விடிகாலை நான்கு மணிக்கு குளிர் குடிசைக்குள் கும்மாளமிட்டிருந்தது, அதை பொருட்படுத்தாமல் படுக்கையை விட்டு எழுந்து மிதமான சத்தத்தில் படிக்க ஆரம்பித்தாள் மேகலா.
பொழுது விடிந்திருந்தது. அவளது அம்மா பார்வதியம்மாள் காப்பி போட்டு கொண்டு வந்து கொடுத்தாள்.
“அம்மா, பள்ளிக்கூடத்தில ஸ்காலர்ஷிப் வாங்க நம்ம சாதி சான்றிதழ் கேக்கிறாங்க, வாங்கி குடுத்திடும்மா…”
“சரிம்மா, கூட்டுறவு வங்கியில போய் சொன்னா அவிங்க ஆன்லைன்ல விண்ணப்பம் அனுப்புவாங்க. அது வில்லேஜ் அப்பீசருக்குப் போய், ஆர்.ஐ.கிட்ட போயி தாசில்தார்கிட்ட போயிடும். அங்கிருந்து விசாரணைக்கு அதிகாரிங்க வருவாங்க, சான்றிதழ் கிடைக்கிறதுக்கு மூணு நாலு நாள் ஆகும்.”
“சரிம்மா” சொல்லி விட்டு மீண்டும் படிக்க ஆரம்பித்தாள் மேகலா.
நான்கு நாட்கள் கழிந்திருந்தது. அதிகாரிகள் யாரும் விசாரணைக்கு வரவில்லை. பொறுமை இழந்த பார்வதியம்மாள் கூட்டுறவு வங்கியில் போய் கேட்க, தாசில்தார் அலுவலகத்தில் கிடப்பில் இருப்பதாக சொன்னார்கள். பார்வதியம்மாள் தாசில்தார் அலுவலகத்துக்கு நடந்தாள்.
“நீ கிறிஸ்டியன் சாம்பவர்ன்னு சர்டிபிகெட் கேட்டிருந்தா உடனே கிடைச்சிருக்கும், நீ எஸ்.சி. இந்து சாம்பவர்ன்னு கேக்கறதனால நாளைக்கு உஙக வீட்டுக்கு அதிகாரிங்க வந்து விசாரணை பண்ணின பிறகுதான் சர்டிபிகெட் கிடைக்கும்!” சொல்லி விட்டு பதிலுக்குகூட காத்திருக்காமல் அறையை விட்டு வெளியேறினார் தாசில்தாரர்.
சலிப்போடு சற்று நேரம் நின்று விட்டு வீட்டுக்கு நடந்தாள்.
மறுநாள் மதியம் தாசில்தார் அலுவலகத்திலிருந்து மூன்று அதிகாரிகள் காரில் வந்து பஸ் நிறுத்தத்தின் அருகிலிருந்த டீக்கடையில் விசாரணை செய்தார்கள்.
“மேகலா, அம்மா பேரு பார்வதியம்மாள் இவங்க வீடு எங்கிருக்கிறது, அவங்க சர்ச்சுக்கெல்லாம் போவாங்களா?” என்று விசாரித்தார்கள்.
“எனக்குத் தெரியாது” கடைக்காரர் சொல்லவே, காரை விட்டு இறங்கினார்கள்.
“மூணு டீ போடுங்க” என்றார் அதிகாரிகளில் ஒருவர்.
“பால் தீர்ந்து போச்சு, வறக்காப்பி போடட்டுமா!” என்றான் டீக்கடைக்காரர்.
“வேண்டாம்” என்றபடி மேகலாவின் வீட்டை நோக்கி நடந்தார்கள். வழியில் ஒரு கல்லறையில் சிலுவை அடையாளம் வைக்கப்பட்டிருந்தது.
