங்களுக்கு உதவி செய்கிற புலம் லோகநாதன் அவர்களுக்கு எங்கள் குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றி.

பூஞ்சிட்டையும் அச்சில் கொண்டு வருவதற்கு அகிலாண்டபாரதி தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். விரைவில் எங்களுடைய கனவு நனவாகும் என்று நம்புகிறோம்.

முடிவுரை:

நாங்கள் செய்ய வேண்டிய வேலைகள் நிறையவே இருக்கின்றன. புதிது புதிதாக நிறையப் பகுதிகளை அறிமுகம் செய்ய வேண்டும். குவிகம் குழுவில் இருக்கும் அனுபவமிக்க எழுத்தாளர்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும், உங்களுடைய கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் சுவாரஸ்யமான பகுதிகள், புதிர் விளையாட்டுகள் , அறிவியல் சம்பந்தமான கட்டுரைகள் இவை போன்ற பகுதிகளையும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.

புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாரதிதாசன் அவர்களின் வரிகளையும்,
மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும், நினைவு நல்லது வேண்டும் , நெருங்கிய பொருள் கைப்பட வேண்டும் என்ற பாரதியின் வரிகளையும் நினைவில் நிறுத்திக் கொண்டு புதிய உற்சாகத்துடன் நிச்சயமாக செயல்படுவோம். காரியத்தில் உறுதியை நிச்சயமாகக் காட்டுவோம்.

♥♥♥♥♥

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.