அதிகாரிகளில் ஒருவர் அந்த கல்லறையில் எழுதியிருந்த பெயரையும் பிறப்பு, இறப்பு வருடங்களையும் ஒரு காகிதத்தில் குறிப்பெடுத்துக் கொண்டு மேகலாவின் வீட்டை அடைந்ததார்கள்.
“‘சார் சாயா குடிக்கிறீங்களா?” பார்வதியம்மாள் மெல்லக் கேட்டாள்.
“வேண்டாம், இப்பத்தான் குடிச்சுகிட்டு வர்றோம்!” அவளது வீட்டிலிருந்து சாயா குடித்தால் தீட்டு பட்டு விடுமோ என்று பயந்தபடி மறுத்தார் வந்த அதிகாரிகளில் ஒருவர்.
“வழியில கல்லறை கிடந்துதே யாரோடது?”
“என் கொழுந்தனாரோடது!”
“ஒரே குடும்பத்துல அண்ணன் கிறிஸ்டியன், தம்பி பொண்டாட்டி நீ இந்துவா? யார ஏமாற்றப் பார்க்கிற?” வந்திருந்த அதிகாரிகளில் ஒருவர் குரலைச் சற்று உயர்த்திச் சொன்னார்.
“சார், என் கொழுந்தனார் முதல்ல இந்து தான். அப்பறம் கிறிஸ்டியனா மாறீட்டார். ஆனா நாங்க அப்பிடி இல்ல, இதுவரைக்கும் எந்த சர்ச்சுக்கும் போனதில்ல, நானும் என் பொண்ணும் பக்கத்து இசக்கி அம்மன் கோவில்லதான் சாமி கும்பிடப் போவோம் சார்!” யதார்த்தமாய் சொன்ன அவளது வார்த்தைகள் அதிகாரிகளின் காதில் ஏற மறுத்தது.
“கிறிஸ்டியன் சாம்பவர்-ன்னு சர்டிபிகெட் தர்றோம். நாளைக்கு வந்து வாங்கிக்க!’ சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தார்கள் அதிகாரிகள்.
“சார், சார், சார் நீங்க அப்பிடி எழுதி தந்தா அது பிற்படுத்தப்பட்டவர் பட்டியல்ல வந்துடும். பரம்பர பரம்பரையா எங்க குடும்பம் தாழ்த்தப்பட்ட இந்து குடும்பம் சார், இந்துன்னு எழுதி குடுத்தா நாங்க தாழ்த்தப்பட்டவங்க பட்டியல்ல வந்துடுவோம், தயவு செஞ்சு எங்க மேல கருணை காட்டி இந்துன்னு எழுதி குடுத்திடுங்க சார்!” அதிகாரிகள் பின்னால் ஓட்டமும் நடையுமாய் கேட்டாள். அவர்கள் திரும்பிப்கூட பார்க்காமல் காரில் ஏறிக் கொள்ள கார் விரைந்தது.
இதயம் கனக்க கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது பார்வதியம்மாவிற்கு. ஸ்காலர்ஷிப் கிடைத்தால் குடும்பச் சுமை குறையும் என்று எதிர்பார்த்தவளுக்கு அதிகாரிகளின் பேச்சு அச்சமூட்டியது.
மறுநாள் காலை பத்து மணிக்கே தாசில்தார் அலுவலகம் சென்று பியூனிடம் அதிகாரிகளைப் பற்றி விசாரித்தாள்.
“தாசில்தாரை நேரில் சென்று பார்த்துப் பேசு, சர்டிபிகெட் கிடைக்கும்” தனக்குத் தெரிந்ததைச் சொன்னான் பியூன். பார்வதியம்மாள் தாசில்தாரைப் போய் பார்த்தாள்.
“வேற எது வேணுமுன்னாலும் என்னால செய்ய முடியும். ஆனா சாதிச் சான்றிதழ் விஷயத்துல என்னால எதுவும் செய்ய முடியாது!” தாசில்தார் கையை விரித்தார். பார்வதியம்மாவுக்கு கண்கள் நிறைந்தது. அங்கேயே விங்கி விங்கி அழ ஆரம்பித்தாள்.
“நான் சொல்றபடி நடந்தா இந்துன்னு எழுதி எஸ்.சி. சர்டிபிகெட் குடுத்திடுறேன்!” அவரது வார்த்தைகளைக் கேட்ட அடுத்த நொடியில் அவளது கண்ணீர் காணாமல் போனது. கண்களை துடைத்தபடியே ஆர்வமாய் தாசில்தாரைப் பார்த்தாள். ஒரு துண்டு காகிதத்தில் எதையோ எழுதி அவளிடம் நீட்டினான் தாசில்தார்.
“நாளைக்கு சனிக்கிழமை உன் பொண்ண கூட்டிக்கிட்டு இந்த அட்றஸ்சுக்கு வந்துடு, உன் பொண்ணு ஒரு மணி நேரம் என்கூட இருந்தாப் போதும், நீ கேட்டபடி சர்டிபிகெட் குடுத்திடுறேன்!”
“டேய்” என்ற அலறல் சத்தம் பலமாய்க் கேட்க, தாசில்தாரின் சட்டையைப் பிடித்து பலமாய் உலுக்கினாள் பார்வதியம்மாள். அலுவலகமே ஸ்தம்பித்துப் போனது.
“உன் கூட படுத்தாதான் சாதி சான்றிதழ் கிடைக்குமுன்னா அப்படியொரு சான்றிதழே எனக்கு தேவ இல்ல. எங்களப் பாத்தா தீட்டு, தொட்டா தீட்டுன்னு நினைக்கிற நீங்க, படுத்தா மட்டும் தீட்டு காணாம போயிடுமா” சொல்லி விட்டு அவர் எழுதிக் கொடுத்த முகவரி எழுதிய துண்டு காகிதத்தைச் சுக்கு நூறாக கிழித்து தாசில்தார் முகத்தில் எறிந்து விட்டு கண்கள் சிவக்க அறையை விட்டு வெளியே நடந்தாள்.
அலுவலகமே வாயடைத்துப் போனது. அவமானத்தில் நெளிந்த தாசில்தார் வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டு தலை குனிந்தார்.
‘நீதாண்டி மானமுள்ளவ’ என்று மானம் பார்வதியம்மாவைப் பார்த்து கம்பீரமாய் கைதட்டியது. விரக்தியோடு வீடு வந்து சேர்ந்தாள் பார்வதியம்மாள்.
மாலை நான்கரை மணிக்கு பள்ளிக்கூடம் முடிந்து வந்து சேர்ந்தாள் மேகலா.
“என்னம்மா, சாதி சான்றிதழ் கிடைச்சுதாம்மா?” கேட்டாள் மேகலா.
“நமக்கு ஸ்காலர்ஷிப் வேண்டாம், இந்த தாசில்தார் மாறிப் போகட்டும். வேற தாசில்தார் வரும்போ சாதி சான்றிதழ் வாங்கிக்கலாம். இல்லையின்னா பேசாம நாம கிறிஸ்டியன்னு சொல்லிக்குவோம் எந்த கேள்வியும் கேக்காம சாதிச் சான்றிதழ் குடுத்திடுவாங்க.”
“அப்பிடி வாங்குனா பி.சி.ன்னு தான் கிடைக்கும், ஸ்காலர்ஷிப், ஸ்கூல் பீஸ், எதுலயுமே நமக்கு சலுகை கிடைக்காது.”
“கிடைக்காட்டியும் பரவாயில்லம்மா, நான் வயல் வேலை செஞ்சாவது உன்ன படிக்க வைப்பேன்.”
அவளது அம்மாவின் வார்த்தைகளைக் கேட்ட மேகலா அமைதியானாள்.
“அம்மா, தாசில்தார் ஏன் சாதிச் சான்றிதழ் தரமாட்டேன்னு சொன்னாரு. காரணத்தச் சொல்லும்மா?” அவள் கேட்டுக் கொண்டே இருந்தாள்.
“நீ அவன்கூட ஒரு நாள் இருக்கணுமாம். படிக்கிற பொண்ண சொந்த மகளா நினைக்காத அவனெல்லாம் உருப்படவே மாட்டான். அவனுக்கு நல்ல சாவே வராது.” பார்வதியம்மாவின் கோபம் எகிறியது.
மறுநாள் பள்ளிக்கூடம் சென்றாலும் அவளின் முகம் சோகமாகவே இருந்தது.
“என்னடி ஏன் ஒரு மாதிரியா இருக்கே?” கேட்டாள் அவளது தோழி வித்யா.
“சாதிச் சான்றிதழ் வாங்க அம்மா தாசில்தார் அலுவலகத்துக்குப் போனாங்க, அது கிடைக்காதுன்னு சொல்லிட்டாங்க.”
“கிடைக்காதா, ஏன்?”
“நாங்க இந்து குடும்பம், எங்களுக்கு கிறிஸ்டியன் சாதிங்கிற பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் தான் கொடுக்க முடியுன்னு சொன்னார்.”
“நீ இந்துவா இருக்குறப்போ ஏன் கிறிஸ்டியன் சான்றிதழ் கொடுப்பாராம்?”
“அதாவது இந்துன்னு சான்றிதழ் தருவாராம், ஆனா அதற்கு ஒரு நிபந்தனை வைச்சுட்டார்.”
“என்ன நிபந்தனை?”
“சொன்னா அசிங்கம், வேண்டாம் விட்டுவிடு.”
“ஏய் சும்மா சொல்லுடி, தெரிஞ்சுக்கலாம்.”
“அந்த தாசில்தார் கூட ஒருநாள் நான் இருக்கணுமாம்” சொன்ன மேகலாவின் கண்கள் கலங்கியது, வார்த்தைகள் தடுமாறியது.
“வருத்தப்படாத, நான் சொல்றபடி நீ நடந்தா உனக்கு இந்து சான்றிதழே கிடைக்கும்”
“என்னடி சொல்ற?”
“ஆமாண்டி, நீ அவர் கூட இருக்க தேவையில்ல. நான் சொல்றபடி நீ நடந்துகிட்டா மட்டும் போதும். அவரே உன்னை கூப்பிட்டு இந்து சான்றிதழ் கொடுத்துடுவார்.”
“நான் என்ன பண்ணணும்?”
“நீ அந்த தாசில்தாரைப் போய் பார்க்கணும். சார் அம்மா தப்பா பேசினாங்க, உங்க கண்டிஷனுக்கு நான் சம்மதிக்கிறேன். உங்க கூட ஒருநாள் இருக்கவும் சம்மதிக்கிறேன்னு சொல்லணும்.”
“லூசாடி நீ, அவன் கூட இருக்கணும்னு சொல்றான்.”
“நான் சொல்றதக் கேளு, அப்படி நீ சொல்லு. அப்புறம் என்ன நடக்குதுன்னு பாரு, நீ பயப்படாத. உன்ன எங்க வரச் சொல்றாரோ அந்த இடத்துக்கு உன்கூட நானும் வர்றேன்.”
“இது ஆபத்தாச்சே.”
“நான் இருக்கும்போது நீ எதுக்கு பயப்படுற? நீ தைரியமா போய் பேசு. ஏற்கனவே உன் அம்மா குடுத்த சாதிச் சான்றிதழ் மனு பெண்டிங்லதான் இருக்கும், நீ போய் பேசின மறுநாள் உன் சாதிச் சான்றிதழ் உன் கைக்கு வந்துடும்.”
“பயமா இருக்குடி.”
“உனக்கு சாதிச் சான்றிதழ் வேணுமா? வேண்டாமா?”
“வேணும்.”
“அப்போ நான் சொல்றபடி கேளு, இன்னைக்கு புதன்கிழமை. மதியம் லீவு போட்டுட்டு தாசில்தார போய் பார்த்து, நான் சொன்னது மாதிரி பேசு. நாளைக்கு உன்னை எங்கேயாவது வரச் சொல்லுவார். நீ சரின்னு சொல்லு, மீதியை நான் பார்த்துகிறேன்.”
“சரிடி” மேகலா பயத்துடனே சம்மதித்தாள்.
மதியம் இரண்டு மணிக்கு தாசில்தார் அலுவலகம் வந்து சேர்ந்தாள் மேகலா.
“என் பேரு மேகலா, நேத்து அம்மா சாதி சான்றிதழ் கேட்டு உங்கள பார்க்க வந்திருந்தாங்க. அம்மா கிட்ட நீங்க துண்டுச்சீட்டு எழுதி கொடுத்ததும் கோபத்தில கிழிச்சு உங்க மேல வீசிட்டாங்க. அம்மா அப்பிடி செஞ்சதுக்கு நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன், எனக்கு இந்து சாம்பவர் சான்றிதழ் தந்துடுங்க சார்” கேட்ட தாசில்தார் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. தன் ஆசைகளைத் தணித்துக் கொள்ள வலிய வந்து சம்மதிக்கிறாளே என்று புன்னகையோடு உறுதி அளித்தார். அவர் மேசை டிராயரைத் திறந்து சாவியை எடுத்து அவளிடம் நீட்டினார்.
“திற்பரப்பு அருவிக்கு போற வழியில எனக்கொரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு. நாளைக்கு காலையில பள்ளிக்கூடம் புறப்பட்டு வர்றது மாதிரி பஸ் ஏறி வந்து, இந்த முகவரியில இருக்குற கெஸ்ட் ஹவுச கண்டுபிடிச்சி கதவைத் திறந்து உள்ளே இரு. நான் ஒரு பத்தரை மணி வாக்கில வந்துடுறேன். மதியம் ஒரு மணிக்குள்ள நீ திரும்ப போயிடலாம். இரண்டரை மணிக்கு ஆபீஸ் வந்தா உன்னோட இந்து சாம்பவர் சான்றிதழ் ரெடியா இருக்கும்” பற்கள் தெரிய சிரித்தபடியே சொன்னார் தாசில்தார். அவர் தந்த முகவரி எழுதிய துண்டையும், சாவியையும் வாங்கிக் கொண்டு வெளியேறினாள் மேகலா.
மறுநாள் காலை மார்த்தாண்டம் வந்தபோது, வித்யா அவளுக்காக காத்து நின்றாள். இருவரும் திற்பரப்புக்கு பஸ் ஏறினார்கள். அவர் குறிப்பிட்ட அந்த முகவரியைக் கண்டுபிடித்து கதவைத் திறந்து இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.
“நீ என்ன பண்ற, சமையல் கட்டுல மறைஞ்சு இருக்கிற. உனக்குப் பதில் நான் ரூம்ல வெயிட் பண்ணுறேன். அவர் கதவைத் திறந்து உள்ளே வந்து என்னப் பார்த்ததும் எப்படி நடுங்குறார்ன்னு மட்டும் பாரு” அவள் தைரியமாகச் சொன்னாலும் ஒருவித தயக்கத்தோடும் நடுக்கத்தோடும் சமையலறையில் மறைந்திருந்தாள் மேகலா.
சரியாகப் பத்தரை மணிக்கு சாத்தியிருந்த வாசல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார் தாசில்தார். அறையில் இருந்த வித்யா எழுந்து ஹாலில் வந்து நின்றாள். அவளைப் பார்த்ததும் பேரதிர்ச்சியாக இருந்தது தாசில்தாருக்கு. அவர் கண்கள் சொருகியது, வார்த்தைகள் பாதாளத்தில் போய் விழுந்தது.
“இந்த இடத்தில என்ன பார்த்ததும் அதிர்ச்சியா இருக்காப்பா. உங்க மக நான், என் வயசு தானே அந்த மேகலாவுக்கும். உங்க மக மாதிரி தானே அவளும். அவ கேட்ட சான்றிதழ் கொடுக்காம அவ கூட இருக்கணும்னு விரும்பினீங்களே, இது நியாயமாப்பா?” வித்யாவின் வார்த்தைகள் கேட்ட தாசில்தார் வெட்கி தலை குனிந்தார்.
“என்ன மன்னிச்சிடும்மா, புத்தி கெட்டுப் போய் இப்படி ஒரு காரியத்தைச் செய்யத் துணிஞ்சிட்டேன், என்ன மன்னிச்சிடும்மா. மேகலாவும் எனக்கு மக தான், அவ கேட்ட சான்றிதழை கையெழுத்து போட்டு கொடுத்திடுறேன். சாரிம்மா இங்க நடந்தது எதையுமே அம்மா கிட்ட சொல்லிடாதம்மா, ப்ளீஸ்ம்மா ப்ளீஸ்.”
“மேகலா என் கிளாஸ்மெட், சான்றிதழை கொடுங்கன்னு வீட்டில வெச்சு சிபாரிசு பண்ணியிருந்தா ஒருவேளை நீங்க சான்றிதழ் கொடுத்திருப்பீங்க. ஆனா, உங்க மனசில இருக்கிற தவறான புத்தி உங்கள விட்டு போயிருக்காது. தொடர்ந்து இதுமாதிரி தப்ப செஞ்சுகிட்டே இருப்பீங்க. உங்களுக்கு ஷாக் குடுத்தாதான் இனிமே இந்த மாதிரி தப்ப செய்ய மாட்டீங்க. அதனால தான் மேகலா கூட நானும் வந்தேன். சரி போங்க, சான்றிதழ் ரெடி பண்ணி மதியத்துக்கு மேல அவ வந்து கேட்டா கொடுத்துடுங்க. இனிமே யார்கிட்டயும் இந்த மாதிரி நடந்துக்காதீங்க” முதிர்ந்த அனுபவசாலியாய் அவள் சொன்ன வார்த்தைகள் கேட்டு தலையாட்டினார் தாசில்தார்.
சமையலறையில் கேட்டுக் கொண்டிருந்த மேகலாவுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. தன் தோழி வித்யா தாசில்தாரின் மகளா? என்று வியந்தபடி ஓடி வந்து அவள் கரங்களைப் பற்றிக் கொண்டாள்.
“ரொம்ப தேங்க்ஸ்டி, நீ அவரோட பொண்ணுன்னு எனக்குத் தெரியாது, ரொம்ப தேங்ஸ்டி.”
“எப்படியோ உனக்கு சாதிச் சான்றிதழ் கிடைக்கப் போகுது. இத வச்சு ஸ்காலர்ஷிப் வாங்கி படிச்சு பெரிய ஆளாக வரணும்.”
“கண்டிப்பா” இருவரும் கெஸ்ட் ஹவுஸ்சை பூட்டி விட்டு திற்பரப்பு பஸ் நிறுத்தம் நோக்கி நடந்தார்கள். இதமாய் வீசிய அருவியின் குளிர் காற்று அவர்கள் உடலைப் பற்றிப் படர அதை அனுபவித்தபடி நடந்தார்கள். மனதில் உறுதி வேண்டும்.
* * * * *
paulrasaiya6@gmail.com
9746486845
ஏன் தான்இப்படி இருக்கிறாருகள் அதிகாரிகள் இதுவும் ஒரு விதமான லஞ்சத்திற்கு சமானமானது. தன் தந்தையை வித்யா திருத்த எடுத்த முயற்சிக்கு வாழ்துகள். இளம்தலைமுறையினர் வித்தியாசமான முறையில் யோசிக்கிறாங்க
LikeLike